Kidny

Kidny

பலமுனைப் போட்டிக்குத் தயாராகும் கல்முனை தேர்தல் களம். Kl

சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை உருவாக்கப்படவேண்டும் என வலியுறுத்தி அவ்வூர் மக்கள் சென்றவாரம் தொடர்ச்சியாக 3 நாட்கள் மேற்கொண்ட கடையடைப்பு நடவடிக்கைகளும்

அதற்கெதிராக கல்முனை மாநகர சபையை நான்காகப் பிரிக்காமல் சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை வழங்கக்கூடாது என கல்முனை மக்கள் மேற்கொண்ட ஏட்டிக்குப்போட்டியான கடையடைப்பு நடவடிக்கைகளும் முடிவுற்றுள்ள நிலையில் ,இவ்விவகாரம் கட்சிகளுக்கிடையில் எவ்வித இணக்கபாடுமின்றி கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.



இச்சூழ்நிலையில் கல்முனை மாநகர் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை சந்திக்கவிருக்கிறது. இத் தேர்தலில் சாய்ந்தமருது மக்களின் மனநிலை எவ்வாறு அமையப்போகின்றது?



அவர்களது வாக்குகள் யாருக்கு அளிக்கப்படவிருக்கிறது ? போன்றவற்றை அறிய அனைத்துத் தரப்பும் எதிர்பார்ப்புடன் உள்ளதை காணமுடிகிறது



ஏலவே தங்களுக்கான பிரதேச சபை கேட்டுப் போராடிய நிலையில் அரசியல்வாதிகளின் எந்தவித பதிலுமின்றி ஏமாற்றமடைந்த மக்கள் போராட்டத்தின் இறுதிநாளில் ஊர்ப் பெரியபாள்ளிவாசல் தலைமையில் "சாய்ந்தமருதுப் பிரகடனம்"வெளியிட்டமை நாமறிந்ததே.



அந்தவகையில் எதிர்வருகின்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பெரிய பள்ளிவாசலினால் வெளியிடப்பட்ட பிரகடனத்திற்கு அமைவாக எந்தக் கட்சியும் சாராத , ஊர் நலனை முதன்மையாக்க் கொண்டு செயல்படக்கூடிய நடுநிலையாளர்களை சாய்ந்தமருதில் சுயேட்சை வேட்பாளர்களாக களமிறக்க ஆயத்தமாகி வருகின்றனர்.



கல்முனைத் தொகுதியில் தனிப்பெரும் வாக்குவங்கியை கொண்டுள்ள சாய்ந்தமருதின் இம்முடிவு பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தும் கட்சிக்கும் ,பிற கட்சிகளுக்கும் தேர்தலில் வாக்குகளில் வீழ்ச்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.



பிரதேச சபை கிடைக்கும் வரை எந்தக்கட்சியினருக்கும் ஒத்துழைப்பதில்லை என்ற சாய்ந்தமருதின் முடிவினால் அதிகம் பாதிக்கப்படப்போவது ஸ்ரீ.மு.காங்கிரஸ் கட்சியினரே. ஒவ்வொரு தேர்தலிலும் கல்முனைத் தொகுதியில் முஸ்லிம் காங்கிரஸ் பெருவெற்றி ஈட்டி வருவதற்கு சாய்ந்தமருது மக்கள் அளித்துவரும் 90 வீதமான வாக்குகளே காரணமாகும்



அப்படியிருக்க, சாய்ந்தமருதின் தற்போதைய முடிவு நிச்சயம் காங்கிரசுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. மக்களின் அபிலாசையான மிகக் குறைந்தளவு அதிகாரமுடைய ஒரு பிரதேச சபையைக்கூட பெற்றுத்தர வக்கற்ற அரசியல் கட்சிகளும்,அதனது தலைமைகளும் இனிமேலும் வாக்குகளுக்காக வழங்கும் வாக்குறுதிகளை நம்பி வாக்களிக்க மக்கள் தயாரில்லை என்பதையே சாய்ந்தமருதின் தற்போதைய களநிலைவரங்கள் உணர்த்தி நிற்கின்றன.



எதிர்வருகின்ற தேர்தலில் சாய்ந்தமருது மக்கள் ஊர் சார்பில் களமிறக்கப்படவுள்ள சுயேட்சை வேட்பாளர்களுக்கு தங்கள் வாக்குகளை அளிக்கும் பட்சத்தில் நிச்சயமாக காங்கிரசு கட்சியினரின் பிரதிநிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சிநிலை ஏற்படும். இது கல்முனை மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மையினை இல்லாமற் செய்துவிடும்.


எப்படியிருப்பினும் இப்போதைக்கு கல்முனை மாநகர சபைக்கான தேர்தல்களம் பலமுனைப் போட்டியாக அமையவுள்ளதோடு ,இதில் சாய்ந்தமருது பிரதான களமாக திகழப்போகிறது.


அஸீம் 

சாய்ந்தமருது


பலமுனைப் போட்டிக்குத் தயாராகும் கல்முனை தேர்தல் களம். Kl பலமுனைப் போட்டிக்குத் தயாராகும் கல்முனை தேர்தல் களம். Kl Reviewed by Madawala News on 11/09/2017 06:51:00 AM Rating: 5