Ad Space Available here

சிறுபான்மை மக்களின் ஆதரவைப்பெற்ற ஜனாதிபதி அம்மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை

(றியாஸ் ஆதம்)

சிறுபான்மை சமூகத்தினுடைய ஆதரவைப் பெற்று இந்த நாட்டினுடைய ஜனாதிபதியாக தெரிவு
செய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேன அவர்கள் முஸ்லிம் சமூகத்தினுடைய உரிமைகளை பெற்றுக்கொடுக்கின்ற விடயத்தில் தவறிழைத்துள்ளதாக, முஸ்லிம் சமூகம் அவர் மீது குற்றம் சுமத்தி வருகிறது என கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் தெரிவித்தார்.

ஏறாவூர் ஸாஹிர் மௌலானா வித்தியாலயத்திற்கான அலுவலக தளபாடங்கள் கையளிக்கும் நிகழ்வு நேற்று (02) பாடசாலை அதிபர் ரீ.எம்.மஹ்தும் மரைக்கார் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் அங்கு தெரிவிக்கையில்,

சிறுபான்மை சமூகத்தின் பூரண ஆதரவினை பெற்றுக்கொண்டு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேன அவர்கள் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கும், அந்த சமூகத்திற்கான அபிவிருத்திகளையோ அல்லது உதவிகளையோ செய்வதற்கும் சிறிதளவேனும் அக்கரை காட்டவில்லை என முஸ்லிம் சமூகம் அவர் மீது குற்றம் சுமத்தி வருகின்றது.

குறிப்பாக நான் செல்கின்ற பிரதேசங்களில் எல்லாம் முஸ்லிம் மக்கள் இந்த விடயத்தினை கூறுகின்ற போது அதனை நானும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாகின்றது. நல்லாட்சி அரசாங்கத்தை ஏற்படுத்த வேண்டும் எனும் நோக்கில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபல சிறிசேன அவர்களுக்கு நான் மட்டக்களப்பு மாவட்ட மக்களுடைய வாக்குகளைப் பெற்றுக்கொடுப்பதில் பெரும் பங்களிப்பைச் செய்தவன்.

அந்த வகையில் தற்போது ஸ்ரீ.சு.கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக நான் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளேன். எனவே ஜனாதிபதியுடன் பேசி முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கின்றேன்.

விசேடமாக முஸ்லிம் சமூகத்தினது காணிப்பிரச்சினைகளை ஜனாதிபதி அவர்கள் தீர்த்து வைக்கவில்லை. மேலும் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை பெற்றுக்கொடுக்கின்ற விடயத்திலும், அவர் ஆர்வம் காட்டவில்லை. என்பதுடன் கடந்த மஹிந்த ராஜபக்ஷவினது ஆட்சிக்காலத்தினை விடவும் இந்த நல்லாட்சியில் முஸ்லிம் சமூகத்தை கை நீட்டி அச்சுறுத்துகின்ற நிலைமைகள் உருவாகியுள்ளது. இனவாதிகளினுடைய போக்குகளும் அதிகரித்துக் காணப்படுகிறது.

இந்தநிலை தொடர்ந்தால் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியை கிழக்கில் மாத்திரமல்ல இந்த நாட்டிலும் முஸ்லிம் சமூகம் வெறுக்கின்ற நிலைமை உருவாகும். ஆகவே ஜனாதிபதி அவர்கள் முஸ்லிம்களுடைய காணிப் பிரச்சினைகள், நுரைச்சோலை வீட்டுத்திட்டம், மௌலவி ஆசிரியர் நியமனம், முஸ்லிம்களுடைய நிருவாக ரீதியான பிரச்சினை என அச்சமூகத்தினுடைய மிக முக்கியமான விடயங்களை அவதானம் செலுத்தி தீர்க்க வேண்டும். இல்லையெனில் நாம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் தொடர்ந்தும் பிரயாணம் செய்ய முடியாது என்பதனை சொல்ல வேண்டிவரும்.

கிழக்கு மாகாண சபையிலே 20வது திருத்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்ட போது அதனை ஆதரிக்குமாறு எனக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் கூறப்பட்டது. அப்போது கட்சியை விடவும் எனது சமூகம்தான் எனக்கு பெரிது என்று அவர்களிடம் கூறினேன். முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு போதும் அநியாயம் செய்வதற்கு துணைபோக முடியாது என்பதனையும் அவர்களுக்கு சொல்லி அந்த சட்டமூலத்திற்கு வாக்களிக்க முடியாது என்றும் சொன்னேன்.

நாங்கள் மிகத்தெளிவாக இருக்கின்றோம். எங்களது உள்ளத்திலே இறையச்சம் சமூக சிந்தனை இருக்கின்றது. சேவை செய்கின்ற ஆற்றல் இருக்கின்றது. நாங்கள் எந்தக்கட்சியாக இருந்தாலும் எவருக்கும் அடிபணியாது முஸ்லிம் சமூகத்தினுடைய உரிமைகளை வென்றெடுப்பதற்கு மக்களுடன் கைகோர்த்து செயற்படுவோம். நான் சார்ந்த கட்சியினால் எமது சமூகத்திற்கு அநீதி இழைக்கப்படுமானால் அந்தக்கட்சியை தூக்கி வீசிவிட்டு எப்போதும் மக்களோடு இணைந்து செயற்படுவேன்.

குறிப்பாக எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஏறாவூர் நகர சபையை கைப்பற்றி அதனை நிருவகித்து, அந்த நகரத்தில் வாழுகின்ற மக்களுடைய அடிப்படைத் தேவைகளையும், உட்கட்டமைப்பு வசதிகளையும் நிறைவேற்றிக் கொடுக்கின்ற சகல வல்லமையும் எமக்குள்ளது. எனவே எதிர்வருகின்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் எனது தலைமையில் போட்டியிடுகின்ற சகல வேட்பாளர்களையும் வெற்றியடையச் செய்வதற்கு ஏறாவூர் மக்கள் முன்வர வேண்டும்.

குறிப்பாக ஏறாவூர் நகரத்திலே வாழுகின்ற மக்களுக்கு அதிகமான பிரச்சினைகள் இருக்கிறது அதேபோன்று பல தேவைகள் இருக்கின்றது. அவைகளை தீர்த்துக்கொள்வதற்கு நேர்மையானதொரு அரசியல் தலைமை தேவை ஆகவே நீங்கள் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரை நம்ப வேண்டாம். அவருக்கு இப்போது பதவிகள் இல்லை முதலமைச்சரும் ஏறாவூா நகர சபைத் தேர்தலில் போட்டியிடலாம் என நினைக்கின்றேன்.

அந்த தேர்தலை வெற்றிகொள்வதற்காக பாடசாலை பேக்குகளையும், அப்பியாசக் கொப்பிகளையும், அதேபோன்று அரிசி மூடைகளையும் கோழிக் குஞ்சுகளையும் கொண்டுவந்து மக்களை ஏமாற்றி வாக்குகளை பிரிக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் நடவடிக்கைகள் தொடர்பில் ஏறாவூா மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சிறுபான்மை மக்களின் ஆதரவைப்பெற்ற ஜனாதிபதி அம்மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை சிறுபான்மை மக்களின் ஆதரவைப்பெற்ற ஜனாதிபதி அம்மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை Reviewed by Madawala News on 11/03/2017 02:52:00 PM Rating: 5