Kidny

Kidny

சாய்ந்தமருதிற்கு உள்ளுராட்சி சபை எப்போது சாத்தியமாகும்?


சஹாப்தீன் -
கடந்த வாரம் அம்பாரை மாவட்டத்தில் கல்முனை மற்றும்; சாய்ந்தமருது பிரதேசங்களில்
பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது. இரண்டு முஸ்லிம் பிரதேசங்களும் மோதிக் கொள்ளுமோ என்று ஏனைய அயல் பிரதேசங்கள் அச்சமடையும் அளவிற்கு கடை அடைப்பும், வீதி மறியல் போராட்டமும், ஆர்ப்பாட்ட பேரணியும் இரு பிரதேசங்களிலும் போட்டி அடிப்படையில் நடைபெற்றது

கல்முனை மாநகர சபையின் எல்லைக்குள் உள்ள சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான பிரதேச சபை வழங்கப்பட வேண்டுமென்று சாய்ந்தமருது முஸ்லிம்களும், கல்முனை மாநகர சபை எல்லையை நான்கு உள்ளுராட்சி சபைகளாகப் பிரிக்க வேண்டுமென்று கல்முனை முஸ்லிம்களும் கோரி;க்கைகளை முன் வைத்தே மேற்படி போராட்டங்களை மேற்கொண்டார்கள்.

இரண்டு பிரதேசங்களின் முஸ்லிம்கள் பேசித் தீர்க்க வேண்டிய விவகாரத்தினை வீதிக்கு கொண்டு வந்தமையை ஏற்றுக் கொள்ள முடியாது. இலங்கையில் இனப் பிரச்சினையை ஏற்படுத்த வேண்டுமென்று ஒரு குழுவினர் முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கும் இன்றைய நிலையில் ஒரு இனத்தவர்களாகிய முஸ்லிம்கள் தங்களுக்குள் மோதிக் கொள்வது முஸ்லிம்களின் எதிர்காலத்தை சூனியமாக்கிவிடும். முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு மட்டங்களில் நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இதனை முறியடிப்பதற்கு முஸ்லிம்கள் ஒற்றுமைப்படுதல் வேண்டும். அரசியல் நடவடிக்கைகளை பல கட்சிகளில் நின்று மேற்கொள்ளாது ஒரு குடையின் கீழ் பொது உடன்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில் கல்முனை மற்றும் சாய்ந்தமருது மக்கள் உள்ளுராட்சி சபைக்காக போராடிக் கொண்டிருப்பதும், அதனையிட்டு முஸ்லிம் அரசியல் கட்சிகளும், அவற்றின் தலைவர்களும் ஊமைகள் போல் இருப்பதும் வெந்த புண்ணில் தீ மூட்டுவதாகவே உள்ளது.


கல்முனை மாநகர சபையின் எல்லைக்குள் உள்ள பிரதேசங்களில் சாய்;ந்தமருதுதான் அதிக சனத் தொகையைக் கொண்டதாகும். இங்கு சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமாக சனத் தொகை உள்ளது. கல்முனைக்குடி மற்றும் கல்முனையில் சுமார் 29 ஆயிரம் சனத் தொகை காணப்படுகின்றது. இதே வேளை, கல்முனை மாநகர சபையில் முஸ்லிம்களின் சனத் தொகை சுமார் 81 ஆயிரமாகவும், தமிழர்களின் சனத் தொகை சுமார் 36 ஆயிரமாகவும் காணப்படுகின்றன. சாய்ந்தமருதிற்கு 1928ஆம் ஆண்டு முதல் 1987ஆம் ஆண்டு வரை கரவாகு தெற்கு கிராமிய சபை இருந்துள்ளது. 1987ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட உள்ளுராட்சி சட்ட மூலத்தின் காரணமாக கல்முனை பட்டின சபையுடன் கரவாகு தெற்கு, கரவாகு மேற்கு, கரவாகு வடக்கு ஆகிய கிராமிய சபைகள் இணைக்க்பட்டு கல்முனை பிரதேச சபை உருவாக்கப்பட்டது. இதுவே தற்போது கல்முனை மாநகர சபையாக உள்ளது.

சுமார் 60 வருடங்களாக தனியான கிராமிய சபையைக் கொண்டிருந்த சாய்ந்தமருதை கல்முனை பட்டின சபையுடன் இணைத்துக் கொண்டமை சாய்ந்தமருது மக்களுக்கு அதிர்ச்சியாகவே இருந்தது. ஆயினும், கல்முனை மாநகர சபையை ஏற்றுக் கொண்டார்கள். இருப்பினும் கல்முனை பிரதேசத்து அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள், சாய்ந்தமருது மக்களின் வாக்குகளை சுமார் 95 வீதம் பெற்று வந்த முஸ்லிம் காங்கிரஸின் செயற்பாடுகளும், புறக்கணிப்பும் சாய்ந்தமருது மக்களை தனியான உள்ளுராட்சி சபையை கேட்பதற்கு தூண்டியது எனலாம். குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமின் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரித்தாளும் தந்திரம் சாய்ந்தமருது மக்களினால் தெளிவாக உணரப்பட்டதன் பின் விளைவுதான் சாய்ந்தமருதிற்கு தனியான உள்ளுராட்சி சபை தரப்பட வேண்டுமென்ற கோரிக்கை மக்கள் போராட்டமாக வெடித்துள்ளமைக்கு காரணமாகும்.

சாய்ந்தமருதிற்கு தனியான பிரதேச சபை தரப்பட வேண்டுமென்ற கோரிக்கை அவ்வப்போது முன் வைக்கப்பட்டாலும் கல்முனை மாநகர சபையின் மேயராக சாய்ந்தமருதைச் சேர்ந்த சிராஸ் மீராசாஹிவ்பை நியமிப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸின் தலைமை தயக்கம் காட்டியது. இதனால், சாய்ந்தமருது மக்கள் தேர்தலில் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற சிராஸ் மீராசாஹிவுக்கு மேயர் பதவியை வழங்க வேண்டுமென்று வீதிக்கு வந்து போராட்டங்களைச் செய்தார்கள். இதன் பின்னர்தான் சிராஸ் மீராசாஹிவு மேயராக நியமிக்கப்பட்டார்

சாய்ந்தருதிற்கு தனியான பிரதேச சபை வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை சிராஸ் மீராசாஹிவுக்கு மேயர் பதவி வழங்கப்பட்டமை தணிக்கச் செய்தது. தங்களுக்கும் அதிகாரம் தரப்பட்டுள்ளதென்ற எண்ணத்தை மக்களுக்கு ஏற்படுத்தியது. ஆயினும், முஸ்லிம் காங்கிரஸ் 30 மாதங்களின் பின்னர் சிராஸ் மீராசாஹிவுக்கு வழங்கிய மேயர் பதவியை திரும்பப் பெற்றுக் கொண்டது. அப்பதவியை கல்முனையைச் சேர்ந்த நிஸாம் காரியப்பருக்கு வழங்கியது. இந்த நிகழ்வு சாய்ந்தமருது மக்களை சிந்திக்க வைத்தது. சிராஸ் மீராசாஹிவு முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்று முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்வின் தலைமையிலான தேசிய காங்கிரஸில் இணைந்து கொண்டார். அப்போது உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சராக .எல்.எம்.அதாவுல்லாஹ் இருந்தார். சாய்ந்தமருதிற்கு தனியான பிரதேச சபையை பெற்றுக் கொள்வதற்காகவே தேசிய காங்கிரஸி;ல் இணைந்து கொண்டேன் என சிராஸ் மீராசாஹிவு  தெரிவித்தார். அமைச்சர் அதாவுல்லாஹ்வும் சாய்ந்தமருதிற்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்கப்படுமென்று உறுதி கூறினார். அவர் கல்முனை மாநகர சபையை நான்காகப் பிரித்து நான்கு உள்ளுராட்சி சபைகளை உருவாக்குவதற்கு ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதற்கு முஸ்லிம் காங்கிரஸின் கல்முனை பிரதிநிதிகள் எதிர்ப்புக் காட்டினார்கள். அதாவுல்லாஹ்வின் நடவடிக்கைகளுக்கு தடைகளை ஏற்படுத்தினார்கள்.

இதற்கு முன்னதாக முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தலைவர் மர்ஹும் அஸ்ரப்பும், இன்றைய தலைவர் ரவூப் ஹக்கீமும் சாய்ந்தமருதிற்கு தனியான பிரதேச சபை பெற்றுத் தரப்படுமென்று தெரிவித்திருந்தார்கள். இந்த வரிசையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியுதீனும் சாய்ந்தமருதிற்கு தனியான பிரதேச சபை வழங்கப்படுமென்றார். இவை எல்லாவற்றிக்கும் மேலாக முஸ்லிம் காங்கிரஸ் சந்தாங்கேணியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் சாய்ந்தமருதிற்கு பிரதேச சபை வழங்கப்படுமென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சொல்ல வைத்தது. இது போதாதென்று கல்முனை தொகுதியை பிரதிநிதித்துவம் செய்து கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் சாய்ந்தமருதிற்கு பிரதேச சபை வழங்கப்படும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இது நிச்சயம் நடக்கும் என்றார். முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் சாய்;ந்தமருதிற்கு தனியான பிரதேச சபை என்ற வாக்குறுதி நாட்டின் தலைவரால் சொன்னது. இது நடந்தேயாகும். இதனை முஸ்லிம் காங்கிரஸ் நிறைவேற்றும் என்று சாய்ந்தமருதில் நடைபெற்ற கூட்டமொன்றில் தெரிவித்தார். இன்றைய உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா சாய்ந்தமருதிற்கு வந்து உங்களுக்கு பிரதேச சபை வழங்கப்படும் என்றார்.

இவ்வாறு நம்பிக்கைகள் ஊட்டப்பட்டன. சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் தலைவர் எஸ்.எம்.எம்.ஹனீபா தலைமையில் 42 தடவைகள் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் அமைச்சர் றிசாட்டின் வேண்டுகோளுக்கு அமைவாக சாய்ந்தமருதிற்கு தனியான பிரதேச சபை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை அமைச்சர் பைசர் முஸ்தபா மேற்கொண்டார். இதற்கு முஸ்லிம் காங்கிரஸ் எதிர்ப்புக் காட்டியது. கல்முனை மாநகர எல்லையை நான்காகப் பிரியுங்கள் என்று பிரதி அமைச்சர் ஹரீஸ் சொன்னார். தமது இந்த கோரிக்கைக்கு அமைச்சர் றிசாட் பதியுதீனையும் இணங்க வைத்தார். இதனால் சாய்ந்தமருதிற்கு தனியான பிரதேச சபை என்பது தடைப்பட்டது. இதனால்தான் சாய்ந்தமருது மக்கள் தங்களை எல்லா அரசியல் கட்சிகளும், தலைவர்களும் ஏமாற்றிவிட்;டார்கள் என்று வீதிக்கு வந்து மறியல் போராட்டத்தினை நடத்தினார்கள். மூன்று நாட்கள் ஹர்த்தாலை மேற்கொண்டார்கள். இந்நிலையில் கல்முனை முஸ்லிம்கள் தங்கள் பங்கிற்கு அமைதிப் பேரணியையும், இரண்டு நாள் ஹர்த்தாலையும் மேற்கொண்டார்கள்.

அரசியல் இலாபத்திற்காக, சாய்ந்தமருது மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக அரசியல் கட்சிகள் சாய்ந்தமருது மக்களின் உணர்வுகளுடன் விளையாடியுள்ளது. குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ் தங்களுக்கு 95 வீதம் வாக்களிக்கும் பிரதேசத்தை இழந்து விடக் கூடாதென்று சிந்தித்துக் கொண்டதேயல்லாமல் அதன் சாத்தியப்பாடு, கல்முனை முஸ்லிம்களின் எண்ணப்பாடு, சாய்ந்தமருதை தனியே பிரிப்பதா அல்லது நான்காகப் பிரிப்பதா, பிரிப்பதனால் ஏற்படும் விளைவுகள், தமிழர்களின் நிலைப்பாடு என எதனையும் சீர்தூக்கிப் பாராது மக்களின் உணர்வுகளில் ஏற்பட்டுள்ள நோய்க்கு உடனடி மருந்து கொடுக்கப்பட்டதே அன்றி அதன் பக்க விளைவுகளைச் சிந்திக்கவில்லை. சாய்ந்தமருது மக்கள் எப்போதும் முஸ்லிம் காங்கிரஸோடு இரக்கமாகவே இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டது.

இன்று சாய்ந்தமருது மக்கள் தனியான ஒரு பிரதேச சபையை கேட்கின்றார்கள் என்றால் அவர்கள் அடைந்த ஏமாற்றங்களின் எதிர்த் தாக்கம் என்றே கூறுதல் வேண்டும். தொடர்ச்சியாக ஏமாற்றங்கள் நிகழும் போது இரண்டில் ஒன்று பார்ப்போம் என்ற உணர்வும் தானாகவே ஏற்பட்டுவிடும். ஆதலால், இன்று கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளுக்கு மிகப் பெரிய பங்களிப்பை முஸ்லிம் காங்கிரஸ்தான் செய்துள்ளது. வாக்குறுதிகளை வழங்கும் போது நிறைவேற்ற முடியுமா என்று பார்த்தல் வேண்டும். வாக்குறுதிகளை வழங்குவது எழிது. அதனை நிறைவேற்றுவது கடினம். வாக்குறுதிகளை நிறைவேற்றாதவர்களை இஸ்லாம் நயவஞ்சகர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம் அரசியல் கட்சியின் தலைவர் போகும் இடமெல்லாம் அது, இது எல்லாம் தரப்படும் என்பதும், அதனை நிறைவேற்றாது மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றிக் கொண்டு வருவதும் மக்களின் வெறுப்புக்குள்ளாகியுள்ளது.

சுhய்ந்தமருதைப் தனியே பிரித்தால் கல்முனை மாநகர சபையின் அதிகாரம் தமிழர்களின் கைகளுக்கு சென்றுவிடும் என்று கல்முனை முஸ்லிம்கள் தெரிவிக்கின்றார்கள். கல்முனை மாநகர சபையில் முஸ்லிம்கள் சுமார் 69 வீதமாகவும், தமிழர்கள் சுமார் 31 வீதமாகவும் உள்ளார்கள். சாய்ந்தமருது பிரிந்தால் இந்த இன விகிதாசாரம் மாற்றமடையும். முஸ்லிம்கள் சுமார் 58 வீதமாகவும், தமிழர்கள் சுமார் 42 வீதமாகவும் காணப்படுவார்கள். இந்நிலையில் உள்ளுராட்சி தேர்தல் 60:40 என்ற அடிப்படையில் கலப்பு தேர்தல் முறையில் நடைபெறும் போது கல்முனை மாநகர சபையின் அதிகாரம் முஸ்லிம்களிடமா அல்லது தமிழர்களிடமா என்பதனை தேர்தலில் குதிக்கும் கட்சிகளின் எண்ணிக்கையே தீர்மானிக்கும். தமிழர்களின் வாக்குகள் பல கட்சிகளுக்கும் சிதறடிக்கப்பட்டால் முஸ்லிம்களினால் இலகுவாக மாநகர சபையின் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளலாம்முஸ்லிம்களின் வாக்குகள் பல கட்சிகளுக்கும் சிதறடிக்கப்பட்டு தமிழர்களின் வாக்குகள் ஒரு கட்சிக்கு அளிக்கப்படுமாயின் தமிழர்கள் சிரமங்களுக்கு மத்தியில் கல்முனை மாநகர சபையின் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வார்கள். ஆதலால், சாய்ந்தமருதை தனியாகப் பிரிக்காது 1987ஆம் ஆண்டிற்கு முன்னர் இருந்ததைப் போன்று நான்காக பிரியுங்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதே வேளை, தமிழர்கள் கல்முனை மாநகர சபையிலிருந்து சாய்ந்தமருதை தனியாகப் பிரிப்பதற்கு நாங்கள் எதிர்பில்லை என்று தெரிவிக்கின்றார்கள். ஆனால், நான்காகப் பிரிப்பதற்கு அனுமதிக்கமாட்டோம் என்றும் தெரிவிக்கின்றார்கள். ஆகவே கல்முனை மாநகர சபையிலிருந்து சாய்ந்தமருதைப் பிரிப்பதற்கு கல்முனை முஸ்லிம்கள் எதிர்ப்பும், தமிழர்கள் ஆதரவும் அளிக்கின்றார்கள். நான்காகப் பிரிப்பதற்கு கல்முனை மற்றும் சாய்ந்தமருது முஸ்லிம்கள் ஆதரவாக உள்ளார்கள். ஆனால், தமிழர்கள் எதிர்க்கின்றார்கள். இதனால், கல்முனை மாநகர சபையை பிரித்து உள்ளுராட்சி சபைகளை உருவாக்க வேண்டுமாயின் தமிழர் தரப்பினரிடமும் பேச வேண்டியுள்ளது

முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுக்களில் ஈடுபடுதல் வேண்டும். முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ள போதிலும் இதுவரைக்கும் இரண்டு கட்சிகளும் பேசி எந்தப் பிரச்சினைக்கும் தீர்வுகளைக் காணவில்லை. எத்தனை தடவைகளும் பேசலாம். அவை பிரயோசனமாக இருக்க வேண்டும். தற்போது அரசியல் கட்சிகள் எல்லாம் மக்களை ஏமாற்றுவதற்கே பேச்சுவார்த்தைகளைச் செய்து கொண்டிருக்கின்றது. இந்த வேலையை முஸ்லிம் கட்சிகள் மிகவும் தீவிரமாக செய்து கொண்டிருக்கின்றது.

இதே வேளை, சாய்ந்தமருது - மாளிகைக்காடு பள்ளிவாசல்கள், நிறுவனங்களின் சம்மேளனமும், சாய்ந்தமருதிலுள்ள சமூக அமைப்புக்களும் கூட்டாக மக்கள் முன்னலையில் சாய்ந்தமருது பிரகடனம் எனும் பேரில் பிரகடனங்களை வெளியிட்டுள்ளார்கள். சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் முன்னிலையில் செய்யப்பட்ட பிரகடனத்தில் அரசியல் கட்சிகளுக்கு ஆப்பு வைக்கப்பட்டுள்ளது. அதாவது சாய்ந்தமருது பிரதேச மக்கள் அரசியல் கட்சிகளுடன் தொடர்புகளை வைத்துக் கொள்ளக் கூடாது என்பதும், எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் சாய்ந்தமருது - மாளிகைக்காடு பள்ளிவாசல்கள், நிறுவனங்களின் சம்மேளனமும், சாய்ந்தமருதிலுள்ள சமூக அமைப்புக்களும் இணைந்தே வேட்பாளர்களை நிறுத்தும். இவர்களுக்கே சாய்ந்தமருது மக்கள் ஆதரிக்க வேண்டுமென்பதும் முக்கியமான தீர்மானங்களாகும்

சாய்ந்தமருது பிரகடனம் அரசியல் கட்சிகளுக்கு ஆப்பாக இருந்தாலும் முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்த வரை அதன் கழுத்தை அறுக்கும் ஒன்றாகவே உள்ளது. சாய்ந்தமருதில் முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்கு பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. முஸ்லிம் காங்கிரஸை பொறுத்த வரை அம்பாரை மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளில் கல்முனைத் தொகுதி மாத்திரம்தான் மிகவும் உறுதியான தளமாக அக்கட்சிக்கு இருந்து வந்துள்ளது. சாய்ந்தமருது பிரகடனம் முஸ்லிம் காங்கிரஸின் உறுதியான கல்முனை தொகுதி எனும் கோட்டையை உலுக்கியுள்ளது. இந்நிலைக்கு முஸ்லிம் காங்கிரஸ்தான் காரணமாகும்.

சிராஸ் மீராசாஹிவுக்கு மேயர் பதவியை கொடுப்பதற்கு இழுத்தடிப்புச் செய்தமை, பின்னர் வழங்கிய மேயர் பதவியை 30 மாதங்களின் பின்னர் பிடுங்கி கல்முனைக்கு வழங்கியமை, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருக்கு கிழக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சர் பதவியை தருவதாகக் கூறி இறுதி வேளையில் அதனை எம்..மன்சூருக்கு வழங்கியமை, பிரதேச சபை நிச்சயம் தரப்படும். முஸ்லிம் காங்கிரஸின் இந்த உறுதிமொழியில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை என்று தலைவர் முதல் பாராளுமன்ற உறுப்பினர் வரை நம்பிக்கையூட்டியமை, அபிவிருத்தி நடவடிக்கைகளில் பாரபட்சம் காட்டியமை, அரசியல் அதிகாரங்கள் எல்லா பிரதேசங்களிலும் இருக்க வேண்டுமென்ற மர்ஹும் அஸ்ரப்பின் நல்ல சிந்தனையைப் பின் பற்றாமை, மாற்று அரசியல் கட்சிகள் எக்காரணம் கொண்டும் கல்முனைத் தொகுதியில் செல்வாக்குப் பெற்றுவிடக் கூடாதென்பதில் மாத்திரம் கவனம் செலுத்தியமை எனப் பல தவறுகள் நடைபெற்றுள்ளன. யார் எதனை விதைக்கின்றாரோ அதனையே அவர் அறுவடை செய்ய வேண்டியேற்படும்.

தற்போது சாய்ந்தமருது மக்கள் அரசியல் கட்சிகள் தங்களின் வாக்குகளுக்காக உணர்வுகளை கருவியாகப் பயன்படுத்தியுள்ளதென்று உணர்ந்துள்ளார்கள். இனி ஒரு தடைவ சாய்ந்மருது மக்களை ஏமாற்ற முடியாது. ஆதலால், முஸ்லிம் கட்சிகளும், அவற்றின் தலைவர்களும், கல்முனை மற்றும் சாய்ந்தமருது அனைத்துப் பள்ளிவாசல்கள், நிறுவனங்களின் சம்மேளனங்கள், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஆகியோர்கள் இதயசுத்தியுடன் பேசுதற்கு முன் வருதல் வேண்;டும். இத்தகையதொரு பேச்சுவார்த்தைதான் கல்முனை மாநகர சபையை முஸ்லிம்களினால் பாதுகாத்துக் கொள்வதற்கும், சாய்ந்தமருதிற்கு தனியான பிரதேச சபை வழங்குவதற்கும், தமிழர்களுக்கும் பிரதேச சபை வழங்கவும் முடியும். இவ்வாறு நடைபெற்றால் மாத்திரமே கல்முனையில் அமைதியை எதிர்பார்க்கலாம்.
சாய்ந்தமருதிற்கு உள்ளுராட்சி சபை எப்போது சாத்தியமாகும்? சாய்ந்தமருதிற்கு உள்ளுராட்சி சபை எப்போது சாத்தியமாகும்? Reviewed by Madawala News on 11/07/2017 07:56:00 PM Rating: 5