Kidny

Kidny

பிச்சைக்காரன் புண்

 
எஸ்.றிபான் -


இலங்கையில் முஸ்லிம்களுக்கு எந்தப் பாதுகாப்புமில்லை. முஸ்லிம்களின் அவலங்களை எடுத்துச் சொல்லுவதற்கு அரசியல் தலைமைகளுமில்லை. ஆயினும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைவர் என்று பலர் சுற்றித் திரிகின்றார்கள். இவர்களினால் முஸ்லிம் சமூகம் அடைந்து கொண்ட நன்மைகள் எதுவுமில்லை. முஸ்லிம்களின் மக்கள் பிரதிநிதிகள் பெரும்பாலும் பாராளுமன்றத்தில் கதிரைகளை சூடாக்கியதனைத் தவிர முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளைப் பற்றி அதிகம் பேசியது கிடையாது. 

ஆளுந் தரப்பின் அமைச்சர் பதவிகளுக்கும் சொகுசுகளுக்கும் அடிமைப்பட்டு இருக்கின்றார்கள். இதனால் முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த இனவாத கும்பல்களினால் நடத்தப்படும் திட்டமிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நபர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு வல்லமையற்றவர்களாகவே முஸ்லிம் அரசியல் தலைமைகள் உள்ளன. இந்நிலைமைகள் மாற வேண்டுமாயின் முஸ்லிம்களின் அரசியல் தலைமைத்துவம் தகுதி வாய்ந்தவர்களின் கைகளுக்கு மாற்றப்பட வேண்டும். 

உடைந்த வண்டியில் யாரும் பாரத்தை ஏற்றமாட்டார்கள். பிச்சைக்காரன் காலில் ஏற்பட்ட புண் மாதிரியே முஸ்லிம்களின் பிரச்சினைகளை முஸ்லிம் அரசியல தலைமைகள் கையாண்டு கொண்டிருக்கின்றது. தலைவர்கள் என்போர் பிச்சைக்காரன் வேடம் போட்டுள்ள வரை முஸ்லிம்களின் மீதான தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும்.

கிந்தொட்ட தாக்குதல்

கடந்த 2017.11.17ஆம் திகதி வெள்ளிக் கிழமை காலி மாவட்டத்தில் முஸ்லிம்கள் செறிவாக வாழும் கிந்தொட்ட பகுதியில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சுமார் 200இற்கும் மேற்பட்டவர்கள் அங்குள்ள முஸ்லிம்கள் மீது கொடூர தாக்குதல்களை மேற்கொண்டுள்ளார்கள். பெண் ஒருவர் மீதும்இ அவரது குழந்தை மீதும் வீதியால் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த சிங்களவர் ஒருவர் மோதியுள்ளார். அவர் அங்கிருந்து தப்பிச் செல்லுவதற்கு முற்பட்ட போது முஸ்லிம்களில் சிலர் அவரை மடக்கிப் பிடித்துள்ளார்கள். அத்தோடு கைகலப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை மையப்படுத்தியே முஸ்லிம்கள் மீது இரவு வேளையில் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளார்கள்.

தாக்குதல்கள் நடைபெற்ற விதம் திரட்டப்பட்ட ஆட்களின் எண்ணிக்கை தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் தாக்குதலின் பின்னர் கலகொட அத்த ஞானசார தேரர் நாட்டில் இது போன்று இன்னும் தாக்குதல்கள் இடம்பெறலாம் என்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊகம் தெரிவித்துள்ளமை ஆகியவற்றையும் பாதுகாப்பு தரப்பினரின் மந்தமான நடவடிக்கைகளையும் வைத்துப் பார்க்கின்ற போது மோட்டார் சைக்கிள் செலுத்தி நபர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை ஒரு துரும்பாகப் பயன்படுத்தியுள்ளார்கள் என்று தெரிகின்றது.

இந்தத் தாக்குதல் காரணமாக முஸ்லிம்களின் 66 வீடுகளும் 26 வர்த்தக நிலையங்களும் 02 பள்ளிவாசல்களும் 04 மோட்டார் சைக்கிள்களும் முச்சக்கர வண்டிகளும் பிற வாகனங்களும் தாக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் கொள்ளைகளும் நடைபெற்றுள்ளன. பலர் காயமடைந்துள்ளார்கள். 

இத்தாக்குதல் சம்பவத்தில் ஆண்களோடு பெண்களும் கலந்து கொண்டிருக்கின்றார்கள் என்ற செய்தி இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறித் தாக்குதல் எத்தகைய நிலையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றது என்று உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. அதே வேளை இத்தாக்குதலில் அரசாங்கத்தின் நிலையைப் பார்க்கும் போது மஹிந்தராஜபக்ஷவின் ஆட்சிக்கும் இன்றைய ஆட்சிக்கும் வேறுபாட்மைக் காண முடியாதுள்ளது. 

முஸ்லிம்களை பாதுகாக்காது போனாலும் பௌத்தர்களின் எதிர்ப்புக்களை சம்பாதித்துக் கொள்ளக் கூடாதென்பதாகவே அரசாங்கத்தின் நிலைப்பாடு உள்ளது.

1983ஆம் ஆண்டு நடைபெற்ற ஜுலைக் கலவரத்தின் பின்னணியில் ஆட்சியாளர்கள் இருந்ததைப் போன்று முஸ்லிம்களின் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களின் பின்னாலும் அரசாங்கத்தின் மறை கரங்கள் இருப்பதாகவே முஸ்லிம்கள் சந்தேகிக்கின்றார்கள்.

கிந்தொட்ட முஸ்லிம்கள் மீது இனவாதிகளின் திட்டத்திற்கு அமைவாக தாக்குதல்கள் நடைபெறவுள்ளதென்று முஸ்லிம்கள் முன் கூட்டியே அறிந்து கொள்கின்றார்கள். இதனை உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்கின்றார்கள். ஆனால் பொலிஸார் தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னதாக வருகை தந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாது தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே வருகை தந்ததாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கினறார்கள்.

2014ஆம் ஆண்டு ஜுன் மாதம் களுத்துறை மாவட்டத்தில் பேருவளை தர்கா நகர் அளுத்கம ஆகிய இடங்களில் முஸ்லிம்களின் மீது பௌத்த இனவாதிகளினால் தாக்குதல்கள்; நடைபெற்ற போது பாதுகாப்பு தரப்பினர் அவற்றை பார்த்துக் கொண்டிருந்தாக அப்பிரதேசத்தவர்கள்; தெரிவித்திருந்தார்கள். ஆதலால் தர்கா நகர் பேருவளை இத்தாக்குதல் சம்பவத்துக்கும் கிந்தொட்ட தாக்குதல் சம்பவத்துக்கும் நெருங்கிய தொடர்புகள் இருப்பதனையும் அதனை முன்னின்று செய்த இனவாதிகளே இதற்கும் தலைமை தாங்கியிருக்க வேண்டுமென்றும் எண்ணத் தோன்றுகின்றது.

இதே வேளை கடந்த 2017.11.20ஆம் திகதி வவுனியா நகர ஜும்ஆப் பள்ளிவாசலுக்குரிய இரண்டு கடைகள் இனந் தெரியாத நபர்களினால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன. இதனால் பல இலட்சம் ரூபா நஸ்டம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இக்கடைகளை அகற்ற வேண்டுமென்று மாற்று இனத்தவர்கள் குரல் கொடுத்து வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு முஸ்லிம்களின் மீது இனவாதிகள் தொடர்ச்சியாக மேற்கொண்டிருக்கும் தாக்குதல்கைள அவதானிக்கும் போது பௌத்த இனவாதம் புலிகளை அழித்த தற்பெருமையில் மற்றுமொரு சிறுபான்மையினராகிய முஸ்லிம்களை அடக்கவும் ஒடுக்கவும் திட்டமிட்டுள்ளது. விடுதலைப் புலிகளினால் முஸ்லிம்களுக்கு தீமைகள் ஏற்பட்ட போது அந்த இயக்கம் அழிந்தால் தங்களுக்கு பாதுகாப்பு என்று முஸ்லிம்கள் நினைத்தார்கள். ஆனால் புலிகளின் தோல்விக்குப் பின்னர் நேரடியாக அரசாங்கத்தினாலும்இ பௌத்த இனவாதிகளினாலும் பேரினவாதிகளினாலும் நேரடியாக பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சமூகமாக முஸ்லிம்களே உள்ளார்கள். மறு புறத்தில் தமிழ் இனவாதமும் முஸ்லிம்களை நெருக்கிக் கொண்டிருக்கின்றது.

பொதுத் தன்மை

புலிகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்களின் மீது தாக்குதல்களை மேற்கொண்ட போது உயிர்கள் பறிக்கப்பட்டதோடு சொத்துக்களும் சேதமாக்கப்பட்டன. புலிகள் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை நசுக்குவதற்கே அதிகம் திட்டமிட்டார்கள். இதனால்தான் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களை கொள்ளையடித்தும் தீயிட்டும் வந்தார்கள். மட்டுமல்லாது தமிழர்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு சொந்தமாக இருந்த வயற்காணிகளையும் செய்கை பண்ணுவதற்கும் தடை விதித்தார்கள்இ முஸ்லிம்களின் காணிகளை தமது இனத்தவர்களுக்கு பங்கீடு செய்து கொடுத்தார்கள் பள்ளிவாசல்களின் மீதும் தாக்குதல் நடத்தினார்கள் பள்ளிவாசல்களில் அவர்களின் அலுவலகங்களையும் நடத்தினார்கள்.

இது போலவே பௌத்த இனவாதத்தின் நடவடிக்கைகளும் அமைந்துள்ளன. 

முஸ்லிம்களின் பொருளாதாரத்தை நலிவடையச் செய்வதற்குரிய நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகின்றார்கள். முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களை தீயிட்டும் கொள்ளையடித்தும் உள்ளார்கள். முஸ்லிம்களின் மீது தாக்குதல்களை மேற்கொண்டு உயிர்ச் சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளார்கள்.பலர் படுகாயமடைந்து இன்றும் நடை பிணமாக உள்ளார்கள்.

முஸ்லிம்கள் பொருளாதாரத்தில் அடைந்து கொண்டிருக்கும் முன்னேற்றத்தை பொறுத்துக் கொள்ளாமல் பொறாமையிலேயே இத்தகைய தாக்குதல்களை நடத்துகின்றார்கள். மட்டுமல்லாது முஸ்லிம்களின் இன வளர்ச்சி விகிதாசாரம் தங்களுக்கு எதிர்காலத்தில் ஆபத்தாக அமைந்தவிடும் என்றும் அச்சப்படுகின்றார்கள். இந்த அச்சம் சிங்களவர்களுக்கு மாத்திரமின்றி தமிழர்களுக்கும் இருக்கின்றது. முஸ்லிம்கள் மாற்று இனத்தவர்கள் தமது இன வளர்ச்சி வீதத்தை அதிகரிப்பதற்கு தடைகளை ஏற்படுத்தவில்லை. பௌத்த மக்களிடையேயும் தமிழ் மக்களிடையேயும் ஒரு அமைப்புக்கள் தங்களின் இன விகிதாசாரத்தை அதிகரிப்பதற்கு அதிக பிள்ளைகளை பெற்றெடுக்குமாறும் அதற்கு சன்மானம் வழங்கப்படும் என்று தெரிவித்தும் இதனைச் செய்வதற்கு அந்த சமூகங்கள் முன் வரவில்லை. 

மேலும் அரசாங்கமும் பிள்ளைப் பெற்றெடுக்கும் விகிதாசாரத்தை சிங்கள மக்கள் மத்தியில் ஊக்கப்படுத்த வேண்டுமென்ற மறைமுக திட்டத்திற்கு அமைய கர்ப்பிணித் தாய்மார்களுக்கு விசேட கொடுப்பனவு திட்டத்தையும் அமுல்படுத்தியுள்ளது. ஆதலால் இனவிகிதாசார வளர்ச்சி என்பது அந்தந்த சமூகத்தின் கைககளில் உள்ள விடயமாகும். இதே வேளை முஸ்லிம்களின் இன விகிதாசாரத்தை கட்டுப்படுத்துவதற்கு பிள்ளைகள் பெற்றெடுக்கும் எண்ணிக்கையில் கட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டுமென்றும் சில அமைப்புக்கள் கடந்த காலங்களில் தெரிவித்துள்ளன.

ஆகவே இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை சர்வதேசத்தின் நிலைப்பாடு ஆகியவற்றின் தாக்கங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இரண்டு பேரினவாதமும் முஸ்லிம்களை சமூக பொருளாதார அரசியல் ரீதியாக அடக்குவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கின்றது. இதற்காக முஸ்லிம் அரசியல் தலைமைகளை இனவாத சக்திகள் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. இதற்காக பல கோடி ரூபாய்களை செலவு செய்து கொண்டிருக்கின்றன. முஸ்லிம் அரசியல் தலைவர்களுடன் பாரம்பரிய உணவுகளை உட்கொண்டு பொன்னாடை போர்த்தி மயக்கி வைத்துள்ளார்கள். முஸ்லிம் அரசியல் தலைமைகள்தான் இந்த நாட்டில் அதிக மயக்கத்தில் உள்ளதென்பது பரகசியமானதாகும்.

முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சமூகத்தை வாழ வைப்பதற்கு பதிலாக தங்களின் சந்ததியினர் ஆண்டாண்டு காலமாக வாழ்வதற்குரிய சொத்துக்களை சேர்த்துக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம் தலைவர்கள் தேர்தல் கேட்பதற்கு ஒரு தேர்தல் தொகுதியை அமைத்துக் கொடுப்பதற்கு அரசாங்கம் தயராக உள்ளது. இதற்காக முஸ்லிம்களின் எந்த உரிமையையும் விட்டுக் கொடுக்கும் நிலையிலேயே தலைமைகள் உள்ளன. இத்தகைய குறுகிய சிந்தனைகளைக் கொண்ட தலைவர்கள் முஸ்லிம் சமூகத்தை பாதுகாப்பார்கள் என்று முஸ்லிம்கள் நம்பிக் கொண்டிருக்கும் வரை முஸ்லிம்களின் மீதான திட்டமிட்ட அடாவடித் தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும்.

முஸ்லிம் தலைவர்கள்

முஸ்லிம்களின் மீது இனவாதிகளின் தாக்குதல்கள் நடைபெற்ற போதெல்லாம் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும் அமைச்சர்களும் தாக்குதல் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து சென்றும் மந்தகதியில் சென்றும் பார்வையிட்டு வருகின்றார்களேயன்றி அவர்களின் விஜயமும் பார்வையும் முஸ்லிம் சமூகத்திற்கு பாதுகாப்பை ஏற்படுத்தவில்லை.

முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் அளுத்கம பேருவளை தர்கா நகர் ஆகிய இடங்களில் தாக்குதல்கள் நடைபெற்ற போது முதலில் விரைந்து சென்றதைப் போன்று காலி – கிந்தொட்டவிற்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்இ அமைச்சருமான றிசாட் பதியுதின் சென்று அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூறினார். பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். இது போன்று அமைச்சர் பைசர் முஸ்தபாவும் முஜிபுர் ரஹ்மான் எம்.பியும் அன்றிரவு சென்றிருந்தார்.

மறுநாள் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் வஜிர அபேவர்த்தன சாகல ரத்நாயக்க மங்கள சமரவீர பாராளுமன்ற உறுப்பினர்களான மனுஷ நாணயக்கார ஆகியோர்கள் சென்று பார்வையிட்டார்கள்.

இதற்கு முதலும் அரசாங்கத்தின் தலைவர்களும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம்களின் மீது தாக்குதல்கள் நடைபெற்ற போது உரிய இடம் சென்று பார்த்து திரும்பியுள்ளார்கள். குறிப்பாக சொன்னால் தம்புள்ள அல் - ஹைரிய்யா ஜும்ஆப் பள்ளிவாசல் தாக்கப்பட்ட போதும் வேறு இடங்களில் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்ட போதும் அளுத்கம தாக்கப்பட்ட போதும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் சென்று பார்த்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார்கள். முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அளுத்கம சென்று அங்கு நடந்த கொடுமைகளைப் பார்த்து விம்மி விம்மி அழுதார். அது மட்டுமல்ல கட்சியின் உயர்பீடத்தைக் கூட்டி அரசாங்கத்தின் தரப்பிலிருந்து விலகுவதற்கும் முடிவுகள் செய்யப்பட்டது.மறுநாள் இந்த முடிவு மாற்றப்பட்டு அரசாங்கத்திலேயே அக்கட்சி ஒட்டிக் கொண்டது.

தற்போது கிந்தொட்ட தாக்குதல்களை முஸ்லிம் தலைவர்களும்இ இன்னும் சில அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் சென்று பார்வையிட்டு கண்ணீர் சிந்தியுள்ளார்கள். இந்தக் கண்ணீரினால் என்ன பயன் கிடைக்கப் போகின்றது. கடந்த காலங்களிலும் கண்கள் சிவக்க கண்ணீர் வடித்தவர்கள் இறுதியில் ஒன்றும் தெரியாதவர்கள் போல் மௌனமானார்கள். இதனால் இவர்களின் கண்ணீரை முதலைக் கண்ணீர் என்றே கணிக்க வேண்டியுள்ளது.

ஏற்கனவே முஸ்லிம்களின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு நஸ்டஈடுகள் வழங்கப்படவில்லை. இவ்வாறு இருக்கும் போது கிந்தொட்ட சம்பவமும் மாவனல்லைஇ அளுத்கம போன்று வரலாற்றில் இடம்பெறுமே அன்றி முஸ்லிம் சமூகத்திற்கு எந்த நஸ்டஈடுகளும் வழங்கப்படாது.

முஸ்லிம்களின் மக்கள் பிரதிநிதிகள் அரசாங்கத்தின் பக்கம் இருந்தாலும்இ இல்லாவிட்டாலும் அவர்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகும். கடந்த அரசாங்கத்திலும்இ இன்றைய அரசாங்கத்திலும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் அரசாங்கத்தின் தரப்பாகவே உள்ளார்கள். முஸ்லிம்களின் வாக்குப் பலத்தால் வளர்ந்துள்ள முஸ்லிம் காங்கிரஸும்இ அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் அநீயாயங்களைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தன. அதிலும்இ முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களின் குரல் என்ற நல்ல நாமத்தை கிரிடமாக அணிந்துள்ளது. இந்த பெயரைப் பாதுகாத்துக் கொள்ளக் கூடிய செயற்பாடுகளை அக்கட்சியில் காண முடியாதுள்ளது. அரசாங்கத்தில் இருப்பதனை விடவும் எதிர்க்கட்சியில் இருப்பதுதான் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பாக அமையும் என்பதாகவே முஸ்லிம்கள் முடிவு செய்துள்ளார்கள். ஆனால் முஸ்லிம் அரசியல் தலைமைகள் அரசாங்கத்தின் தரப்பாகவே இருக்கவே பித்தம் கொண்டுள்ளது.

முஸ்லிம் அரசியல் தலைமைகளைப் பொறுத்தவரை அரசாங்கத்தின் தலைவர்களை பகைத்துக் கொள்வதற்கு இஸ்டமில்லை. பகைத்துக் கொண்டால் பத்திரங்கள் கிளம்பும் என்பதற்காக முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் அனைத்து அநீயாயங்களையும் அங்கிகரித்துக் கொண்டிருக்கின்றனர்.

முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு பல தடவைகள் சந்தர்ப்பம் வழங்கியாச்சி. ஆனால் நடத்தையில் மாற்றத்தைக் காண முடியவில்லை. நடத்தையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கு முடியாதவர்கள் தலைவர்களாக முடியாது. இதனால் முஸ்லிம்கள் நேர்மையும்இ நெஞ்சுறுதியும் கொண்டவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். அத்தகையவர்களை தலைவர்களாக்கிக் கொள்ள வேண்டும்.

தாக்குதல்தாரிகள்

கிந்தொட்டவில் நடந்த தாக்குதல்களை பௌத்த இனவாத பிக்குகளே வழி நடத்தியதாகவும் தெரிவலிக்கப்படுகின்றன. இதில் உள்ள உண்மையை ஊர்ஜிதம் செய்ய முடியாதுள்ளது. ஆயினும் தாக்குதல்தாரிகளை வழி நடத்தியவர்கள் யாராக இருக்க முடியும் என்று நிச்சயிக்கக் கூடியதாக இருக்கின்றது.

முஸ்லிம்களையும் சிங்களவர்களையும் சமரப்படுத்துவதற்குரிய கூட்டமொன்று காலி மாவட்டச் செயலாளர் கொடிக்கார தலைமையில் நடைபெற்றது. இதில் முஸ்லிம் தரப்பினர்களோடு கலகொட அத்த ஞானசார தேரர்இ ராவணா அமைப்பின் செயலாளர் இந்தகந்த சத்தாதிஸ்ஸ தேரர் ஆகியோர்களும் கலந்து கொண்;டார்கள். இவர்களின் இனவாத சிந்தனைப் போக்கையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியதில்லை. இவர்கள் கலந்து கொண்டமை மூலமாக கிந்தொட்ட தாக்குதல்தாரிகளை உச்சாகப்படுத்தியவர்கள் யாராக இருக்க முடியும் என்று தெரிகின்றது. 

வெளியூர்களில் இருந்து வரவழைக்கப்பட்டவர்கள்தான் தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் தெரிகின்றன.
முஸ்லிம் அமைச்சர்களைப் போலவே அரசாங்கத்தினரும் உள்ளார்கள். முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டவர்கள் மீது முறையான நடவடிக்கைகள் அரசாங்கம் எடுக்கவில்லை. இதனால் முஸ்லிம்களே பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதிலிருந்து விடுதலை அடைய வேண்டுமாயின் தாக்குதல்தாரிகளின் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

சட்டமும் ஒழுங்கும்

நாட்டில் சட்டமும் ஒழுங்கும் நிலை குழைந்துள்ளமையை காண முடிகின்றன. சட்டம் ஆள் பார்த்து வேலை செய்கின்றது. சட்டம் அதன் கடமையைச் சரியாகச் செய்ய வேண்டும். பிபிலை நகர் ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் மரணித்த போது பட்டாசு கொளுத்தி மகிழ்ந்துள்ளார்கள். பின்னர் பிபிலையில் உள்ள முஸ்லிம் கடைகளில் அட்டகாசம் புரிந்துள்ளார்கள்.

வவுனியாவில் தாக்குதல் கிந்தொட்டயில் தாக்குதல் என முஸ்லிம்கள் மீது காடைத்தனம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இவற்றைச் செய்தவர்கள் மஹிந்தவின் ஆட்சியில் சுதந்திரமாக திரிந்ததைப் போல் இன்றைய அரசாங்கத்திலும் திரிகின்றார்கள். இதே வேளை இவ்வருடம் ஜனாதிபதியின் இல்லத்தில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் அரசாங்கத்தினை கவிழ்ப்பதற்காகவே முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கே முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் நடைபெறுகின்றதென்றால் ஏன் தாக்குதல்தாரிகளை கைது செய்யவில்லை. 

சட்டம் பௌத்த இனவாதிகளுக்கு வளைந்து கொடுத்துக் கொண்டே இருக்கின்றது. சட்டமும் ஒழுங்கும் முறையாக இயங்குமாயின் யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை. சட்டமும்இ ஒழுங்கும் நிலை நிறுத்தப்படுவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று முஸ்லிம் அரசியல் தலைமைகள் கோரிக்கைகளை முன் வைப்பதுமில்லை. பிச்சைக்காரன் காலில் உள்ள புண் போல் பிரச்சினைகளும் இருக்க வேண்டும். பிச்சைக்காரன் காலில் சீலையை போலியாகக் கட்டிக் கொண்டு திரிகின்றான். 

முஸ்லிம் அரசியல் தலைவர்கள் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையே பிச்சைக்காரன் காலில் கட்டும் சீலையாக எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளைப் பொறுத்தவரை நமது அரசியல் தலைவர்களும் அவற்றைப் பிச்சைக்காரனின் புண்ணுக்கு ஒப்பாகவே பார்க்கின்றார்கள். ஆக அந்தப் புண்ணை காய விடாது தமக்கேற்றாற் போல் காலத்திற்கு காலம் சொறிந்து கொண்டே இருப்பார்கள். 

நன்றி : விடிவெள்ளி 24.11.2017
பிச்சைக்காரன் புண்  பிச்சைக்காரன் புண் Reviewed by Madawala News on 11/25/2017 11:57:00 PM Rating: 5