Ad Space Available here

தமிழர்கள், முஸ்லிம்களின் பார்வையில் அரசியலமைப்பு சீர்திருத்தம் .


ஆங்கிலத்தில்: எம்.எஸ்.எம். அய்யூப் (டெய்லி மிரர்)
 தமிழில்: ஹஸன் இக்பால் 

“அரசியலமைப்புச் சபையின் வழிநடாத்தல்
குழுவின் இடைக்கால அறிக்கையின் பிரகாரம் அரசியலமைப்பொன்றை அங்கீகரிக்கும் பட்சத்தில் பாராளுமன்றம் குண்டு வைத்துத் தகர்க்கப்பட வேண்டும்” என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச வெளியிட்ட கருத்துக்களால் சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டுள்ளார். பிரதமரும் வழிநடாத்தல் குழுவின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவினால் இடைக்கால அறிக்கையானது செப்டெம்பர் 21 இல் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.


இந்நிலையில், ஏற்கனவே பாராளுமன்றத்தினுள் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புபட்ட அரசியல் கட்சியொன்றின் தலைவர் என்ற வகையில் வீரவன்ச வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் தலைமையிலான ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துக் கொண்ட அறை மீது குண்டு வீசியது வீரவன்சவின் மைத்துனன் என்பதனை பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான அச்சுறுத்தல் கருத்துக்களை தமிழ் அல்லது முஸ்லிம் அரசியல்வாதி ஒருவர் முன்வைத்திருந்தால் குறிப்பாக வீரவன்சவினதும், பொதுவாக சிங்கள தேசியவாதிகளினதும் எதிர் நடவடிக்கைகள் எவ்வாறாக அமைந்திருக்கும்? ஜனநாயகத்தின் குறியீடான பாராளுமன்றத்திற்கு இவ்வகையான அச்சுறுத்தலை தமிழ் அல்லது முஸ்லிம் அரசியல்வாதி ஒருவர் முன்வைத்திருந்தால் சட்டத்தை நிலைநாட்டும் அதிகாரிகள் குறிப்பாக குற்றவியல் புலனாய்வு துறையினரின் பதில் நடவடிக்கைகள் எவ்வாறாக அமைந்திருக்கும்?


இவ்விரண்டு கேள்விகளுக்குமான பதில்களை எவராவது ஊகித்துக் கூற முடியுமா? கூற முடியுமாக இருப்பின், தேசப்பற்றும் நாட்டின் சட்ட ஒழுங்குகளும் அமுல்படுத்தப்படும் விதத்துக்கு அவை சான்று பகர்வதாக அமையும். குறித்த இடைக்கால அறிக்கையின் பிரகாரம் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் பட்சத்தில் பிரிவினைவாத அமைப்புகளுக்கு அது சார்பாக அமைந்து விடும் எனும் முகாந்திரத்தின் அடிப்படையிலேயே வீரவன்ச குறித்த அச்சுறுத்தல் கருத்தை முன்வைத்துள்ளார்.


குண்டு வீச்சு சர்ச்சை ஒருபுறமிருக்க, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற உறுப்பினர் சேர்ப்பு பிரசாரத்தின்போது “மஹிந்த ராஜபக்ஸ அரசு இன்னும் ஓராண்டு ஆட்சியில் நீடித்திருந்தால் திலீபன் போன்ற விடுதலைப் புலிகளின் தலைவர்களின் ஞாபகார்த்த விழாக்களுக்கு அனுமதி வழங்கியிருக்கும்” என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ கூறியிருந்த கருத்துக்கு தேசப்பற்றாளர்கள் என தம்மை அழைத்துக் கொள்ளும் ஒருவர் கூட தமது கரிசனையை வெளியிட்டிருக்கவில்லை.


இடைக்கால அறிக்கை பற்றிய தற்போதைய வாதங்கள் தொடர்பில் குறித்துச் சொல்லக் கூடிய விடயம் என்னவென்றால், இன ரீதியில் இருதரப்பு அடிப்படைவாதிகளும் பொதுவாக புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கும் குறிப்பாக இடைக்கால அறிக்கைக்கும்  ஆதரவளிப்போரை ‘நம்பிக்கை துரோகிகள்’ என கருதுகின்றனர்.


“ஏக்கிய ராஜ்யய” எனும் சிங்கள பதத்தின் நேரடித் தமிழாக்கமான, இதுவரை பயன்பாட்டில் இருக்கும் தமிழ் பதமான “ஒற்றையாட்சி” என்பது “ஒருமித்த நாடு” எனும் தமிழ் பதத்தால் பிரதியீடு செய்யப்பட வேண்டும் எனும் வாதமே சர்ச்சைகளின் அடிநாதமாக அமைந்துள்ளது.


“ஒருமித்த நாடு” எனும் தமிழ் பதத்தினாலும் “ஏக்கிய ராஜ்யய” எனும் சிங்கள பதத்தினாலும் தமிழ் மற்றும் சிங்கள அடிப்படைவாதிகள் இருதரப்பும் தாம் ஏமாற்றப்படுவதாக கருதுகின்றனர்.
அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் மூலம் சிங்களவர்களுக்கு “ஏக்கிய ராஜ்யயவை” (ஒற்றையாட்சி) பெற்றுத் தருவதாக அரசு வாக்களித்துள்ள அதேவேளை , “ஒருமித்த நாடு” என்பதன் மூலம் தமிழர்களுக்கு  சமஷ்டி ஆட்சியை பெற்றுக் கொடுப்பதாக வாக்களிக்கின்றது என  சிங்களவர்கள் வாதிக்கின்றனர்.


சிங்களத்தில் “ஏக்கிய ராஜ்யய” என அழைக்கப்படும் பட்சத்தில் “ஒருமித்த நாடு” எனும் விதந்துரைக்கப்படும் சொற்பதம் மூலம் தாம் ஏமாற்றப்படுவதாக தமிழர்கள் கருதுகின்றனர்.


“ஒருமித்த” எனும் பதம் இரு வேறு பொருள்களை தரக் கூடியது. “பொருட்களின் கூட்டு” என சில சந்தர்ப்பங்களிலும், வேறு சில சந்தர்ப்பங்களில் “ஒருமை” எனவும் பொருள் தரக்கூடியது. இரட்டுற மொழியக் கூடிய “ஒருமித்த” எனும் பதமே அனைத்து வாதங்களுக்கும் அடிப்படையாக திகழ்கிறது.


இடைக்கால அறிக்கை “ஒருமித்த” (அவர்கள் கூறுவது போல்) தொடர்பான கொள்கை, எண்ணக்கருக்களை கொண்டிருக்காத போதும், வாதங்களை தோற்றுவிக்கும் வேறு பல சர்ச்சைக்குரிய உள்ளடக்கங்களை கொண்டுள்ளது என ஒருவர் வாதிக்கலாம். இடைக்கால அறிக்கையின் உள்ளடக்கங்கள் பற்றிய நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பில் இரு தரப்பினரும் கரிசனை செலுத்துவதாக தெரியவில்லை.   நாட்டின் கட்டமைப்பின் பௌதிக மாற்றங்கள் தொடர்பில் ஆராய்ந்து அது தொடர்பில் புதிய அரசியலமைப்பில் சீர்திருத்த பிரேரணைகளை முன்மொழிவதை விடுத்து பல்வேறு மொழிகளில் பல்வேறு பொருள்களை வழங்கக் கூடிய சொற்பதங்களுக்குள் கட்டுண்டு மோதிக் கொள்வது ஏற்புடையதல்ல.

‘அனைத்து தமிழர்களும் தமது இலக்குகளை அடைவதில் ஒன்றுபட்டுள்ளனர்’ என பெரும்பான்மை சிங்களவர்களுக்கு மத்தியில் நிலவும் பொதுவான மனப்பாங்குக்கு மாற்றமாக,  இவ்விவகாரம் தொடர்பில் பிரதான தமிழர் கூட்டணியான தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள்ளேயே இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.


சுய நிர்ணய உரிமை, மாகாணங்களின் இணைப்பு மற்றும் சமஷ்டி முறையிலான ஆட்சி போன்ற தசாப்த கால தமிழர்களின் கோரிக்கைகள்  தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான இணைப்பான தமிழரசுக் கட்சியின் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தவிர்த்து ஏனைய முக்கிய தலைமைகள் நெகிழ்வுப் போக்கையே கொண்டுள்ளனர்.
அரசியலமைப்பு உருவாக்கத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய தமது கோரிக்கைகளையே தாம் வலியுறுத்தி நிற்பதாகவும், எவ்வகையிலும் உருவாக்கச் செயன்முறைகளை மூழ்கடிக்க  தாம் ஒருபோதும் முனையவில்லை என அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் அதன் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரனும் தெரிவித்துள்ளனர்.


 சமஷ்டி முறையிலான ஆட்சியின் மூலம் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு, இனப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும், ஒரே நிர்வாகத்தின் கீழ் செயற்படும் வகையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் எனவும்  தாம் எதிர்பார்ப்பதாக மேலும் கூறியுள்ளனர். “இதுதான் எமது கோரிக்கைகள்; இதில் நாம் வெற்றி பெறுவோமா? இல்லையா? என்பது பற்றி தெரியவில்லை” என சம்பந்தன் கூறியுள்ளார்.


சிங்கள அரசியற் கட்சிகளினால் தீவிரமான அழுத்தங்கள் அரசுக்கு வழங்கப்பட்டு வருகின்ற போதிலும் அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பிலான ஒட்டுமொத்த எண்ணக்கருவில் சம்பந்தன் ஓரளவு திருப்தியான மனநிலையிலேயே இருப்பதாக தோன்றுகிறது.
இலங்கை நாட்டை “ஒருமித்த நாடு” என அடையாளப்படுத்துவதற்கு அரசு முன்வருகின்ற மனப்பாங்கே மிகப் பெரிய ஓர் அடைவாகும் என அண்மையில் தமிழ் பத்திரிகையொன்றுக்கு வழங்கியிருந்த செவ்வியொன்றில் சம்பந்தன் தெரிவித்திருந்தார்.


அரசியலமைப்பில் பௌத்தர்களும் பௌத்தமும் முதன்மைப்படுத்தப்படும் நிலைப்பாடு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் நிபந்தனைகளுடன் கூடிய இசைவை வழங்க தயார்படுத்தப்பட்டுள்ளார்.  பௌத்தம் முதன்மைப்படுத்தப்படுவது தொடர்பிலான அரசியலமைப்பின் சரத்தானது நாட்டிலுள்ள ஏனைய மதங்களின் பாகுபாடற்ற அணுகுமுறையை உறுதிப்படுத்துவதாக அமைதல் வேண்டும் என சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.  மத சார்பற்ற நாட்டை கோரி நிற்கும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் விக்கினேஸ்வரன் போன்ற தனிநபர்கள் போன்ற ஒத்திசைவற்ற குழுக்களினை தவிர்த்து அனைத்து தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளினதும் நிலைப்பாடும் இதுவாகவே காணப்படுகிறது.


தீவிரப்போக்குடைய தமிழர் குழுக்கள் இடைக்கால அறிக்கையை அடியோடு நிராகரித்துள்ளது. சிங்கள பதம் “ஏக்கிய ராஜ்யய” மற்றும் பௌத்த மதத்தினை முன்னிலைப்படுத்தல் முன்மொழிவு என்பன சிங்கள- பௌத்த அரசியல் ஆதிக்கத்தினை தெளிவாக சுட்டி நிற்பதாக விக்கினேஸ்வரன் குறித்துரைத்துள்ளார். இடைக்கால அறிக்கையானது தமிழர்களின் உரிமைகளை மறுப்பதால் அதனை ஆதரிப்பவர்கள் ‘நம்பிக்கைத் துரோகிகள்’ என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர்  தெரிவித்துள்ளனர்.


கட்சிக்கு ஒத்துப் போகாதவர்களை கட்சியை விட்டு நீக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை தவிர்த்து, டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் மிதவாத அரசியல் கட்சியாக திகழ்கிறது. “வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பு தற்போதைய நிலைமைகளில் சாத்தியமில்லை எனும் யதார்த்தத்தை அனைவரும் ஒத்துக் கொண்டேயாக வேண்டும்” என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராசா செவ்வியொன்றில் தமிழர்களுக்கு துணிந்து கருத்துக் கூறியுள்ளார்.


 “இனப் பிரச்சினைக்கான தீர்வு காணும் செயன்முறைகளின்போது அனைத்தும் ‘எமக்கு’ சார்பாக அமைய வேண்டும் என எதிர்பார்ப்பது விவேகமற்ற செயலாகும்” என அரசியலமைப்பு சபையினால் நியமிக்கப்பட்டுள்ள ஆறு உப குழுக்களில் ஒன்றில் உறுப்பினராக இருக்கும் எஸ்.தவராசா இடைக்கால அறிக்கை தொடர்பிலான தமது திருப்தியை வெளிக்காட்டும் வகையில் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார். “விட்டுக் கொடுப்புக்களுடன் மாத்திரமே தீர்வுகள் சாத்தியமாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


நாட்டின் இயல்புநிலை தொடர்பில் முஸ்லிம்கள் அக்கறை செலுத்துவதாக இல்லை. அவர்களின் கரிசனை முழுதும் மத சுதந்திரம் மற்றும் உள்ளூராட்சி சபைகள், மாகாண சபைகள், பாராளுமன்றத்தில் தமது பிரதிநிதித்துவம் குன்றி விடுமோ எனும் அடிப்படையிலான தேர்தலமைப்பு முறை தொடர்பில் மாத்திரமே கட்டுண்டுள்ளது. வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் அவர்கள் பொதுவாக எதிராகவே உள்ளனர். தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லா போன்ற அரசியல்வாதிகள் விடுதலைப் புலிகள் இயக்கம் இயங்கி வந்த காலப்பகுதியிலும்கூட மாகாண இணைப்புக்கு எதிராக தமது கருத்துக்களை வெளியிட்டே வந்தனர்.  


மாகாண இணைப்புக்கு ஆதரவோ எதிர்ப்போ தெரிவிக்காத வகையில் நாட்டின் முதலாவது முஸ்லிம் அரசியல் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸானது, அதன் ஸ்தாபகர் காலஞ்சென்ற எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் வியூகத்தையே பின்பற்றி வருகிறது. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படும் பட்சத்தில் கிழக்கில் முஸ்லிம்களுக்கென்று தனியானதொரு முஸ்லிம் மாகாண சபையொன்று இருக்க வேண்டும் என அக்கட்சி வாதிக்கின்றது. இன்னொரு சிறுபான்மைக்கு மத்தியில் முஸ்லிம்கள் சிறுபான்மையாக இருக்க முடியாது எனும் வாதமே இவற்றின் அடிப்படையாகும்.

  கடந்த வாரங்களில் பௌத்த பிக்குகளின் ஆதரவில் இடைக்கால அறிக்கை தொடர்பிலான எதிர்ப்புக்கள் தெற்கில் அதிகரித்துச் செல்லும் அதேவேளை தமிழர்களின் எதிர்ப்பு குறைந்து செல்வதாக காணப்படுகின்றமை கவனத்தை ஈர்க்கும் அம்சமாக அமைகின்றதல்லவா?

(விடிவெள்ளி 01.11.2017)

தமிழர்கள், முஸ்லிம்களின் பார்வையில் அரசியலமைப்பு சீர்திருத்தம் . தமிழர்கள், முஸ்லிம்களின் பார்வையில்  அரசியலமைப்பு சீர்திருத்தம் . Reviewed by Madawala News on 11/02/2017 04:33:00 PM Rating: 5