Kidny

Kidny

தேர்தல் காய்ச்சல். ( அரசின் நரித்தந்திரம். ஒரு சுவாரஸ்ய அலசல்)குழந்தைகள் சேட்டை புரிகின்ற போது அவர்களுக்கு மிட்டாய் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை காட்டி அடக்குவதை போல அரசாங்கத்துக்கு அழுத்தம் கூடும் போதெல்லாம் தேர்தல் நடாத்த போவதாக கூறுவதும் பின்னர் கைவிரிப்பதுமான நிகழ்வுகள் வேடிக்கையாகிவிட்டன்.

ஆரம்பத்தில் எந்த தேர்தல் முதலில் நடைபெறும் என ட்வீஸ்ட் வைத்து அசத்திய அரசாங்கம் பின்னர் உள்ளூராட்சி தேர்தல் முதலில் நடாத்தப்பட இருக்கிறது என்ற செய்தியை ஸ்பீக்கர் கட்டி சொன்னது. ஈற்றில் தேர்தல் ஒன்றை நடாத்துவதே பெரும் சவாலாகிப் போன ஒரு சூழல் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாகவே தேர்தல்களை ஒத்திப் போட நரித்தந்திரம் தீட்டி வந்த அரசாங்கம், அரசியலமைப்பின் 20வது திருத்தம் வந்த வேகத்திலேயே நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டதும்,
மாகாண சபை திருத்த சட்டம் என்ற ‘தந்திரம் நம்பர் 2’ ஐ இரவோடிரவாக பாராளுமன்றில் நிறைவேற்றியது.

இதன் பலனாக 50:50 என்ற தொகுதி மற்றும் விகிதாசார கலப்பு தேர்தல் முறையை அமுல்படுத்த இருப்பதால் அதற்கான தொகுதி நிர்ணயம் உள்ளிட்ட ஆயிரத்தெட்டு வேலைகளை கவனிக்க வேண்டுமாகையால் தேர்தல் எப்படியும் இழுத்தடிக்கபடுவது உறுதியாகியதும் திட்டம் நிறைவேறியதையிட்டு மனதுக்குள் ராஜ சிரிப்பொன்று சிரித்துக் கொண்டது.
அது போக மாகாண சபை தேர்தல் சட்டத்திற்கு எதிராக முன்னாள் நீதி அரசர் சரத்.என் சில்வாவினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் வழக்குத் தீர்ப்பு அது இது என எப்படியும் காலம் ஓடப் போகிறது.

அடுத்ததாக உள்ளூராட்சி தேர்தல் மீது எல்லோர் கழுகுப் பார்வையும் திரும்பியது. வட்டார எல்லை நிர்ணயம், புதிய சபை உருவாக்கம் என அரசாங்கம் காலம் கடத்த முனைந்த போதும், ராஜபக்‌ஷ ஆட்சியிலிருந்தே இதே மாவை திரும்ப திரும்ப அரைப்பதால் இனியும் இந்த திட்டம் சரிவராது என்ற நிலையில் தேர்தலை எப்படியும் நடாத்தியே ஆக வேண்டும் என்ற பொறிக்குள் அரசாங்கம் சிக்கியது.

நாட்டிலுள்ள பெரும்பாலான சபைகளை கைப்பற்ற முடியுமா என்று கண்வியர்த்து கவலைப்பட்டுக் கொண்டிருந்த அரசாங்கத்துக்கு அடுத்த இடியாக பிணைமுறி தொடர்பான விசாரணை பூதாகரமாகி பிரதமரையே சாட்சிக் கூண்டில் வைத்து விசாரணை செய்கின்ற ஒரு சூழலில் ஆட்சிக் கட்டமைப்பில் தளம்பல் உருவாகியுள்ள இந்த நாட்களில் இவற்றையெல்லாம் சமாளித்துக் கொண்டுதான் தேர்தலை முகம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

தன்பக்க கவலையை எண்ணி ரூம் போட்டு அழுது வந்த அரசாங்கத்திற்கு நேற்றைய நீதிமன்ற தீர்ப்பு ஓரளவு பால் வார்த்திருக்கிறது எனலாம்.

உள்ளூராட்சி எல்லை நிர்ணயம் குறித்து வெளியிடப்பட்ட 2006/44ம் இலக்க வர்த்தமாணிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை நேற்று விசாரணைக்கு எடுத்த நீதிமன்றம் டிசம்பர் 4 வரை குறித்த வர்த்தமாணிக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் அமைச்சர் பைசர் முஸ்தபாவிற்கும் அழைப்பாணை விடுத்துள்ளது.

இப்படியான இடியப்ப சிக்கல்களால் இம்மாதம் 27ம் திகதி வேட்புமனு கோரும் அறிவித்தலை விடுக்க முடியாது  என்று கூறி தேர்தல் ஆணைக்குழு கடையை சாத்துகிறது.

ஆக, ‘கோடு’ தீர்ப்பு என்று ஏறி இறங்கப்போவதால் இப்போதைக்கு தேர்தல் காய்ச்சல் காற்றோடு கரைந்து போகக்கூடிய அனுமானங்கள்தான் தென்படுகின்றன.

இப்படி அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மை குழைந்திருப்பதை ப்ளஸ் பொய்ன்டாக பயன்படுத்தி அத்தனை காய்நகர்த்தல்களையும் ராஜபக்‌ஷ பட்டாளம் மேற்கொண்டு வருகிறது.

காலம் தாழ்த்த தாழ்த்த அரசாங்கத்தின் கைகள்தான் பலவீனமடையும் என்பதையும் புரிந்து கொள்வது அவ்வளவு கடினமானதல்ல.

ஆனால், அரசியலில் எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என்பதும் நாம் அறியாத சங்கதியல்ல!

-சல்மான் லாபீர்-
தேர்தல் காய்ச்சல். ( அரசின் நரித்தந்திரம். ஒரு சுவாரஸ்ய அலசல்) தேர்தல் காய்ச்சல். ( அரசின்  நரித்தந்திரம். ஒரு சுவாரஸ்ய அலசல்) Reviewed by Madawala News on 11/23/2017 02:03:00 PM Rating: 5