Yahya

தாருன் நுஸ்ரா அநாதைகள் துஷ்பிரயோகம் தொடர்பில் மற்றுமொருவர் கைது !



அநாதை மற்றும் அனாதரவான சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோக விடயத்தை தொடர்ந்து தாருன்
நுஸ்ரா அநாதைகள் இல்லத்தின் புதிய மேற்பார்வையாளரும் இம்மாதம் 23 ஆம் திகதி கொஹுவளை பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டதாக அறிய முடிகின்றது.

தாருன் நுஸ்ராவின் முன்னாள் மேற்பார்வையாளரின் கணவர் முனாபர் என்பவரினால் மோசமான பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி, நீதிமன்ற பாதுகாப்பின் கீழ் தாருன் நுஸ்ரா அநாதைகள் இல்லத்தில் இருந்த 13 வயதான அநாதை சிறுமி ஒருவர், "டொக்டர்தான் உனக்கு இப்படி அடிக்க சொன்னார்" என்று சொல்லப்பட்டு, தற்போதைய மேற்பார்வையாளரால் தொடர்ந்து தாக்கப்பட்டமை குறித்து பொலிஸில் மேற்கொண்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து, தற்போதைய மேற்பார்வையாளர் கைதுசெய்யப்பட்டதாக தெரிய வருகின்றது. 

டிசம்பர் விடுமுறைக்காக தாருன் நுஸ்ரா அநாதைகள் இல்லத்தில் இருந்த சிறுமிகளில் வீடு செல்ல முடியுமானவர்கள் டிசம்பர் 11 ஆம் திகதி வீடு செல்ல அனுமதிக்கப் பட்டனர். பி.ப 4.30 மணிக்கு தன்னை அழைத்துச் செல்ல வந்த உறவினர்களிடம் தனக்கு அண்மை நாட்களில் இழைக்கப் பட்ட கொடுமையை குறித்த அநாதை சிறுமி கூறி உள்ளார்.உடனடியாக சட்டத்தரணியை தொடர்புகொண்ட உறவினர்கள், சட்டத்தரணி சகிதம் சிறுமியுடன் மாலை 6 மணிக்கு கொஹுவளை பொலிஸ் நிலையம் சென்றுள்ளனர். 

சிறுமியின் முறைப்பாட்டை பதிவுசெய்ய பெண் அதிகாரி ஒருவர் கடமையில் இல்லாததால், முறைப்பாடு குறித்த சுருக்கப் பதிவு ஒன்றை மட்டும் எழுதிக் கொண்ட பொலிசார் மறுநாள் வந்து முறைப்பாட்டை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளனர். 12ம் திகதி மேற்கொள்ளப் பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி ஆறு நாட்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுள்ளார். 

மருத்துவ அறிக்கைகள் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து, சிறுமி மீது தாக்குதல் நடத்தப் பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட தாருன் நுஸ்ரா அநாதைகள் இல்லத்தின் புதிய பொறுப்பாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இருக்கின்றார். இது தொடர்பான தனியான வழக்கு ஜனவரி நான்காம் திகதி நுகேகொடை (கங்கொடவில) நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. 

அநாதை சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப் பட்டமை தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜனவரி 25 ஆம் திகதி மேற்படி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த தவணை விசாரணைகள் டிசம்பர் 7ஆம் திகதி இடம்பெற்ற பொழுது பாதிக்கப் பட்ட அநாதைகளுக்கு விரைவான நீதி வேண்டி சமூக ஆர்வலர்கள் நீதிமறத்திற்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்து இருந்தனர்.
தாருன் நுஸ்ரா அநாதைகள் துஷ்பிரயோகம் தொடர்பில் மற்றுமொருவர் கைது !  தாருன் நுஸ்ரா அநாதைகள் துஷ்பிரயோகம் தொடர்பில் மற்றுமொருவர் கைது ! Reviewed by Madawala News on 12/29/2017 12:58:00 PM Rating: 5