Kidny

Kidny

சாய்ந்தமருதிற்கான உள்ளுராட்சி சபை கிடப்பில்!




எஸ்.றிபான் -
மிகவும் ஒற்றுமையாக செயற்பட்டு வந்த கல்முனை முஸ்லிம்களும், சாய்ந்தமருது முஸ்லிம்களும்
பிரதேச ரீதியான அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக ஏட்டுக்குப் போட்டியாக ஹர்த்தாலையும், வீதி மறியல் போராட்டத்தையும், ஊடகவியலாளர் மாநாடுகளையும் நடத்திக் கொண்டிருப்பது இலங்கை முஸ்லிம்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம்களுக்கு எதிராக மாற்று இனத்தவர்கள் திட்டமிட்டவாறு நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களின் அரசியல், பொருளாதாரம், சமூக ஒற்றுமை போன்றவற்றை சிதைப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் வெளிநாடுகளின் நிதி உதவியுடன் செய்து கொண்டிருக்கின்றார்கள். நாடு பூராகவும் இத்தகைய நடவடிக்கைகள் இடம் பெறறுக் கொண்டிருக்கின்றன. இதே வேளையில் மாகாண ரீதியாகவும் முஸ்லிம்களின் பலத்தை பலவீனப்படுத்தவதற்கு சிங்கள பேரினவாதமும், தமிழ் பேரினவாதமும் கூட்டுக் குடும்பம் போல் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற கல்முனை, சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ளுராட்சி சபைகளை மையப்படுத்தி கருத்தாடல்களில் ஈடுபட்டுக் கொள்வது முஸ்லிம்களை கருவறுக்க வேண்டுமென்று சிந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு சாதகமாகவே அமையும் என்பதனை கல்முனை, சாய்ந்தமருது முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும்.


கல்முனை மாநகர சபை

கல்முனை மாநகர சபை முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்டதொரு சபையாகும். கல்முனை மாநகர சபையில் சுமார் ஒரு இலட்சத்து 18 ஆயிரத்திற்கும் குறையாத சனத் தொகை உள்ளது.  இவர்களில் சுமார் 36ஆயிரத்திற்கும் அதிகமாக தமிழர்களாக உள்ளார்கள். முஸ்லிம்கள் 50 ஆயிரத்திற்கும் அதிகமாவுள்ளார்கள். இதன் படி முஸ்லிம்கள் சுமார் 69 வீதமாகவும், தமிழர்கள் சுமார் 31 வீதமாகவும் காணப்படுகின்றார்கள். இவர்களில் சுமார் 50ஆயிரம்  பேர்  முஸ்லிம் வாக்காளர்களாகவும், சுமார் 21 ஆயிரம் பேர் தமிழ் வாக்காளர்களாகவும் உள்ளார்கள். வாக்காளர் வீதமும், சனத் தொகை வீதம் ஏறத்தாள சமமாகவே உள்ளன. கல்முனை மாநகர சபையிலுள்ள பிரதேசங்களில் சாய்ந்தமருதில் சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமான சனத் தொகை உள்ளது. 

இன்றைய கல்முனை மாநகர சபை எல்லைக்குள் 1956ஆம் ஆண்டு முதல் 1987ஆம் ஆண்டு வரை கல்முனை பட்டின சபை, கரவாகு வடக்கு கிராமிய சபை, கரவாகு தெற்கு கிராமிய சபை, கரவாகு மேற்கு கிராமிய சபை எனும் நான்கு சபைகள் காணப்பட்டுள்ளன. 1987ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட உள்ளுராட்சி சபைகள் சட்ட மூலத்தினால் கல்முனைத் தொகுதியில் காணப்பட்ட இந்த நான்கு சபைகளையும் ஒன்றினைத்து ஒரு பிரதேச சபையாகக்கப்பட்டது. ஒரு உதவி அரசாங்க பிரிவில் (ஒரு பிரதேச செயலகத்தில்) ஒரு உள்ளுராட்சி சபையை உருவாக்குதல் என்ற அடிபப்டையிலேயே மேற்படி நான்கு சபைகளும் இணைக்கப்பட்டன. இந்த இணைப்புக்கு பொது மக்களினது எந்த அபிப்ராயமும் கேட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இணைக்கப்பட்ட போது அன்றைய சூழலில் எதிர்ப்புக்கள் ஏற்படவில்லை. தமிழர்களும் அமைதியாகவே இருந்தார்கள். 1988ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக ஆர்.பிரேமதாஸ வெற்றி பெற்றால் தமிழர்களுக்கு உப பிரதேச செயலகம் உருவாக்கித் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன்படி 1989ஆம் ஆண்டு கல்முனை (தமிழ்) உப பிரதேச செயலகம் வழங்கப்பட்டது. ஆயினும் 1990ஆம் ஆண்டின் பின்னர் சாய்ந்தமருதிற்கு தனியான பிரதேச செயலகம், பிரதேச சபை பற்றிய கருத்தாடல்கள் ஆங்காங்கே தீவிரமற்றவாறு பேசப்பட்டன.


சாய்ந்தமருது

சாய்ந்தமருதிற்கு தனியான உள்ளுராட்சி சபை, பிரதேச செயலகம் ஆகியவற்றின் தேவை பற்றி முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப்பின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மர்ஹும் அஸ்ரப் 1999 மார்ச் மாதம் 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் பிரதேச சபைகள் திருத்தச் சட்ட மூலம் குறித்து பேசுகையில்  சாய்ந்தமருதிற்கு தனியான உள்ளுராட்சி சபை உருவாக்கப்பட வேண்டுமென்று அரசாங்கத்தை கேட்டுக் கொண்டார். 1999 மார்ச் மாதம் 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய முஸ்லிம் காங்கிரஸின் இன்றைய தலைவர் ரவூப் ஹக்கீம் சாய்ந்தமருதிற்கு தனியான பிரதேச சபையும், செயலகமும் அமைய வேண்டுமென்பற்காக இருபதிற்கும் மேற்பட்ட மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஆகவே மு.கா சாய்ந்தமருதிற்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்கப்பட வேண்டுமென்பதனை மர்ஹும் அஸ்ரப்பின் காலத்திலிருந்து ஏற்றுக் கொண்டுள்ளது என்பது தெளிவாகும். சாய்ந்தமருது மு.காவின் கோட்டை எனலாம். இதனால்தான் தங்களுக்கு தனியான பிரதேச செயலகமும், உள்ளுராட்சி சபையும் வழங்கப்பட வேண்டுமென்று அக்கட்சியின் தலைவரிடம் இவற்றை பெற்றுத் தருமாறு கேட்டுள்ளார்கள். 1999ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் திகதி சாய்ந்தமருதிற்கு உபசெயலகப் பிரிவு வழங்கப்பட்டது. இதற்கான நடவடிக்கையை மர்ஹும் அஸ்ரப் எடுத்திருந்தார். இதன் பின்னர் 2001 பெப்ரவரி 04ஆம் திகதி தனியான பிரதேச செயலகமாக தரம் உயர்த்தப்பட்டது. ஆயினும் தனியான உள்ளுராட்சி சபை எனும் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. மக்களும் இது குறித்து அதிக தீவிரத்தைக் காட்டவில்லை.


தனியான உள்ளுராட்சி சபை

தனியான உள்ளுராட்சி கோரிக்கைக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. அதாவது, 1928ஆம் ஆண்டு முதல் சாய்ந்தமருதிற்கு தெற்கு கிராமிய சபை எனும் பெயரில் உள்ளுராட்சி சபை இருந்துள்ளது. இது எங்களின் நீண்ட கால கோரிக்கை என்றெல்லாம் கூறப்படுகின்றன. இருப்பினும் தனியான உள்ளுராட்சி சபை எனும் கோரிக்கை அரசியல் காரணிகளினால் அதிதீவிரமடைந்தது என்பதுதான் உண்மையாகும். 

கல்முனை மாநகர சபையின் கீழ் சாய்ந்தமருது இருந்தாலும் சாய்ந்தமருதிற்கு அரசியல் ரீதியான உயர் அதிகாரங்கள் வழங்கப்படுவதிலும், அபிவிருத்திப் பணிகளிலும் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளமையே தனியான உள்ளுராட்சி சபை கோரிக்கை வீதி மறியல் போராட்டம் வரைக்கும் வந்துள்ளமைக்கு காரணமாகும். குறிப்பாக மு.காவின் அரசியல் நகர்வுகள் என்று கூறலாம். மு.கா கல்முனையை திருப்திப்படுத்துவதற்கு எண்ணியதே அல்லாமல் சாய்ந்தமருதைப் பற்றி எண்ணிப் பார்க்கவில்லை.

2011ஆம் ஆண்டு நடைபெற்ற கல்முனை மாநகர சபைத் தேர்தலில் மு.கா அமோக வெற்றி பெற்றது. மு.காவிற்குள் புதிய அங்கத்தவராக நுளைந்த சிராஸ் மீராசாஹிபு அதிக வாக்குகளைப் பெற்றுக் கொண்டார். இதனால் அவரை மேயராக நியமிக்க வேண்டிய நிர்ப்பந்தம் மு,காவின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு ஏற்பட்டது. சிராஸ் மீராசாஹிபுக்கு மேயர் பதவியை இரண்டு வருடங்களுக்கு வழங்கப்பட்டது. இதன் பின்னர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் மேயராக நியமிக்கப்பட்டார். இது சாய்ந்தமருது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எதிர்ப்புக்கள் காட்டப்பட்டன. சிராஸ் மீராசாஹிவுக்கு இரண்டு வருடங்களுக்கே மேயர் வழங்கப்பட்டது. அதற்கான ஒப்புதல் அவரிடம் பெறப்பட்;டது என்று மு.காவினால் தெரிவிக்கப்பட்டது.

2012ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் சாய்ந்தமருதைச் சேர்ந்த ஏ.எம்.ஜெமீல் வெற்றி பெற்றார். கிழக்கு மாகாண சபையின் அதிகாரத்தை மு.கா பெற்றுக் கொண்ட இத்தருணத்தில் ஜெமீலுக்கு அமைச்சர் பதவி ஒன்று வழங்கப்படுவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்கான உத்தரவாதம் ஜெமீலுக்கு வழங்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் ஜெமீலுக்கு வழங்கப்பட இருந்த கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் பதவி எம்.ஐ.மன்சூருக்கு வழங்கப்பட்டது. இதுவும் சாய்ந்தமருது மக்களை பாதித்தது. இந்தப் பின்னணியில் சிராஸ் மீராசாஹிவு முதலிலும், ஜெமீல் பின்னருமாக மு.காவை விட்டு வெளியேறினார்கள்.

இது மட்டுமல்லாமல் சாய்ந்தமருதிற்குரிய அபிவிருத்திகள் கூட புறக்கணிப்பட்டன. சாய்ந்தமருது மக்களின் வாக்குகளினாலும்தான் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மு.காவிற்கு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் கிடைக்கப் பெற்றது. ஆயினும், இவர்கள் தங்களின் பிரதேச அபிவிருத்திகளில் மாத்திரNமு அதிகூடிய அக்கறையைக் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். மட்டுமல்லாது சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள குப்பைகளைக் கூட முறையாக அகற்றுவதற்கு கல்முனை மாநகர சபை நடவடிக்கைகளை எடுக்கவில்லை. குப்பையை அகற்றுங்கள் என்று வலியுறுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனால்தான் எங்களுக்கு தனியான உள்ளுராட்சி சபை வேண்டுமென்று கேட்டு முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள் என்போர்களோடு சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் எஸ்.எம்.எம்.ஹனீபா தலைமையில் 42 பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.


ஏமாற்றம்

தனியான உள்ளுராட்சி சபையைக் கோரி மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கீம், பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், அ.இ.ம.கா தலைவர் றிசாட் பதியுதீன், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா உள்ளிட்டவர்களோடு பேசிய போதெல்லாம் உள்ளுராட்சி சபை தரப்படும் என்று உறுதி கூறப்பட்டது. கல்முனையிலிருந்து தனியாக சாய்ந்தமருதினைப் பிரித்தால் ஏற்படும் பின் விளைவுகளைப் பற்றி புரிந்து கொள்ளாமல் உறுதி மொழிகளை வழங்கினார்கள். வாக்குகளை மையப்படுத்தி வாக்குறுதிகளை அளித்தார்கள். இப்போது சாய்ந்தமருதிற்குரிய உள்ளுராட்சி சபை கோரிக்கை தீவிரமடைந்துள்ள நிலையில் கல்முனையை நான்காக பிரிக்க வேண்டும். 1987ஆம் ஆண்டிற்கு முன்னர் இருந்த பட்டின சபை, கிராமிய சபைகளின் பழைய எல்லைகளைக் கொண்டு அவை பிரிக்கப்பட வேண்டுமென்று தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இதனால் அரசியல் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களை ஏமாற்றி விட்டார்கள். கல்முனை மாநகர சபையை நாலாக பிரிப்பதற்கு தமிழர்கள் அனுமதிக்கமாட்டார்கள். இதனால்தான் சாய்ந்தமருதினை தனியாக பிரிக்க வேண்டாமென்று கோரிக் கொண்டிருக்கின்றார்கள் என்று சாய்ந்தமருது மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

இவ்வாறு சாய்ந்தமருது மக்கள் தங்களின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கின்ற அதே வேளை, சாய்ந்தமருதைப் பிரித்து கல்முனையில் முஸ்லிம்களின் ஆதிக்கத்தை இல்லாமல் செய்து தமிழர்களின் ஆதிக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்று சதி செய்யவில்லை. சாய்ந்தமருது பிரிந்தாலும் கல்முனை மாநகர சபையின் அதிகாரம் முஸ்லிம்களின் கைககளில்தான் இருக்கும் என்று சாய்ந்தமருதிற்கு தனியான உள்ளுராட்சி சபை தரப்பட வேண்டுமென்று கூறுகின்றவர்களின் நியாயமாக இருக்கின்றன.


கல்முனையின் நிலைப்பாடு

கல்முனை மக்களினதும், பிரதி அமைச்சர் ஹரீஸினதும் நிலைப்பாடு ஒன்றாகவே உள்ளது. சாய்ந்தமருதிற்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்குவதில் ஆட்சேபனையில்லை. ஆனால், கல்முனை மாநகர சபையை நான்காக பிரிக்க வேண்டும். அவ்வாறு பிரித்தால் மாத்திரமே சாய்ந்தமருதிற்கு தனியான உள்ளுராட்சி வழங்க சம்மதிக்க முடியும். சாய்ந்தமருதை தனியாகப் பிரித்தால் கல்முனையில் இன விகிதாசாரம் மாற்றமடையும், சில வேளை தமிழர்கள் அதிகாரத்தினைப் பெற்றுக் கொள்வார்கள். ஏற்கனவே அவர்கள் தமிழர்களின் எல்லை என்று முஸ்லிம்களின் பகுதிகளையும், கல்முனை நகரத்தையும் உள்ளடக்கிப் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். வடக்கும், கிழக்கும் இணைய வேண்டுமென்று கேட்கின்றார்கள். கல்முனை கரையோர மாவட்டத்திற்கு எதிராக பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இந்தப் பின்னணியில் கல்முனை மாநகர சபையின் அதிகாரம் தமிழர்களின் கைகளுக்கு செல்வது கல்முனை முஸ்லிம்களுக்கு மாத்திரமல்ல, அம்பாரை மாவட்ட முஸ்லிம்களுக்கும், கிழக்கு முஸ்லிம்களுக்கும் எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தலாம். கல்முனை மாநகர சபையின் அதிகாரம் தமிழர்களின் கைகளுக்கு சென்றால் கரையோர மாவட்டத்திற்கு எதிராகவும், வடக்கு, கிழக்கு இணைவதற்கும் ஆதரவாகவும் தீர்மானங்களை நிறைவேற்றுவார்கள். இது போன்று கல்முனை நகரத்தில் உள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்களுக்கு கூட ஆபத்து ஏற்படலாம். இதனால்தான் நாங்கள் சாய்ந்தமருதினை தனியாக பிரிக்க வேண்டாமென்று கூறுகின்றோம் என்று கல்முனை மக்கள் தெரிவிக்கின்றார்கள்.


இன விகிதாசாரம்

கல்முனை மாநகர சபையிலிருந்து சாய்ந்தமருதை தனியாகப் பிரித்தால் இன விகிதாசாரத்தில் மாற்றம் ஏற்படும் என்பதில் ஐயமில்லை. அதாவது தற்போது கல்முனை மாநகர சபையில் உள்ள சுமார் 69 வீதம் முஸ்லிம்களும், சுமார் 31 வீதம் தமிழர்களும் உள்ளார்கள். இந்நிலையில் சாய்ந்தமருது பிரிந்தால் சுமார் 87 ஆயிரம்  பேர் சனத் தொகையாக காணப்படுவர். இவர்களில் தமிழர்கள் 36ஆயிரத்திற்கும் அதிகமாகவும் முஸ்லிம்கள் 50 ஆயிரத்திறி;கும் அதிகமாகவும் காணப்படுவார்கள். இந்நிலையில் முஸ்லிம்களின் இனவிகிதாசாரம் சுமார் 58 வீதமாக வீழ்ச்சியடையும் அதே வேளை, தமிழர்களின் விகிதாசாரம் சுமார் 41 வீதமாக உயர்வடையும். இந்த இனவிகிதாசார மாற்றம் கல்முனையின் அரசியல் அதிகார ஆதிக்கத்தில் தாக்கத்தைச் செலுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. 

உள்ளுராட்சி சபைத் தேர்தல் 60 வீதம் வட்டார அடிப்படையிலும், 40 வீதம் விகிதாசார அடிப்படையிலும் நடைபெறும் போது சாய்ந்தமருது நீங்களாக முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட 11 வட்டாரங்களும், தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட 07 வட்டாரங்களும் அமைவதற்கு வாய்ப்புள்ளது. வட்டார அடிப்படையில் 11 முஸ்லிம் உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்வதில் எந்தச் சிக்கலும் கிடையாது. ஆனால் 40 வீத உறுப்பினர்களை விகிதாசர அடிப்படையில் பெற்றுக் கொள்வதில்தான் சில வேளை சிக்கல்கள் ஏற்படலாம். முஸ்லிம்களைப் பெரும்பான்மையாக் கொண்ட வட்டாரத்தில் எத்தனை கட்சிகள் போட்டியிட்டாலும் முஸ்லிம் உறுப்பினர் ஒருவரே தெரிவு செய்யப்படுவார். ஆனால், விகிதாசார அடிப்படையில் உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் முஸ்லிம்களின் வாக்குகள் பெரும்பாலும் ஒரு கட்சிக்கு அளிக்கப்பட வேண்டும். ஆனால், முஸ்லிம்கள் மத்தியில் பல கட்சிகள் உள்ளன. கட்சிகளிடையே ஒற்றுமை கிடையாது. போட்டி அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. சமூக அக்கறை கிடையாது. அரசியலை சந்தை வியாபாரமாக்கியுள்ளார்கள். எல்லா முடிவுகளையும் பணத்தின் அடிப்படையில் தீர்மானித்துக் கொள்கின்றார்கள். மண் ஆசையை தவிர மற்ற அனைத்து ஆசைகளையும் முஸ்லிம் அரசியல்வாதிகள் கொண்டுள்ளார்கள். இத்தகைய தன்மையுடைய முஸ்லிம் அரசியல்வாதிகள் பல கட்சிகளுக்கும் வாக்களிக்குமாறு கேட்கும் போது, தமிழர்கள் கல்முனை மாநகரத்தின் அதிகாரத்தினைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் மாத்திரம் வேட்பாளர்களை நிறுத்துவார்கள். இதனால், விகிதாசார அடிப்படையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அதிக வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்புக்கள் ஏற்படலாம். 

இந்த ஆபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டுமாயின் முஸ்லிம் கட்சிகள் எல்லாம் ஒரு கூட்டாகப் பொதுச் சின்னத்தில் போட்டியிட வேண்டும். இதற்கு விட்டுக் கொடுப்புக்கள் வேண்டும். முஸ்லிம் காங்கிரஸ் தனித்துக் கேட்டாலும் முன்பு போன்று கல்முனையில் வாக்கு அளிக்கப்படுமா என்பதில் சந்தேகம் உள்ளது. மு.காவின் மீது கல்முனை மக்களும் வெறுப்படைந்துள்ளார்கள். மு.காவின் வாக்குறுதிகளும், அரசியல் நடவடிக்கைகளும்தான் சாய்ந்தமருது மக்கள் தனி உள்ளுராட்சி சபை கேட்பதற்கு காரணமாகும். அவர்களின் ஆதங்கங்கள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதாகும். புறக்கணிப்புகள் இடம்பெறும் போதுதான் பிரிவினை வாதமும், புரட்சியும் ஏற்படுகின்றன.


நியாயங்கள்

கல்முனை மக்களின் அச்சத்தினை கருத்திற் கொள்ள வேண்டியது அவசியமாகும். கல்முனை மக்களின் இந்த அச்சத்தை ஒற்றுமையுடன் ஒரு கட்சியின் கீழ் நின்றால் மாத்திரமே வெற்றி கொள்ளலாம். சாய்ந்தமருது மக்கள் நீண்ட காலமாக அரசியல்வாதிகளினால் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். இதனால் அவர்கள் தனியே பிரிந்து செல்வதற்கு கேட்கின்றார்கள். இதற்கான முழுப் பொறுப்பையும் கல்முனை அரசியல்வாதிகளும், முஸ்லிம் காங்கிரஸும் ஏற்றுக் கொண்டாக வேண்டியுள்ளது. பல வருடங்கள் ஏமாற்றப்பட்டவர்கள் இனியும் முஸ்லிம் கட்சிகளையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும் நம்புவதற்கில்லை. கல்முனை முஸ்லிம்களினதும், சாய்ந்தமருது முஸ்லிம்களினதும் நியாயங்களுக்கு தீர்வு காண்பது அவசியமாகும். சாய்ந்தமருதிற்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்கப்படுவதுடன், கல்முனையையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு ஏற்றவாறு பேச்சுக்கள் இடம்பெற வேண்டும். உளத்தூய்மையுடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.


நான்காகப் பிரித்தல்

சாய்ந்தமருதிற்கு தனியாக உள்ளுராட்சி வழங்க வேண்டாம். கல்முனை மாநகர எல்லையை நான்காக பிரிக்குமாறு முன் வைக்கப்படும் கோரிக்கையை தமிழர்கள் நிராகாரிக்கின்றார்கள். அவர்கள் 1987ஆம் ஆண்டிற்கு முன்னர் இருந்த கிராமிய சபைகளை எல்லையாகக் கொள்வதனை அவர்கள் ஏற்றுக் கொள்ளாது அகன்ற தமிழ் உள்ளுராட்சி சபையை கேட்கின்றார்கள். கல்முனை நகரத்தையும் கேட்கின்றார்கள். இதே வேளை, சாய்ந்தமருதிற்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்குவதற்கு ஆதரவும் தெரிவித்துள்ளார்கள். தமிழர்கள் தங்களுக்கு எதில் இலாபம் உள்ளதோ அதனையே ஆதரிப்பார்கள். இன்று அரசாங்கத்தோடு ஒட்டி உறவாடிக் கொண்டிருக்கின்றார்கள். இதில் அவர்களுக்கு அரசியல் இலாபம் உள்ளது. மேலும், இன்றுள்ள அரசியல் சூழலில் முஸ்லிம் கட்சிகளை விடவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கே செல்வாக்கு அதிகமாகும். இந்நிலையில் கல்முனை மாநகர  எல்லையை நான்காகப் பிரிப்பது என்பது கூட தமிழர்களின் நிலைப்பாட்டிலேயே தங்கியுள்ளது.


தேர்தல்

உள்ளுராட்சி தேர்தல் 2018 ஜனவரி 20ஆம் திகதி முதல் 31ஆம் திகதிக்குள் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணைக் குழு அறிவித்துள்ளது. அத்தோடு கல்முனை மாநகர சபைக்கே உள்ளுராட்சி தேர்தல் நடைபெறும் என்று மாகாண சபைகள், உள்ளுராடசி சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். இதனால், சாய்ந்தமருதிற்கான உள்ளுராட்சி சபைக் கோரிக்கை இன்னும் நான்கு வருடங்களுக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனையும் மீறி தனியாக சாய்ந்தமருதிற்கு உள்ளுராட்சி சபையோ அல்லது நான்காக வகுத்து உள்ளுராட்சி சபைகளை ஏற்படுத்த வேண்டுமாயின் ஜனாதிபதியின் அதிகாரத்தினால்தான் சாத்தியமாக்க முடியும். 
நன்றி - வெடிவெள்ளி
சாய்ந்தமருதிற்கான உள்ளுராட்சி சபை கிடப்பில்! சாய்ந்தமருதிற்கான உள்ளுராட்சி சபை கிடப்பில்! Reviewed by Madawala News on 11/07/2017 07:49:00 PM Rating: 5