Yahya

என்ன பாவம் செய்தார் ‘பிரேமலால்’


கார்கள் சொகுசு வாகனங்கள் வீதிகளில் பயணிக்கும் போது நானும் ஒருநாள் காரில் போக வேண்டுமென நினைக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். ஆனால்இ கடந்த 6 நாட்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நிறை வாகன வரிசைகளைப் பார்த்தவுடன் 'காராவது' 'பெஜிரோவாவது' 'காலே' போதும் என்று நினைத்தவர்களும் உள்ளனர்.  

சீராகச் சென்றுகொண்டிருந்த வாகன ஓட்டுநர்களின் ஓட்டங்களுக்கு 'சடன் பிரேக்' போட்ட மாதிரி ஆகிவிட்டது இந்த ஒரு வார கால நிலைமை.  

கடந்த வௌளிக்கிழமை முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களே தஞ்சமென மணிக்கணக்கில் காத்துக்கிடந்தனர் வாகன ஒட்டுநர்கள். போதாக்குறைக்கு போத்தல் கேன்களுடன் கால்கடுக்கக் காத்திருந்த கூட்டங்களும் எதிர்த்தரப்பில் சேர்ந்துகொண்டன.  

இவர்கள் அனைவரும் பெற்றோலைப் பெற்றுக்கொள்வதற்கே இவ்வாறு காத்துக்கிடந்தனர்.  

இதனால் வீதியில் சென்ற ஏனைய வாகனங்களும் நெரிசலில் சிக்கிக்கொண்டன. தமது நேர விரயத்தை எண்ணி நொந்த ஓட்டுநர்கள் அரசாங்கத்தைப் புரணி பேசிக்கொண்டிருந்தமையையும் காணக்கூடியதாய் இருந்தது. நாடளாவிய ரீதியில் பெற்றோலுக்குப் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டமையே இதற்கான காரணமாகும்.  

தரமிழந்தமையே சிக்கலானது
கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் இந்தியன் ஒயில் கம்பனி (ஐ.ஓ.சி) இறக்குமதி செய்த பெற்றோல் தரம் குறைந்திருந்தமையை அடுத்து குறித்த பெற்றோல் நிரப்பப்பட்ட கப்பலில் இருந்த பெற்றோலை இறக்குவதற்கு அனுமதிக்கப்படவில்லை. 

ஒன்றுக்கு இருமுறை பரிசோதித்தும் அக்கப்பலில் வந்த பெற்றோல் தரமானதென உறுதிசெய்யத் தவறிவிட்டது.  

அந்தக் கப்பல்இ திருகோணமலைத் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது. எனினும் 'எந்தக் காரணத்தைக் கொண்டும் தரமற்ற அந்தப் பெற்றோலை நாம் பெற்றுக்கொள்ளப் போவதில்லை'என இலங்கை அரசாங்கம் கங்கணம் கட்டியது. இதுவே நாட்டில் நிலவிய பெற்றோல் தட்டுப்பாட்டுப் பிரச்சினைக்கு மூல காரணமெனக் கூறப்படுகின்றது.  

எனினும் பெற்றோல் தட்டுப்பாடு குறித்து பல்வேறு பேச்சுகளும் அடிபடுகின்றன. முன்னதாக குறித்த இந்தியன் ஒயில் கம்பனி பெற்றோலின் விலையை அதிகரிக்க வலியுறுத்தியதாகவும் அதனை இலங்கை அரசாங்கம் மறுத்ததாகவும் அதற்குப் பழி தீர்க்கும் முகமாகத் திட்டமிட்ட அடிப்படையில் இந்தப் பெற்றோல் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.  

அத்துடன் எரிபொருள் கையிருப்புத் தொடர்பில் வாராந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படாமையாலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் 21 நாட்களுக்குத் தேவையான எரிபொருளைச் சேமித்து வைத்திருக்கும் வழமையை இம்முறை கடைப்பிடிக்கப்படாமையாலும் இப்பிரச்சினை தோன்றியுள்ளதாக அரசாங்கம் சார்ந்தோரே தெரிவித்தனர்.  

தவிர 2018 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தை இலக்கு வைத்து வேண்டுமென்றே இத்தட்டுப்பாடு உருவாக்கப்பட்டதெனவும் பேச்சுகள் உலாவின.  
மேலும்இ உடனடிக் கேள்வி மனுக்கோரலின் அடிப்படையிலேயே இந்தியன் ஒயில் கம்பனிக்குப் பெற்றோல் இறக்குமதி செய்யப்பட்டமையாலேயே இச்சிக்கல் தோன்றியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

செவ்வாய் சூடுபிடிப்பு
பெற்றோல் தட்டுப்பாட்டுப் பிரச்சினையால் அரசாங்கத்தின் ஆசனங்களேஇ கடந்த செவ்வாய்க்கிழமை சூடுபிடித்தன. நாடாளுமன்ற அமர்வின் போதான காரசாரப் பேச்சுகள் ஒருபக்கம் அமைச்சரவைக் கூட்டத்தின் போது இடம்பெற்ற வாதப்பிரதிவாதங்கள் ஒருபக்கமென அரசாங்கமே அன்றைய தினம் ஆட்டங்கண்டது.  

'பெற்றோல் தட்டுப்பாட்டின் காரணமாக நாட்டு மக்கள் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர். இது பொருளாதாரத்திலும் தாக்கம் செலுத்தும். எமது நாட்டில் எரிபொருளைச் சேமிப்பதற்கு முறையான கட்டமைப்புகள் உருவாக்கப்படவில்லை' என ஜே.வி.பியின் தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அநுர குமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் அன்றையதினம் (07) அரசாங்கத்தைக் கடிந்துகொண்டார்.  

அதேபோன்று தினேஷ் குணவர்தன எம்.பி 'கொழும்பிலிருந்து திருப்பியனுப்பப்பட்ட கப்பல் திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளமையால் சர்வதேசத்தின் அச்சுறுத்தலுக்கு நாம் முகங்கொடுத்துள்ளோம்' என்றும் அச்சம் வெளியிட்டார்.  

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 'பெற்றோல் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய அமைச்சு இறக்குமதி செய்யும் பெற்றோலுக்கு மேலதிகமாக இந்தியாவிலிருந்து மற்றுமொரு கொள்கலன் கப்பலில் பெற்றோல் இறக்குமதி செய்யப்படவுள்ளது. எமது தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளக் கூடியதாக இருக்கும்' என ஆறுதலாகப் பதில் வழங்கிவிட்டுஇ நழுவினார்.  

நாடாளுமன்றத்தில் நிலைமை இவ்வாறு இருக்க செவ்வாயன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுக்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்கும் இடையிலேயே கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.  

பெற்றோல் பிரச்சினை தொடர்பாக அமைச்சர் அர்ஜுன அமைச்சரவைக்கு விளக்கமளிக்கும் போது இடைமறித்த அமைச்சர் தயாசிறி 'இந்நிலை ஜனாதிபதியை இக்கட்டான நிலைக்குக் கொண்டுசெல்லும். மக்கள் ஜனாதிபதியையே திட்டுகின்றனர்' என்று முரண்பட்டு நின்றார்.

இதன்போது உரையாற்றிய மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சரும் முன்னாள் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க 'இது சிறிய பிரச்சினை அல்ல. இது ஒரு மாஃபியா பிரச்சினை என்பதை மறக்கவேண்டாம். இதை இலகுவாக எடுக்கவேண்டாம். எனது காலத்திலும் இந்த மாஃபியா செயற்பட்டது' எனப் பதறினார்.  

வேடிக்கையான சுற்றறிக்கை
இது இவ்வாறிருக்க பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க செவ்வாய்க்கிழமையன்று காலை சுற்றறிக்கையொன்றை வெளியிட்டார்.  

அந்த சுற்றறிக்கையில் நாட்டில் நிலவுகின்ற பெற்றோல் தட்டுப்பாடு காரணமாக வாகனங்களுக்கு மட்டும் பெற்றோல் விநியோகிக்கப்படுமெனவும் போத்தல் கேன் மற்றும் ஏனைய நிரப்பும் உபகரணங்களுக்குப் பெற்றோல் விநியோகிக்கப்படமாட்டாதெனவும் அறிவிக்கப்பட்டது. பெற்றோல் தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் வரையிலும் இந்த நடைமுறை அமுலில் இருக்குமென்றும் தெரிவிக்கப்பட்டது.  

சுற்றறிக்கை வெளியானதுதான் தாமதம் பொங்கியொழுந்தனர் அகில இலங்கை மோட்டார் சங்கத்தினர். 'எரிபொருட்கள் இல்லாமல் இடைநடுவில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்களை சுற்றறிக்கையின் ஊடாகஇ எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்குக் கொண்டு செல்லமுடியாது' என்று கடுமையாக எதிர்த்தனர்.  

தலைக்குமேல் வெள்ளம் வருவதை உணர்ந்த பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்கஇ அன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) மாலையேஇ சுற்றறிக்கையை வாபஸ் பெற்றுவிட்டார்.  

அதிலும் விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாதவராக விநியோகிப்பதற்குத் தேவையானளவு பெற்றோல் கையிருப்பில் உள்ளமையாலேயேஇ சுற்றறிக்கையை மீளப்பெற்றுக்கொள்கின்றோம் என்றார்.

வலைத்தளங்களில் கேலிக்கூத்தாகியது
அதிரடியாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கை இறுதியில் வேடிக்கையானது ஒருபுறமிருக்க சமூக வலைத்தளங்களிலும் இப்பிரச்சினை கேலிக்கூத்தாகியது.  

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன இலட்சனையைக் கூட சமூக வலைத்தளப் பிரியர்கள் விட்டுவைக்கவில்லை. அதில்இ தீப்பந்தத்துடன் கப்பீரமாகக் காட்சியளிக்கும் வீரரைஇ பெற்றோல் எங்கிருக்கின்றது எனத் தேடி அலைவது போன்று சித்திரித்திருந்தனர்.

பாடசாலை மாணவர்கள் கூட பெற்றோல் இன்மை காரணமாக அவசர நிலைமையின் பொருட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கவுள்ளதாகக் கூத்தாடினர். பெற்றோலுடன் டீசலும் கையிருப்பில் இல்லாமல் போயிருந்தால் நிலைமை மிகவும் பாரதூரமானதாக இருந்திருக்கும் எனவும் சமூக வலைத்தளங்களில்  பகிரப்பட்டது.  

இவை போதாதென்று பெற்றோல் தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வட மேல் மாகாண சபை ஒன்றிணைந்த எதிரணியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் சிலர்இ மாட்டு வண்டியில் சபைக்குச் சென்றனர். அத்துடன்இ மஹிந்த தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியினர் நாடாளுமன்றத்துக்கும் நேற்று (09) சைக்கிளோட்டிச் சென்றனர்.

இலங்கையில் இதுவொன்றும் புதிதான விடயமல்ல. எனினும்இ பெற்றோல் பிரச்சினை பல்வேறு வடிவங்களைப் பெற்றிருந்தது என்பதே இங்கு நோக்கத்தக்கது. 

வாடகை வாகனங்கள் முடங்கின பயணிகள் சீரழிந்தனர்
வாகன ஓட்டுநர்கள் பாதிக்கப்பட்டனர் என்பது ஒருபுறமிருக்க பயணிகள் சீரழிந்தனர் என்றே கூற வேண்டும். வாகனங்களை வாடகைக்கு விடும் நிறுவனங்கள் பெற்றோலைக் காரணம் காட்டி  கடந்த சில நாட்களாகத் தமது சேவைகளை முடக்கிக் கொண்டன.  

எனவே முச்சக்கரவண்டி ஓட்டுநர்கள் மீற்றருக்கு அதிகமாகப் பணம் அறிவிட்டதாக பயணிகள் விசனம் தெரிவித்தனர்.  

எனினும் எரிபொருள் இல்லையென்பதால் இவ்வாறு அறவிடுவதாகவும்இ மீற்றர் அடிப்படையில் வண்டி செலுத்துவதானால் தங்களுக்கு நட்டம் ஏற்படுவதாகவும் முச்சக்கர வண்டிச் சாரதிகள் அதனை நியாயப்படுத்தினர். 'வதந்தியே நிலைமைக்குக் காரணம்'
பெற்றோலுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குறுந்தகவல் மூலம் பரப்பப்பட்ட தகவலால் தான் இந்நிலைமை தோன்றியது என அரசாங்கம் தெரிவித்தது.

'இலங்கையில் நாளொன்றுக்கு 2 ஆயிரத்து 500 மெற்றிக் தொன் பெற்றோல் தேவைப்படுகிறது. எனினும் தற்போதைய நிலையில் 

பெற்றோலுக்கான கேள்வி நாளொன்றுக்கு 4 ஆயிரத்து 700 மெற்றிக் தொன் ஆக அதிகரித்துள்ளது. பெற்றோல் தட்டுப்பாடு ஏற்படப்போவதாகத் திட்டமிட்ட வகையில் பரப்பப்பட்ட தகவலே இந்த நிலைக்குக் காரணம். இதனால் பொதுமக்கள் அளவுக்கு அதிகமாக பெற்றோலை பெற்றுக்கொண்டுள்ளனர்' என பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க நிலைமையை விளக்கினார்.   

நிலைமை சீரடைந்த பின்னர் இந்நிலைமை உருவாகுவதற்கு காரணமாக இருந்த மாஃபியா தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.  

விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு குழுக்கள் அமைத்து அறிக்கைகளைத் தயாரிப்பதன் ஊடாக கால்கடுக்க நின்ற நேரத்தையும் இழந்த பணத்தையும் நிம்மதியையும் மீளப் பெறமுடியாது என்பது திண்ணமே. 

அதுமட்டுமன்றி அப்பாவி உயிரொன்றும் மரணமடைந்துள்ளது. இல்லையில்லை. பலியெடுக்கப்பட்டுள்ளது என்பதுதான் மிகவும் வேதனையான விடயமாகும்.

பெற்றோலுக்காக மணிக்கணக்கில் ஏன் நாள் கணக்கில் காத்திருந்த ஊரகஸ்மங்ஹந்தியவைச் சேர்ந்த ஒருவரின் உயிரையே இந்தப் பெற்றோல் தட்டுப்பாடு பறித்துவிட்டது.  

கையில் போத்தலுடன் பெற்றோலுக்காகக் கடந்த செவ்வாய்க்கிழமை நீண்ட நேரம் காத்திருந்த ஊரகஸ்மங்ஹந்தியைச் சேர்ந்த சுடலை (பிணங்களை எரிக்கும் இடம்) காவல்காரர் 53 வயதான ஜயந்த பிரேமலாலுக்கு 'பெற்றோல் தீர்ந்துவிட்டது' என எரிபொருள் நிரம்பு ஊழியர் கூறியது பேரிடியாக இறங்கியது.  

காரணம் இவ்வாறான நிலைமைக்கு அன்றைய தினம் மாத்திரம் இவர் முகங்கொடுத்திருக்கவில்லை.கடந்த சில நாட்களாகவே இதே ஏமாற்றத்துக்கு உள்ளாகியிந்துள்ளார்.எனவே பெற்றோல் இல்லையென்றவுடன் அந்த இடத்திலேயே அவர் மயங்கி விழுந்துள்ளார்.இதனையடுத்து அங்குள்ளவர்களால் ஊரகஸ்மங்ஹந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

எனினும் உயிர் பிரிந்துவிட்டது. திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே அவர் மரணமடைந்துள்ளாரென வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறோ பெற்றோலின் பெயரால் பிரேமலாலை போன்ற இன்னும் பலர் பரிதவிக்கின்றனர்.பிரேமலாலை இழந்து அவருடைய குடும்பமும் பரிதவிக்கின்றது.  

வீட்டுக்கும் சுடுகாட்டுக்கும் சென்றுகொண்டிருந்த அவரைஇ இந்தப் பெற்றோல் சுடுகாட்டிலேயே நிரந்தரமாக்கிவிட்டது என்பதுதான்இ கடந்த ஆறுநாட்கள் அவதியின் இறுதிப் பெறுபேறாக இருக்கின்றது.  

'வந்தாச்சு கப்பல்'
ஐக்கிய நாடுகள் அமீரகத்திலிருந்து 40இ000 மெற்றிக் தொன் பெற்றோல் அடங்கிய 'நெவெஸ்கா லேடி' என்ற கப்பல் புதன்கிழமை இரவு இலங்கைக் கடற்பரப்பை வந்தடைந்தது. 

குறித்த கப்பலிலுள்ள பெற்றோல முத்துராஜவல எண்ணெய் சுத்திகரிப்பு இறங்குதுறையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படுமென பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். 

எனினும்இ நேற்று (09) மாலை வரை நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. கொழும்பு கொழும்பை அண்மித்த பகுதிகளில் நள்ளிரவுக்குள் பெற்றோல் விநியோகிக்கப்பட்டாலும வட கிழக்கு உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு கொண்டு செல்வதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கமுடியாது. எனவே இந்நிலைமை சீராக இன்னும் சில நாட்கள் செல்லலாம். 

எவ்வாறிருப்பினும் பெற்றோல் இன்மையால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கொழுந்துவிட்ட தீ நல்லாட்சியையே சுட்டுவிட்டது என்பதை மறுக்க முடியாது.எனினும்இ பொதுமக்களில் நலன் சார்ந்து அத்தியாவசியத் தேவைகள் தொடர்பிலான எதிர்காலத் திட்டமிடல்  சேமிப்பு இல்லாத வரை இந்நிலைமை இனியும் தொடரத்தான் செய்யும்.  

Princiya Dixci - தமிழ் மிரர்..
என்ன பாவம் செய்தார் ‘பிரேமலால்’  என்ன பாவம் செய்தார் ‘பிரேமலால்’ Reviewed by Madawala News on 11/11/2017 12:57:00 AM Rating: 5