Kidny

Kidny

மௌலவி ஆசிரியர் நியமனம் தொடர்பான ஆர்ப்பாட்டமும் ஆதங்கமும்


அல்ஹாஜ் அனஸ் JP ,
தலைவர்- இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம்   


கடந்த புதன் கிழமை 15-11-2017 மற்றும் செவ்வாய் 16-11-2017 ஆகிய இரண்டு தினங்களில் கல்வி அமைச்சுக்கு முன்னால் மிகவும் அமைதியான ஓர் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இது, 2008 ம் ஆண்டு மௌலவி ஆசிரியர் நியமனப் போட்டிப் பரீட்சை எழுதி, பெறுபேறுகளை கையில் வைத்துக்கொண்டு, இதுவரை  நியமனம் வழங்கப்படாமல் வஞ்சிக்கப்பட்ட மௌலவி - மௌலவி யாக்களின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமாக இருந்தது.

மௌலவி ஆசிரியர் நியமனங்களை 2008 க்குப் பின்னர் சுமார் 10 வருட காலமாக கல்வி அமைச்சு வழங்காமல், புறக்கணித்து வருகிறது. போட்டிப் பரீட்சைக்குத் தோற்றி, பெறுபேறுகளை கையில் வைத்துக்கொண்டுள்ளவர்களுக்கு நியமனங்களை வழங்குமாறு கோரிக்கைகள் பல்வேறு தரப்பினரூடாக 10 வருடகாலமாக முன்வைக்கப்பட்டே வந்தது. இது தொடர்பாக அத்தனை அரசியல்வாதிகளையும் சந்தித்து அறிவுறுத்தப்பட்டது. மகஜர்கள் சமர்ப்பிக்கப்பட்டன. எனினும், அக்கோரிக்கைகள் கல்வி அமைச்சினால் கருத்தில் கொள்ளப்படவில்லை. பெரும் தியாகங்களுக்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்ட அத்தனை கோரிக்கைகளும் செவிடன் காதில் ஊதப்பட்ட சங்காகத்தான் ஆகிப் போனது.

அதனால்தான், இந்தக் கோரிக்கையை எங்கு கொண்டு போனால், வலுப்பெற்று, அதிர்வுகளை ஏற்படுத்துமோ அந்த இடத்திற்கு இந்த ஆர்ப்பாட்டத்தை இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம்  நேர்த்தியாக நகர்த்தியிருந்தது.
நியாய உணர்வும் உரிமைப் போராட்ட வீரியமும் சமூக அக்கறையும் அறிவு வழியில் சிந்திப்பவர்களும் இந்த முடிவைத்தான் எடுப்பார்கள். அதனால்தான் இந்தப் போராட்டதிற்கு பெருமளவு மௌலவிமௌலவி யாக்களின் பங்களிப்பும்  ஒத்துழைப்பும் கிடைத்தது.

மௌலவி கள் என்போர் மிம்பர் மேடைகளில் நின்று மக்களுக்கு உபதேசம் செய்யவல்லவர்கள், அவர்களுக்கு ஆன்மிகம் மட்டும்தான் தெரியும். ஆர்ப்பாட்டம் எல்லாம் தெரியாது. மௌலவி யாக்களும் அப்படித்தான். அவர்கள் அடுக்களைப் பணிகளை மட்டும் கவனிப்பவர்கள்  என்ற குறுகிய, தவறாகன கருத்தியல் மனப் பதிவுகளுக்கு அப்பால், நியாயத்திற்காக சமதளத்தில் களத்தில் நின்று போராடத் தயங்காதவர்கள் என்ற உணர்வு பூர்வமான உண்மையை வெளிக்காட்டி, இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் அனைவரின் கவனத்தை ஈர்த்த ஒரு முக்கிய நிகழ்வாக இந்த ஆர்ப்பாட்டம் அமைந்தது.  

இரண்டு தினங்கள் தொடர்ந்து நடாத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம், ஊடகங்களின் கவனத்தை ஈர்த்து, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதற்கான நியாயமான காரணங்களும் உள்ளன.  
ஆர்ப்பாட்டம் என்றால் அராஜகம், அநாகரிகம், எல்லை மீறல், தடியடி என்று பல சலசலப்பு சமாச்சாரங்கள் நடைபெறும். ஆனால், இந்த ஆர்ப்பாட்டம் நாகரிமான,  இஸ்லாமிய விழுமியங்களைப் பேணும் வகையில் அமைந்திருந்தது. ஆர்ப்பரிக்க வந்த உலமாகக்ளுடன், கல்வி அமைச்சின் பாதுகாப்பு ஊழியர்கள் மிகவும் நல்ல முறையில் நடந்து கொண்டார்கள். ஏனெனில், அங்கு குழுமிய உலமாக்களின் தலைமைத்துவக் கட்டுப்பாடு, ஒழுக்க விழுமியம், கூட்டு முயற்சி, பொது இடத்தில் வீதி வழியே பயணிக்கும் யாருக்கும் இடையூரற்று நடந்து கொண்ட முன்மாதிரி, அரசியல் நோக்கமற்ற மற்றும் வேறு காரணங்களற்ற நியாயமான நேரடியான ஒற்றைக் கோரிக்கை என்பவற்றை அவதானித்த அவர்களின் முகத்தில் வியப்புத் தோன்றியது.

அதனால், ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் ஐவர் உள்ளே அனுமதிக்கப்பட்ட பின்னர், ஏனையவர்களுக்கு கல்வி அமைச்சு வளாக மர நிழலில்  அமரவும் அனுமதித்தார்கள். பொலிஸ் கெடுபிடியோ, தடியடியோ எதுவும் நடத்த வேண்டிய தேவை அவர்களுக்கு ஏற்படாத, சுயகட்டுப்பாடுள்ள உலமாக்களை அவர்கள் கண்ணியமாக நடத்தினார்கள். அதனால், இரண்டு நாட்கள் தொடர் ஆர்ப்பாட்டத்தில் காவல்துறைக் குவிப்பும் இடம்பெறவில்லை. எனவே, சத்திய தாகமும் நியாய உணர்வுமிக்க இளம் உலமாக்களின் சாத்வீகப் போராட்டத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமாக இதை நோக்கலாம்.

எனினும், இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக எதுவும் தெரியாமல், 2008 ம் ஆண்டு நடைபெற்ற பரீட்சைப் பெறுபேறுகளை மையமாக வைத்து இப்போது நியமனங்களை வழங்குங்கள் என்று கோருவது நியாயமா? என்று மொட்டைத் தலையன் குட்டையில் விழுந்த மாதிரி சிலர்  நியாயமற்ற விமர்சினங்களை வெளியிட்டு குழப்பங்களை விளைவிக்க முனைகின்றமை கண்டிக்கத்தக்கது. (கோரிக்கை ஒரு நீதி நியாயமானதாக அமைய வேண்டாமா? அவர்களில் பலர் அனைத்தையும் மறந்திருப்பர். அவ்வாறு தான் கட்டாயம் அனைவருக்கும் நியமனம் கிடைக்க வேண்டும் என போராடுவதாக இருந்தால் இந்தப் பத்து வருடங்களும் இவர்கள் போராட்டம் நடத்தாது என்ன செய்து கொண்டிருந்தனர்)
என்றும் சிலர் நியாயமற்ற கேள்விகளை எழுப்புகின்றனர்.


அனைத்துவிதமான நீண்ட, நெடிய  முயற்சிகளை மேற்கொண்டும் கண்டுகொள்ளப்படாமல் புறக்கணிக்கப்பட்டதால்தான், இறுதியாக கவன ஈர்ப்புப் போராட்டம் மேற்கொள்ப்பட்டுள்ளது என்பதை இத்தகைய நுனிப்புல் மேதாவிகள் புரிந்து கொள்ளவேண்டும்.

ஜனநாயக ரீதியான அரசில் நியாயமான கோரிக்கைகளை முன்வைப்பதற்கு இறுதியான ஆயுதமாக அமைவது ஆர்ப்பாட்டமே
கோரிக்கைகள் மூலம் சாதிக்க முடியாத நிலை தோன்றும் போது, எம் மூலம் வேகமான தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அந்த வகையில் மிகவும் முன்மாதிரியான ஓர் ஆர்ப்பாட்டத்தை இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் முன்னெடுத்ததால், பாராளுமான்றப் பிரதிநிதிகளான முஸ்லிம் அரசியல் வாதிகள் ஐவர் ஆர்ப்பாட்டக்களத்திற்கு வந்து, விடயத்தை கேட்டறிந்து, உரிய நடவடிக்கைகளை செய்வதாக மீடியாக்களின் முன்னால் கூறியுள்ளனர். இது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மிகப் பெரும் பலமாக அமைந்தது.

இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தொடரான வேண்டுகோள்களுக்கும், இறுதி கவனயீர்ப்பு போராட்டத்திற்கும் எதிர் வரும் 22.11.2017 புதன் அன்று பாராளுமன்ற அமர்வில் பேசி, சரியான தீர்வினை பெற்றுத்தருவதாக அங்கு வருகை தந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஐவரும் அளித்த வாக்குறுதிக்கமைய ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

எனவே எதிர் வரும் 22 ம் திகதி சரியான தீர்வு கிடைக்காதவிடத்து, முஸ்லிம் பாராளுமன்ற மற்றும் அமைச்சர்களின் அமைச்சசுகளுக்கு முன்னால் மீண்டும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.

(தற்போது நியமனம் வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்து அறிவித்தன் பின்னர் ஏன் பத்துவருடங்களுக்கு முன்னர் உள்ள பிரச்சினையை பூதாரகமானதாக்குகின்றனர்.
கல்வி அமைச்சு இதனை காரணமாக முன்வைத்து அடுத்த கட்ட நடவடிக்கைக்குத் தயங்குகின்றது.
இவ்வாறு மௌலவி ஆசிரியர் நியமனங்களை சந்திக்கு கொண்டு வருவது பல்வேறு தரப்புக்கள் இதன் மீது கை வைப்பதற்கு ஏதுவாக அமைகின்றது.அப்போது நிலைமை மேலும் மோசமடையும்.) என்றும் ஆதங்கப்படுகின்றனர்.

நல்லாட்சி அரசாங்கம் என்று தங்களை அழைத்துக் கொண்டு, முஸ்லிம்களின் முக்கிய பங்களிப்போடு அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள், சுமார் 30 க்கும் மேற்பட்ட மாதங்கள் கடந்தும் இதுவரை இந்த நியமன விடயத்தில் ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நல்லாட்சி அரசாங்கம் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் மௌலவி ஆசிரியர் நியமனம் வழங்குவதாக உறுதியும் அளித்திருந்தது.
தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் அரசியல் விஞ்ஞாபனத்தில் " மௌலவி ஆசிரியர் நியமனம் வழங்கப்படும், அதில் ஏற்கனவே பரீட்ச்சைக்கு தோற்றியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்" எனவும் குறிப்பிட்டிருந்தார்

அண்மையில் இது தொடர்பாக அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது, அதற்கு உடனே நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதமர் வாக்களித்தும் உள்ளார்.எனினும், இதுவரை காத்திரமதான எந்த முன்னெடுப்பும் நடைபெறவில்லை.

பொதுவாக இலங்கையிலுள்ள எல்லா மதங்கள் சார்பாகவும் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது வழமை. ஆனால், முஸ்லிம்கள் மட்டும்தான் 10 வருடங்களாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். 10 வருடங்களாக வஞ்சிக்கப்பட்டவர்கள் நியாயம் கோருவது எந்தவகையில் நியாயமற்றது என்று இவர்கள் விளக்க வேண்டும்? நியாயம் கோர ஆண்டுக் கணக்குகள் ஏதாவது?  எங்காவது இருக்கிறதா

10 வருடத்திற்கு முன்னர் பரீட்சை எழுதி, சித்தியடைந்த ஒருவருக்கு பட்டம், பதவி வழங்கப்படுமானால், அதைப் பெறுவது எந்த தர்மத்தில் தவறு என்று உள்ளது? சாதரண தரப் பரீட்சை எழுதித் தேறிய ஒருவர், அது பலவருடங்களுக்கு முன்னர் உள்ள பரீட்சை அதற்கு எனக்கு சான்றிதழ் வேண்டாம் என்று இப்போது விட்டுவிடுவாரா? விடமாட்டார். அதேபோல், எழுதிய பரீட்சைக்கு உரிய நியமனத்தை கேட்பது நியாயமானது. அந்த நியாயத்தைக் கேட்பதை நியாயமில்லை என்பதுதான் நியாயமற்றது.

(அன்பின்சகோதரர்களே.உங்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய நியமனங்களை நீங்கள் போராடிப் பெறுவதற்கு 10 வருட சந்தர்ப்பம் இருந்தது. ஆனால், நீங்கள் அவற்றை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வில்லை.) என்று ஆதங்கப்படுகின்றார். 10 வருடங்கள் பல வழிகளில் போராடப்பட்டது. நியாயம் கிடைக்கவில்லை

பாதிக்கப்பட்டவர்கள் உரிய முறையில் பயன்படுத்தவில்லை என்று குறைசொல்ல முனையும் இவர் 10 வருடங்களாக எங்கே மறைந்திரு்நதார்?  அந்த உரிய முறையை இடைப்பட்ட காலத்தில் சொல்லிக் கொடுத்து பெற்றுக் கொடுத்திருக்கலாம் அல்லவா? அதை எல்லாம் நீங்கள் விட்டுவிட்டு, எதுவும் செய்யாத நீங்கள் இப்போது ஏன் விமர்சிக்கின்றீர்கள்?!
(தற்போது நியமனம் வழங்குவது தொடர்பாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் இவ்வாறு சந்திக்குக் கொண்டுவந்து ஆர்ப்பாட்டம் செய்து இதனை பெரும் பிரச்சினையாக காண்பிப்பதன் விளைவாக இந்த நியமனங்களுக்கு புதிய பல தடைகள் வரலாம். அல்லது மேலும் மேலும் தாமதமடையலாம்.
அல்லது சில வேளைகளில் இம்முறை நியமனம் கிடைக்காது கூட போகலாம்.)

ஊடகங்களினதும் அரசியல்வாதிகளினதும் கவனத்திற்கு கொண்டுவந்து வெற்றிபெறும் தருணம் தளைக்கும் போது, இவ்வாறு நீங்கள் நியாயமற்ற விமர்சினங்களை முன்வைத்து குட்டையைக் கிளறலாமா?
தனது விமர்சினத்தின் ஆரம்பத்தில் போராடக் கூடாது, அது நியாயமற்றது என்று  சொன்னவர் (…உங்கள் போராட்டத்தை இந்த நியமனங்களின் பின்னர் மேற்கொள்ளுங்கள்.

ஏதோ ஒரு வகையில் மௌலவி நியமனம் கிடைக்கின்றதே என்று திருப்பதி கொள்ளுங்கள்.
அதுவே நீங்கள் போராடி நியமனம் பெற்று செய்யும் சேவையை விட உயர்ந்த சேவையாக அமையும்.) இறுதியில் இப்படிச் சொல்லி, போராட்டம்  கூடாது ஆனால் கூடும் என்று தனது தடமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கல்வி அமைச்சுக்கு முன்னால் போராட்டம் நடாத்திய உலமாக்கள்  சுமந்திருந்த பதாகைகளும் அதன் சுலோகங்களும் உள்ளடக்கி இருந்த வாசகங்களிலேயே இத்தகையை விமர்சினங்களுக்குத் தெளிவான பதில் இருந்தது.

எங்களுக்கு மட்டும் நியமனம் வழங்கு என்று அவர்கள் கோரவில்லை. நாம் எழுதிய பரீட்சைக்கு உரிய நியமனத்தை வழங்கிவிட்டு, மற்றவர்களுக்கும் வழங்கு என்று பொது நலனோடுதான் அவர்கள் கோரிக்கை வைத்தனர். புதிதாக மௌலவி ஆசிரியர்  விண்ணப்பம் வெளியிடும் போது, 35 வயது என்று மட்டுப்படுத்தப்பட்டால் தகுதி இருந்தும் பலர் புறக்கணிக்கப்படலாம். அதனால்தான் இதுவரை காத்த பொறுமை பொங்கி, ஆர்ப்பரிக்க  ஆர்த்தெழுந்துள்ளனர் என்பதைப் புரிந்து கொள்ளவும்.

நியாயமற்ற இத்தகைய விமர்சினங்கள் வெளிவருவதிலிருந்தே இந்த ஆர்ப்பாட்டம் தாக்கம் செலுத்தியுள்ளது என்பதையே காண்பிக்கிறது. 10 வருடங்களாக மரண மவ்னம் காத்திலிருந்தவர்களைக் கூட இந்த ஆர்ப்பாட்டம் தட்டி எழுப்பியுள்ளது. இது இந்த ஆர்ப்பாட்டதிற்குக் கிடைத்த இன்னொரு வெற்றி எனலாம்.  
1

மௌலவி ஆசிரியர் நியமனம் தொடர்பான ஆர்ப்பாட்டமும் ஆதங்கமும்  மௌலவி ஆசிரியர் நியமனம் தொடர்பான ஆர்ப்பாட்டமும் ஆதங்கமும் Reviewed by Madawala News on 11/24/2017 10:03:00 AM Rating: 5