Kidny

Kidny

சட்டியிலிருந்து அடுப்புக்குள் விழுந்த இலங்கை முஸ்லிம்கள்..

.பீ.எம்.அஸீம்.(சாய்ந்தமருது)
அவசரமாக ஆட்சியை மாற்றி   இவ்வரசாங்கத்தை அதிகாரத்துக்கு கொண்டுவந்தவர்கள் நாங்கள்தான்.
எப்படியும் இவ்வாட்சி உருவாகி ஒரு வருடத்துக்கு மட்டுமே பழையன மறந்து நிம்மதியாக இருந்திருப்போம்.

ஏனென்றால் நாம் வாக்குகளை அள்ளிப்போட்டு
கொண்டுவந்த அரசாங்கமல்லவா?
இதற்காககூட  எம்மில் சிலபேர் "இது எங்கட அரசாங்கம்" என்று சொன்ன கதையும் உண்டு.

மகிந்த ராஜபக்ச அவர்களின் ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்களுக்கெதிராக பெரியபெரிய அநியாயங்களும்,அக்கிரமங்களும் நடக்குது.அதை தட்டிக் கேட்கிறாரில்லை.பிரச்சினை செய்பவர்களை கண்டும் காணாமல் இருக்கிறார் ,என்ற ஒரேகாரணத்துக்காகவும், தங்களுக்கு நிம்மதியான வாழ்க்கை கிடைக்கவேண்டும் என்பதற்காகவுமே இப்போதைய அரசாங்கத்துக்கு முஸ்லிம்கள் முழுமையான ஆதரவினை வழங்கினர்.

கடந்தகால ஆட்சியைப் போல் அல்லாது எங்களுடைய ஆட்சி சகலருக்கும் சமவுரிமை, மதநல்லிணக்கம் போன்றவற்றை உறுதிப்படுத்தும் ஒரு நல்லாட்சியாக அமையும் என்ற வாக்குறுதியளித்தே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது

ஆனால் தற்போதைய சூழ்நிலைகளைப் நோக்குமிடத்து ஏன் இந்த அரசாங்கத்தை கொண்டுவந்தோம் என்று எண்ணத் தோன்றுகிறது. ஒப்பீட்டு ரீதியில் மகிந்த ஆட்சியில் நடந்த   சம்பவங்களுக்கு கொஞ்சமும் குறையாத வகையில் இனவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதன்மூலம் இவ்வரசாங்கத்தினுடைய நல்லாட்சியின் லட்சணம் புரிகிறது.

இனங்களுக்கிடையே பிரச்சினைகளைத் தூண்டுவோர் கடந்த ஆட்சியிலிருந்ததைப்போல் மிகவும் வெளிப்படையாகவும்,சுதந்திரமாகவும் உலாவுகின்றனர். மேடையமைத்து ,மீடியாவைக் கூப்பிட்டு இனத்துவேச வார்த்தைகளை அள்ளிவீசுகின்றனர்.பொதுவெளியில் நின்றுகொண்டு அரசையும்,சட்டத்தையும் பகிரங்கமாக விமர்சிக்கின்றனர்.இத்தனைக்கும்  அரசாங்கம் அவர்களுக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்காமல் ராஜமரியாதை வழங்குகிறது. அவர்கள்முன் கைகட்டி தலைகுனிந்து நிற்கிறது

விட்டுவிட்டுப் பெய்யும் மழையைப்போல் அவ்வப்போது கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைகளால் முஸ்லிம்கள் பாதிக்கப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், "இவ்வரசை உருவாக்க பெரும்பங்காற்றியவர்கள்" என்றடிப்படையில் அரசு ஓடிவரும்,தங்களை பாதுகாக்கும் என்று நம்பி ஏமாற்றமடைந்துள்ளார்கள்.

கண்கொத்திப் பாம்பாக புற்றுக்குள் பதுங்கியிருப்பதும்,பசியெடுக்கும்போது பால் அருந்த வெளிவருவதுமாக இனவாத தீயை மூட்டும் சக்திகள் தங்கள் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றன.இவர்களுக்கெதிராக பலவழக்குகள்  இருந்தும் ,நீதிமன்றினால் பிடியானைகள் பிறப்பிக்கப்பட்டும் எந்தவித கைதுமின்றி லாவகமாக தப்பிக்கவிடப்படுவதும் இந்த நல்லாட்சியில்தான் நடக்கின்றன...

அசம்பாவிதங்கள் நடக்கின்றபோது அமைதியாகவிருந்து வேடிக்கை பார்த்துவிட்டு ,எல்லாம் முடிந்தபின்பு களத்துக்குவந்து சந்தேகத்தில் சிலபேரை கைதுசெய்வதுடன் அரசாங்கத்தின் கடமைகள் முடிந்துவிடாது. எந்த சம்பவங்களின்போதும்  வருமுன் காக்கும் திட்டம் அவசியம் இருக்கவேண்டும்.

குறிப்பாக ,முஸ்லிம்கள் விடயத்தில் இவ்வரசாங்கத்துக்கு கூடிய பொறுப்புணர்வு இருக்கிறது.

தாங்கள் ஆட்சிக்குவருவதற்கு முஸ்லிம்கள் அளித்த வாக்குகளே காரணம் என்று பல தடவைகள் ஜனாதிபதியும்,பிரதமரும் கூறியுள்ளனர்.அதற்கான உண்மையான நன்றி விசுவாசத்தை காட்டவேண்டுமானால் இத்தருணமே சிறந்தது.அப்படியில்லையாயின் முந்திய அரசுக்கும் ,தற்போதைய அரசுக்கும் வித்தியாசமில்லாமல் போய்விடும்.

தற்போதைய சூழல் யார் கொளுத்திப்போட்டாலும் வெடிக்கும் என்றநிலையில் அரசு தொடர்ந்து அசமந்தமாக இருக்குமானால் நிச்சயமாக தாங்கள் ஆட்சிசெய்வதற்காக , உயிரை பணயம்வைத்து அவலக்குரலிட்ட மக்களின் உணர்வுகளை தங்களின் சந்தர்ப்பவாத அரசியலுக்காக பயன்படுத்திய அரசாங்கம் என்ற அவப்பெயரை சுமந்த துர்ப்பாக்கிய நிலைமைக்கு ஆளாகிவிடலாம்.
சட்டியிலிருந்து அடுப்புக்குள் விழுந்த இலங்கை முஸ்லிம்கள்..   சட்டியிலிருந்து அடுப்புக்குள் விழுந்த இலங்கை முஸ்லிம்கள்.. Reviewed by Madawala News on 11/22/2017 07:30:00 PM Rating: 5