Kidny

Kidny

கிந்தோட்ட வன்முறை: பின்னணியில் தீவிரவாதத்தின் நிழல்கள் ஞானசார தேரர்: தணித்து வைத்தாரா? தூபமிட்டாரா?


ஆங்கிலத்தில்: தரிஷா பஸ்டியன்ஸ் (DailyFT)
தமிழில்: ஹஸன் இக்பால் -

நவம்பர் 18 சனிக்கிழமை மாலைநேரமொன்றில் இரண்டாவது முறையாக வருகை தந்துள்ள விலையுயர்ந்த காரின் கிரீச்சொலி தூபராமய புராண ரஜமஹா விகாரை வளாகத்தில் குழுமியிருந்த மக்களிடையே சலனத்தை ஏற்படுத்தியது.


மாலை மங்கும் வெளிச்சத்திலும் பளிச்சிட்ட அக்காரின் முன் இருக்கையிலிருந்து பரிச்சயமான ஓருருவம் வெளியே பாய்ந்து இறங்கியது. ஆம்! அவ்வுருவத்தின் சொந்தக்காரர் வேறு யாருமல்ல! சிறுபான்மையினரின் உள்ளங்களில் திகிலை ஏற்படுத்திடும், சர்ச்சைக்குரிய பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர், அதற்கு முன்னைய நாள் இரவு இன வன்முறை பேரழிவுக்குள்ளான அப்பிராந்தியத்திற்கு மீள சமுகமளித்திருந்தார்.


நவம்பர் 17 வெள்ளிக்கிழமை இரவு பல இல்லங்களும் வாகனங்களும் சேதமாக்கப்பட்டு இன வன்முறை தலைவிரித்தாடிய வகையில் 19 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள காலியின் பதற்றம் மிகுந்த அப்பிரதேசத்திற்கு இம்முறை ஞானசார தேரர் சமாதான பறவையாக வலம் வந்துள்ளார் என கூறப்படுகிறது.


வேறுபடும் வில்லன்களும் வன்முறையின் அடிநாதங்களும்
பிரதேசத்தின் ஒவ்வொரு சாராரும் கூறும் கதைகளுக்கு ஏற்ப வில்லன்களும் வன்முறைக்கான மூல காரணங்களும் வேறுபடுகின்றன. எனினும், நவம்பர் 12 இல் இடம்பெற்ற சிறிய விபத்துச் சம்பவத்தை தொடர்ந்து பிரதேச இளைஞர்களுக்கு மத்தியில் தோன்றிய சிறு சிறு கைகலப்புக்களே இறுதியில் பாரிய இன வன்முறையாக மூண்டது என்பது தொடர்பில் அனைவரும் ஒன்றுபடுகின்றனர்.


நவம்பர் 16, வன்முறைக்கு முதல் நாள், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடவுள்ளவர் என கூறப்படும் அப்பகுதியை சேர்ந்த முஸ்லிம் அரசியல்வாதி ஒருவர் தலைமையிலான குழுவொன்று கிந்தோட்ட பகுதியிலிருக்கும் சிங்களவர்களுக்கு சொந்தமான வீடுகள் மீது தாக்குதல்களை நடாத்தியுள்ளது. இத்தாக்குதலில் மூன்று வீடுகள் குறித்த குழுவினால் தாக்குதலுக்கு உள்ளாகி சேதமடைந்துள்ளன. அதனைத் தொடர்ந்து குறித்த அரசியல்வாதி உட்பட மூன்று பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். அதற்கு மறுநாளே இத்தாக்குதலுக்கான பழிவாங்கும் படலம் அரங்கேற்றப்பட்டுள்ளது.


2014 அளுத்கம வன்முறைகளின் போது இடம்பெற்றதைப் போன்று முஸ்லிம்களுக்கு சொந்தமான 50 இற்கும் மேற்பட்ட வீடுகளும் வர்த்தக நிலையங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.  முஸ்லிம்கள் செறிவாக வாழும் அப்பகுதியில் சேத விபரங்கள் உடனடியாகவே வெளியிடப்பட்டன. முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள், வாழ்வாதார வருமானங்களை ஈட்டித் தரும் பல வர்த்தக நிலையங்கள்  லாவகமாக இலக்கு வைக்கப்பட்டு தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன.


 சனிக்கிழமை மாலை நேரம் வரை சில வர்த்தக நிலையங்கள் பற்றி எரிந்து கொண்டிருந்தன. பற்றி எரிந்து கொண்டிருந்த கடைகளில் 58 வயதுடைய லியனகே எனும் சிங்களவரின் பலசரக்கு கடையும் உள்ளடக்கம். பெற்றோல் குண்டுத் தாக்குதலே கடையை நாசமாக்கியுள்ளது என்கிறார் லியனகே. மஹா ஹப்புகல பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்களே அந்நபரின் பிரதான வாடிக்கையாளர்கள். லியனகேயின் கடைக்கு ஏற்பட்டுள்ள சேதம் தொடர்பில் அவரது அயலவரான மொஹம்மத் றிஸ்மியும் மிகவும் மனமுடைந்து போயுள்ளார். “அவர்கள் எமது சகோதரர்கள்... இப்பிரதேசத்தைச் சேர்ந்த எவரும் இக்காரியத்தை செய்திருக்க மாட்டார்கள்” என றிஸ்மி உறுதியாகக் கூறுகிறார்.


அதனையடுத்துள்ள வீதியில் வசிக்கும் என்.வை.எம். பஹீம் என்பவர் தனது கொங்கிரீட் கற்களை உருவாக்கும் தொழிற்சாலை சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார். எதிராபாராத இச்சேதம் தனது வாழ்வாதாரத்தை வெகுவாக பாதித்துள்ளதாகவும் புற்று நோயினால் கஷ்டப்படும் தனது எட்டு வயது மகனை எவ்வாறு காப்பற்றப் போகிறேன் எனவும் வருந்துகிறார். வாரந்தோறும் புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ள தனது மகனை மகரகம புற்று நோய் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது. மேலும் விலையுயர்ந்த மருந்துப் பொருட்களும் கிராமமாக கொள்வனவு செய்யப்பட வேண்டியுள்ளது என தெரிவிக்கிறார்.


பஹீமின் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த எட்டு நாள் கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. பஹீமின் தொழிற்சாலையை தாக்கிய தாக்குதல்தாரிகள் புதிதாக தயாரித்து வைக்கப்பட்ட 800 கொங்கிரீட் கற்களை அடித்து நொறுக்கியுள்ளதுடன், லொறியை தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.

“என்னால் கொங்கிரீட் கற்களை மீள உருவாக்கிக் கொள்ள முடியும்... லொறி வாகனம் இல்லாமல் அவற்றை நான் எவ்வாறு விநியோகிப்பது? என மனமுடைந்து கூறுகிறார் பஹீம்.


வன்முறை ஆரம்பித்தமை தெரிய வந்ததும் பிரதேசவாசிகள் ஓடிச் சென்று மின்விளக்குகளை அணைத்தவாறு, தத்தமது வீடுகளுக்குள் ஒளிந்து கொண்டதாக தெரிவிக்கின்றனர். “வீதி விளக்கை கூட நாம் அணைத்து விட்டோம்... எனது மகன்களுடனும் மகள்களுடனும் ஓடிச் சென்று கட்டிலுக்கு கீழே ஒளிந்து கொண்டேன்” என்கிறார் மொஹம்மத் யூஸுப்.


அதிரடிப் படையினர் வருவது கண்டு தாக்குதல்தாரிகள் தமது வீட்டை தாண்டி ஓடித் தப்பிக்க முனைந்த வேளையில் அதிரடிப்படையினர் தமது வீட்டை நோக்கிச் சுட்டதாலேயே பெருத்த சேதங்கள் உண்டானதாக யூசுப் கூறுகிறார். “நாங்கள் அவர்களுக்கு அடைக்கலம் வழங்குகிறோம் என நினைத்து விட்டார்கள் போல... எமது வீட்டை நோக்கி சுட்டார்கள்... துப்பாக்கி சன்னங்கள் யன்னல் கண்ணாடிகளை துளைத்தது... வீடெங்கும் கண்ணாடிகள் சிதறின...” என குற்றம்சாட்டுகிறார் யூசுப்.


அளுத்கம வன்முறையின்போது கூறப்பட்டதைப் போன்றே இச்சம்பவத்தின்போதும் தாக்குதல்தாரிகளை தங்களால் அடையாளம் காண முடியவில்லை எனவும், அவர்கள் அப்பகுதிகளில் வசிப்பவர்கள் அல்ல எனவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.


அரசியல் ரீதியாகவும் இனவாத ரீதியாகவும் தூண்டப்பட்ட பல குழுக்கள் வேறு பல இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்டு நவம்பர் 16, 17 ஆம் திகதிகளில்  கிந்தோட்ட பிரதேசத்தில் ஒன்றுதிரட்டப்பட்டுள்ளனர் என்பதை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர உறுதிப்படுத்தியுள்ளார்.


விஸ்வரூபமெடுக்கும் சந்தேகங்களும் அச்சுறுத்தல்களும்
கிந்தோட்ட கிழக்கு, கிந்தோட்ட மேற்கு, மஹா ஹபுகல, குருந்துவத்த, உக்வத்த, வெளிபிட்டிமோதர, பியதிகம உள்ளிட்ட கிந்தோட்டையை அண்மித்த பல பகுதிகளை சேர்ந்த பல பொதுமக்கள் இவ்வன்முறை தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏறத்தாழ 3,000 முஸ்லிம்களும் 600 சிங்களவர்களும் அப்பகுதியில் நீண்ட நெடுங்காலமாக ஐக்கியத்துடனும் ஒருங்கிணைப்புடனும் வாழ்ந்து வந்துள்ளனர்.

வர்த்தக ரீதியிலும், பாடசாலைகள், மைதானங்கள், பிரதான தெருக்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பிலும் இரு சமூகத்தவர்களும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளனர்.


சிங்களவர்கள் முஸ்லிம்களது கடைகளிலும், முஸ்லிம்கள் சிங்களவர்களினது கடைகளிலும் பாகுபாடு காட்டாது பொருட்களை கொள்வனவு செய்து வந்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். வெகு அற்பமாகவே பிரச்சினைகள் தோன்றி வந்ததாகவும் பெரும்பாலும் இரு சமூகத்தவர்களும் சமாதானமாகவும் ஐக்கியத்துடனுமே வாழ்ந்து வருவதாக பிரதேசவாசிகள் உறுதி கூறுகின்றனர்.


வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் முறையற்ற ஒன்றாகும் என்றே பெரும்பாலான கிந்தோட்ட பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். இதனால் தற்போது விஸ்வரூபமெடுத்துள்ள இரு சமூகங்களுக்கும் இடையிலான அரசியல் மற்றும் மத ரீதியான பின்புலங்களை கொண்ட அச்சுறுத்தல்கள் காலப்போக்கில் மேலும் பெரிதுபடுத்தப்பட்டு விகாரமடையுமோ என  அவர்கள் அஞ்சுகின்றனர்.
“அற்பமான ஒரு விடயமே இந்த வன்முறையின் ஆரம்பம்...” என்கிறார் கிந்தோட்ட ஹில்ர் பள்ளிவாசலின் இமாமாக பணியாற்றும் மொஹம்மத் நஸீர். சனிக்கிழமை மாலை 6 மணிக்கு அமுலுக்கு கொண்டுவரப்பட்ட ஊடரங்குச் சட்டத்தை தொடர்ந்து பள்ளிவாசல் வளாகத்தை மூடிவிட்டதாக அவர் மேலும் தெரிவிக்கின்றார்.


வெள்ளிக்கிழமை இரவு வன்முறை ஆரம்பிக்கப்பட சற்று முன்னரே அதிரடிப் படையினரின் கண்காணிப்பு இடைநிறுத்தப்பட்டமை தொடர்பிலும் பொலிசாரின் செயற்திறனின்மை தொடர்பிலும் குற்றம்சாட்டப்படுகிறது. வன்முறை இடம்பெற்ற பின்னரே அக்கிராமத்திலுள்ள ஒவ்வொரு பள்ளிவாசல்களும் விகாரைகளும் இராணுவ, கடற்படை மற்றும் பொலிஸ் பாதுகாப்பைப் பெற்றுக் கொண்டதாக தெரிவிக்கின்றார்.


ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதும் இரவு தொழுகையை கூட்டாக பள்ளிவாசலில் நடாத்த முடியாது போனமை தொடர்பில் பகுதியளவில் தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஹில்ர் பள்ளிவாசலின் இமாம் நஸீர் தெரிவிக்கின்றார். “கடந்த காலங்களிலும் சிறியளவில் இன பிரச்சினைகள் கிந்தோட்ட பகுதியில் இடம்பெற்றிருந்தாலும் கூட பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்களை நடாத்தும் அளவுக்கு அவை இருக்கவில்லை.... இப்பளிவாசலில் சிசிடிவி கமரா பொருத்தப்பட்டுள்ளது.... தாக்குதல் காணொளிகளை இனிமேல்தான் பொலிசாரிடம் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது”   என்கிறார் நஸீர்.


இமாம் நஸீரின் கூற்றுப் பிரகாரம், தூபாராம விகாரையின் தலைமை பிக்குவே அண்மைக் கிராமங்களில் இருந்து இளைஞர்களை அணி திரட்டி, விகாரையில் வைத்து இரு மணித்தியாலங்களுக்கு மேலாக கலந்துரையாடி அவர்களை முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல்களை நிகழ்த்துமாறு வெறியூட்டச் செய்தார் எனவும், அவரினாலே இச்சம்பவம் பூதாகார நிலையை அடைந்தது என தெரிவிக்கப்படுகிறது.


இமாம் நஸீர் குறிப்பிடும் தூபாராம விகாரை அம்பலாங்கொட சுமதானந்த தேரரினால் நிர்வகிக்கப்படுகிறது. நஸீர் இமாமாக பணியாற்றும் ஹில்ர் பள்ளிவாசலில் இருந்து மிக மிக அண்மையிலேயே இவ்விகாரையும் அமைந்துள்ளது.

கிந்தோட்ட விகாரையில் 18 வருடங்களாக வசித்துவரும் மெலிந்த, இளைஞர் போன்ற தோற்றத்தைக் கொண்ட குறித்த சுமதானந்த தேரர் தன்னை பௌத்த அறிஞராகவும் எழுத்தாளராகவும் அடையாளப்படுத்திக் கொள்கிறார். பிராந்தியத்தில் ஏற்பட்ட வன்முறைகளுக்கு தூபாராம விகாரை தேரர்களே  தூபமிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை  சுமதானந்த தேரர் அடியோடு மறுத்துள்ளார்.


“குறித்த வீதி விபத்துச் சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்டு வந்த வாய்ச் சச்சரவுகள் பிராந்தியத்தில் முஸ்லிம் சிங்கள மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியது... அதனை தொடர்ந்து கிராம பாடசாலை வளாகத்தில் சிறிய கைகலப்பும் இடம்பெற்றது.... வெள்ளிகிழமை மாலைநேரம் உடனடியாக பிரதேச பெற்றோர்களை எமது விகாரையில் திரட்டினோம்.... பாடசாலை மாணவர்கள் இச்சச்சரவுகளில் ஈடுபடாது கண்காணிக்குமாறு பெற்றோர்களுக்கு அறிவூட்டினோம்... அறிவுரைகளை வழங்குவதற்காகவே இப்பிரதேசவாசிகளை ஒன்றுதிரட்டினோம்....” என தூபாராம விகாரைத் தலைமை பிக்கு சுமதானந்த தேரர் விளக்குகின்றார்.


பொதுபலசேனாவுக்கும் இச்சம்பவத்திற்கும் தொடர்புகள் இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை விகாரையின் தலைமை பிக்கு நிராகரித்துள்ளார்.

நவம்பர் 17 வன்முறை சம்பவம் தொடர்பில் அறிக்கை தயாரித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கையளிப்பதற்காகவே பொதுபலசேனா அமைப்பினர் விகாரைக்கு வருகை தந்தனர் என மேலும் தெரிவித்துள்ளார். எனினும், விகாரையின் தலைமை பிக்குவின் கருத்துக்கள் யாவும் பொதுபலசேனா மற்றும் ராவய அமைப்பினால் பரப்பப்படும் கருத்துகளை ஒத்தவையாகவே அமைந்துள்ளன.


“முஸ்லிம்கள் பல பெண்களை திருமணம் செய்துகொள்கின்றனர்... நிறைய குழந்தைகளை பெற்றுக் கொள்கின்றனர்... சிங்கள மக்கள் வசிக்கும் பிரதேசங்களில் இருந்து காணிகளை இரு மடங்கு விலை செலுத்தி முஸ்லிம்கள் கொள்வனவு செய்கின்றனர்... கிந்தோட்ட விகாரையை தனிமைப்படுத்தும் விதமாக கிந்தோட்டயில் வாழும் சிங்கள மக்களை இங்கிருந்து வெளியேற்றுகின்றனர்...” என முஸ்லிம்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார் தூபாராம விகாரையின் தலைமைப் பிக்குவும் வன்முறைச் சம்பவத்திற்கு தூபமிட்டவர் என கூறப்படுபவரான சுமதானந்த தேரர்.


“தலையையும் கண்களையும் மறைத்துக் கொள்வதன் மூலமும் தாடியை நீளமாக வளர்த்துக் கொள்வதன் மூலமும் அவர்கள் தங்களை தனித்துவப்படுத்திக் காட்ட முனைகின்றனர்... நெடுங்காலமாக ஒன்றிணைந்து வாழும் பல்வேறு சமூகத்தவர்கள் மத்தியில் பிளவுகளை உண்டுபண்ணுவதாகவே இவர்களது நடவடிக்கைகள் உள்ளன....” என தேரர் மேலும் கூறுகின்றார்.


முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கியாஸ் என அழைக்கப்படும் நிசார் என்பவர் 300 அடியாட்களை கொண்டு வந்து புதன்கிழமை மாலை வேளை சிங்கள வீடுகள் மீது  தாக்குதல்களில் ஈடுபட்டதாகவும் இதனால் மூன்று வீடுகள் சேதமாகி உள்ளதாகவும் சுமதானந்த தேரர் குற்றம்சாட்டியுள்ளார்.


“இதனை அடுத்து நான் பொலிஸ்மா அதிபருடன் பேசினேன்... அது தொடர்பில் தாம் நடவடிக்கை எடுப்பதாக வாக்களித்து அதிரடிப் படையினரை பிரதேசத்தில் பாதுகாப்புக்காக நிறுவினார்... எனினும், தாக்குதலுக்கு 300 அடியாட்கள் வந்திருந்தனர்... அவர்களில் மூவர் மாத்திரமே பொலிசாரினால்  கைதுசெய்யப்பட்டுள்ளனர்...

வியாழக்கிழமை சம்பவம் தொடர்பில் முஸ்லிம் தலைவர்கள் வெள்ளிக்கிழமை ஜும்ஆ பிரசங்கத்தில் முஸ்லிம் மக்களை அறிவுறுத்தியுள்ளனர்... இது எமக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது...” என சுமதானந்த தேரர் தெரிவிக்கின்றார்.


உள்ளூர் அரசியல்வாதியின் தலைமையிலான வியாழக்கிழமை தாக்குதலும் ஒரு வாரம் கடந்த விபத்துச் சம்பவத்தினதும் தாக்கங்களே வெள்ளிக்கிழமை வன்முறைக்கு வித்திட்டுள்ளது.

பொதுபலசேனாவுக்கும் தொடர்புகள் இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு
இமாம் நஸீரின்  வாக்குமூலத்தின் பிரகாரம் விகாரையில் இடம்பெற்ற சந்திப்பே சூழ்நிலையை மோசமாக்கியதாக கூறப்படுகிறது.
“உங்களுக்கு தெரியுமா?... ஞானசார தேரரும் இன்றைக்கு விகாரைக்கு வந்துள்ளார்... தூபாராம விகாரையின் ‘குறித்த பிக்கு’ பொதுபலசேனா அமைப்பின் துணைச் செயலாளர்” என தாழ்ந்த தொனியில் கூறுகின்றார் இமாம் நஸீர்.


“இது ஒரு பொதுவான இடம்.... எந்தவொரு தேரரையும் வரக் கூடாதென கூறி எம்மால் தடுக்க முடியாது.... சிங்கள இளைஞர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்தே ஞானசார தேரர் இங்கே வந்திருந்தார்... எங்களுக்கும் அவருக்கும் வேறு எதுவும் தனித்துவமான நட்புமுறை கிடையாது... எமது தலைமை பிக்குவுக்கும் பொதுபலசேனாவுக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை” என பொதுபலசேனா தொடர்பில் நாம் கேட்க முன்னரே அவராகவே வலிந்து மறுக்கிறார் விகாரையிலிருக்கும் ‘குறித்த இளைஞர்’.


விகாரையில் இருந்த மற்றைய பிக்கு வந்து ஏதோ கதைத்ததும் எம்முடன் உரையாடிக் கொண்டிருந்த விகாரையின் குறித்த இளைஞர் எங்களை உடனடியாக விகாரையை விட்டு வெளியேறுமாறு கத்தினார். “இச்சம்பவம் குறித்து ஊடகங்களுக்கு நாம் எதுவும் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை... ஊடகங்கள் எப்போதும் முஸ்லிம்களின் சார்பாகவே செய்திகளை வெளியிடுகின்றன... ஊடகங்களுக்கு சிங்களவர்கள் எப்போதும் கெட்டவர்கள்தான்.....” என கடிந்துகொண்டார்.

ஞானசார தேரரின் தலையீடு    

காலி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பை முடித்துக் கொண்டு சனிக்கிழமை மாலையில் ஞானசார தேரர் விகாரையில் கூடியிருந்த மக்களைச் சந்தித்து உரையாட மக்கள் மத்தியில் நடந்து வரும்போது விகாரையின் ‘குறித்த இளைஞன்’ ஓடிச் சென்று ஊடகவியலாளர்கள் தமக்கு மத்தியில் இருப்பதைச் சுட்டிக்காட்டி ஞானசார தேரரை எச்சரித்தான். எனினும், ஞானசார தேரர் அதிர்ச்சியடையவில்லை. “மறைப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லையே...” புன்சிரிப்புடன் கூறிக் கடந்து சென்றார்.


காலி மாவட்ட செயலகத்தில்  வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற வன்முறை தொடர்பில் கலந்துரையாட அரசியல் மற்றும் மத பிரதிநிதிகளும் சமுகமளித்திருந்தனர். செயலகத்தில் இருந்து கிடைக்கப் பெறும் தகவல்களை அறிவதற்காக  தூபாராமய விகாரையில் பல மணிநேரமாக அப்பகுதியை சேர்ந்த சிங்கள மக்கள் கூடியிருந்தனர். வெள்ளிக்கிழமை சம்பவம் தொடர்பில் 16 சிங்களவர்கள் உட்பட 19 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்ட தமது இளைஞர்களின் விடுவிப்பு தொடர்பில் ஞானசார தேரரின் தலையீட்டையே அவர்கள் பெரிதும் நம்பியிருந்தனர்.
விகாரையில் உரையாற்ற ஞானசார தேரர் ஆரம்பித்தவுடன், அங்கிருந்த பிக்குகள் மக்களை நோக்கி “பொதுபலசேனா செயலாளார் ஞானசார தேரர் மீது நம்பிக்கை வையுங்கள்... அவரது அறிவுரைகளுக்கு கீழ்ப்படியுங்கள்” என கேட்டுக்கொண்டனர்.


என்றுமில்லாதவாறு நிதானமாகவும் அமைவடக்கமாகவும் உரையாற்றிய ஞானசார தேரர் மக்களை அமைதி காக்கும்படியும், சச்சரவுகளில் இருந்து தவிர்ந்து கொள்ளுமாறும் அறிவுறுத்தினார். கைதுசெய்யப்பட்டுள்ள குறித்த இளைஞர்களை விடுவிப்பது தொடர்பில் தன்னால் எதுவும் செய்ய முடியாது என விகாரையில் திரண்டிருந்த கூட்டத்தினரை நோக்கி ஞானசார தேரர் கூறினார்.

 “பொலிசார் கைது தொடர்பிலான ஆவணங்களை பதிவு செய்து விட்டனர்... கைதுசெய்யப்பட்டவர்களை திங்கட்கிழமை நீதிமன்றத்தில் நிறுத்தி அதன் பின்னரே விடுவிக்க முயற்சிகளை எடுக்க முடியும்.... நீங்கள் அனைவரும் மேலதிக சச்சரவுகளில் ஈடுபடாத வரைதான் இவை சாத்தியமாகும்.... மேலும் பிரச்சினைகளை உருவாக்க மாட்டோம் என உறுதி கூறுங்கள்” என ஞானசார தேரர் மக்களை கேட்டுக் கொண்டார்.

விஷமத்தனமான கருத்துக்கள்

எனினும் கிந்தோட்ட சம்பவத்தின் தீவிரத்தை தணிக்கும் வகையில் அவர் ஆற்றிய உரையின் இடையே சில விஷமத்தனமான கருத்துக்களும் ஆங்காங்கே விரவிக் கிடக்க தவறவில்லை.


“எமது உரிமைகளுக்காக நாம் போராடுவது இன்றியமையாததாகும்.... யாருக்கும் நாம் அடிபணியத் தேவையில்லை.... அதேநேரம் தந்திரோபாயமாக செயற்பட வேண்டிய தேவையும் எமக்கு மத்தியில் உள்ளது...” என விகாரையில் கூடியிருந்த மக்களை நோக்கி ஞானசார தேரர் அறிவுறுத்தினார்.
“மாவனல்ல, தர்கா நகரில் இடம்பெற்ற இதே போன்ற வன்முறைச் சம்பவங்களில் இருந்து நாம் படிப்பினை பெற்றுக் கொள்ள வேண்டும்.... யன்னல்களும் கதவுகளும் மாத்திரமே உடைக்கப்பட்டன.... சில வீடுகளை நோக்கி வெறும் கற்கள் மாத்திரமே வீசப்பட்டிருந்தன... சில வாரங்கள் கழித்து நிதியுதவிகள் பெறப்பட்டு அதன் மூலம் நான்கு மாடிக் கட்ட்டிடங்களை அதே இடத்தில் அவர்கள் எழுப்பிக் கொண்டுள்ளனர்... எனவே அவர்களது வீடுகளுக்கு கற்களை எறிந்து நாம் சாதிக்கப் போவது ஒன்றுமில்லை....
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கிராம மக்கள் ஒன்றுபட தயாராகுங்கள்.... சிதறிப் போகாதீர்கள்... எங்களுக்கு எதிரான பிரச்சினைகள் தொடர்பில் கிராமத்தின் தலைமை பிக்கு மற்றும் பொலிசாருக்கு தெரிவியுங்கள்... “ என ஞானசார தேரர் அக்கூட்டத்தில் வலியுறுத்தினார்.


தமது இளைஞர்களை சிறையில் இருந்து விடுவிப்பதே வன்முறையின் பின்னரான சனிக்கிழமை கூட்டத்தின் பிரதான நோக்கம் என ஞானசார தேரர் தெரிவித்தார்.

கிளர்ந்தெழும் வினாக்கள்

கிந்தோட்ட பகுதியில் இடம்பெற்ற வன்முறைகளைத் தொடர்ந்து பிரதேசத்தில் ஏற்பட்ட பதற்றங்களை தணிக்கும் வகையில் வகிபாகம் ஒன்றை ஆற்றியமை தொடர்பில், சர்ச்சைக்குரிய பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரை அமைச்சர்கள் பலர் பகிரங்கமாகவே பாராட்டியுள்ளனர்.


கிந்தோட்ட விவகாரம் தொடர்பில் ஓடிச் சென்று தலையிடும் படி அவரைத் தூண்டிய காரணிகள் எவை? கிராம மக்களை ஞானசார தேரரின் ஆலோசனைகளுக்கு கட்டுப்படுமாறு பிரதேச மக்களை அப்பிரதேச பிக்குமார்கள் வலியுறுத்தியது எதற்காக? கைது விவகாரம் தொடர்பில் காலி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் எந்த முகாந்திரத்தின் அடிப்படையில் ஞானசார தேரரும் இணைத்துக் கொள்ளப்பட்டார்? போன்ற பல விடை காணா வினாக்கள் இவரது தலையீட்டின் பின்னால் அவதானிகள் மத்தியில் கிளர்ந்தெழுந்துள்ளன.

(விடிவெள்ளி 24.11.2017)
கிந்தோட்ட வன்முறை: பின்னணியில் தீவிரவாதத்தின் நிழல்கள் ஞானசார தேரர்: தணித்து வைத்தாரா? தூபமிட்டாரா? கிந்தோட்ட வன்முறை: பின்னணியில் தீவிரவாதத்தின் நிழல்கள்  ஞானசார தேரர்: தணித்து வைத்தாரா? தூபமிட்டாரா? Reviewed by Madawala News on 11/26/2017 10:13:00 AM Rating: 5