Kidny

Kidny

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இனவாத எண்ணங்கொண்டவர் ; அய்யூப் அஸ்மின்



முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இனவாத எண்ணங்கொண்டவர் ; அய்யூப் அஸ்மின் சாடல்

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இங்குவந்து குடியேறியவர்களே வடக்குக் கிழக்கு இணைப்பிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்கள் என்ற கருத்தை அண்மையில் வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசரர் கௌரவ விக்னேஸ்வரன் அவர்கள் தெரிவித்திருந்தார்கள், இதுகுறித்து வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ அய்யூப் அஸ்மின் அவர்களிடம் கருத்துக் கோரியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 


அவர் மேலும் தெரிவிக்கையில்


முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் சட்டப்புலமை வாய்ந்த் ஒருவர், தமிழ் இலக்கியவாதி, மதிப்பிற்குரிய ஆன்மீகவாதி; ஆனால் அவருக்கு வடக்குக் கிழக்கு மக்களின் உண்மையான வரலாறோ, அவர்கள் எதிர்நோக்கியிருக்கின்ற பிரச்சினைகள் குறித்த அறிவோ கிடையாது. எனவே அங்காங்கே அவர் வெளிப்படுத்தும் கருத்துக்கள் மக்கள் மத்தியில் பலத்த விமர்சனங்களை ஏற்படுத்தி நிற்கின்றன. அந்த வரிசையிலேயே இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் அவர் வெளியிட்டிருக்கும் கருத்தையும் நான் நோக்குகின்றேன். இத்தகையவர்கள் இனவாத எண்ணங்கொண்டவர்கள், இவர்களால் அமைதியோ, மக்களுக்கு நன்மைகளோ ஏற்படாது. இவருக்கும் பிரதி அமைச்சர் கௌரவ.ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கும் இடையில் நான் எவ்வித வேறுபாட்டையும் காணவில்லை.

வடக்குக் கிழக்கு இணைந்தால் கிழக்கில் இரத்த ஆறு ஓடும் என்று பிரதி அமைச்சர் கௌரவ. ஹிஸ்புல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டார்கள், அவரும் ஒரு இனவாத எண்ணங்கொண்டவரே. அதேபோன்றுதான் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களுடைய கருத்துக்களும் அமைந்திருக்கின்றன. இவ்வாறான தலைவர்கள் மக்களின் பிரச்சினைகளுக்கான உரிய தீர்வுகளைப் பெற்றுத்தருவதற்குப் பதிலாக மக்களை மேலும் மேலும் கஷ்டத்திலும் ஆபத்திலும் அமைதியின்மையிலும் தள்ளிவிடக்கூடியவர்களேயாகும். 

இலங்கை முஸ்லிம் மக்கள் இலங்கைக்கு வெளியில் இருந்து வந்தவர்கள் அல்ல, முஸ்லிம்களும் இலங்கைத் தேசத்தின் பூர்வீக மக்களேயாகும். எவ்வாறு இந்தியாவிலிருந்து பௌத்தமும், இந்து மதமும் கொண்டுவரப்பட்டதோ அவ்வாறு மேலை நாடுகளில் இருந்து கிறிஸ்த்தவமும், மத்திய கிழக்கிலிருந்து இஸ்லாமும் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட மதங்களாகும், அதனைப் பின்பற்றியவர்கள், அல்லது ஏற்றுக்கொண்டவர்கள் இந்த நாட்டின் பூர்வீகக் குடிகளே; சிலபோது முஸ்லிம் மக்களின் மூதாதையர்கள் பௌத்தர்களாக அல்லது இந்துக்களாக இருந்திருக்கக் கூடும். இவ்விடயத்தை எல்லோரும் அறிந்தே வைத்திருக்கின்றார்கள். வடகிழக்கு இணைப்பு விவகாரம் முற்றிலும் சமூக அரசியல் சார்ந்த ஒரு விடயமாகும், இதற்கும் மதத்திற்கும் தொடர்பிருப்பதாக நான் உணரவில்லை; முதலமைச்சர் இவ்விடயத்தோடு மதத்தை இணைத்துப் பேச முயல்வது உள்ளூரிலே முஸ்லிம் மக்கள் தொடர்பிலான ஒரு வெறுப்புணர்வை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காகும். 


வடகிழக்கு இணைப்பிற்கு எதிரான தமிழ் மக்களும், தமிழ் அரசியல் தலைவர்களும் இருக்கின்றார்கள். சிலபோது முதலமைச்சர் வடகிழக்கு இணைப்பிற்கு எதிரான தமிழ் மக்களை கிழக்காசியாவில் இருந்து வந்தவர்கள் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இவ்வாறான அறிவீனமான கருத்துக்களை முன்வைப்பதன் மூலம் பிரச்சினையின் உண்மைத் தன்மையையும், அதற்கான தீர்விற்கான வழிமுறைகளையும் நாம் இல்லாமல் செய்கின்றோம்; என்ற செய்தியை இச்சந்தர்ப்பத்தில் முதலமைச்சருக்கு கோடிட்டுக் காட்ட விரும்புகின்றேன். தமிழ் முஸ்லிம் உறவைக் கட்டியெழுப்புவதனூடாகவே வடக்கையும் கிழக்கையும் இணைக்க முடியுமேதவிர வெறுப்புப் பிரச்சாரங்களின் மூலம் வடக்கையும் கிழக்கையும் இணைக்க முடியாது என்பதை அவர் உணர்ந்துகொள்தல் வேண்டும்.

தமிழ் பேசும் மக்களின் மீது உண்மையான பற்றும் அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான இதயசுத்தியான எண்ணங்களும் இருக்குமாயின் இவ்வாறான அறிவீனமான கருத்துக்களை முதலமைச்சர் தவிர்ப்பதே சிறப்பானதாகும். நான் வடக்கும் கிழக்கும் இணைந்திருக்கவே விரும்புகின்றேன், அதுவே இலங்கைத் தீவின் தமிழ் பேசும் மக்களின் பலமாக இருக்கும் என்று நம்புகின்றேன், அதற்காகவே வடக்குக் கிழக்கு இணைப்பு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டியங்கும் சிறிய கட்சியொன்றிலிருந்தும் நான் வெளியேறினேன், எனவே முதல்வர் அவர்களுடைய கருத்துக்கள் வடகிழக்கை இணைக்கும் அறிவார்ந்த கருத்தியலுக்கு எதிரானது என்பதை இங்கு சுட்டிக்காட்டி, இரண்டாம் நிலை அரசியல் கருத்துக்களைக் கண்டித்து நிற்கின்றேன். என்றும் குறிப்பிட்டார்.


தகவல் எம்.எல்.லாபிர் 


முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இனவாத எண்ணங்கொண்டவர் ; அய்யூப் அஸ்மின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இனவாத எண்ணங்கொண்டவர் ; அய்யூப் அஸ்மின் Reviewed by Madawala News on 11/20/2017 04:06:00 PM Rating: 5