Kidny

Kidny

சர்வதேச தீவிரவாத அச்சுறுத்தல்கள் இலங்கைக்கு இல்லை – சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவிடம் சில கேள்விகள்.சமகால அரசியல் மற்றும் பொலிஸ் பிரிவு தொடர்பிலான மறுசீரமைப்பு திட்டங்கள், உள்நாட்டு வழக்கு விவகாரங்களில்
ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார். 2020 ஆம் ஆண்டு வரை அரசாங்கம் சேவையாற்றும் என்பதில் துளியளவு சந்தேகமுமில்லை என பிரதமர் பணியாட்தொகுதியின் தலைமை அதிகாரியும் அமைச்சருமான சாகல ரத்னாயக்க மேலும் தெரிவித்துள்ளார். அமைச்சர் சாகல ரத்னாயக உடனான செவ்வியின் சாராம்சத்தை தொகுத்து வழங்கியுள்ளோம். 

கேள்வி: சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுதல் எனும் முகாந்திரத்தில் தற்போதைய அரசாங்கத்தின் அடைவுகளை எவ்வாறு பார்க்கிறீர்கள்?


பதில்: நாம் நாட்டில் பல முன்னேற்றங்களை மேற்கொண்டுள்ளோம். யுத்தம் நிறைவுபெற்று விட்டது. இப்போதுள்ள அரசாங்கம் யுத்தத்தை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தமற்ற அரசாகும். எனவே, தற்போதைய சூழ்நிலையின் பிரகாரம் இராணுவத்தின் முக்கியத்துவம் குறைந்து பொலிஸ் பாதுகாப்புத் துறையின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.  முன்னைய ஆட்சி பொலிஸ் பிரிவில் அபிவிருத்திகளை மேற்கொள்ளவில்லை. அதனால் எமக்கு சற்று கால அவகாசம் தேவைப்பட்டது. நாட்டில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதில் பொலிஸ் பிரிவு காத்திரமான வகிபாகத்தை ஆற்றுவதால் பொலிஸ் பிரிவில் முன்னேற்றங்களை மேற்கொள்ள நாம் ஆரம்பித்துள்ளோம்.

இவ்விடயத்தில் நாம் காத்திரமாக பணியாற்றியுள்ளோம். எனினும், அவை பெரிதாக வெளிக்கொண்டு வரப்படவில்லை.

ஊடகங்களை பொறுத்தவரை சுயாதீனமாக தற்போது அவை இயங்குகின்றன. யாரும் எதனையும் தெரிவிக்கலாம். தொழில்நுட்பங்களும் அவற்றுக்கு துணை போகின்றன. எவரும் ஒரு காட்சியை படம்பிடித்து சமூக ஊடகங்களில் பகிரலாம். சமூக ஊடகங்களைப் பொறுத்தவரை ஊடக தர்மங்கள் என்று எதுவும் கிடையாது.

அரசாங்கத்துக்கு களங்கம் கற்பிக்கும் விடயங்கள் மற்றும் அரசாங்கத்தின் குறைபாடுகள் என ஊடகங்கள் அத்தனையையும் வெளிக்காட்டி வருகின்றன. எதனையும் சுயாதீனமாக தெரிவிப்பதற்கு நாம் அனுமதியளித்துள்ளோம்.
நாம் எமக்கென்று ஊடக பிரசாரப் பணிகளில் ஈடுபடவில்லை. அதுதான் எமது பலவீனம். நாம் சாதித்தவற்றை மக்கள் மத்தியில் தெரிவிப்பதற்கென போதிய ஊடக பிரசாரங்களில் நாம் ஈடுபடவில்லை.

பொலிஸ் நடவடிக்கைகளில் நான் நேரடியாக தலையிடுவதில்லை. நான் வழிப்படுத்தல் பணியை மாத்திரமே செய்கிறேன். மக்கள் என்னிடம் கேள்விகளை எழுப்பினால், சூழ்நிலை தொடர்பில் நான் பொலிசாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வேன்.

 ‘நான் நியாயமற்ற வகையில் நடாத்தப்பட்டுள்ளேன்’ என யாரேனும் தெரிவித்தால், அது பற்றியும் பொலிசாரிடம் கேட்டு தெரிந்துகொள்வேன். அதற்கான காரணம் பொலிசாரிடம் இருந்து கிடைக்கப் பெற்றால் அத்தோடு விடயம் முடிந்து விடும். யாரேனும் நியாயமற்ற வகையில் நடாத்தப்படுகிறார்கள் என நான் உணர்ந்தால், அது தொடர்பில் மறுபரிசீலனை செய்யுமாறு பொலிசாரிடம் தெரிவிப்பேன். குறித்த விடயம் சரியான முறையில் கையாளப்பட்டுள்ளதா என உயரதிகாரி ஒருவரை ஆராயுமாறு பணிப்பேன். பொதுமக்களை சந்திக்கும் நாள் ஒன்றில் மக்கள் குறைகள் கேட்கப்படும். அல்லது குறித்த ஒரு பிரச்சினை தொடர்பில் தொலைபேசி மூலம் என்னிடம் தெரிவிக்கப்பட்டால், அதன் ஆதாரத்தன்மை அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.


பொதுமக்களை சந்திக்கவென இரண்டு நாட்களை ஒதுக்கியுள்ளேன். ஒருநாள் பொலிஸ் அதிகாரிகளின் முறைப்பாடுகளை ஆராயவும், மற்றொரு நாள் பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் மக்களின் முறைப்பாடுகளை ஆராயவும் ஒதுக்கப்பட்டுள்ளன.


பொலிஸ் அதிகாரிகளின் ஊதியம் 40 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 24 மணிநேரமும் கடமையாற்றும் பொலிசார்களும் உள்ளனர். அவர்களுக்கென்று மேலதிக நேர ஊதியமோ, ஒழுங்கான விடுமுறை நாட்களோ இல்லை. இடமாற்றல் மற்றும் பதவியுயர்வு தொடர்பில் புதிய கொள்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. பொலிசாரின் சேவைகள் சுயாதீனமாக, எவ்வித அழுத்தங்களும் இன்றி இடம்பெற வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.


கேள்வி: பொலிஸ் துறையை மறுசீரமைக்கும் திட்டங்கள் பற்றி கூறுங்கள்?


பதில்: தொழில்முறை ரீதியான மறுசீரமைப்பு திட்டங்கள் பற்றி முன்னெடுப்புக்களை ஆரம்பித்துள்ளோம். வட அயர்லாந்து பொலிஸ் தலைமை அதிகாரி சேர் ஹியூக் ஒர்டேயின் ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன. அயர்லாந்தில் கிளர்ச்சிகள் ஏற்பட்டபோது  பொலிஸ் மறுசீரமைப்பு பணிகளை சிறப்பாக மேற்கொண்டவர்.    இலங்கை பொலிஸ் பிரிவின் மறுசீரமைப்பு தொடர்பில் அவருக்கு அதிகாரமளித்துள்ளோம். நீண்டகால செயன்முறைகளைக் கொண்ட தனது முதல் அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.

கேள்வி: நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவின் சட்ட ரீதியான தன்மை தொடர்பில் முன்னதாக கேள்வி எழுப்பப்பட்டது.   அதனையடுத்து, பிரித்தானிய முறைமையிலான மோசடி விசாரணைக்குழுவொன்று நிறுவப்படும் என பிரதமர் தெரிவித்திருந்தார். அதன் வளர்ச்சி படிமுறைகள் எவ்வாறுள்ளது?


பதில்: நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவின் சட்ட ரீதியான தன்மை தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்ட தருணம் உயர் நீதிமன்றம் நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவுக்கு சாதகமாகவே தீர்ப்பளித்தது. அது தொடர்பில் மேலதிக பிரச்சினைகள் எதுவுமில்லை. அதன் சட்டக அமைப்பு தொடர்பில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தீவிரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பான பணிகள் முதலில் நிறைவு செய்யப்பட வேண்டும். பின்னர் பொலிஸ் பல்கலைக்கழகம் தொடர்பான சட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்ட வேண்டும். அடுத்த வருடம் பெப்ரவரி மாதமளவில் இவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அதன் பின்னரே பிரித்தானிய முறைமையிலான மோசடி விசாரணைக் குழு தொடர்பில் அமைச்சரவையில் மாதிரி வரைவுகளை சமர்ப்பிக்க உள்ளோம்.

கேள்வி:  அறிமுகப்படுத்தப்படவிருக்கும் தீவிரவாத எதிர்ப்புச் சட்டம் தற்போது நடைமுறையிலிருக்கும்  தீவிரவாத தடுப்பு சட்டத்திலிருந்து எவ்வகையில் வேறுபடுகின்றது?


பதில்: தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டம் விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. உள்நாட்டு பயங்கரவாதம் தொடர்பில் அச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.  சர்வதேச பயங்கரவாதம் மற்றும் அவை இலங்கையை பாதிக்கும் சாத்தியப்பாடுகள் தொடர்பிலான சட்டம் ஒன்றின் தேவையே தற்போது நிலவுகின்றது. எனினும், உள்நாட்டு பயங்கரவாதங்கள் மீண்டும் தலைதூக்குவதற்கான சாத்தியப்பாடுகளையும் தடுக்கும் வகையில் அச்சட்டம் இருக்க வேண்டும். இது தொடர்பில் மனித உரிமைகள் அமைப்புக்கள் போலவே நாமும் கரிசனைகளைக் கொண்டுள்ளோம்.


கேள்வி: இலங்கை பிரஜைகள் சிலர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இணைந்துள்ளனர் என தெரிவிக்கப்படும் கருத்துக்களின் அடிப்படையில் சர்வதேச தீவிரவாதத்தின் அச்சுறுத்தல் எந்தளவு பாரதூரமாகியுள்ளது?


பதில்: சர்வதேச தீவிரவாதம் தொடர்பில் அந்தளவு பாரதூரமான அச்சுறுத்தல்கள் நிலவுவதாக நான் கருதவில்லை. எனினும் தயார்படுத்தல்கள் என்பன ஒரு நாட்டுக்கு இன்றியமையாதவை. இது தொடர்பில் பொலிசார் விழிப்புடன் இருக்க வேண்டும். நாம் தனியாக இயங்கவில்லை. குடிவரவு, குடியகழ்வு திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்களம் போன்ற எல்லைப் பாதுகாப்பு முகவரகங்களுடன் கூட்டிணைந்து இயங்கி வருகின்றோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகரிக்கும் திட்டங்கள் எம்மிடம் உண்டு. பாரிய அச்சுறுத்தல்களை நாம் எதிர்வுகூறவில்லை எனினும், விழிப்புணர்வுடன் இருப்பதே சிறந்தது.

கேள்வி:  தீவிரவாத நடவடிக்கைகளுக்கான அறிகுறிகள் இனங்காணப்பட்டுள்ளனவா?


பதில்: தீவிரவாத நடவடிக்கை என நாம் அஞ்சுமளவுக்கு அறிகுறிகள் எதுவும் இனங்காணப்படவில்லை.

கேள்வி:  ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழக்குகள் முறையாக முன்னெடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியின் போதும் ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார். இந்த விமர்சனத்தை நீங்கள் எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்?


பதில்: ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் குறித்துச் சொல்லக் கூடிய அளவு முன்னேற்றங்கள் காணப்படுகின்றன. இது தொடர்பில் கையாள்வதற்கு பொலிஸ் துறையில் இரு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவு 92 கோப்புக்களை சட்டமா அதிபருக்கு சமர்ப்பித்துள்ளது. அவற்றில் 13 குற்றங்களுக்கு எதிராக குற்றத் தாக்கல் பதிவு செய்துள்ளோம். அவற்றில் ஒன்றுக்கு தண்டனை விதிக்கப்பட்டும் உள்ளது. இவை சிக்கலான வழக்குகள். நாட்டின் சட்ட ரீதியான எல்லைகளைக் கடந்த, இரு வேறு நாடுகள் தொடர்புபட்ட குற்றச்சாட்டுக்கள் ஆகும். இரு நாடுகளினதும் பரஸ்பர சட்ட ரீதியான ஒப்புதல்கள் பெறப்பட வேண்டும். இதற்கு நீண்ட காலம் எடுக்கும்.  நீண்ட காலத்திற்கு முன்னர் திகதியிடப்பட்ட வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. பெரும்பாலான வங்கிகள் முன்னைய தமது தரவுத்தளங்களை மீள்பார்வை செய்து தகவல்களை எமக்கு சமர்ப்பிக்க வேண்டிய தேவையுள்ளது.

சட்ட ரீதியான பல செயன்முறைகளின் ஊடாகவே இவற்றை பெற்றுக்கொள்ள முடியும். இவை அனைத்தும் சட்டமா அதிபரினால் மேற்கொள்ளப்படுவதற்கு நீண்ட கால அவகாசம் தேவைப்படும். இலங்கையில் நடைமுறையில் இருக்கும் நீதிப் பொறிமுறைகளின் பிரகாரம் நிதியியல் குற்றவியல் தொடர்பில் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு 8 முதல் 10 வருடங்கள் ஆகின்றன.

கேள்வி: நிதி குற்றவியல் தொடர்பில் எவ்வாறான சவால்களை நீங்கள் எதிர்நோக்குகின்றீர்கள்?


பதில்: பொதுவாக இவ்வகை குற்றச்சாட்டுக்கள் நாட்டின் சட்ட ரீதியான எல்லைகளைக் கடந்த இரு வேறு நாடுகள் தொடர்புபட்ட குற்றச்சாட்டுக்கள் ஆகும். இரு நாடுகளினதும் பரஸ்பர ஒப்புதல்கள் இன்றி தீர்ப்பு வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட முடியாது.  

கேள்வி: லிட்ரோ கேஸ் தலைவர் சலீல முனசிங்க தொடர்புபட்ட நிதியியல் குற்றச்சாட்டுக்களிலும் இவ்வகையான சவால்களை நீங்கள் எதிர்கொள்கிறீர்களா?

பதில்: அவை பாரிய சவால் மிகுந்த வழக்குகள் ஆகும். தாய்வான் வங்கியும் கடினங்களை எதிர்நோக்குகின்றன.

கேள்வி: அவ்வழக்கு தொடர்பிலான முன்னேற்றங்கள் எவ்வாறு உள்ளன?
பதில்: மன்னிக்கவும். அவ்வழக்கு தொடர்பில் விபரமான கலந்துரையாடல்களை என்னால் மேற்கொள்ள முடியாது. அது தொடர்பில் நீதிமன்றத்தில் ஏதேனும் தெரிவிக்கப்பட்டால் அவற்றை உங்களுக்கு கூற முடியும். அதை தவிர்த்து என்னால் மேலதிக தகவல்களை வழங்க முடியாது. நடைபெற்றுக் கொண்டிருக்கும் விசாரணையை அவை பாதிக்கக் கூடும்.
அதேநேரம் குற்றப்புலனாய்வுப் பிரிவும் சில வழக்குகளை கையாள்கின்றது. 38 விஷேட வழக்குகளை அவர்கள் கையாண்டுள்ளனர். அவற்றில் 8 வழக்குகள் தொடர்பில் நாம் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகிறோம். சட்டமா அதிபரிடம் ஏற்கனவே 17 வழக்குகளை சமர்ப்பித்துள்ளோம். அவற்றில் இரண்டு வழக்குகளுக்கு சட்டமா அதிபர் தீர்ப்பு வழங்கத் தயாராக உள்ளார்.

மேலும் 11 வழக்குகள் நீதிமன்றில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவை எம்மளவில் பாரிய முன்னேற்றங்களாகும்.
குற்றப்புலனாய்வுப் பிரிவினால் கையாளப்படும் வழக்குகளில் சில ஊடகவியலாளர்கள் சம்பந்தப்பட்டவை. ஆட்சி மாற்றத்தின்போது அவற்றில் பல குற்றங்களின் முதல் பதிவுகள் மற்றும் ஆதாரங்கள் அழிக்கப்பட்டு விட்டன. ஆதாரங்கள் அனைத்தும் மீள சேகரிக்கப்பட வேண்டிய தேவை எமக்குள்ளது. பூச்சியத்திலிருந்துதான் நாம் ஆரம்பிக்க வேண்டியுள்ளது. அவற்றில் பாரிய தூரத்தை நாம் கடந்துள்ளோம்.


கீத் நொயாஹர் வழக்கு விவகாரத்தில் மையப் புள்ளியை அண்மித்துள்ளோம். எக்நெலிகொட வழக்கு விவகாரத்தில் கடத்தல் விடயம் வரை வந்துள்ளோம். சடலம் கிடைக்கப்பெற்றால் கொலையாளிக்கு எதிராக குற்றத்தாக்கல் செய்யப்பட முடியும்.


 லசந்த விக்ரமதுங்க விவகாரம் தொடர்பில் என்ன நடந்துள்ளது என்பது பற்றி நாம் அறிவோம். 6 தொலைபேசி அழைப்புக்களின் உரிமையாளர்கள் தொடர்பில் கண்டறிந்தால் அவ்வழக்கு தீர்வுக்கு வந்து விடும்.

கேள்வி: முன்னர் ஊழல் ஒழிப்பு செயலகம், முறைப்பாடுகளை நிதி குற்றவியல் விசாரணை பிரிவிடம் கையளித்தது. பொலிஸ்மா அதிபர் ஊடாக தற்போது கையளிக்கப்படுகிறது. அந்நடைமுறை  கைவிடப்பட்டதன் காரணம்?  
பதில்: ஊழல் ஒழிப்பு செயலகமானது, சட்டம் ஒழுங்குகள் அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் உட்பட்டதல்ல. அது ஓர் சுயாதீன அமைப்பாக இயங்கி வந்தது. முறைப்பாடுகளின் உட்பாய்ச்சல் அதிகரித்த போது தற்காலிகமாக அவ்வமைப்பு நிறுவப்பட்டது. அதன் பதவிக்காலம் நான்கு முறைகள் நீடிக்கப்பட்டது. எனினும், பின்னர் முறைப்பாடுகளின் உட்பாய்ச்சல் வழமைக்குத் திரும்பியதும் அதன் தேவைப்பாடுகள் குறைந்தமையால் ஊழல் ஒழிப்புச் செயலகம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. தற்போது குற்றப் புலனாய்வு பிரிவு காத்திரமாக இயங்கி வருகின்றது.

கேள்வி: அரசியல் காரணங்களின் அடிப்படையில் பொலிஸ்மா அதிபரினால் வழக்குகள் முன்னுரிமைப்படுத்தப்படுவதாக  கருத்து நிலவுகின்றது. அவ்வாறு நடைபெறுவதற்கு சாத்தியங்கள் உண்டா?


பதில்: அவ்வாறில்லை. குற்றப் புலனாய்வு பிரிவில் அதற்கென்று சில முறைமைகள் உள்ளன. குறித்த வழக்குகளில் குற்றவியல் நடத்தை இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவ்வழக்குகள் பொலிஸ் பிரிவிற்கு கைமாற்றப்படும். குற்றவியல் நடத்தை இருந்தும், வழக்கின் கனதி குறைவாக காணப்பட்டாலும் குறித்த வழக்கு பொலிஸ் பிரிவிற்கு கைமாற்றப்படும். இவ்வாறான கட்டமைப்பின் அடிப்படையிலேயே இயங்குகின்றது.

கேள்வி: குறிப்பிட்ட சில வழக்குகளை துரிதப்படுத்துமாறு உங்களுக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகிறதா?


பதில்: முன்னைய ஆட்சி காலத்தின் போது இடம்பெற்றிருந்த ஊழல் வழக்குகள் தொடர்பில் விரைவாக தீர்ப்புக்களைப் பெறுவதில் அனைவரும் ஆர்வமாகவே உள்ளனர்.  குறித்த ஊழல் வழக்குகள் தொடர்பில் துரித விசாரணைகளை நடாத்தி, சட்டத்தின் முன் குற்றவாளிகளை நிறுத்துவோம் என வாக்களித்தே நாம் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டோம். எனினும், ஒழுங்குவிதிகளுக்கு அமைவாகவே நாம் செயற்பட வேண்டும். முன்னைய ஆட்சியாளர்கள் சரத் பொன்சேகாவுக்கு செய்ததைப் போன்று எம்மால் செய்ய முடியாது. ஒழுங்குவிதிகளுக்கு உட்பட்டே செயற்படுவோம் என மக்களுக்கு நாம் வாக்களித்துள்ளோம். சாமான்ய மக்களுக்கும் பெரும் புள்ளிகளுக்கும் சட்டம் ஒன்றுதான். அரசியல் இலாபங்களைக் கருத்திற்கொண்டு மக்கள் பலவாறாக பேசலாம். ஆனால், பெரும் புள்ளிகள், சாமான்யமானோர் என நாம் பிரித்துப் பார்ப்பதில்லை என உறுதியாக கூறுகிறேன்.

கேள்வி: பிணைமுறி ஆணைக்குழுவை நியமித்தமை தொடர்பில் சில ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர்களினால் தாம் அழுத்தங்களுக்கு உள்ளாவதாக அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இது குறித்து உங்களது கருத்து என்ன?


பதில்: உண்மையை சொல்லப் போனால் ஜனாதிபதி அவ்வாறு கூறியிருப்பது தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது. எனினும், எமக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் வலுவான உறவுகள் இருக்கின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் என்னை எடுத்துக் கொண்டால் நாம் அனைவரும் அரசியல்வாதிகள். குறித்தவொரு அரசியல் கோணத்தில் நாம் அவ்வாறான கருத்துக்களை வெளியிடத்தான் செய்கிறோம். எனினும், எமக்கிடையில் தொழில்முறை உறவு வலுவாகவே உள்ளது. நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் தேசிய அரசு காத்திரமாகவே உழைத்துள்ளது. நாட்டின் உறுதிப்பாட்டை மீளக் கட்டமைத்துள்ளோம். சிறந்த கலந்துரையாடல்களை நாம் மேற்கொண்டுள்ளோம். சிலர் அதனை எதிர் வாதம் என்றும் கூறலாம். எனினும், நாட்டின் முன்னேற்றத்திற்கு அவை அவசியம்.

கேள்வி:  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையிலான உறவுகள் எவ்வாறுள்ளன?

பதில்: தேசிய அரசானது 2020 ஆம் ஆண்டு வரை தொடரும் என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். 2020 ஆம் ஆண்டையும் தாண்டி தேசிய அரசானது நீடிக்குமாயின் அது நாட்டுக்கு நலன் பயப்பதாகவே அமையும். எனினும், அவ்வாறு நடைபெறக் கூடாதென விரும்புபவர்களும் கண்டிப்பாக இருக்கவே செய்கின்றனர். தேர்தல் காலங்களில் தீர்மானிக்கப்படும் இறுதி முடிவுகள் குறித்து இப்போதே எதிர்வுகூறவும் முடியாது.

கேள்வி: அண்மைக்காலமாக பாதாள உலகின் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாக கருத்து நிலவுகின்றது. குறிப்பாக புதிய அரசு ஆட்சிக்கு வந்த பிறகே பாதாள உலக குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அரசின் ஆதரவிலேயே பாதாள உலகின் குற்றச்செயல்கள் இடம்பெறுகின்றன எனும் விமர்சனம் தொடர்பில் என்ன கூற விரும்புகிறீர்கள்?


பதில்: கண்டிப்பாக அவ்வாறில்லை. முன்னைய ஆட்சியின் போதே அவ்வாறு நிகழ்ந்தது. தமது அரசியல் ரீதியான பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முன்னைய அரசில் இருந்தவர்கள் பாதாள உலகையே நாடினர். அரசுப் பொறிமுறையினால் சாதிக்க முடியாதவற்றை பாதாள உலகினரை வைத்து சாதித்துக் கொண்டனர். நாம் அவ்வாறில்லை. நாம் பாதாள உலகை ஆதரிக்கவுமில்லை.


திட்டமிட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிராக நாம் போர் தொடுத்துள்ளோம். அதற்கென பிரத்தியேக குழுவை உருவாக்கி செயற்பட்டு வருகிறோம். பொலிஸ் துறையில் இருக்கும் உயர்ந்த பிரிவு இதுவாகும். சிறப்பு அதிரடிப் படையின் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரினால் இக்குழு வழிநடாத்தப்படுகிறது. கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பில் பாரியளவு முன்னேற்றங்களை கண்டுள்ளோம்.


பாதாள உலகினரின் தலைவர்கள் அல்லது பெரும் தலைகள் என அறியப்படுவோர் பலரை இனங்கண்டுள்ளோம். பலர் வெளிநாடுகளில் இருந்து கொண்டே இயங்குகின்றனர். உள்நாட்டில் வசிக்கும் ஓரிரு தலைமைகளும் உண்டு. அவர்களை நாம் பெருமளவு நெருங்கி விட்டோம். மத்திய கிழக்கில் இரண்டு பாதாள உலக பெரும் தலைகள் இருக்கின்றனர். மத்திய கிழக்கு அதிகாரிகள் அவர்களை கைது செய்வதற்கு உதவி செய்து வருகின்றனர். வெகு விரைவில் அவர்களை அந்நாடுகளில் இருந்து வெளியேற்றி கைது செய்து கொண்டு வருவோம்.

கேள்வி: பாதாள உலகினரை கைது செய்வதில் எதிர்கொள்கின்ற பிரதான இடர்பாடுகள் எவை?


பதில்: அவர்கள் போக்கு காட்டி வருகின்றனர். பெருமளவிலான பண பின்புலங்களை அவர்கள் கொண்டுள்ளனர். இவ்வாறாக பல்வேறு தடைக்கற்களை நாம் உடைத்தாக வேண்டியுள்ளது. மக்களுக்கு பணம் வழங்கி உண்மைகளை மூடி மறைத்து வருகின்றனர். இதனால் எமது சாதாரண பொலிஸ் நடவடிக்கைகளை விட இவர்களது விடயத்தில் துப்பறியும் செயன்முறை வெகுவாக தாமதமாகின்றது.

கேள்வி: அண்மையில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெற்கில் ஒரு பாதாள உலக குழுவினர் இயங்கி வருவதாக தெரிவித்திருந்தார். அது பற்றி என்ன கூறுகிறீர்கள்?


பதில்: அது தொடர்பில் நாம் தீவிரமாக விசாரித்து வருகிறோம். கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். பாதாள உலக குழுக்களை அழிப்பது துரிதமாக நடந்து முடியும் ஒரு விடயமல்ல.   அவர்கள் எப்போது விரும்புகிறார்களோ அப்போதே அவர்கள் கைதாகின்றனர். அங்கே அவர்களுக்கு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடும் கிடைக்கிறது. சிறைச்சாலை முறைமையிலும் ஊழல்கள் நிலவுகின்றன. போதைப் பொருட்கள் கடத்தல் மூலமே அவர்கள் பணம் சம்பாதிக்கின்றனர்.

கேள்வி: பாதாள உலக குழுவினருக்கு ஆதரவளிக்கும் ஆளும் அரசாங்கத்தின் அரசியல்வாதிகளை உங்களால் வெளியேற்ற முடியுமா?

பதில்: அவ்வாறு யாராவது இருந்தார்கள் என்றால் அவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர். அதற்கு நான் உத்தரவாதமளிக்க முடியும்.

கேள்வி: புதியதொரு பிரதமர் நியமிக்கப்படுவார் என சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்படுகிறது. பிரதமரின் பணியாட்தொகுதியின் தலைமை அதிகாரி என்ற வகையில் உங்களது பதில் என்ன?

பதில்: இது உண்மைக்குப் புறம்பானதாகும். புதிய பிரதமர் நியமனம் தொடர்பில் எவ்வித கலந்துரையாடல்களும் இல்லை. அது வெறும் வதந்தி ஆகும்.
(டெய்லிமிரர்)
தமிழில்: ஹஸன் இக்பால் 

(விடிவெள்ளி 21.11.2017)

சர்வதேச தீவிரவாத அச்சுறுத்தல்கள் இலங்கைக்கு இல்லை – சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவிடம் சில கேள்விகள். சர்வதேச தீவிரவாத அச்சுறுத்தல்கள் இலங்கைக்கு இல்லை  – சட்டம் ஒழுங்கு அமைச்சர்  சாகல ரத்நாயக்கவிடம் சில கேள்விகள். Reviewed by Madawala News on 11/22/2017 05:31:00 PM Rating: 5