Kidny

Kidny

பிரமிட் வியாபாரத்தால் தென்மராட்சியில் முறுகல் நிலை-பொலிஸ் நிலையம் எச்சரிக்கை



பாறுக் ஷிஹான்
தென்மராட்சி பகுதியில் சட்டவிரோத  பிரமிட் வியாபாரத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் அவ் வியாபாரம் தொடர்பாக விளக்கமளிக்கும் மண்டபத்தை முற்றுகையிட்டதால்   பெரும் பதற்றம் ஏற்பட்டது.

சாவகச்சேரி டச் வீதியில் அமைந்துள்ள விருந்தினர்  மண்டபம் ஒன்றில் வெளிமாவட்டங்களில் இருந்து பேருந்துகளில் ஏற்றிவரப்பட்ட பொதுமக்களுக்கு பிரமிட் வியாபாரம் தொடர்பாக ஆட்சேர்க்கும் நிகழ்வு   நேற்று(5)  நடத்தப்பட்டது.

இதன்போது இவ்வியாபாரத்தினால்  ஏற்கனவே ஒருவருக்கு சுமார் 130000 ரூபா வீதம் பணம் செலுத்தி ஏமாற்றப்பட்டவர்கள்  ஒன்று கூடி தாம் செலுத்திய பணத்தை மீளத்தருமாறு கோரினர். 

இந்நிலையில்   குறித்த பகுதி இளைஞர்களும் மக்களுக்கும் ஒன்றுதிரண்டு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு ஆதரவாக மண்டப பிரதான நுழைவாயிலை மூடி 
 குறித்த பிரமிட் வியாபார நிர்வாகத்தினரை வெளியேறவிடாது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில்  பதற்றம் ஏற்பட்டது. 

இதன் போது பிரமிட் வியாபாரம் மத்திய வங்கியால் தடைசெய்யப்பட்டுள்ளது எனவும்  எமது பகுதியில் வேறு பகுதிகளை சேர்ந்த அப்பாவி பொதுமக்களை அழைத்து வந்து ஆட்சேர்ப்பு செய்கிறார்கள் இதனை இனியும் அனுமதிக்க முடியாது என அங்கு ஒன்று கூடிய   இளைஞர்கள் தெரிவித்தனர்.

குறித்த மண்டபத்தில் பிரமிட் வியாபார நிறுவனத்தால் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் வெளிமாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்படும் பொதுமக்களுக்கு பிரமிட் வியாபாரம் தொடர்பாக விளக்கமளிக்கப்படுகிறது எனவும்   

இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரிடமும் 250 ரூபா பெற்ற பின்பே மண்டபத்துக்குள் அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையிலேயே இவ்வியாபாரத்தினால்  பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் பணத்தை கேட்டு மண்டபத்திற்குள் நுழைய முனைந்ததால் இருதரப்பிற்கிடையிலும் முறுகல்நிலை ஏற்பட்டது.

இச்சந்தர்ப்பத்தில் குறித்த பகுதியில் செய்தி சேகரித்துக்கொண்டிருந்த ஊடகவியலாளர்களையும் பிரமிட் வியாபார ஊழியர்கள் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டனர்.

மேலும் தங்களிடம் பெற்ற பணத்தை மீளத்தருவதாக கடந்த 4 வாரங்களாக ஏமாற்றுவதாகவும் இது தொடர்பாக யாரிடமும் முறையிட வேண்டாம் என பிரமிட் நிர்வாகதினர் கூறுவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

பணம் மட்டுமில்லாமல் வெளிநாட்டு சுற்றுலா அழைத்துச் செல்வதாக தெரிவித்து பெற்றுக்கொண்ட கடவுச்சீட்டையும் மீளத்தரவில்லை எனவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பினர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததினைத் தொடர்ந்து குறித்த மண்டபத்திற்கு வருகைதந்த பொலிஸார் அவ் வியாபார முகாமமையாளர் உள்ளிட்டவர்களை பொலிஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

பொலிஸ் நிலையத்தில் வைத்து மேற்கொண்ட விசாரணைகளில் பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் பணம் பெற்றுக்கொண்டது மட்டுமில்லாமல் அதற்கான பற்றுச்சீட்டும் வழங்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு எதிர்வரும் புதன்கிழமை முழுத்தொகையையும் மீளளிப்பதாக தெரிவித்தனர். 

குறித்த பிரமிட் வியாபார முகாமையாளர் உள்ளிட்டவர்களை கடுமையாக எச்சரித்த பொலிஸார் பொதுமக்கள் இவ்வாறான பிரமிட் வியாபார முறைமை தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறும் தெரிவித்துள்ளனர். 

பிரமிட் வியாபாரம் தென்மராட்சிப் பகுதிகளில் இடம்பெற்றால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் உடனடியாக முறையிடுமாறும் தெரிவித்துள்ளனர்.
பிரமிட் வியாபாரத்தால் தென்மராட்சியில் முறுகல் நிலை-பொலிஸ் நிலையம் எச்சரிக்கை பிரமிட் வியாபாரத்தால் தென்மராட்சியில் முறுகல் நிலை-பொலிஸ் நிலையம் எச்சரிக்கை Reviewed by Madawala News on 11/06/2017 11:32:00 AM Rating: 5