Yahya

அனைத்து பிரச்சினைகளுக்கும் ஹக்கீமே காரணம் ..


மு.காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அவர்களே..!

இன்று மு.காங்கிரஸ் உயிரோடு இருக்கிறது என்றால் அதற்கு முதல் காரணமே கல்முனை
தொகுதி மக்களின் தியாகம்தான் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்

இந்த கல்முனை தொகுதியில் மு.காங்கிரஸ் தோல்வியடையுமாக இருந்தால், உங்களுக்கு அதிர்ஸ்டமாக கிடைத்த தலைமைப் பதவி கேள்விக்குறியாக மாறிவிடும் என்பது மட்டும் உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கின்றது.

அதனால்தான்  உங்கள் இருப்பை காப்பாற்றிக் கொள்வதற்காக இல்லாத பொல்லாத தில்லு முல்லுகளை இந்த கல்முனைத் தொகுதிக்கு செய்துவருகின்றீர்கள் என்பதை நீங்களும், உங்களோடு இருக்கும் புத்திசாலி போராளிகளும் நன்றாகவே அறிந்தும் வைத்துள்ளார்கள்

கல்முனை மக்கள் மு.காங்கிரஸுக்காக எதையும் இழக்கத்தயாராக இருக்கின்றார்கள் என்ற தாரக மந்திரத்தை வைத்துக்கொண்டு, மு.காங்கிரஸில் தேர்தல் கேட்டால்தான் யாரும் வெற்றியடைய முடியும் என்ற சுக்கானையும் தனது கைக்குள் வைத்துக்கொண்டும், சகலரையும் ஆட்டிப்படைத்து வருகின்றீர்கள். இதனால்தான் இன்று இரு ஊர்களும் பிரிவனைக்காக களத்தில் குதித்து நிற்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். (அது உங்களின் திறமை அதனைத் தெரிந்து கொள்ளாமல் உங்களது திட்டத்துக்கு பழியாகி வருவது எங்கள் மக்களின் நிலைமை.)

விடயத்துக்கு வருவோம்.., 

அன்று ஒன்றாக இருந்தவர்கள் இன்று எங்களை பிரித்து விடுங்கள் என்று கேட்பதற்கு காரணம் என்ன? இந்த கோரிக்கைக்கான மூலவேர் என்ன? என்று பார்த்தால் அதற்கு அபிவிருத்தி பசிதான் காரணம் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். அந்த விடயம் இங்கே நிறைவேற்றப்பட்டதா? என்று பார்த்தால் அது நடக்கவில்லை என்றுதான் கூறவேண்டும்.

இந்த கட்சியையும் இந்த கட்சிக்காக சகலதையும் இழந்து நிற்கும் கல்முனை மாநகருக்கு இதுவரை உங்களால் செய்யப்பட்ட அபிவிருத்திகள் என்ன?
ஒழுங்கான அபிவிருத்திகள் இந்த மாநகருக்கு நடந்திருந்தால் ஊர்களுக்குள் பிரிவினை என்ற கோசம் எழுப்பப்பட்டிருக்குமா?என்ற கேள்விகளுக்கு விடைதேடினால் அதற்கு முழுக்காரணமும் நீங்கள்தான் என்பது நிரூபணமாகும்.

ஒருவனுக்கு வயிறு நிறைய சாப்பாடு கிடைத்தால் அவன் பிரிந்து செல்ல முற்படுவானா? என்ற கேள்விக்கு உங்களிடம் பதில் இருக்காது. எல்லாருக்கும் எல்லாம் கிடைத்தால் ஏன் பிரிவினையைப் பற்றி சிந்திக்கப்போகின்றார்கள் என்று உங்களிடம் கேட்கின்றேன்

ஒரு சமூகம் தனியாட்சி கேட்பதும், சுயாட்சி கேட்பதும், தனி மாகாணசபை கேட்பதும், தனி பிரதேசசபை கேட்க முனைவதும் எதற்காக என்று உங்களுக்கு தெறியாத ஒன்றல்ல.
எங்கே ஒருவன் இனரீதியாகவும், சமூகரீதியாகவும், ஊர் ரீதியாகவும் புறக்கணிக்கப்படுகின்றோனோ அங்கேதான் அவன் பிரிவினையைப் பற்றி சிந்திக்க தொடங்குகின்றான். அந்த பிரிவினைக்கு பின்னாலிருப்பது அவனுடைய தேவைகள் உரிய நேரத்தில் தீர்த்துவைக்கப்படாத காரணமேயாகும் என்பதை, சட்டத்தை தன் சட்டைப்பைக்குள் வைத்திருக்கும் உங்களுக்கும் உங்கள் கூட்டத்துக்கும் தெறியாததும் அல்ல.

இந்த அபிவிருத்திகள் ஏன் கல்முனைக்கு திருப்தியாக கிடைக்கவில்லை? அதற்கு காரணம் யார்? என்று பார்த்தால் அதற்கெல்லாம் நீங்கள்தான் காரணம் என்பதை ஆதாரபூர்வமாக நிறையவே எழுத முடியும், ( வேறொரு சந்தர்ப்பத்தில் விரிவாக எழுதுவோம்.)

கல்முனையில் யாரும் கதாநாயகனாக மாறிவிடக்கூடாது என்ற உங்களது மறைமுகமான திட்டத்துக்கு பழியாகி வரும் நகரம் என்றால் அது கல்முனைதான் என்பதை எத்தனைபேர் அறிவார்களோ தெரியாது.

கடந்த காலங்களில் இந்த கட்சியினூடாக அறிமுகமாகி பின்னாலில் இந்த கட்சிக்கே சவால் விடுமளவுக்கு மாறிய ஹிஸ்புல்லா, அதாவுல்லா, ரிசாட் பதியுதீன், அமிரலி, மறைந்த அன்வர் இஸ்மாயில் போன்றோர் பின்னாலில்  ஒவ்வொரு பகுதிகளை பிடித்துக்கொண்டார்கள் என்ற காரணத்தினால்தான், கல்முனையிலும் அப்படி நடந்து விடக்கூடாது என்ற பயத்தின் காரணமாவே, கல்முனையில் மட்டுமல்ல அம்பாரை மாவட்டத்திலும் யாரும் பெரிய ஆளாக மாறிவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகின்றீர்கள் என்ற விடயம் இங்கே உள்ள புத்திஜீவிகளுக்கு நன்றாகவே புரியும், ஏன் உங்கள் கட்சியில் உள்ள ஹரீஸ் எம்பி அவர்களுக்கும், ஏனய எம்பி மாருக்கும்  நன்றாகவே தெறியும் என்று நினைக்கின்றேன்.

இதனால்தான் பிரதியமைச்சராக  ஹரீஸ் அவர்கள் இருந்தாலும், அவரினால் சுயமாக இயங்க முடியவில்லை, அவர் சுயமாக இயங்குவதற்கு அனுமதித்தால் பல துறைசார்ந்த அமைச்சர்களை கல்முனைக்கு அழைத்துவந்து பல சேவைகளை செய்திருப்பார், அப்படி தாராளமான சேவைகள் நடந்திருந்தால் எந்த ஊரும் பிரிந்து செல்வதற்கு முனைந்திருக்க மாட்டார்கள் என்பதை, நடுநிலையாக சிந்திக்கும் எவரும் மறுக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

உங்களது பயத்துக்கு நியாயமான காரணங்கள் இருந்தாலும், அதற்காக பழியாகிவருகின்ற நகரம்தான் இந்த கல்முனை மாநகரமாகும் என்பதை நீங்கள் அறியாதவரும் அல்ல. அன்று பயங்கரவாதத்தால் பாதிக்கபட்ட தமிழ் பிரதேசங்கள் எல்லாம் இன்று பல வழிகளிலும் தலைநிமிர்ந்து வருகின்ற வேளையில், கல்முனை மாநகரம் மட்டும் சோபையிழந்து கிடப்பதற்கு யார் காரணம்? அப்படி அந்த நகரம் இருப்பதற்கு உங்களின் கீழ்தரமான திட்டம்தான் காரணம் என்பதையும் நீங்கள் அறியாதவரும் அல்ல.

ஒருகாலத்தில் கல்முனை என்றால் முஸ்லிம்களின் தலைநகர் என்று பேசப்பட்டது, இந்த நகரத்திலே கெபினட் அமைச்சர்கள் கோலோட்சிய இடமாகும், இன்று அந்த நகரம் பிச்சைக்காரியின் சேலையைப் போன்று மாறிவிட்டது, இதற்கு யார் காரணம்?
இந்த பகுதியையச் சேர்ந்த மக்களா? அல்லது நீங்களா? என்று யோசிக்க மக்களால் முடியாமலுள்ளது.

அன்று நான்காக பிரிந்திருந்த ஊர்களை ஒன்றாக இணைக்கும்போது யாரும் அதற்கு எதிர்ப்பு தெறிவிக்கவில்லை, காரணம் கல்முனை நகரம் வளர்ச்சியடைந்து வருகின்றது, அதனோடு நாம் இணைந்திருந்தால் நமது ஊரும் முன்னேற்றம் அடைந்துவிடும் என்ற அந்த மக்களின் என்னமேயாகும்.

ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறி நிற்பதுற்கு யார் காரணம்அபிவிருத்தி பசிதான் அதற்கு காரணமாகும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.  

கல்முனை நகரமே பசியால் வாடும்போது, மற்றவர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு அவர்களினால் முடியாமல் உள்ளது. அதனால் மற்ற ஊர்களை திருப்தி  படுத்துவதற்கு அவர்களினால் முடியாமலும் உள்ளது.

அதனால்தான் எங்களை பிரித்து விடுங்கள், எங்கள் தேவைகளை நாங்களே கவணித்துக் கொள்கின்றோம் என்று ஒரு பிரிவினர் இன்று போராடுகின்றார்கள் என்றால் அதற்கு என்ன காரணம் என்பதை புரிந்து கொண்டீர்களா? அல்லது புரியாத மாதிரி நடிக்கின்றீர்களா? என்று தெறியாமலுள்ளது.

இதற்குள் மற்றகட்சிக்காரர்கள் எந்த அபிவிருத்தி விடயங்களையும் இந்தவூருக்கு செய்துவிடக்கூடாது என்பதிலும் நீங்கள் கவணமாகத்தான் இருக்கின்றீர்கள், எங்கே அவர்கள் சேவைகள் பல செய்து இந்த மக்களை தங்களின் பக்கம் இழுத்துவிடுவார்களோ என்ற பயத்தின் காரணமாக யாரையும் இங்கே செயல்படுவதற்கு அனுமதிப்பதாகவும் இல்லை.

இதனை அறிந்து கொண்டுதான் ஹரீஸ் எம்பியவர்களும் கடந்த காலங்களில் யாரையும் கல்முனை நகருக்குள் அனுமதிப்பதில்லை, காரணம் தன்னால் முடியாததை இன்னொருவர் செய்து பேரெடுத்து விடக்கூடாது என்பதினாலாகும். அதற்கு காரணம் ஹரீஸ் எம்பியினால் முடியாது என்ற காரணம் அல்ல, ஹரீஸ் எம்பியின் கைகள் இந்தவிடயத்தில் கட்டப்பட்டிருந்ததே அதற்கு காரணமாகும்.(இதனையும் ஆதாரத்தோடு எழுதமுடியும்). 

ஆகவே, மு.காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அவர்களே..!

கல்முனை மாநகரம் இன்று அல்லோல கல்லோல படுவதற்கும், ஊர்கள் பிரிந்து நிற்பதற்கும்  நீங்கள்தான் காரணம் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இதற்கு வேறுயாரையும் நீங்கள் குற்றம் சொல்லி தப்பிக்கவும் முடியாது. காரணம் இந்த தொகுதியின் பெரும்பாண்மையான மக்களின் ஆதரவை பெற்றவர்கள் நீங்கள்தான், நீங்கள்தான் இதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும்.

உங்களின் அரசியல் லாபத்துக்காகத்தான் கல்முனை நகரத்துக்குள் பல பேரை ஏட்டிக்கு போட்டியாக உருவாக்கி அதன் மூலம் உங்கள் திட்டத்தை நிறைவேற்றிவருகின்றீர்கள், சாய்ந்தமருதுக்கான மேயர் பதவியை பறித்து இன்னொருவருக்கு கொடுத்த விடயத்திலும் உங்களின் திருவிளையாடல்கள்தான் காரணம் என்பதையும் நாங்கள் அறிவோம், ஊருகளுக்குள்ளேயே ஒருவரோடு ஒருவரை மோதவிட்டு, அதன் மூலம் தனது காரியத்தை கச்சிதமாக நிறைவேற்றிவரும் நீங்கள், இன்று ஆப்பிழுத்த குரங்கின் கதையாக மாட்டிக்கொண்டீர்கள்.

உங்களின் இந்த விளையாட்டினால் பாதிக்கப்படுவது கல்முனை மக்கள்தான் என்பதை, கல்முனை மக்கள் புரிந்து கொண்டார்களோ தெறியாது, ஆனால் சதிகாரர்களுக் கெல்லாம் சதிகாரனான இறைவன் நன்றாகவே அறிந்துள்ளான்.

அதனால்தான் உங்களுக்கு ஆப்புவைப்பதற்கு அந்த இறைவன் ஆட்டத்தை துவங்கிவிட்டான், இன்ஷா அல்லா தீர்ப்பு கிடைப்பதற்கு வெகுதூரம் இல்லை என்பதே எங்களின் எதிர்பார்ப்பாகும்.
புரிந்து கொண்டால் சரிதான் தலைவரே.?

எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை.
அனைத்து பிரச்சினைகளுக்கும் ஹக்கீமே காரணம் ..  அனைத்து பிரச்சினைகளுக்கும் ஹக்கீமே காரணம் .. Reviewed by Madawala News on 11/06/2017 05:47:00 PM Rating: 5