Kidny

Kidny

முதலமைச்சருக்கு அடித்தால் லாஹிருக்கு வலிக்கிறது


எம்.ஜே.எம்.சஜீத்
மக்கள் செல்வாக்கினை இழந்துவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர்
ஹாபிஸ் நசீருக்கு ஆதரவு திரட்டுவதற்காக கூலிக்கமர்த்தப்பட்ட முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் லாஹிரின் எனக்கெதிரான அறிக்கை அவரது கோமாளித்தனத்தின் உச்சமாகும் என முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் தெரிவித்தார்.

கல்வியல் கல்லூரி மாணவர்கள் விவகாரத்தில் சமூகத்தை ஏமாற்றினார் சுபையிர் எனும் தலைப்பில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் லாஹிர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கைக்கு விளக்கமளிக்கும் போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக ஊடகங்களில் அறிக்கைகள் வெளிவருகின்ற போது அதற்கு பதிலளிப்பதற்கு லாஹிர் மாத்திரமே ஊடகங்களில் தோன்றுவதனை அவதானிக்க முடிகிறது. அது அவர் முதலமைச்சரின் சில்லறைப் பணங்கள் மீது கொண்ட பாசத்தின் வெளிப்பாடாகும். முதலமைச்சர் மீது கொண்ட பாசத்திற்காக முன்பின் வரலாறு தெரியாது அவர் அறிக்கை விடுவதற்கு முனைவது சிறு பிள்ளைத்தனமான செயற்பாடாகும்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் செல்வாக்கினை இழந்துவரும் முன்னாள் முதலமைச்சருக்கு லாஹிர் முட்டுக்கொடுப்பது வேடிக்கையாக இருந்தாலும் அவர் விடயமறியாது கோமாளிகள் போன்று அறிக்கைகளை விடுவதனால் ஒருபோதும் மக்கள் செல்வாக்கைப் பெறமுடியாது. மூதூர் பிரதேச மக்கள் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் லாஹிர் மீது வெறுப்படைந்துள்ள நிலையில் அவர் முதலமைச்சருக்காக ஆதரவு வேண்டி களம் குதித்திருப்பது. அவரது போக்கனம் கெட்ட தனமாகும்.

குறிப்பாக நான் இரண்டு வருடங்கள் மாத்திரமே கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக இருந்து கிழக்கிலுள்ள பல வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்துள்ளேன். குறிப்பிட்ட சில வைத்தியசாலைகளையும் தரமுயர்த்தியுள்ளேன். குறிப்பாக வடமாகாணத்திலே கடமையாற்றிய வைத்திய அத்தியட்சகர் பிரேம்குமாரை முதூர் தள வைத்தியசாலைக்கு வைத்திய அத்தியட்சகராக நியமித்தேன். ஏறாவூருக்கு மிக அண்மையில் மட்டக்களப்பு போதன வைத்தியசாலை இருக்கும் போது ஏறாவூர் வைத்தியசாலையை தள வைத்தியசாலையாக தரமுயர்த்தி அபிவிருத்தி செய்தேன். 

இதனை அறியாத லாஹிர் நான் அந்த வைத்தியசாலைக்கு ஒன்றும் செய்யவில்லை என குருட்டுத்தனமாக தனது அறிக்கையில் பதிவிட்டிருக்கிறார். அறிக்கைக்கு முன்டியடித்துக்கொண்டு வருகின்ற அவர் முதலில் வராலாறுகளை தெரிந்துகொள்ள வேண்டும். இது இவ்வாறிருக்க பிறரின் கோரிக்கைக்கமைவாக உண்மைக்குப் புறம்பான விடயங்களை தெரிவித்து எனது நற்பெயருக்கு சேறுபூசுவதற்கு அவர் முனைகிறார். நான் சுகாதார அமைச்சராக இருந்த போது மூதூர் வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு உறுப்பினராக இருந்த லாஹிர் அங்கு நடந்துகொண்ட அநாகரிகமான செயற்பாடுகள் தொடர்பில் நான் ஊடகங்களில் பகிரங்கப்படுத்த விரும்பவில்லை.

எனது முன்னுதாரணங்களையும், முதலமைச்சரின் முன்னுதாரணங்களையும் திருகோணமலையில் இருந்து கொண்டு பேசுவதற்கு அவருக்கு எந்த அருகதையும் கிடையாது. என்னைப்பற்றியும் முதலமைச்சரைப்பற்றியும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் நன்கறிந்துள்ளனர். எனது மாவட்டத்தை சேர்ந்த ஒருத்தன் என்னை விமர்சிக்காத இக்காலகட்டத்தில் திருகோணமலை மாவட்டதில் இருந்துகொண்டு நீங்கள் விமர்சிப்பதன் மர்மம்தான் என்ன? முதலமைச்சருக்கு அடித்தால் உங்களுக்கு வலிக்கிறது. இதன் இரகசியம் என்ன? இந்த உறவில் எனக்கு பெரும் சந்தேகம் எழுவதுடன் நீங்கள் விலைபேசப்பட்டவர் என்பதும் நிரூபனமாகிறது.. 

கிழக்கு மாகாண சபையிலே 20வது திருத்தச் சட்டமூலம் அவசர அவசரமாக கொண்டு வரப்பட்ட போது அது மாகாண சபைத் தேர்தலை பிற்போடுவதற்கான ஏற்பாடுகளே என்றும் மாகாண சபையின் ஆட்சிக்காலத்தை இரண்டு வருடம் நீடிக்க முடியாது அது ஜனநாயகத்திற்கு விரோதமானது. மாகாண சபையின் அதிகாரத்தினை மத்திய அரசிக்கு தாரைவார்க்கும் செயற்பாடுகளுக்கு அனுமதிக்காதீர்கள் என்று எதிர்க்கட்சி வரிசையிலே இருந்துகொண்டு கூறினோம். 
 அப்போது இரண்டு வருடம் தமது பதவி நீடிக்கப்படப் போகின்றது என்று நினைத்த பதவி மோகம் கொண்ட லாஹிர் எங்களுக்கு எதிராக கூப்போட்டார். மாகாண சபையினுடைய கட்டளைச் சட்டங்களை புரிந்திராத அவர் கிழக்கு மாகாண சபையிலே அதிகமாக கூப்போட்டு அந்த முக்கியத்துவமிக்க சபையிலே பல தடவை அநாகரிகமாக நடந்துகொண்டார். ஆனால் இன்று நல்லவரைப் போன்று நடித்துக்கொண்டு அறிக்கை விடுகிறார். உங்களின் சுயரூபங்கள் அடங்கிய வீடியோக் காட்சிகள் இன்றும் மக்கள் கைகளில்தான் உள்ளது. அவைகளை நீங்கள் மறந்தாலும் வரலாறு ஒருபோதும் மறக்காது.

இப்போது அவர் 20வது திருத்தச்சட்டத்தில் அவ்வளவு என்ன பாதகம் உள்ளது எனக்கேற்கிறார். அதில் பாதகம் எது சாதகம் எது என்று புரிந்துகொள்ள முடியாத சட்டத்தரணி லாஹிர் இன்று அதுதொடர்பில் சிறுபிள்ளைத்தனமாக பேசுவது வெட்கமாகவுள்ளது. கேவலம் இரண்டு வருட பதவி நீடிப்புக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்களின் கால்களை பிடித்து கெஞ்சிய உங்களது கேவலமான நடவடிக்கைகள் குறித்து தமிழ் சகோதர உறுப்பினர்களும் வரலாற்றில் மறந்துவிட மாட்டார்கள் என நினைக்கின்றேன்.

வடமாகாண சபையிலே 20வது திருத்தச் சட்டமூலத்தை அந்த சபையினுடைய முதலமைச்சர் சமர்ப்பிக்காது அந்த விடயத்தில் மிகவும் நிதானமாக செயற்பட்டார். குறிப்பாக இதனை நிறைவேற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு எதிராக அவர் பாரிய விமர்சனஙங்களையும் செய்தார். ஒரு கட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் விளங்காத்தன்மையினாலே அவர்கள் அதற்கு ஆதரவு தெரிவித்தனர் எனவும் சாடினார். பிரதம நீதியரசர் ஒருவர் இவ்வாறு தெரிவிக்கும் போது சட்டத்தரணி லாஹிர் வெகிளித்தனமாக அதில் என்ன தவறு இருக்கின்றது எனக்கேட்பது அவரது அறிவை அவரே மழுங்கடிக்கும் செயற்பாடாகும்.

20வது திருத்தச் சட்டமூலம் மாகாண சபை தேர்தலை தள்ளிப்போடுவதற்கான செயற்பாடே என சிறு பிள்ளைகளும் அறிந்திருந்த இக்காலகட்டத்தில் லாஹிர் போன்றோர் அதன் ஆழஅகலத்தை புரிந்துகொள்ளாமை விக்னேஸ்வரன் ஐயாவுடைய மேற்படி கருத்தை மேலும் உறுதி செய்துள்ளது. மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டம் பாராளுமன்றத்திலே சமர்பிக்கப்பட்ட போது உங்களது கட்சியும் அதன் உறுப்பினர்களும் கண்ணை மூடிக்கொண்டு 2/3 பெரும்பான்மைக்கு ஆதரவினை வழங்கினர். 

இவ்வாறு வரலாற்று துரோகங்களை செய்கின்ற கட்சித் தலைவரையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும், முதலமைச்சரையும் விமர்சிப்பதற்கு வக்கற்ற நீங்கள் பணங்களுக்கு சோரம் போய் மாற்று கட்சியினருக்கு அறிக்கை விடுவது வேடிக்கையானது. இவ்வாறான உங்களால் மூதூர் சமூகத்தினுடைய பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது. உங்களது வங்குரோத்து அரசியலையும், இயலாமையினையும் மூதூர் மக்கள் நன்கறிந்துள்ளனர். அதனை மூடி மறைப்பதற்கே இன்று அறிக்கைகளை வெளியிடுகின்றீர்கள். இந்த நிலையில் சமூகத்திற்காகவும் உரிமைக்காகவும் குரல் கொடுக்கின்றவர்களை விமர்சிப்பதற்கு நீங்கள் தகுதியற்றவர்.

கல்விக் கல்லூரி ஆசிரியர்கள் வெளிமாவட்டங்களுக்கு நியமனம் செய்யப்பட்ட போது அவர்களை அவர்களது சொந்த மாவட்டங்களில் நியமிக்குமாறு சகல தரப்பினராலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அந்தவகையில் நானும் அந்த ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டேன். அது அவர்களுக்கு நன்கு தெரிந்த விடயமாகும். இது இவ்வாறிருக்க லாஹிர் சொல்வதனைப் போன்று நான் யாரையும் ஏமாற்றவுமில்லை உங்கள் கட்சிக்காரர்கள் போன்று பணம் பெற்றுக்கொள்ளவுமில்லை.

மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதியுடன் அண்மையில் கட்டார் விஜயம் செய்த போது அங்கு கல்விக்கல்லூரி ஆசிரியர் பிரச்சினை பேசப்பட்டு உடனடித்தீர்வும் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. தீர்வுகானப்பட்டுவிட்டது என்ற செய்தி வெளியானதனால் ஏனையவர்கள் தங்களது முயற்சிகளை தொடரவில்லை. இதனை லாஹிர் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அதன் பின்னரே அறிக்கைகளை வெளியிட வேண்டும்.

அண்மையில் லாஹிரின் சகோதரர் ஒருவர் தென் மாகாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட போது அதனை இரத்துச் செய்து அவரது சொந்த இடத்தில் சேவையாற்ற சந்தர்ப்பத்தை வழங்கியவன் நான். அவ்வாறு பிரதேசம் பாராது சேவையாற்றி வருகின்றேன். சொந்த சகோதரனுடைய இடமாற்றத்தை சீர் செய்ய முடியாது வங்குரோத்து அரசியல் செய்யும் லாஹிர் மூதூர் மக்களுடை தேவைகளை எவ்வாறு நிறைவேற்றுவது.

கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் தங்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்குமாறு கோரி சுமார் 100 நாட்களுக்கு மேல் போராட்டத்தில் குதித்தனர். இறுதியில் அப்போராட்டமானது தேசிய பிரச்சினையாக உருவெடுத்தது. அந்த விடயத்தில் சகல அரசியல்வாதிகளும் ஜனாதிபதி, பிரதமர், சம்மந்தப்பட்ட அமைச்சர்களிடத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர். அந்த விவகாரத்தில் நானும் பொறுப்புடன் செயற்பட்டவன். இது இவ்வாறிருக்கு உலகமறியாதவனைப் போன்று பட்டாதரிகளுக்கு தீர்வினை முதலமைச்சர்தான் பெற்றுக்கொடுத்தார் எனக்கூறுவது உண்மைக்கு புறம்பானதாகும். பட்டதாரிகளோடு முதலமைச்சர் நடந்துகொண்ட விதத்தினை பட்டதாரிகளிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சுமார் இரண்டு வருடங்களுக்கு மேல் கிழக்கு மாகாண விவசாய அமைச்சராக இருந்த போது வெளிநாட்டு முதலீட்டாளர்களை கிழக்கில் முதலீடு செய்வதற்கு நடவடிக்கைகளை எடுப்பதாக கூறி பல மாநாடுகளை நடாத்தினார். அதற்கு கிழக்கு மாகாணத்தினுடைய பல மில்லியன் பணங்களை செலவு செய்தார். இதுவரை எந்தவொரு முதலீட்டாளர்களும் கிழக்கில் முதலீடு செய்யவில்லை இறுதியில் பல மில்லியன் ரூபா நிதிகளே விரயமானது. அதே போன்று கிழக்கிலே சுயதொழிலினை ஊக்குவித்து பெண்கள் வெளிநாடு செல்வதனை தடுப்பேன் என்றார். ஆனால் அவருடைய ஆட்சிக்காலத்திலேதான் அதிமான பெண்கள் வெளிநாடு சென்றார்கள்.

அவ்வாறான போலி வாக்குறுதிகள் கிடப்பில் இருக்கத்தக்கதாக முதலமைச்சராக இருந்த போது கடந்த ஏப்ரலுக்குள் 4000பேருக்கு வேலைவாய்ப்புக்களை வழங்குவேன் என்றார். பட்டதாரிகளின் பிரச்சினைகளை தீர்ப்பேன் என்றார். கிழக்கு மாகாணத்திலுள்ள காணிப்பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாகவும் கிழக்கு மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்கினார். அவ்வாறு பகிரங்கமாக வாக்குறுதிகளை வழங்கிவிட்டு கிழக்கு மண்ணையும், மக்களையும் ஏமாற்றிய முன்னாள் முதலமைச்சரை பாராட்டி கல்விக்கல்லூரி ஆசிரியர்களுக்கு உதவி செய்யச்சென்ற என்னை ஏமாற்றியதாக கூறுவதற்கு முனைவது முட்டாள்தனமான நடவடிக்கையாகும்.

கிழக்கு மாகாண கல்வித்துறையை கட்டியெழுப்புவதற்கு முன்னாள் முதலமைச்சர் எந்தவிதமான திட்டங்களையும் வகுக்கவில்லை. அவருடைய ஆட்சிக்காலத்திலேதான் அதிகமான ஆர்ப்பாட்டங்கள் கிழக்கிலே இடம்பெற்றது. அண்மைக்காலமாக தமிழ் அரசியல் தலைமைகளும் அவருடைய செயற்பாட்டை விமர்சித்து வருகின்றனர். ஆனால் உங்களது முதலமைச்சர் கிழக்கு மாகாண ஆளுநரை குற்றம் சுமத்தி வருகின்றார். குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் செல்வாக்கிழந்து வரும் முதலமைச்சருக்கு ஆதரவு தேடி லாஹிரைப் போன்ற பலர் விலை பேசப்பட்டு களமிறக்கப்பட்டுள்ளனர். லாஹிர் போன்றோரின் சிறு பிள்ளைத்தனமான நடவடிக்கைகளால் ஒருபோதும் ஆதரவு தேடமுடியாது.

மாகாண சபையினுடைய ஒழுக்க விதிகளை மீறி அந்த சபையிலே அநாகரிகமாக நடந்துகொண்டு கூப்போடுகின்ற லாஹிர் ஊடகங்களிலும் அநாகரிகமாக நடந்துகொள்ள முனைவதனால் அவருடைய கோமாளித்தனத்தினை சகலரும் புரிந்துகொள்ள நேரிடும். முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஹசன் மௌலவி சுகயீனமுற்றிருந்த போது பதவி மோகங்கொண்ட லாஹிர் நீங்கள் சுகயீனமுற்றுள்ளீர்கள் உடனடியாக பதவியை இராஜனமா செய்து பதவியை விட்டுத்தாருங்கள் எனக்கேட்டு அவமானப்பட்ட விடயங்களை இன்னும் மூதூர் மக்கள் மறந்துவிடவில்லை.

எது எவ்வாறாயினும் முதலமைச்சரின் சில்லறைப் பணங்களுக்கு சோரம்போன லாஹிர் உண்மைக்குப் புறம்பாகவும், மக்கள் செல்வாக்கிழந்து வருபவர்களை சீர்செய்வதற்காகவும் அறிக்கைகளை விட்டு பிற்போக்குத்தனமாக செயற்படாது தனது மூதூர் சமூகத்திற்கு தன்னால் முடிந்ததை செய்துகாட்டட்டும் எனவும் சுபையிர் சவால் விடுத்தார்.

முதலமைச்சருக்கு அடித்தால் லாஹிருக்கு வலிக்கிறது முதலமைச்சருக்கு அடித்தால் லாஹிருக்கு வலிக்கிறது Reviewed by Madawala News on 11/19/2017 08:51:00 PM Rating: 5