Kidny

Kidny

உதுமாலெப்பை மற்றும் சுபையிரின் பெயர்கள் வரலாற்றில் எழுதப்பட வேண்டும்


முஸ்லிம் சமூகத்தின் உரிமைக்காக கிழக்கு மாகாண சபையிலே தைரியமாக எழுந்து நின்று உண்மையான ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கும், முஸ்லிம் சமூகத்தின் மீது அன்பு கொண்டு, முஸ்லிம் சமூகத்தின் மானத்தை காப்பதற்கும் குரல் கொடுத்த முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர்களான உதுமாலெப்பை மற்றும் சுபையிர் ஆகியோரின் பெயர் வரலாற்றில் எழுதப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார். 

தேசிய காங்கிரஸ் கட்சியின் மக்கள் பேரணியும், பாலமுனை பிரகடனமும் (29) பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்மாநட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பதவிகளுக்கும், சலுகைகளுக்கும் சோரம் போகாது முஸ்லிம் சமூகத்தின் உரிமைக்காக கிழக்கு மாகாண சபையிலே தைரியமாக எழுந்து நின்று உண்மையான ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கும், முஸ்லிம் சமூகத்தின் மீது அன்பு கொண்டு, முஸ்லிம் சமூகத்தின் மானத்தை காப்பதற்கும் குரல் கொடுத்த முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர்களான உதுமாலெப்பை மற்றும் சுபையிர் ஆகியோர் வரலாற்றில் பேசப்படுவார்கள் அவர்களுடைய பெயரும் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டும்.

குறிப்பாக, இந்தியாவினால் கொண்டு வரப்பட்ட மாகாண சபை முறைமை இந்த நாட்டில் எந்த மக்களையும் வாழ வைக்கவில்லை என்பதால் மாகாண சபை முறையை ரத்து செய்து மாகாண சபை முறையையே இல்லாமல் செய்ய வேண்டும். வடக்கு கிழக்கு இணைப்பு அல்லது பிரிப்பு பற்றி இப்போது நாங்கள் பேச வேண்டியதில்லை. மொத்தமாக மாகாண சபை முறைமையே இல்லாமல் செய்யப்பட வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடாகும்.

மாகாண சபைச் சட்டம், மாகாண சபை திருத்தம், 13வது திருத்தம் இவை எதுவும் மக்கள் பிரச்சினைகளை தீர்க்கவில்லை. அவை மக்களுக்கு மேலும் பிரச்சினைகளையே உருவாக்கின. நாட்டிலுள்ள மக்களுக்கு என்ன தேவையோ அந்த தேவைகளை நிறைவு செய்வதற்குத்தான், மக்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத்தான்  அரசியலமைப்பு தேவை. 

இனங்களை மோதவிட்டு அவர்களை பிரச்சினைக்குள்ளாக்கி ஒரு இனத்தை இன்னுமொரு இனம் அடக்கி ஆள்கின்ற அல்லது இருக்கின்ற பிரச்சினைகளை விட பிரச்சினைகளை அதிகரிக்கின்ற அரசியலமைப்பு மாற்றம் தேவையில்லை. 

இடைக்கால அறிக்கையில்; வடகிழக்கு இணைப்பைக் கோரும் தமிழ் தரப்பினர், வடகிழக்கிற்கு வெளியே வாழ்கின்ற தமிழர்களின் பிரச்சினைகளையும், தமிழர்களையும் கருத்திற் கொள்ளாத போது முஸ்லிம்களின் பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டா தீர்த்து வைக்கப்போகிறார்கள்? இல்லவே இல்லை. அவர்கள் செயற்படுவதெல்லாம் மக்களின் நலனுக்காக அல்ல. ஏதோவொரு மேலாதிக்க சக்திகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக என்பதை தமிழ் மக்களும் முஸ்லிம்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

யாப்பு என்பது யாரையும் பழி தீர்ப்பதற்காகவோ அல்லது இனங்களுக்கிடையில் சண்டையை தோற்றுவிப்பதற்காகவோ அல்லது சந்தேகங்களை ஏற்படத்துவதற்காகவோ அரசியலமைப்பு உருவாக்கப்பட முடியாது. அரசியலமைப்பு என்பது மக்களை வாழ வைக்க வேண்டும். அதனால் அரசியலமைப்பின் நிர்ணய சபை வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கையை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

உதுமாலெப்பை மற்றும் சுபையிரின் பெயர்கள் வரலாற்றில் எழுதப்பட வேண்டும்  உதுமாலெப்பை மற்றும் சுபையிரின் பெயர்கள் வரலாற்றில் எழுதப்பட வேண்டும் Reviewed by Madawala News on 11/01/2017 03:03:00 PM Rating: 5