Kidny

Kidny

விரிசலில் இரு முஸ்லிம் ஊர்கள் .


ஏ.பீ.எம்.அஸீம்.(சாய்ந்தமருது)

கல்முனைக்குடி - சாய்ந்தமருது ஆகிய  இரு ஊர்களினதும் தற்போதைய முறுகல்நிலை
 இலங்கை முழுவதும் ஏன் சர்வதேசத்திலும் பேசுபொருளாக மாறியுள்ளது. ஒருசிறு அரசியல் அதிகாரம்கொண்ட உள்ளூராட்சி சபையொன்றை
புதிதாக உருவாக்குவதில் ஏற்பட்டுள்ள இழுபறிநிலையே இதற்குக் காரணமாகும்.

இலங்கையில் காலத்துக்காலம் சனத்தொகைப் பரம்பலின்மூலம்  ஏற்படும் நிருவாகச் சிக்கல்களை கவனத்திற்கொண்டு  ,இலகுபடுத்துமுகமாக   இணைந்திருந்த பல உள்ளூராட்சி சபைகளைப் பிரித்து புதிதாக சபைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் ஆறு ஊர்களை உள்ளடக்கியதாக  பெருநிலப்பரப்பைக் கொண்டிருக்கும் கல்முனை மாநகரசபையும், தனது நிருவாகச் செயற்பாடுகளை மேற்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவருவதை அவ்வூர்களைச் சேர்ந்த அரசியல்வாதிகளே ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.  
 சாய்ந்தமருது மக்கள் தற்போது முன்வைத்திருக்கும் பிரதேசசபைக் கோரிக்கையும் இதனடிப்படையில் உருவான ஒன்றாகவே நோக்கப்படுகிறது. பிரதேச வாததத்துக்காகவோ,பிற ஊர்களை பகைத்துக்கொள்வதற்காகவோ பிரதேச சபையை கோரவில்லை.

சாய்ந்தமருதின் நியாயமான கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிரதேச அரசியல்வாதிகள் தொடக்கம் பிரதமர்வரை "பெற்றுத் தருவோம்" என்றுகூறிய ஒரு சபையைத்தான் அவ்வூர் கேட்டுக்கொண்டிருக்கிறது.ஆனால் வாக்குக் கொடுத்தவர்கள்தான் தர மறுக்கிறார்கள்.

இத்தனை காலமும் கிடைக்குமென்ற நம்பிக்கையில்  பொறுமையோடு இருந்து ஏமாற்றப்பட்ட மக்கள் இறுதியாக போராட்டம் நடத்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு,  இன்றுவரை பல்வகையிலும் போராட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன.,

ஒரு பக்கம் கல்முனை மாநகர சபையை நான்காகப் பிரிப்பதற்கான பேச்சுவார்த்தை சம்மந்தப்பட்ட  அரசியல் கட்சிகளுக்கிடையில் நடைபெற்றுக்கொண்டிருந்தாலும்,எந்தவித தீர்வுமின்றி நாளுக்குநாள் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றமை சாய்ந்தமருது மக்களிடம் எதிர்மறையான எண்ணங்களை உருவாக்கியுள்ளது.

இதன் கொந்தளிப்பு நிலைமை நாளுக்குநாள் அதிகரித்துவருவதானது இரு சகோதர ஊர்களுக்குமிடையில் தீராப்பகையை ஏற்படுத்திவிடுமோ என்று அஞ்சப்படுகிறது.கடந்த வெள்ளிக்கிழமை மாலை மாட்டுவண்டில் போராட்டத்தின்போது ,கல்முனைக்குடி- சாய்ந்தமருதை பிரிக்கின்ற ஸாஹிரா கல்லூரி வீதியால் பேரணி வந்துகொண்டிருக்கும்போது  ஊர்  ஒற்றுமையினை சீர்குலைக்கும் வகையில் சிலசம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.

இவை ஒருபோதும் ஏற்கக்கூடியதல்ல.இரு ஊர்களிலும் வசிக்கக்கூடியவர்கள் சகோதர முஸ்லிம்கள். தேசியரீதியில் எமக்கெதிராக பல பிரச்சினைகள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் ,ஒன்றினைந்து எதிர்கொள்வதற்குப் பதிலாக, சிறிய விடயத்துக்காக பகமைப்பட்டுக்கொள்வது பாரிய விபரீதத்தை  ஏற்படுத்தலாம்.

நமது ஊர் ஒற்றுமைக்கு உலைவைக்கும் எண்ணத்தில் செயற்படும் அரசியல்வாதிகள் தமது எதிர்கால அரசியல்  இருப்புக்கு இலாபம் அடைந்துகொள்வதற்காக பிரச்சினையை பற்றவைத்துள்ளார்கள். ஊர்களும் இந்தவிடயத்தில் நிதானத்தோடு அனுகி தமது பிரச்சினைக்கு உடனடியாக தீர்வைப்பெற்று முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய தேவையுள்ளது.

அல்லாஹ் எம்மனைவரையும் ஒற்றுமைப்படுத்துவானாக.
விரிசலில் இரு முஸ்லிம் ஊர்கள் . விரிசலில்  இரு முஸ்லிம் ஊர்கள் . Reviewed by Madawala News on 11/26/2017 09:58:00 PM Rating: 5