Ad Space Available here

பிள்ளையும் கிள்ளி தொட்டிலும் ஆட்டியவர் அமைச்சர் ஹக்கீமே.


சாந்தமருது கல்முனை மக்களை வைத்து இத்தனை வருடமும் பிள்ளையும் கிள்ளி தொட்டிலும் ஆட்டியவர்" இன்னும் ஆட்டிக் கொண்டிருப்பவர் வேறு யாருமில்லை அமைச்சர் ஹக்கிமேதான் இதில் எந்த சந்தேகமும் இல்லை.

தனது அரசியல் இருப்புக்காக ஒரு நிரந்தர தீர்வை அந்த மக்களுக்கு கூறாமலும்' பெற்றுக் கொடுக்காமலும் அதையும் இதையும் கூறி இழுத்தடிப்பு செய்து' கழுவிய மீனில் நழுவிய மீனாகச் செல்கிறவர் அமைச்சர் ஹக்கிம்தான் என்பதுதான் உண்மை.

உண்மையாக இந்த விடயத்தில் ஹக்கிம் நீதியாக நடந்திருந்தால்' எப்போதே அந்த மக்களிடம் நியாயமான காரணங்களை எடுத்துக்கூறி" எந்த ஊருக்கும் தீமை ஏற்படாதவாறு சுமூகமான ஒரு தீர்வைக் கொடுத்திருக்கலாம்.

அப்படிச் செய்யாது தனது அரசியல் இலாபத்துக்காக இரு ஊர்களையும் வைத்து இத்தனை காலமும் ஒழித்து விளையாடியதன் விளைவுதான்' அந்த மக்கள் இன்று வீதிக்கு இறங்கும் நிலமை ஏற்பட்டது மட்டுமல்லாது' அந்த மக்களின் உறவுகளிலும் விரிசல் ஏற்படக் கூடிய நிலமையும் உருவாகிக் கொண்டிருக்கிறது.

எத்தனையோதரம் ஹக்கிம் கூட்டணிகள் சாந்தமருது பிரதேச சபையை தங்களால் பெற்றுக் கொடுக்க முடியும் என்று பல இடங்களில் சொல்லி இருக்கிறார்கள். அது மட்டுமா பிரதமரைக்கூட கூட்டிவந்தும் சொல்ல வைத்தார்கள் என்பது முழு நாடும் அறிந்த விடயமாகும்.

இது இப்படி இருக்கும்போது இன்று சாந்தமருதுக்கு மட்டும் தனியான பிரதேச சபை கொடுக்க முடியாதென்றும் 'அப்படி கொடுப்பதானால் நகரை நான்காகப் பிரிக்கப்பட வேண்டும் என்றெல்லாம் பிரதியமைச்சர் ஹரீஸ் போன்றோர்களால் சொல்லப்படுவதை அவதானிக்க முடிகிறது.  உண்மையில் அப்படி நான்காக பிரிக்கப்படுவதை யாரும் பிழை என்றோ' பிரிக்கக்கூடாது என்றோ சொல்ல வில்லை' சொல்லவும் மாட்டர்கள்' செய்து கொடுக்கவே வேண்டும். அது கல்முனை மக்களின் நியாயமான கருத்தாகும்.

இதே போன்றுதான் சாந்தமருது மக்களின் கோரிக்கையும் நியாயமானதே அவர்களும் தாங்களுக்கான பிரதேச சபை கொடுக்கப்பட வேண்டும் என்று பல வருடங்களாக குரல் எழுப்பிக் கொண்டே இருக்கிறார்கள் என்பது நாம் அறிந்த வகையில் உண்மை.

எனவே தங்களால்  இப்படியானதொரு பிரதேச சபை பெற்றுக்கொடுத்து மக்களுக்குள் பிரச்சினையை ஏற்படுத்த முடியாது என்று  நினைத்திருந்தாலும்' அன்றே அதற்கான தெளிவை இருஊர் மக்களுக்கும் நிதானமாக நியாயமான காரணங்களை சொல்லி புரிய வைத்திருக்க வேண்டுமல்லவா? இதுவே உண்மையான தலைமைத்துவத்தின் பண்பும் கூட" அப்படியும் செய்யாத சாணக்கிய தலைவன்.

அனைகின்ற பக்கம் ஆணி அடிப்பதுபோல் அந்த மக்களிடம் சென்று ஒன்றைக் கூறுவதும்' இந்த ஊர்களில் வந்து இன்னுமொன்றைக் கூறுவதும்' வழமையாக இருந்து வந்ததன் விளைவே.
இன்று ஒருவீட்டுப் பிள்ளைகள் போல் இருந்த ஊர் மக்கள் மத்தியில் ஆயிரம் கருத்து முரண்பாடு எழுந்துள்ளதற்கான முக்கிய காரணமாகும்.

இன்று மக்கள் மத்தியில் உணர்ச்சி வசப்பட்டு கைதட்டல்களுக்காக ஆதங்கங்களை கொட்டித் தீர்க்கும் சகோதரர் ஹரீஸ் அவர்கள்'   இதே கைதட்டலுக்காக பிரதமர் ரணில் அவர்களை கூட்டி வந்து சாய்ந்தமருதுக்கு பிரதேச சபை கொடுக்கப்படும் என்று பகிரங்கமாக கூறியபோது. அதை எதிர்த்து அப்படி சாய்ந்தமருதுக்கு மட்டும் தனியான சபை கொடுப்பதை ஏற்க முடியாது' மொத்தமாக நான்காக பிரிப்பதே எல்லோருக்கும் நல்ல தீர்வாகும் என்று' உரிமையை தட்டிக் கேட்க முடியாமல் போனது ஏன்?

சரி அவ்விடத்தில்தான் கேட்கமுடியாமல் போய் விட்டதென்றாலும்" அமைச்சர் றிஷாத் அவர்கள் சகோதரர் பைஸர் முஸ்தபா அவர்களை கூட்டிவந்து தான் பிரதேச சபையை பெற்றுக் கொடுப்பதாக மக்கள் மத்தியில் கூறிச் சென்ற பிற்பாடாவது.  அவ்விரண்டு ஊர் மக்களுக்கும் இதன் உண்மை தன்மைகளையும், சாதக பாதகத்தைப் பற்றி எடுத்துக்கூறி தனியான பிரதேச சபை கொடுபடமாட்டாது' அவ்வாறு கொடுத்தால் நிறைய பிரச்சினைகள் எதிர்காலத்தில் ஏற்படும்" அப்படித்தான் கொடுப்பதாக இருந்தாலும் அது நான்காக பிரிக்கப்பட்டே கொடுக்கப்படும் என்று சொல்லி புரிய வைத்திருக்கலாம்.  இதுவே அதிகாரத்தில் இருக்கும் உங்களின் அரசியலுக்கும் அழகாகவும் அமைந்திருக்கும்' சிறந்த முறையும் கூட.

அதைவிடுத்து இவ்வளவு நாளும் உங்களுக்கு பிரதேச சபை தருகிறோம் என்றெல்லாம் தலைவர் சொல்லைக் கேட்டு. அந்த மக்களின் உள்ளங்களில் நம்பிக்கையை வளர்த்து விட்டு.

இன்று இரு ஊர்மக்களையும் வீதிக்கு இறக்கி இருப்பது என்பது'
உங்களின் இயலான்மையைக் காட்டுவதோடு' சந்தர்ப்ப அரசியலில் மக்களை மடையனாக்கி கொண்டிருக்கிறீர்கள் அமைச்சர் ஹக்கிமுடன் சேர்ந்து என்பதையும் தெளிவாக காட்டுகிறது.

தலைவர் ஹக்கிமுக்குத்தானே இந்த பிரதேசத்தின் மண்வாசனை புரிவதுமில்லை' மக்களின் உணர்வுகளை மதிப்பதுமில்லை.
ஆனால் நீங்களும் கூட இந்த மக்களின் உணர்வுகள் தெரியாமல் இருந்தீர்களோ? இவ்வளவு நாளும் என்பது சந்தேகமாய் உள்ளது உங்களின் நடவடிக்கைகள பார்க்கும்போது.

இப்படி அவ்விரு ஊர்மக்களையும் வீதிக்கு இறங்கி போராடும் நிலமைக்கு கொண்டு வந்தது, அந்த மக்களுக்கிடையில் பிரதேசவாத கருத்துக்களை தோற்றுவித்தது' போன்ற மோசமான நிலமையை உருவாகுவதற்கு முழு காரணமும் சாணக்கிய தலைவர் கூட்டணியே ஆகும்.

மேலும் இந்த மக்களின் இழுபறி பிரச்சினைக்கு அமைச்சர் றிஷாத் பதியுத்தீன் அவர்களின் அசமந்த அரசியல் காய்நகர்த்தலும் உண்டு.
காரணம் சாய்ந்தமருதுக்கான தனியான பிரதேச சபை கொடுக்கப்படுவதனால் கல்முனை மக்களுக்குள் பிரச்சினை வரலாம் என்று அறிந்திருந்தும். அந்த மக்களை உசுப்பேத்தி அரசியல் செய்தது ஏற்றுக் கொள்ள முடியாதொன்றாகும்.

இருந்தும் றிஷாத்தைப் பொறுத்தவரை அங்கு எந்த அரசியல் அதிகாரமும் இல்லாமல்' எதிர்கால அதிகாரத்தை நோக்கி பயணிக்க கூடியவர். அந்த வகையில் றிசாத் எப்படிப்பட்ட நகர்வுகளை மேற்கொண்டாலும்' அதிகாரத்தில் இருக்கும் ஹக்கிம் கூட்டணிகள் மூலம் அது புஷ் வாணமாகிடும் என்பது யதார்த்தமாகும்.

ஆகவே என்னருமை கல்முனை, சாய்ந்தமருது உறவுகளே இப்படிப்பட்ட அரசியல்வாதிகளின் பேச்சுக்களை நம்பி ஒரு கூண்டூக்கிளி போல் இருந்துவரும் உங்கள் உறவுகளில் பகையை ஏற்படுத்தி வேற்றுமையை உறுவாக்கி விடாதீர்கள்.

உங்கள் இரு ஊர்களின் ஒற்றுமையே ஒட்டுமொத்த கிழக்கு முஸ்லிம்களின் பலம் என்பதை நாங்கள் அறிவோம்" அதை நீங்கள் மறந்து செயற்படாமல் தொடர்ந்தும் ஒற்றுமையோடு செயற்பட்டு விட்டுக் கொடுப்போடும், புரிந்துணர்வோடும் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வைபெற்று' போலி அரசியல்வாதிகளிடம் இருந்து சமூகத்தை பாதுகாப்போம்.


-ஒலுவில் ஜெலில்-
பிள்ளையும் கிள்ளி தொட்டிலும் ஆட்டியவர் அமைச்சர் ஹக்கீமே. பிள்ளையும் கிள்ளி தொட்டிலும் ஆட்டியவர் அமைச்சர் ஹக்கீமே. Reviewed by Madawala News on 11/01/2017 11:00:00 AM Rating: 5