Ad Space Available here

மறுக்கப்பட்டு வரும் மவ்லவி ஆசிரியர் நியமனம்.

M.A.Hafeel Salafi
தொன்மைக் காலம் தொட்டு, மதச் சார்பு சிந்தனையுள்ள நாடுகளில் மதக் கல்விக்கு முக்கியத்துவம்
அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், பல்லின, பல மத சிந்தனையுள்ள நமது நாட்டிலுள்ள அரச பாடசாலைகளிலும்; சமயம் சார்ந்த பாடத்திற்கு  முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, அதற்கான ஆசியர்களும் நியமிக்கப்படுகின்றனர். 


இலங்கையில் முஸ்லிம் பாடசாலைகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதோடு, பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், இந்த நாட்டிலுள்ள உலமாக்களுக்கு  ஆசிரிய நியமனம் வழங்கப்பட்டது. இதன் மூலம் பாடசாலை பாடவிதானங்களில் அரபு மொழி, இஸ்லாம்,இஸ்லாமிய நாகரிகம், அரபு இலக்கியம் என்பன உள்ளடக்கப்பட்டன. முஸ்லிம் மாணவர்களுக்கு அரபி மொழிப் பரிச்சையமும் மார்க்க அறிவும் கிடைக்கப்பெற்றன. 


ஆன்மிக வறுமையை நீக்குவதில் பாரிய பங்களிப்புச் செய்த மவ்லவி ஆசிரியர் நியமனம் 1992ம் ஆண்டுக்குப் பின் வழங்கப்படாததால் முஸ்லிம் சமூகத்தின் ஆன்மிகக் கல்வியில்  அக்கறையுள்ள சிலர் இதற்காக குரல் எழுப்பினர். அழுத்தமாக எழுந்த அக்குரல்களின் காரணமாக 2006ம் ஆண்டு கல்வி அமைச்சால் ஆளணி வெற்றிட தரவுகள் பெறப்பட்டன. 
இலங்கையிலுள்ள முஸ்லிம் பாடசாலைகயில் 635 மவ்லவி ஆசரியர்களுக்கான வெற்றிடம் இருப்பதாக அப்போது பெறப்பட்ட தரவுகளில் குறிப்பிடப்பட்டது. எனினும், இத்தரவுகள் முழுமையற்றது இன்னும் அதிக வெற்றிடங்கள் உள்ளன; பாடசாலை அதிபர்களும் மாகாணக்கல்வித் திணைக்களமும் இதில் கூடிய கவனம் செலுத்தவில்லை என்று அப்போதே விமர்சனங்களும் எழுந்தன.


பெறப்பட்ட தரவுகளில் மவ்லவி ஆசரியர்களுக்கான 635 வெற்றிடங்கள் இருக்க, 2008ம் ஆண்டு 450 பேருக்கு மட்டும் மவ்லவி ஆசிரியர் நியமனம் வழங்கப்படுவதற்காக வர்த்தமாணி அறிவித்தல் வெளியிடப்பட்டது.
மவ்லவி  ஆசிரியர் என்போர் ஆன்மீக வழிகாட்டலைப் போதித்து, மாணவர்களை நேரிய, ஒழுக்க விழுமியம் நிறைந்த பாதைக்கு கொண்டுசெல்லத் தக்கவர்கள். அத்தகையோருக்காக 2010ல் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின்;, பொது அறிவுக் கேள்வி வினாத்தாளில் குறிப்பிட்ட ஒரு சினிமாப் படத்தின் இசையமைப்பாளர் யார்? எனக் கேட்கப்பட்டிருந்தது. இது மவ்லவி  ஆசிரியர் போட்டிப்பரீட்சைக்குப் பொருத்தமாற்ற கேள்வியாகும். இஸ்லாம் மாh;க்கத்தின் விழுமியங்களுக்கு அபகீர்த்தி ஏற்படக் கூடியதாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது.


உலமாக்களுக்கான போட்டிப்பரீட்சை எவ்வாறு அமைய வேண்டும் என்ற விதிகள் எல்லாம் புறக்கணிக்கப்பட்டு, 2010ல் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில்,  சுமார் 3000 பேர்கள் கலந்து கொண்டனர். அவர்களில், 150 பேருக்கு மட்டும் நியமனங்கள் வழங்கப்பட்டன. 


மீதமுள்ள வெற்றிடங்கள் 2010க்குப் பின்னர்; இதுவரை நிரப்பப்படவும் இல்லை. பரீட்சையில் தேறிய ஏனையவர்களுக்கு இதுவரை இந்நியமனமும் வழங்கப்படவில்லை.


முஸ்லிம் சமூகத்தின் வாக்கு வங்கியைப்ப பயன்படுத்தி, மாறிமாறி அதிகாரக் கட்டிலில் அமரும் அரசாங்கத்திடம்  முஸ்லிம் சமூகம் இதுவிடயத்தில் கவனம் செலுத்துமாறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்ற போதிலும், கல்வியமைச்சின் நிலை  செவிடன் காதில் ஊதப்பட்ட சங்கு போன்றே உள்ளது.


நல்லாட்சி அரசாங்கம் என்று தங்களை தாங்களே அழைத்துக் கொண்டு, முஸ்லிம்களின் முக்கிய பங்களிப்போடு அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள், சுமார் 30 மாதங்கள் கடந்தும் இதுவரை இந்த நியமன விடயத்தில் ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நல்லாட்சி அரசாங்கம் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் மவ்லவி ஆசிரியர் நியமனம் வழங்குவதாக உறுதியும் அளித்திருந்தனர்.  

 பல வருடங்களாக தொடர்ந்து இழிபறி  நிலையில் இருந்து வரும் இந்நியமனம் தொடர்பாக கவம் செலுத்திய   பொதுச்சேவை ஆணைக்குழு, அண்மையில் 391 மவ்லவி  ஆசிரியர்களை நியமித்து, வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு கல்வியமைச்சுக்கு அறிவித்துள்ளது. முன்னர் பரீட்சைக்குத் தோற்றிவர்களின் நிலையைப் பற்றியோ, அவர்களுக்கு நியமனம் வழங்குவது பற்றியோ அவர்களின் வயது பற்றியோ எந்தவித நிலைப்பாடும் இன்றி மவ்லவி  ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பான விபரங்களைத் தருமாறு சகல மாகாண சபைகளுக்கும் சுற்று நிருபங்கள் அனுப்பப்பட்டிருந்தன. 


இதற்கமைய வடக்கு, வடமேற்கு, மத்திய, ஊவா மாகாணங்கள் மாத்திரமே விபரங்களை அனுப்பியுள்ளன. கிழக்கு மாகாண சபை உட்பட ஐந்து மாகாணங்கள் இதுநாள்வரை விபரங்களை அனுப்பவில்லை. அதனால், 211 வெற்றிடங்களை நிரப்புவதற்கு எந்தவித ஏற்பாடுகளையும் மேற்கொள்ள முடியாத நிலையில் கல்வியமைச்சு உள்ளது. எனினும்,  குறிப்பிட்ட சில மாகாணங்களில் பெறப்பட்ட விபரங்களின்படி 170 வெற்றிடங்களை நிரப்புவதற்கான போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன என்று அண்மையில் அரசு சார்பான பத்திரிகையில் செய்தி வெளியாகியது.


“2016 இல் கல்வியமைச்சு மேற்கொண்ட ஆளணி மதிப்பீடு பிழையானதாக அமையப்பெற்றதால் நிறைய முரண்பாடுகள் உள்ளன. அத்தோடு, மாகாணக் கல்வித் திணைக்களங்களும், மாகாண சபைகளும் இதுவிடயத்தில் பாராமுகமாக இருப்பதாக குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. 
இதுதொடர்பாக கிழக்கு மாகாணத்தின் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸம் அவர்கள்  தெரிவித்த, பத்திரிகையில் வெளியான பின்வரும் தகவல்கள் அதிர்ச்சியூட்டுவனவாகக் காணப்படுகின்றன. 


“…அன்று மேற்கொள்ளப்பட்ட ஆளணி மதிப்பீடு (Cader Culculation) தவறானதாகவே உள்ளது. கிழக்கில் உள்ள 159000 முஸ்லிம் மாணவர்களுக்கு 93 பேர் எனவும் 138000 இந்து சமய மாணவர்களுக்கு 86 பேர் எனவும் மதிப்பீடு செய்த திணைக்களம் 20 ஆயிரம் பௌத்த மாணவர்களுக்கு 165 பேர் என மதிப்பீடு செய்துள்ளது. 2016ன் இந்த மதிப்பீடு முற்றிலும் பிழையானதாகும்.
இந்தப் பிழையான மதிப்பீட்டை உடனடியாக சரிசெய்யுமாறு வலியுறுத்தி தான் கல்வியமைச்சுக்கு உரிய முறையில் எழுத்து மூலம் அறிவித்தும் கூட இதுவரையில் பிழையைத் திருத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

அவ்வாறானதொரு நிலையில் கல்வியமைச்சின் மவ்லவி  ஆசிரியர் நியமனம் தொடர்பில் விடுக்கப்பட்ட சுற்று நிருபத்துக்கமைய விபரங்களை சமர்ப்பிக்க முடியாத முரண்பாட்டு நிலைமை உருவானதன் காரணமாகவே விபரங்களைத் திரட்டி அனுப்புவதை நாம் தவிர்த்துக் கொண்டோம். இந்த நிலைதான் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் ஏனைய மாகாணங்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கிழக்கு கல்விப் பணிப்பாளரின் இந்தப் பதில், தவறு எங்கு இடம்பெற்றிருக்கின்றது என்பதை வெட்டவெளிச்சமாகக் காட்டுவதாகவே அமைந்துள்ளது. 


கல்வியமைச்சின் அந்த ஆளணி மதிப்பீட்டுக்கமைய விபரங்களை திரட்டப்போனால் கிழக்கிலுள்ள முஸ்லிம், இந்து மத பாடசாலைகளில் வெற்றிடம் என்பதற்குப் பதிலாக மேலதிக ஆசிரியர்கள் இருப்பதாக காணக்கூடியதாக இருக்கும். கல்வியமைச்சு ஆளணி மதிப்பீட்டில் இடம்பெற்றருக்கும் குளறுபடிகளைச் சீர்செய்யாமல் மூடிமறைத்து மவ்லவி  ஆசிரியர் நியமனத்துக்கான விண்ணப்பங்களைக்கோர எடுத்திருக்கும் முடிவு பிழையானதொன்றாகும். ” 


மவ்லவி  ஆசிரியர் நியமன விடயத்தில் பிழை யார் பக்கம் எத்தகைய தவறுகள் இருக்கின்றன என்பது தெளிவாகத் தெரிகின்ற போதும், அவற்றை மூடிமறைத்து, குறிப்பிட்ட மாகாணங்கள் மீது பழியைப்போடும் ஒரு முயற்சியாகவே இதனை நோக்கவேண்டியுள்ளது.


கல்வி அமைச்சு இது விடயத்தில் மிகப்பெரிய அநியாயத்தை செய்துள்ளதால் இது விடயத்தில் ஜனாதிபதி மைத்திரி அவர்கள் தலையிட்டு அனைத்து மாகாணங்களிலும் உள்ள மவ்லவி  ஆசிரிய வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த நாட்டிலுள்ள அனைத்து உலமாக்களும் எதிர்பார்க்கின்றனர். 


மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சியின் போது, சித்திரப் பாடத்திற்குத் தோற்றிய அனைவருக்கும் நியமனம் வழங்கப்பட்டது. ஏனெனில், அப்பாடத்திற்கு இருந்த வெற்றிடம் காரணமாக இம்முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதேபோன்று, பல வருடங்களாக தொடர்ந்து வெற்றிடமுள்ள மவ்லவி ஆசிரியர் வெற்றிடத்தை கல்வி அமைச்சு நிரப்ப ஏன் தயங்குகிறது? 2010ம் ஆண்டு பரீட்சைக்குத் தோற்றிய உலமாக்கள் அனைவருக்கும் நியமனம் வழங்குவதில் ஏன் நல்லாட்சி அரசாங்கம் தயக்கம் காட்டுகிறது?


அத்தோடு, நல்லாட்சி அரசு தாம் முஸ்லிம் சமூகத்திற்கு அளித்த வாக்குறுதிகள் விடயத்தில் உடனடியாக கவனம் செலுத்தி, மீண்டுமொருதடவை முழு நாட்டிற்குமானதொரு, உண்மையான ஆளணி மதிப்பீட்டை மேற்கொண்டு, வெளிப்படைத் தன்மைமிக்க, சரியான தரவுகளைப் பெற்றுக்கொண்டதன் பின்னர், மேலும், வெற்றிடமாகியுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்குமான மவ்லவி  ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கான விண்ணப்பங்களைக் கோர வேண்டும். இது, 2010ம் ஆண்டு பரீட்சைக்குத் தோற்றிய, நியமனத்திற்காக பல வருடங்கள் அமைதியாகக் காத்திருக்கும் அனைவருக்கும் வழங்கிவிட்டு, 


மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பரீட்சை எழுதி, இதுவரை புறக்கணிக்கப்பட்டு வரும் அனைத்து மவ்லவிகளையும் இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் ஒன்றிணைத்து போராடி வருகிறது. இந்த முயற்சியில் இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் அல்ஹாஜ் எம்.அனஸ் ஜேபி அவர்களும் செயலர் மவ்லவி நளீம் ஹாமி அவர்களும்  அவர்களுடம் இணைந்து இந்த உரிமைக்காக  அயராது உழைப்பவர்களும் பாராட்டத்தக்கவர்கள்; நன்றிக்குரியவர்கள்.


எந்தப் பாடத்திற்கு போட்டிப் பரீட்சை நடத்தப்படுகிறதோ, அதற்கு ஏற்றாற்போல் கேள்விகள் அமைவதே பொருத்தமானது. எனவே, மவ்லவி  ஆசிரியர் நியமனத்துக்கான போட்டிப் பரீட்சை நடத்தப்படும் போது, இது, இஸ்லாமிய சமூகத்தின் ஆன்மிக விடயத்துடன் தொடர்புபட்டதாக இருப்பதால், வினாப்பத்திரம்  அதற்கு ஏற்றாற்போல் அமைக்கப்பட வேண்டும் என்பதில் பரீட்சைத் திணைக்களம் கவனம் செலுத்த வேண்டும். 
அத்தோடு, இதுவரை  தொடர்ந்து நடைபெற்றுவரும் அனைத்து தவறுகளையும் நிவர்த்திசெய்து, மவ்லவி  ஆசிரியர் நியமனங்கள் வழங்குவதை துரிதப்படுத்த வேண்டும் என்று முஸ்லிம் சமூகம் எதிர்பாரக்கிறது.
மறுக்கப்பட்டு வரும் மவ்லவி ஆசிரியர் நியமனம். மறுக்கப்பட்டு வரும் மவ்லவி ஆசிரியர் நியமனம். Reviewed by Madawala News on 11/10/2017 12:58:00 AM Rating: 5