Kidny

Kidny

சாய்ந்தமருது வரலாற்று நாயகனாகப்போகும் வை.எம்.ஹனிபா !

-எம்.வை.அமீர்-
இலங்கையில் நூறு வீதம் முஸ்லிம்களைக் பெரும்பான்மையைக் கொண்ட  ஒரேயொரு ஊரான,
கிழக்குமாகாணத்தில் அம்பாறை மாவட்டத்திலுள்ள  சாய்ந்தமருதின், ஹீரோவாகவும் உயிர் வாழும் உமர் முக்தார் என்றும் சாய்ந்தமருதின் Godfather  என்றும் அழைக்கப்படும், 81 வயதைத் தாண்டிய  வை.எம்.ஹனிபா, ஒருகாலத்தில் அரசியல்வாதிகளை தோழில் சுமந்த இளைஞர்களால் சுமக்கப்படுகிறார்.


அரசியல் ரீதியாக குரலற்ற சாய்ந்தமருது மக்களின் குரலாக, வழிகாட்டியாக மதிக்கப்படும் வை.எம்.ஹனிபா, பல்வேறு கலர்களிலும், கட்சிகளிலும், கொள்கைகளிலும் இணைந்திருந்த ஊர் மக்களை பள்ளிவாசல் என்ற ஒருகுடையின் கீழ் ஒன்று திரட்டினார்.

சாய்ந்தமருது மக்கள் அரசியல் ரீதியாகவும் அபிவிருத்தி மற்றும் ஏனைய விடயங்களிலும் பின்தள்ளப்படுவதாகவும், அவர்களது ஊரை ஆகக்குறைந்த அரசியல் அதிகாரம் கொண்ட தனியானதொரு உள்ளுராட்சிசபையூடாக முன்னேற்றிச்செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனும் இளைஞர்கள் மற்றும் ஏனையோர், சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலையும் அதன் தலைவர் அல் ஹாஜ் வை.எம்.ஹனிபாவையும் முன்னிறுத்திப் போராடி வருகின்றனர்.

யார் இந்த வை.எம்.ஹனிபா, இவர் சாய்ந்தமருதில் பிரபல்யம் பெற்ற சின்ன மீராலெப்பை யாஸீன்பாவா, இஸ்மாலெப்பை பாத்திம்மா ஆகியோருக்கு பிறந்த மூன்று பிள்ளைகளில் முதலாவதாக 1937 ஆம் ஆண்டு பிறந்தவராகும்.

ஆரம்பக்கல்வியை சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்திலும் இரண்டாம் நிலைக்கல்வியை கல்முனை ஸாஹிரா கல்லுரியிலும் கற்ற இவர், தனது பாடசாலைப் பருவத்தில் கல்வி,விளையாட்டு, சமூகசேவை மற்றும் மார்க்க விடயங்களிலும் சிறந்து விளங்கினார்.

1959 ஆம் ஆண்டு நாச்சியாதீவு என்ற ஊரில் ஆசிரியராக நியமனத்தைப் பெற்றுக்கொண்ட ஹனிபா, 1996 வரை ஆசிரியர் சேவையில் இருந்து இறுதியாக கல்முனை ஸாஹிரா கல்லுரியில் பிரதி அதிபராக கடமையாற்றி ஓய்வுபெற்றார்.

1960 ஆம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்துகொண்ட இவருக்கு மூன்று ஆண்களும் இரண்டு பெண்களுமாக ஐந்து பிள்ளைகள் உள்ளனர். சமூகத்தில் உயர் அந்தஸ்த்தில் இருக்கும் இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் நிருவாகத்தில் இணைந்துகொண்டர். பின்னர் 2012 ஆம் ஆண்டு முதல் சாய்ந்தமருது மக்களால் மிகவும் மதிக்கப்படும் இந்த நிறுவனத்தின் தலைவராகவும் இன்றுவரை இருந்து வருகிறார்.

இவரது வாழ்க்கையில், மறைந்த வத்தக வாணிபத்துறை அமைச்சர் .ஆர்.எம்.மன்சூர் அவர்களுடன் இணைந்து, அவரது இணைப்பாளராகவும் பணியாற்றி பல்வேறு சமூகநல திட்டங்களிலும் ஈடுபட்டிருந்தார்.

ஒரு அமைப்பின் தலைவர் என்ற அடிப்படையில் இவரது போக்குக்கு  எதிரான கருத்துடையோர் இருக்கின்ற போதிலும் சாய்ந்தமருது மக்களை ஒன்றுதிரட்ட அவர் கையில் எடுத்துக்கொண்ட தனியான உள்ளுராட்சிசபை என்ற அந்த விடயம், அவருக்கு எதிரான கருத்துடையோரையும் அவரின்பால் ஈர்க்க வைத்துள்ளது என்றே சொல்லவேண்டியுள்ளது.

தனது ஊருக்கான தனியான உள்ளுராட்சிசபைக்காய் தள்ளாடும் வயதிலும் நாற்பது தடவைக்கு மேலாய் கொழும்புக்கும் நாட்டின் நாலாபக்கத்துக்கும் சென்று அரசியல்வாதிகளையும் சம்மந்தப்பட்டோரையும் சந்தித்து, இன்றுவரை தருகிறோம் என்ற வாக்குறுதியை மட்டுமே பெற்றுக்கொண்டு ஏமாற்றங்களை சவாலாக ஏற்று, என்றாவது ஒருநாள் தனது ஊர்மக்களின் கனவு நனவாகும் என்ற நம்பிக்கையில் போராட்டங்களை வழிநடத்திக் கொண்டிருக்கும் வை.எம்.ஹனிபாவின் வார்த்தைகள் மீறப்படாததாக, மதிப்பு மிக்கதாக இப்பிராந்திய இளைஞர்களினதும் ஏனையோரினதும் மனங்களில் திகழ்கின்றது.

1858 ல் லிபியாவில் பார்குவா எனும் சிறிய கிராமத்தில் மினிபா எனும் பழங்குடியில் பிறந்த உமர் முக்தாரின் பின்னால் அந்த மக்களின் விடுதலைக்காக, மக்கள் எவ்வாறு ஒன்றுதிரண்டார்களோ அவ்வாறே சாய்ந்தமருது மக்களும் இவரின் பின்னால் ஒன்றுதிரண்டதுபோன்ற பிரம்மை சாய்ந்தமருதில் நிலவுகின்றது.

கடந்த 2017-11-21 ஆம் திகதி கடற்கரை வீதியில் இடம்பெற்ற மக்கள் திரண்டிருந்த நிகழ்வுக்கு இளைஞர்களால் இவர் சுமந்து வரப்பட்ட காட்சி அப்போது அங்கிருந்தவர்கள் வெளியிட்ட உணர்வுபூர்வமான வார்த்தைப்பிரயோகங்கள் அது உமர் முக்தாரின் போராட்டத்தை ஞாபகமூட்டுவது போன்றதாக இருந்தது.

தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகளின் கூட்டங்களுக்கு மட்டுமே கூடிப்பழகிய சாய்ந்தமருது மக்கள் இப்போது இவரது வார்த்தைக்கு கட்டுப்படுகிறார்கள், ஆமோதிக்கிறார்கள், ஒன்றுகூடுகிறார்கள் என்றால் இதனை சாய்ந்தமருதில் புதுவித புரட்சி என்றே நோக்கவேண்டியுள்ளது.

சாய்ந்தமருது மக்களின் அபிலாஷைகளை வென்று கொள்வதற்காக தான்சிறை செல்லவும் தயாறாய் இருக்கின்றேன்என்ற வார்த்தைப் பிரயோகங்கள் அவரின்பால் அந்த மக்களை விசேடமாக இளைஞர்களை அபிமானம் கொள்ள வைத்துள்ளது.

நாங்கள் யாருடைய அபிலாஷைகளுக்கும் எதிரானவர்கள் அல்ல என்ற விடயமும், சகோதர ஊர் முஸ்லிம்கள் மற்றும் தமிழர்களுடன் இணைந்தே வாழவிரும்புவதாக வெளியிடும் கருத்துக்கள் அவரது சகோதர வாஞ்சையை காட்டுவதாகவும் ஒற்றுமையை வலியுறுத்துவதாகவும் அமைகின்றன.

அல் ஹாஜ் வை.எம்.ஹனிபாவுடைய தலைமையில் கடந்த நவம்பர் முதாலம் திகதி வெளியிடப்பட்ட சாய்ந்தமருது பிரகடமானது முழு நாட்டிலும் பேசப்பட்ட ஒன்றாகும். தங்களுக்கான உள்ளுராட்சிசபை கிடைக்கும்வரை எந்த அரசியல் கட்சிகளுக்கும் சாய்ந்தமருதில் இடமில்லை என்ற சரத்தும் சுயட்சையாக களமிறங்குவோம் என்ற விடயமும் அரசியல் வாதிகள் மட்டத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள ஒன்றாகும்.

சாய்ந்தமருது பிரகடனத்தைத் தொடர்ந்து காரைதீவு போன்ற ஊர்களிலும் பிரகடனங்கள் வெளியிடப்பட்டுள்ளது என்பது முன்மாதரியான ஒன்றாகக் கருதப்படுகின்றது.

இவரது தலைமையில் மூன்றுநாள் கடைகளை அடைத்த விடயம் வீதிமறியல் போராட்டம் என்பன இவர்களது போராட்ட குணத்தையும் தளராத திடகாத்திரத்தையும் காட்டுகின்றது.

ஆகமொத்தத்தில் வை.எம்.ஹனிபா இப்பிராந்தியத்தின் பேசுபொருள், கதாநாயகன். முகநூல்களில் கூறப்படுவது போன்று அவர் உயிர் வாழும் உமர் முக்தார் என்றே எண்ணத்தோன்றுகின்றது.

சாய்ந்தமருது வரலாற்று நாயகனாகப்போகும் வை.எம்.ஹனிபா !  சாய்ந்தமருது வரலாற்று நாயகனாகப்போகும் வை.எம்.ஹனிபா ! Reviewed by Madawala News on 11/24/2017 01:17:00 PM Rating: 5