Kidny

Kidny

கிந்தோட்டையின் தற்போதைய நிலவரங்களை கண்டறிவதற்காக NFGG மேற்கொண்ட கள விஜயம்!


காலி-கிந்தோட்டை பகுதிக்கான களவிஜயம் ஒன்றினை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG)  பிரதிநிதிகள் இன்று (26.11.2017) மேற்கொண்டனர். கிந்தோட்டை வன்முறைகளுக்குப் பின்னரான நிலவரங்களை நேரில் கண்டறியுமுகமாகவே இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 17ம் திகதி  மாலை நடந்த வன்முறைகள் நடந்த வேளை ஜெனிவாவில் தங்கியிருந்த NFGG தவிசாளர் அன்றைய தினமே இது தொடர்பாக உரிய சர்வதேச சமூகப்பிரதிநிதிகளின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார். அத்தோடு , மறுநாள் காலை (18ம் திகதி) NFGGயின் தலைமைத்துவ சபை பிரதிநிதி முஜீப் ரஹ்மான் கிந்தோட்டை பகுதிக்கு உடனடி விஜயம் செய்திருந்ததுடன் ஒரு அறிக்கையினையும் NFGG தலைமைத்துவ சபைக்கு சமர்ப்பித்திருந்தார். இந்தப் பின்னணியிலேயே இன்றைய விஜயம் மேற்கொள்ளப்பட்டது. இதில், NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், அதன் தேசிய அமைப்பாளர் MBM பிர்தௌஸ்  உள்ளிட்ட NFGG யின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

கிந்தோட்டை கலவரத்தின் பின்னர் விடயங்களை கையாள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள விசேட குழுவினரை சந்தித்த NFGG பிரதிநிதிகள் தற்போதைய நிலவரங்கள் பற்றி விரிவாக கலந்துரையாடினர். நடந்து முடிந்த வன்முறைகள் தொடர்பான மதிப்பீடுகளைச் செய்வதற்காக அப்பிரதேசத்திற்கு வருகை தந்திருந்த VOICES அமைப்பின் பிரதிநிதிகளும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.


பொலிஸ் முறைப்பாடுகள் அதனோடு தொடர்புபட்ட சட்ட நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக பேசப்பட்டது. அத்தோடு சேத விபரங்களை ஆவணப்படுத்தல் மற்றும் உரிய அரசியல் நிர்வாகிகளிடம் அறிக்கையிடுதல் என்பன தொடர்பாகவும் ஆராயப்பட்டது. அளுத்கம வன்முறைகளைத் தொடர்ந்து NFGG யினால் வெளியிடப்பட்ட முழுமையான அறிக்கை போன்ற ஒன்று கிந்தோட்டை விடயத்திலும் அவசியம் என்பதனை NFGG பிரதிநிதிகள் வலியுறுத்தியதுடன் அவ்வாறானதொரு நடவடிக்கைளை மேற்கொள்வதற்கு NFGG தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

அது தொடர்பில் தாம் ஏற்கனவே கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவித்த VOICES அமைப்பினர் அவ்வாறான அறிக்கையினை தயாரிக்கும் பணியினை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தனர். அவர்களின் முயற்சியினை வரவேற்ற NFGG குழுவினர் அதற்காக நன்றியும் தெரிவித்தனர்.

பெரும்பான்மை சமூகத்தோடு முஸ்லிம் சமூகம் பிணைந்து வாழும் இப்பிரதேசத்தில் இனவாத கருத்துக்களை வளர்க்கும் தீய சக்திகளை புறந்தள்ளி தனிமைப்படுத்தும் வகையில் இரண்டு சமூகங்களையும் மையப்படுத்திய நல்லிணக்க வேலைத்திட்டம் ஒன்றினை ஆரம்பிப்பதன் அவசியத்தையும் NFGG குழுவினர்  வலியுறுத்தினர்.

இக்கலந்துரையாடலைத் தொடர்ந்து வன்முறைகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளை NFGG  பிரதிநிதிகள் நேரில் சென்று பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட மக்களுடனும் நேரில் கலந்துரையாடினர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பொது மக்கள்,

'பாதுகாப்பிற்குப் பொறுப்பானவர்கள் தமது கடமைகளை உரிய முறையில் செய்திருந்தால் இந்த அனர்த்தத்தை தவிர்திருக்கலாம். பாதுகாப்பிற்கு பொறுப்பானவர்கள் முன்னிலையில் வன்முறையாளர்கள் மிக சுதந்திரமாக நடமாடியதை நாங்கள் கண்டோம்.

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் நிலையில்தான் எங்களது சொத்துக்களை கொள்ளையிட்டிருக்கிறார்கள். இதற்கு பாதுகாப்பிற்கு பொறுப்பானவர்களே பதில் சொல்ல வேண்டும். அரசாங்கமே இதற்கான முழப்பொறுப்புக்களையும் ஏற்றுக் கொள்ளவேண்டும்' எனத் தெரிவித்தனர்.

மேலும் கருத்துத் தெரிவித்த ஒரு பிரதேசவாதி 'எமது வீட்டைத் தாக்கி எமது வீட்டிற்கும் வாகனத்திற்கும் தீமூட்டியவர்களை அடையாளம் கண்டு பொலிஸில் உரிய முறைப்பாடுகளை செய்திருந்த போதிலும் அவரை பொலிஸார் இன்னும் கைது செய்யவில்லை' என்பதையும் சுட்டிக்காட்டினார்.

வன்முறைகளுக்கு காரணமானவர்களை கைது செய்வதில் காட்டப்படும் அசமந்தம் தொடர்பில் தாம் பொலிஸ்மா அதிபரிடம் முறையிடுவோம் என NFGG  பாதிக்கப்பட்ட மக்களிடம் உறுதியளித்தது.

இந்தக் கலந்துரையாடலில் விசேட அனர்த்த முகாமைத்துவ குழு   சார்பாக  AM.  சபீக், MIM.இப்றாஸ்,  MKM.றஸ்மி, JM.ஹிப்ஸி,MM. றதீப். MAM.பாஸி, அகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த விஜயத்தின் போது NFGG யின் செயற்குழு உறுப்பினர்களான AM. பைஸர்,UM. றபீக்,MLM. சுஹைல் ஆசிரியர் ,SM.பஸ்மின்,   A.சைபுதீன், ALM.ஹில்மி,AM.பர்ஸாத் மற்றும் 'அவதானி' இணையத்தள செய்தியாசிரியர் MSA. மஜீத் (மதியன்பன்) ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கிந்தோட்டையின் தற்போதைய நிலவரங்களை கண்டறிவதற்காக NFGG மேற்கொண்ட கள விஜயம்! கிந்தோட்டையின் தற்போதைய நிலவரங்களை கண்டறிவதற்காக NFGG மேற்கொண்ட கள விஜயம்! Reviewed by Madawala News on 11/27/2017 12:01:00 PM Rating: 5