Ad Space Available here

சாய்ந்தமருதின் சுயேட்சை அரசியல் ஒரு பார்வை.


எதிர்வரும் கல்முனை மாநகரசபைக்கான உள்ளூராட்சி தேர்லில் அரசியல் கட்சிகளை நிராகரித்து சுயேட்சை வேட்பாளர்களை களமிறக்குவதன்மூலம் சாய்ந்தமருதூர் எதனைச் சாதிக்கப்போகிறது? என பலரும் கேள்விகளை எழுப்பிக்கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.

அவ்வாறு கேள்விகளைக் கேட்பவர்கள் முதலில் ஒன்றைத் தெரிந்துகொள்வது நல்லது. அதாவது சாய்ந்தமருது விரும்பி இவ்வாறான முடிவை எடுக்கவில்லை.முடிவை எடுப்பதற்கு தள்ளப்பட்டது என்பதே உண்மை.

தமக்கான பிரதேச சபை விடயத்தில் அரசியல் வாதிகளின் பல வாக்குறுதிகளையும்,பித்தலாட்டங்களையும் , ஏமாற்றுவித்தைகளையும் நம்பி "இன்று கிடைக்கும்.நாளை கிடைக்கும் என எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த மக்களின் விடிவைநோக்கிய புதிய அரசியல் வியூகமே இதுவாகும்.

இந்த முடிவு தனி நபரோ ,தனியொரு அமைப்போ எடுத்ததல்ல.ஊரினுடைய கல்விமான்கள்,அறிஞர்கள்,புத்திஜீவிகள் ,உலமாக்கள், பிரதேச மக்கள் ஆகியோர் இணைந்து ஏகமனதாக எடுத்த தீர்மானம்.பொதுவாக கூறுவதானால்,  உலமாக்கள் தலைமையில் ஊர் ஜமாத்தார்கள் எடுத்த முடிவு .

இம் முடிவினால்  சாய்ந்தமருது மக்கள் கட்சிபேதங்களை மறந்து ,உரிமையை வென்றெடுப்பதற்காக  உலமாக்களின் தலைமையில் ஒன்றினைந்துள்ளார்கள் என்பது புரிகிறது.தற்போது அங்குள்ள  பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் பிரத்தியேகமாக  அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக " மக்கள் பணிமனை" தொடங்கப்பட்டு சிறப்பாக இயங்கிவருகிறது.

பிரதேச சபை பெற்றுக்கொள்வதற்குத் தேவையான வழிமுறைகள், மக்களின் தொடர்ந்தேச்சையான ஒத்திழைப்பு , அது  தொடர்பில் பெண்களுக்கான விழிப்புணர்வூட்டல்கள் மற்றும் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் வேட்பாளர்களைத் தேர்வுசெய்வதும், எவ்வாறு தேர்தலை எதிர்கொள்வதும்  போன்ற பல விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் கல்முனை மாநகர சபைக்கான தேர்தல் நடைபெறுகின்றபோது சாய்ந்தமருது மக்கள் எப்படியும் தங்களுடைய சுயேட்சை வேட்பாளர்களுக்கே வாக்குகளை அளிக்கக்கூடிய சூழல் நிலவுகின்றது.புதிய தேர்தல்முறை மூலம் கல்முனை மாநகரசபை 24 வட்டாரமாக பிரிக்கப்பட்டுள்ளது .

கல்முனை தமிழ் பிரிவு 7 வட்டாரம்
கல்முனை முஸ்லிம்பிரிவு 6வட்டாரம்
சாய்ந்தமருது 6 வட்டாரம்.
மருதமுனை 4 வட்டாரம்.
நட்பிட்டிமுனை 1 வட்டாரம்.

தமிழர்களின் வாக்குகள் மொத்தமாக ஒரே கட்சிக்கு அளிக்கப்படும் என்பதால் அவர்கள் 7 பிரதிநிதிகளைப் பெற்றுக்கொள்வார்கள்.
ஆனால் மீதமுள்ள 17 பிரதிநிதிகளுக்கான போட்டியில் சாய்ந்தமருதின் 6 பிரதிநிதிகளைத் தவிர்த்து  11 வட்டாரங்களுக்குமான  பிரதிநிதிகள் தெரிவில்   முஸ்லிம்களிடையே பல கட்சிகள் பங்குபோடக் காத்திருக்கின்றன.

 புதிய தேர்தல்முறையின் பிரகாரம் ஒவ்வொரு வட்டாரங்களிலும்  கூடிய வாக்குகளைப் பெறும் கட்சியின் வேட்பாளர்  வெற்றிபெருவார்  என்பதால்  சாய்ந்தமருது வட்டாரங்களில் சுயேட்சை அணி குறைந்தது  5 இல் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது இவ்வாறிருக்க  ஏனைய பிரதேச வட்டாரங்களில் வெற்றிபெறும் முஸ்லிம் கட்சிக்கு ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை தேவையென்பதால் நிச்சயமாக சாய்ந்தமருது சுயேட்சை பிரதிநிதிகளின் ஒத்துழைப்பு அவசியமாகிறது.

 இந்நிலையில் , வெற்றிபெற்ற  எந்தக் கட்சியாக இருந்தாலும் சாய்ந்தமருதின் சுயேட்சை உறுப்பினர்களை நிராகரித்து ஆட்சியமைக்க முடியாது என்ற சூழ்நிலையில்  பிரநிதிகளின் ஆதரவைப் பெறுவதற்காக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்படலாம்.

உலமாக்களின் நெறிப்படுத்தலில் ஊர் நலன்கருதி உருவாக்கப்பட்ட சுயேச்சை குழுவினுடைய பலம் என்னவென்பதை பேரம்பேசவரும் ஒவ்வொரு கட்சிகளும் பேச்சுவார்த்தைமூலம் புரிந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்மூலம் தங்களின்   நீண்டகால அரசியல்  கோரிக்கைகள் பலவற்றை அடைந்துகொள்வதற்கான நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டு ,அது தொடர்பில் கட்சியின் உயர்பீடம் அரசுக்கூடாக உடனடியாக தீர்வைப்பெற்றுத்தர அழுத்தம் கொடுப்பதும் இல்லாவிட்டால் மாநகரசபையில் மாற்றுவழியை தெரிவு செய்வது என்ற தங்கள் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தமுடியும்.

இக்கோரிக்கையை நிராகரிக்கும் பட்சத்தில் கல்முனை மாநகரசபையில் தமக்கான பெரும்பான்மை பலத்தினை நிரூபிக்க முடியாது போய்விடும் என்பதுடன் சபையை  இழக்கவேண்டி ஏற்படலாம் என்பதால் கட்டாயம் இணங்கவேண்டிய சூழலுக்கு கட்சிகள் தள்ளப்படக்கூடும்.

ஏ.பீ.எம்.அஸீம்
சாய்ந்தமருது .

சாய்ந்தமருதின் சுயேட்சை அரசியல் ஒரு பார்வை. சாய்ந்தமருதின் சுயேட்சை அரசியல் ஒரு பார்வை. Reviewed by Madawala News on 11/13/2017 06:37:00 AM Rating: 5