Ad Space Available here

நல்லாட்சியிலும் அநீதி என மக்கள் விசனம் !தோப்பூர் எம்.என்.எம்.புஹாரி-
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சிறுபாண்மை மக்களுக்குச் சொந்தமான காணிகளை

வனஜீவராசிகள் திணைக்களம் , தொல் பொருள் திணைக்களங்கள் கையகப்படுத்த முனைகின்ற செயற்பாடு பரவலாகவே இடம் பெற்று வருகின்றன.

இதில் தோப்பூர் நீணாக்கேணி காணிப் பிரச்சினை , மூதூர் கங்குவேலி படுகாடு பிரச்சினை, திருகோணமலை கருமலையூற்று பள்ளிவாசல் பிரச்சனை, புல்மோட்டை அரிசிமலை பிரச்சனை என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

இதில் புதிதாக உருவெடுத்திருக்கின்ற பிரச்சினை மூதூர் மலைப் பகுதியை அண்டிய மூதூர் கட்டைபறிச்சான் (தெற்கு) சந்தனவெட்டை காணிப்பிரச்சினையாகும்.இந்த பகுதியில் உள்ள காணிகள் வனஜீவராசிகள் திணைக்களத்திற்குச் சொந்தமான காணியென்றும் இப் பிரதேசத்தில் குடியிருப்போரும் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவோரையும் வெளியேறுமாறும் இதனை மீறும் பட்சத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம் என்றும் மூதூர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தங்களை அச்சுறுத்துவதாக மூதூர் சந்தனவெட்டை மலையடிவாரப் பகுதியில் குடியிருக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு பயிர்ச் செய்கையில் ஈடுபட்ட 03 விவசாயிகளை புதன்கிழமை (09) கைது செய்து மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாகவும் அதன் பிற்பாடு அவர்கள்  பிணையில் வந்திருப்பதாதவும் தெரிவிக்கின்றனர்.

குடியேற்றம் 

இந்த மூதூர் சந்தனவெட்டை மலையடிப் பகுதியில் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டார நாயக்காவின் காலப்பகுதியில் 1970 ஆண்டு மூதூர் முஸ்லிம்களுக்கு 63 ஏக்கர் காணிகள் பயிர் செய்கை மேற் கொள்வதற்காக பகிர்தளிக்கப்பட்டது.அக்காலத்தில் இவர்கள் சேனைப் பயிர்ச் செய்கை செய்து தங்களது குடும்பங்களோடு வசித்து வந்தது மாத்திரமல்லாமல் இங்கிருந்து தங்களது பிள்ளைகளை மூதூர் நகர் பகுதிக்கு பாடசாலைகளுக்கு அனுப்பி நிரந்தரமாம குடியிருந்தும் வந்துள்ளார்.

இதன் பிற்பாடு 1985 காலப்பகுதியில் நாட்டில் ஏற்பட்ட உக்கிர யுத்த மோதல் காரணமாக இருக்க முடியாத காரணத்தினால் இவர்கள் இருப்பிடத்தை விட்டு இடம் பெயர்ந்து பெரும் இன்னல்களுக்கு மத்தியில் மூதூர் நகர் பகுதியில் வசித்து வந்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து யுத்தம் நிறைவடைந்து 2009 ஆண்டு மீண்டும் தங்களது பாரம்பரிய காணிகளுக்குச் சென்று பெரும் செலவுகளை மேற் கொண்டு இன்று வரை சோளம், நிலக்கடலை, வேளாண்மை போன்ற பயிரினங்களை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் 07 வருடங்களாக தாங்கள் எங்களது காணிகளை துப்பரவு செய்து பயிர் செய்கையில் ஈடுபட்டு வருவது தெரிந்திருந்தும் இப்போது எங்களை சந்தனவெட்டை மலையடி பகுதியில் உள்ள காணியை விட்டு வெளியேறுமாறு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கூறுவதன் மர்மம் புரியாத புதிராக உள்ளதாகவும் இவர்கள் குறிப்பிடுகின்றனர்.

அத்தோடு கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிலர் வந்து எமது சந்தனவெட்டை மலையடிவாரத்தை அண்டிய பகுதியில் கால் நடைகள் வளர்க்க போகின்றோம் அதற்காக உங்களது காணிகளை விலைக்குத் தருமாறு கேட்டனர்.அதற்கு நாங்கள் சம்மதிக்கவில்லை.எங்களது மூதாதையர்கள் வசித்து பயிர் செய்த காணியை விற்பதற்கு முன்வரவும்வில்லை.மேலும் எங்களது காணியானது கல் உடைக்கின்ற மலைப் பகுதியை அண்டியிருப்பதால் எங்களது காணியை எடுத்தால் உடைக்கின்ற கட்களை எடுத்து சேமித்து வைத்து ஏற்றி இறக்குவதற்கு இலகுவாக இருக்கும். இதனால் நாங்கள் காணிகளை விற்பனை செய்ய மறுத்த விடயமும், கல் உடைக்கின்ற கொந்தராத்துக்கிரர்களின் பின்புலமும் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்க வேண்டியுள்ளது.

இவர்கள் தமது காணிக்கான உறுதிப் பத்திரங்களை பெறுவதற்காக மூதூர் பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட காணிக் கச்சேரி பலவற்றில் கலந்து கொண்டு காணி உறுதிப் பத்திரங்களை பெறுவதற்காக கார்த்துக் கொண்டிருப்பதோடு காணி கச்சேரியில் கலந்து கொண்ட பதிவுகளையும் வைத்துள்ளனர்.அத்தோடு கடந்த எட்டு வருடங்களாக பயிர் செய்கையில் ஈடுபடுவதற்காக பெற்று வந்த உர மானிய ஆவணங்களையும் வைத்துள்ளனர்.மேலும் முஸ்லிம் மையவாடியொன்றும் இங்கு காணப்படுகின்றது.


இவ்வாறு போதுமான ஆதாரங்களை நாங்கள் வைத்திருந்தும் ஏழைகளான எங்களது காணிகளை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கையகப்படுத்த முனைவதானது வேதனையளிக்கின்றது.நாங்கள் மடிந்தாலும் எங்களது ஒரு அங்குல காணியையும் விட்டுக் கொடுக்க மாட்டோம் இது எங்களது மூதாதையார்கள் வாழ்ந்த பூமியாகும்.

இந்த பிரச்சனை தொடர்ந்து செல்லுமாக இருந்தால் இப் பிரச்சனையினை முகம் கொடுப்பதற்கான போதிய பொருளாதார வசதிகள் எங்களிடம் இல்லை.எனவே மூதூர் சந்தனவெட்டை பகுதியில் மாலையடிப் பகுதியில் இருக்கும் எங்களது காணி விடயத்தில் திருகோணமலை மாவாட்ட அரசியல் வாதிகளும், சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகளும் கரிசணை எடுத்து காணி முரண்பாட்டை தீர்த்துத் தர வேண்டுமெனவும் காணி உரிமையாளர்கள் வேண்டி நிற்கின்றனர். 
நல்லாட்சியிலும் அநீதி என மக்கள் விசனம் ! நல்லாட்சியிலும் அநீதி என மக்கள் விசனம் ! Reviewed by Madawala News on 11/12/2017 07:37:00 PM Rating: 5