Ad Space Available here

நான் பார்த்த கலைவிழா. ( முஸ்லிம் கேர்ள்ஸ் ஸ்கூல்)


காலை 8.50
இன்னும் பத்து நிமிசம் இருக்கு.ஒன்பது மணிக்குத்தானே கலைவிழா ஆரம்பம்.

"ஹேயும் ,ஹாயுமாக" சவுன்டுகளும்
கலர் கலரான பேப்பர்களும், பேதைகளுமாக
கல்யாண வீடுபோல் களைகட்டியிருந்தது கல்லூரி.

காலைவரை வருவது என்ற எண்ணம் இல்லை.
ஸ்கூல் போகும்போது, "வாங்களன்மா நான் செர்ட்பிகேட் வாங்கறத பார்க்க நீங்க வரத்தான் வேணும்"
மகள் கேட்டிருந்தாள்.

தமிழ்மொழிதின கட்டுரைப்போட்டியில் இரண்டாமிடம் வந்திருந்தாள்.

கலரும் ,கறுப்புமாய் மூடியும் ,முடியுமாய் கலைவிழாக்காண மண்டபம் தயாராயிருந்தது.

தாய்மாரால் நிரம்பியிருந்தது அரங்கு நிறைந்த ஆட்களுக்குள் ஆங்காங்கே கிடந்த வெற்றுக்கதிரைகளில் ஒன்றில் இருந்து கொண்டேன்.

பக்கத்தில் ஒரு பெண் , சிரித்தேன்.

ஹாய் என்று அவளும் சிரித்தாள். டொப்பும்,டெனிமும் உடுத்து சோலோன்றை கழுத்துக்குள்ளே சுருக்கி விட்டிருந்தாள். ஸ்ட்ரைடாக்கிய ஹெயாரை கழுத்துவரை கலைத்து விட்டிருந்தாள். மேக்கப் போட்டிருந்தாள்.
அழகாய் இருந்தாள்.

ஸுபஹ் தொழுததிலிருந்து மெனக்கெட்டிருப்பாள் போல.
க்ரேட் நைன் _சிங்கள மீடியம் படிக்கும் மகளின் ஈவன்ட் ஒன்று இருக்குதாம். பகரப்பட்ட தகவல்களவை.

சில நொடிகளில் என் மறுபக்க வெற்றுக்கதிரை கொஞ்சம் பரபரப்பானது.

"அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர்.

இந்த கதிரைக்கு தாருசரி ஈக்கிறா"
என கேட்டுட்டே கதிரையை ஆக்கிரமித்தாள்,

கறுப்பு ஜில்பாபோடும்,கையிலே பெரிய ஹேன்ட்பேக்குமாக முகத்தைமூடிக்கொண்டு வந்த பெண்.

வஅலைக்கும்சலாம்- சொன்னேன்.

"சரி க்ரவுட் எனா.

வாப்பாமார வரவேணாமெண்ணு சென்ன ஜாதிதான்.
இல்லாட்டி ஆம்பளங்கள வச்சுக்கொண்டு பொம்பள புள்ளவங்களுக்கு என்னத்த செய்யேலும்"

பேஸ்கவர் பெண் என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்.

"ம்ம்..நல்லம்தான்.

முஸ்லிம் கேர்ள்ஸ் ஸ்கூல்தானே." என்றவாறு முன்னால் பார்த்தேன்.

கமரா மேனும், லைட்ஸ் மேனும் உதவியாளர்கள் இருவரோடு வேலைகளில் இருந்தார்கள்.
பார்ப்பதற்கு சிங்கள சகோதரர்கள் போல் தெரிந்தார்கள்.

முன்பக்க வரிசையொன்றில் கல்லூரியின் ரெண்டு சேர்மார்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.

காலை 9.20

பக்கத்து பேஸ்கவர் பெண் பேக்கைத்திறப்பதும் தண்ணி போத்தலை எடுப்பதும் என அவதிப்பட்டுக்கொண்டிருந்தாள்.

பேக்கைத்திறந்து மூடும்போதெல்லாம்
பாய்கடை பிரியாணி வாசம் கமகமத்தது.

"வார சுருக்குல வெள்ளன திண்ணாம வந்துட்டேன்"
என பேக்கிலிருந்து Bபொக்ஸ் ஒன்றை எடுத்தாள்.
அதிலிருந்து ரெண்டு சேன்ட்விச்சஸ் எடுத்து ஒன்றை
'இந்தாங்க,என என்னிடம் நீட்டினாள்.

"தேங்க்ஸ்,இருக்கட்டும்" வரும் போது சாப்பிட்டு வந்தேன்.
என்றேன்.

ம்ஹூம். விடுவதாயில்லையவள்.

மறுபடி ,ஹேன்ட்பேக்கிலிருந்து ஜூஸ்பக்கட்டொன்றை எடுத்து நீட்டினாள்

வாங்கிக்கொண்டேன்.

அந்த சேன்ட்விச்சை என்மறுபக்கத்து டொப் டெனிம்
பெண்ணிடம் நீட்டினாள். அப்பெண் வாங்கிக்கொண்டாள். தேங்க்ஸ் சொன்னாள்.

விருந்தோம்பல் சிறப்பாய் இடம்பெற்றது.
பேஸ்கவர்ப்பெண் முகமூடியை வாய்வரை திறப்பதும்,
சேன்ட்விச்சை கடிப்பதும், பின் மூடுவதும் என
போராடிக்கொண்டிருந்தாள்.


"கஸ்டமா இல்லையா?" என்றேன் , பழகிட்டென்றாள்.


பாடசாலைக்கலரில் ஓவர்கோட் உடுத்த ப்ரிபக்ட்ஸ் கேர்ள்ஸ் ரவுன்ட்ஸ் வருவதும் போவதும் ஸ்டேஜில் ஏறுவதும் இறங்குவதுமாக ஒரே பிஸியாய் இருந்தார்கள்.

பின்க் கலர் சாரியும் மெட்சிங்காய் போட்டிருந்த மேக்கப்பும், ஹெயார்ஸ்டைலும் செக்சனல் ஹெட் மிஸ்ஸை ஒரு இருபது வயது இளமையாய் காட்டியது.

ஹீல்ஸ் அணிந்து வெரி ஸ்மார்ட் ஆக சுற்றி வந்தார். ப்ரிபக்ட்ஸ் பிள்ளைகளுக்கு ஓடர் போடுவதும்,கண்ஜாடை செய்வதுமாக விழாவின் மொத்தமும் தன் கன்ட்ரோலில்தானென அறியச்செய்தார்.
கடந்த பல நாட்களாக இதற்காக
எவ்வளவு பாடுபட்டிருப்பாரென விளங்கியது.


இன்னும் பல டீச்சர்ஸும் அழகழகாய் ஹாலுக்கு வந்து சேர்ந்தனர்.

காலை 9.45
சபை சற்று அமைதியனது.

பின்னாலிருந்து ஒவ்வொருவராய் எழுந்து நிற்கத்தொடங்கனர். கல்லூரி இசைக்குழுவின் வரவேற்பு இசையுடன்........

(ஸ்டார்ட் மியூசிக்)

ஹொன்ரபிள் மேடம் -ப்ரின்சிபல் என தொடர்ந்து மினிஸ்டர் எஸ்டிஎஸ் ப்ரசிடன்ட் செக்ரட்டரி என ஆண்களின் பெயர்களை அடுக்காக மேடையில் வரவேற்கத்தொடங்கினாள் ஒரு மாணவி.சில நேரத்தில் என் பக்கத்தில் இருந்த பெண் தன் பேர்ஸிலிருந்து அவசரமாய் எதையோஎடுத்து தலையில் விரித்தாள்.

ஓஹ்....

கைக்குட்டை. போட்டிருந்த சோலை மீண்டும் கழுத்துக்குள் சுருக்கி அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டாள்.

இன்னும் முன்னாலும் பின்னாலும் சில பல தலைகளை கைலேஞ்சிகள் மூடிக்கொண்டன.

முன்பகுதியில் நின்று கொண்டிருந்த
செக்சனல் ஹெட் மிஸ்ஸும் மாணவியொருத்தியிடம் அவசரமாக கையை நீட்டி ஹேங்கர்சீபை வாங்கிக்கொண்டிருந்தார்.

அரங்கில் கிராஅத் ஒலித்துகொண்டிருந்தது.

வரவேற்பு மெடம் மினிஸ்டர் அதிதிகள் என உரைகளாற்றப்பட்டு ஆடலும் பாடலுமாக
கலைவிழா கலகலப்பாகிக்கொண்டிருந்தது.

பட்டுப்பாவாடை சட்டை சரசரக்க தலையில் மல்லிப்பூவும், கையில் வளையலுமாய் கலர் கலராய் மாணவிகள் காதிலே போட்டிருந்த ஜிமிக்கிகள் ஆட மேடைக்கு வந்துசேர்ந்தனர்.

பேஸ்கவர்   பெண் தன்போனின் கமராவை ஒன் பண்ணி வீடியோஎடுத்துக்கொண்டிருந்தாள்.

எங்கம்மெட ஜிமிக்கி கம்மல் ஒலித்துக்கொண்டிருந்தது.


'மாஷா அல்லாஹ்’ 'நல்லா ஆடுறாங்க எனா
தான் எடுத்த வீடியோவை என்னிடம் காட்டினாள்.


இவங்கட அபிக்கு சினிமாப்பாட்டெல்லாம் விருப்பமில்ல.
கம்மல் பாட்டென்டுதான் அவர் ஈக்கு சரிசென்ன.

வீடியோவ வட்சப்புல அனுப்போனும். சந்தோசப்படுவார்.

"பிராந்திக்குப்பி எங்கம்மா குடிச்சித்தீர்த்து....."

கையால குடிச்சிக்காட்டி பிள்ள வீடியோவில் ஆடிக்கொண்டிருந்தாள்.


கெமராவை அட்ஜஸ்ட் பண்ணியபடி லைட்மேனிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான்

கெமரா மேன். ஒன்பதாம் தரத்தில் படிக்கும் மகளுக்கு இதுதான் ஸ்கூலின் கடைசி வருசமாம்.அதன்பின் ஓதவைக்க மதரஸாவுல சேர்த்து , ரெண்டு வருசத்தால கல்யாணம் பண்ணிக்கொடுக்கிற ஐடியாவுல அவங்க அபிB இருக்கிறாராம்.

"நல்லம்தானே"என்றேன்.

அடுத்த நிகழ்வு

தமிழ் மீடியம். என் மகளின் வகுப்புத்தோழிகள்
பத்துப்பேர்.அழகான ஆடையலங்காரங்களுடன் மேடையில்....

தமிழ்மொழியின் பெருமை சாற்றும் பாடலுக்கு எட்டாம் ஆண்டு மாணவிகளின் நடனம் இதோ......

அறிவிப்பை தொடர்ந்து

"ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே.....
வெற்றி மக வழிதான் இனி எல்லாமே,

வீரன்னா யாருன்னு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே........"

விஜய் பார்த்திருந்தார்னா மெர்சல் ஆகியிருப்பார்.
அவ்வளவு கச்சிதமான ஆடல். தமிழ் வளர்க்கும் பாடல்.
மகள் வந்து சொன்னாள்தான்.


ட்ரெஸ்,எக்சஸரீஸ்க்கெல்லாம் பைவ்தவ்ஸன்ட் மட்டுக்கு வருகுதாம்மா என்று.

புள்ள உண்மையாத்தான் வந்து சொல்லியிருக்காள்.
இடையில் ஹஸீதாவாம். கையில் தஹறாவோடும்
தலையில் ஒரு ஸ்கார்போடும் பச்சைக்கலரில் சல்வார் உடுத்து ....ஒரு ஆடல்.

அடுத்து

"ஹபீபி யாரஸூலுல்லாஹ்......"

கறுப்பு அபாயாவும் பர்தாவுமாய் பிள்ளைகள் கைகளையேந்தி அசைந்தாடிக்கொண்டிருந்தனர்.
"வாவ்" பக்கதிலிருந்த பெண் சொல்லிக்கொண்டே போனில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தாள்.

அவளின் மகளளுமாம்.ஸ்கார்fப்போடு மகளை இன்றைக்குத்தான் பார்க்கிறாளாம்.சான்றிதழ்,பரிசுகள்
இடைவெளிகளில் வழங்கப்பட்டன.

இறுதியில் மாணவிகளின் இசை வாசிப்பில் தேசிய கீதமும் ஸலவாத்தும் ஸல்லல்லாஹு அலா முஹம்மத்
ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்.....
என்னருகில் நின்ற பெண் மீண்டும் தன் பேர்ஸில் இருந்து கைக்குட்டையை எடுத்து தலையில் விரித்தாள்.

கலைவிழா இனிதே நிறைவுற்றது.
மனசு கனத்துக்கிடந்தது.
வரும்போது கணவர் கேட்டார்

"கலைவிழாவெல்லாம் எப்படியிருந்திச்சு"

நான் ஒன்றும் சொல்லவில்லை.

"உம்மா நான் இந்த டான்ஸ் ஒன்னுக்கும் சேராம விட்டது எவ்வளவு நல்லம் என" மகள் கேட்டாள்.
புன்னகைத்தோம் நானும் அவரும். மனசு காற்றுப்போலானது.

By: நிஷா ஏ ஹமீத் -
நான் பார்த்த கலைவிழா. ( முஸ்லிம் கேர்ள்ஸ் ஸ்கூல்) நான் பார்த்த கலைவிழா.  ( முஸ்லிம் கேர்ள்ஸ் ஸ்கூல்) Reviewed by Madawala News on 11/13/2017 11:36:00 AM Rating: 5