Kidny

Kidny

அம்பாறை, நாமல் ஓயாவில் அமைந்துள்ள 'ஹிமிதுறாவ வெவெ' முஸ்லிம்களுக்குத் தடை.? என்ன காரணம்?

இயற்கை எமக்களித்துள்ள மிகப் பெரும் கொடைகளில் ஆறுகள், நீர் வீழ்ச்சிகளும் அடங்குகின்றன.

இன்றைய கால கட்டத்தில் அன்றாடம் வாழ்வில் மிக சோர்வடையும் மக்களுக்கு இவை மனதுக்கு இதம் தரும் மருந்துகளாக மாறி வருகின்றன.

மனிதன் ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் இவற்றை நாடிச் செல்வதும், குடும்பத்தோடு குளித்து மகிழ்வதும், உணவுகளைச் சமைத்து ஒன்றாக காற்று வெளியிலே இருந்து உண்டு மகிழ்வதும் இன்று சாதாரணமாக மாறி வருகின்றன. 

அம்பாரையின் கரையோரப் பகுதியிலே இயற்கையின் கடல் அன்னையைத் தவிர எதுவுமே இல்லை. ஆறுகள், குளங்கள், வயல் வெளிகள், இயற்கைக் காடுகளை இன்று அம்பாறையின் கரையோரங்களில் காண்பதற்கு முடிவதில்லை. அவை சிங்கள மக்கள் வாழும் பகுதிகளிலேயே காணப்படுகின்றன. கரையோரப் பகுதிகளில் மக்கள் செறிவு கூடிக் கொண்டு வருவதாலும், நிலப் பற்றாக் குறை காரணமாகவும் ஆறு, குளம் என்பன அருகியே போய் விட்டன. 

சிங்கள பகுதிகளாக அம்பாரை, உஹன, தமண, லாஹுகல, மஹாஓய, பதியதலாவ, தெஹியத்த கண்டிய ஆகிய பகுதிகளில் இயற்கையின் அழகு நிறை காடுகள், மலைகள், ஆறுகள் நிறைந்தே உள்ளன. அம்பாறையின் கரையோரப் பகுதியிருள்ள தமிழ், முஸ்லிம் மக்களும் இயற்கையோடு பொழுதைக் களிப்பதற்காக சிங்களப் பகுதியை நாடியே செல்கிறார்கள்.  அவ்வாறான ஒரு இயற்கை எழில் கொஞ்சும் இடமே 'ஹிமிதுறாவ' என்ற அழகுமிகு ஆறு ஆகும். இது அம்பாரையின் நாமல்ஓயா பகுதியிலே அமைந்துள்ளது. பார்ப்பதற்கு அழகாக இருக்கும் இவ்விடம், உணவு சமைத்து உண்பதற்கும் வசதியானதாகும். குடும்பத்தோடு பலர் இங்கே வந்து உண்டு மகிழ்வது வழக்கமாகும். மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதியையும் சேர்ந்த மக்களும் இங்கு வருகிறார்கள். 

அண்மையில் இவ்விடத்துக்கு வந்த முஸ்லிம் சகோதரர்களால் ஏற்பட்ட ஒரு கசப்பான நிகழ்வால் இன்று இங்கே முஸ்லிம்கள் வருவது, உணவு சமைத்து உண்பது, குளிப்பது என்பன தடை செய்யப்பட்டு இவ்விடத்தில் தற்காலிகமான பொலிஸ் போஸ்ட் ஒன்றும் போடப்பட்டுள்ளது. 

கரையோரப் பகுதியிலே இருந்து வந்த சகோதரர்கள் ஆடு ஒன்றை உயிரோடு வாங்கி வந்து இந்த இடத்திலே வைத்து அதை அறுத்து மரத்திலே கட்டித் தொங்க விட்டு அதை உரித்திருக்கிறார்கள். இதைப் பார்த்த சிங்கள சகோதரர்கள் கிழர்ந்தெழுந்து சச்சரவில் ஈடுபட்டுள்ளார்கள். இறுதியில் ஆட்டை உரித்தவர்களைத் துரத்தி அடித்த சிங்கள மக்கள் இனிமேல் யாரும் இங்கே வரக் கூடாது என்று எச்சரித்துள்ளார்கள். இந்தக் காரியத்தைச் செய்தவர்கள் படித்த நம் இளைஞர்களே.

எமக்கு இன்னும் சில விடயங்களில் தெளிவு ஏற்படவில்லை. நாம் வாழும் இந்த நாட்டின் மற்ற சமூகத்தவரின் மனங்களை மதிக்கத் தெரியவில்லை. எமது பக்கத்தை மட்டுமே பார்த்துப் பழகி விட்ட நாம் அடுத்தவரின் பண்பாடு, கலாசாரங்களையும் மதிக்கத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏ. எல். நௌபீர்
அம்பாறை, நாமல் ஓயாவில் அமைந்துள்ள 'ஹிமிதுறாவ வெவெ' முஸ்லிம்களுக்குத் தடை.? என்ன காரணம்? அம்பாறை, நாமல் ஓயாவில் அமைந்துள்ள 'ஹிமிதுறாவ வெவெ' முஸ்லிம்களுக்குத் தடை.? என்ன காரணம்? Reviewed by Madawala News on 11/26/2017 09:14:00 PM Rating: 5