Kidny

Kidny

கருப்பைவாய்க் கழுத்துப் புற்றுநோய் (Cervical Cancer) - ஒரு விழிப்புணர்வு.


HPV Vaccine (Human Papilloma Virus Vaccine ) - கருப்பைவாய்க் கழுத்துப் புற்றுநோய் (Cervical Cancer) - ஒரு விழிப்புணர்வு

Dr.  ALM Hasan Basree
Base Hospital Akkaraippattu

அண்மைக் காலமாக இலங்கையில் இந்த HPV Vaccine தொடர்பான எதிர்ப்பிரச்சாரங்களும், கருத்துவேறுபாடுகளும் குழப்ப நிலைகளும் அதிகரித்து வருகிறது. இது அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளை குறிப்பாக முஸ்லிம்களை நோக்காகக் கொண்ட ஒரு இனவழிப்புச் செயற்பாடு என்ற கருத்துப்பட மிக மோசமான கருத்துகள் பரவிவருகின்ற நிலையில் இது தொடர்பான ஒரு விளக்கம், விழிப்புணர்வு அவசியப்படுகிறது. அதற்காகவே இந்த கட்டுரை கேள்வி பதில் வடிவில் வழங்கப்படுகிறது.

கே : HPV Vaccine என்றால் என்ன?
ப : இது Human Papilloma Virus எனும் வைரஸ் தொற்றுக்கெதிராக வழங்கப்படும் ஒரு Vaccine ஆகும். பொதுவாக வழமையான எல்லா Vaccine களையும் போலவே தொற்று ஏற்படமுதலே இது வழங்கப்படுகிறது.


கே : HPV Vaccine வழங்கப்படுவதற்கான நோக்கம் என்ன?
ப : இலங்கைப் பெண்களில் ஏற்படும் பிரதான புற்று நோய் வகை மார்பகப் புற்று (Breast Cancer), இரண்டாவது வகை கருப்பைவாய்க் கழுத்து புற்று நோய் (Cervical Cancer) ஆகும். இந்த கருப்பைவாய்ப் புற்று நோய் ஏற்படுவதற்கான மிக முக்கியமான காரணிகளில் ஒன்று Human Papilloma Virus Persistence Infection ஆகும். கிட்டத்தட்ட 70% ஆன Cervical Cancer நோயாளிகளில் இந்த HPV தொற்று முதலாவது காரணியாக அடையாளம் காணப்படுகிறது. இந்த HPV தொற்று HPV Vaccine இனால் தவிர்க்கப்பட்டு பெண்களில் கருப்பைவாய் கழுத்துப் புற்று நோய் ஏற்படாமல் தடுக்கப்படுவதற்காகவே இந்த Vaccine வழங்கப்படுகிறது.



கே : HPV Vaccine யாருக்கு வழங்கப்படுகிறது?
ப : இலங்கையில் பாடசாலை செல்லும் பெண்களில் 9-13 வயதுப் பெண்களுக்கு ( பொதுவாக 6ம் ஆண்டு மாணவிகளுக்கு) 2 வழங்கல்களாக (2 doses) 6 மாத இடைவெளியில் வழங்கப்படுகிறது.



கே : ஏன் குறிப்பாக அந்த வயது பெண்களுக்கு? பிற வயது பெண்களுக்கு வழங்கப்படலாமா?
ப : பொதுவாக பெண்களில் இனப்பெருக்க உறுப்புகளில் இந்த HPV தொற்று ஆரம்பிப்பது பாலியல் தொடர்புகள் ஆரம்பித்த பின்னராகும்.  அதாவது திருமணத்தின் பின்னராகும். இதற்காகவே இந்த வயதெல்லையில் உள்ளவர்களுக்கு வழங்கப்படுகிறது. HPV Vaccine வழங்கப்படாத பெண்கள் எந்த வயதினராக இருந்தாலும் இது வழங்கப்படலாம். 13-26 வயதுக்கிடைப்பட்டவர்களாக இருந்தால் 3 வழங்கல்களாக (3 doses) 0,2,6 ஆகிய மாத இடைவெளிகளில் வழங்கப்படுகிறது.



கே : இனப்பெருக்க உறுப்புகளில் HPV தொற்று எதனால் ஏற்படுகிறது? எல்லோருக்கும் ஏற்படுமா?

ப : இல்லை.  HPV நீண்டகாலத் தொற்று எல்லோருக்கும் ஏற்படுவதில்லை.
1. மிக இளவயதில் உடலுறவுத் தொடர்பு
2. பலருடனான முறைகேடான பாலியல் தொடர்பு
3. தனது வாழ்க்கைத்துணை பலருடனான முறைகேடான பாலியல் தொடர்புள்ளவராக இருத்தல்
4. மிக மோசமான சுகாதாரம் பேணல் (Poor Hygiene)
5. நீண்டகால கர்ப்பத்தடை மாத்திரைகளின் பாவனை (Oral Contraceptive Pills)
6. புகையிலைப் பாவனை - Tobacco Smoking
7. குறைந்த ஊட்டச்சத்துள்ளவராய் இருத்தல்.
8. குறைந்த நோயெதிர்ப்புச் சக்தி - HIV
9. ஆண்கள் விருத்த சேதனம் (Male Circumcision) செய்யாதிருத்தல். இதனால் HPV தொற்று ஏற்பட்டு இது பெண்களுக்கு பரவும்.
10. ஏனைய பாலியல் தொடர்பு மூலம் பரவக்கூடிய நோய்க்கு முன்னர் ஆளாகியிருத்தல்



கே: உலகளாவிய ரீதியில் இந்த Cervical Cancer எந்தளவு தூரம் பெண்களை பாதிக்கிறது?
ப: உலகளாவிய ரீதியில் பெண்களுக்கு ஏற்படும் நான்காவது மிகப்பொதுவான புற்று நோய் இதுவாகும்.
2012 இல் உலகில் 528 624 பெண்கள் இதனால் பாதிப்பட்டிருக்கும் அதேவேளை 266 653 இறப்புகள் இதனால் ஏற்பட்டிருக்கின்றன.
இதில் 80% ஆனவை அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலாகும். உலகில் 45 நாடுகளில் Cervical Cancer முதன்மை புற்று நோயாக காணப்படுகிறது.
மத்திய ஆபிரிக்க, பல ஆசியநாடுகள் (இந்தியா உட்பட) மத்திய தென்னமெரிக்க நாடுகள் 55இல் இதுவே அதிகூடிய இறப்பை ஏற்படுத்தும் புற்று நோயாகவும் உள்ளது.




கே : இலங்கையில் இந்த Cervical Cancer இன் தாக்கம் எந்தளவு உள்ளது?
ப : இலங்கையில் 2006 இல் 934 பெண்களுக்கும், 2010 இல் 847 பெண்களுக்கும் இது ஏற்பட்டிருந்தது. சராசரியாக 98 பெண்களில் ஒருவருக்கு இது ஏற்படுகிறது.




இன்னுமொரு ஆய்வு இலங்கையில் வருடாந்தம் 1544 பெண்களுக்கு இப்புற்றுனோய் ஏற்படுவதாகவும் அதில் 840 பேர் இறப்பதாகவும் சொல்கிறது. இதில் 17% ஆனோர் 15-44 வயதுக்கும், 32% ஆனோர் 45-54 வயதுக்கும், 27% ஆனோர் 55-64 வயதுக்கு இடைப்பட்டோராகவும் 24% ஆனோர் 65 வயதுக்கு மேற்பட்டோராகவும் காணப்படுகின்றனர். இருந்தாலும் இலங்கையில் இது இப்போது குறைவடைந்து வருவதாக ஆய்வுகள் சொல்கின்றன.




கே :Cervical Cancer இன் அறிகுறிகள் என்ன?
ப : பொதுவாக ஆரம்ப நிலை புற்றுநோயானது எந்தவித அறிகுறிகளையும் ஏற்படுத்தாது. இது மோசமாக முன்னேற்றமடையும் போதே (advanced stage) அறிகுறிகளை ஏற்படுத்த ஆரம்பிக்கும்.
* மெலிதான,நீர்த் தன்மையுடைய, இரத்தம் கலந்த திரவம் யோனிப்பகுதியிலிருந்து வெளியேறல்
* மாதவிடாய் தவிர்ந்த அசாதாரண யோனி இரத்தப்போக்கு
 - மாதவிடாய் நாட்களுக்கிடைப்பட்ட இரத்தப்போக்கு (intermenstrual bleeding)
- உடலுறவின் பின்னரான இரத்தப்போக்கு (post coital bleeding)
- மாதவிடாய் நிற்கும் காலப்பகுதிகளிலான இரத்தப்போக்கு (peri-menopausal bleeding)
- மாதவிடாய் நின்ற பின்னரான இரத்தப்போக்கு (post-menopausal bleeding)



இந்தப் புற்றுநோய் இன்னும் மோசமாகும்போது
- கால்வலி மற்றும் வீக்கம்
- சிறுநீரக, மலசல நோய் அறிகுறிகள்
- சிறுநீர் எரிவு
- சிறுனீருடன் இரத்தம் வெளியேறல்
- மலச்சிக்கல்
- மலத்துடன் இரத்தம் வெளியேறல்
- முதுகு இடுப்பு வலி ஆகிய அறிகுறிகள் ஏற்படும்




கே: இந்த Cervical Cancer இனை எவ்வாறு தடுக்கலாம்?
ப : இது மூன்று படிமுறைகளில் மேற்கொள்ளப்படுகிறது
* ஆரம்பநிலை ( Primary Prevention)
- HPV தடுப்பூசி,
- இதுசம்பந்தமான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தல்
* இரண்டாம் நிலை (Secondary Prevention)
- புற்றுநோய்க்கு முன்னரான நிலை(pre cancerous), மற்றும் ஆரம்பநிலை புற்றுநோய்களை கண்டறிதலும் அவற்றை குணப்படுத்தலும். இதற்காக இலங்கைமுழுவதும் MOH இன் கீழ் இயங்கும் 880 Well Woman Clinics இருக்கின்றன. 35 வயதுக்கு மேற்பட்ட சகல பெண்களுக்கும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை PAP Smear பரிசோதனை செய்யப்படுகிறது. இது Cytology Report செய்யப்பட்டு நோய் கண்டறியப்படுகிறது.
* மூன்றாம் நிலை ( Tertiary Prevention )
- ஆரம்பனிலை புற்றுநோயினைக் குணப்படுத்தி இன்னும் மோசமாகாது தடுத்தல்

கே: இந்த Well Woman Clinic எந்தளவு தூரம் வெற்றியடைந்துள்ளது?
ப : WWC மூலம் மிகப்பெரும் நன்மைகளை நாம் அடைந்திருந்தாலும் இன்னும் சில சிக்கல்கள் இல்லாமல் இல்லை.
- சமூகத்திலும் பெண்கள் மத்தியிலும் WWC பற்றிய விழிப்புணர்வு சற்றுக் குறைவாகவே காணப்படுகிறது
- WWC செல்வதற்கான ஊக்கம், ஆர்வமும் பெண்களிடத்தில் குறைவாகவுள்ளது.
- கலாசாரரீதியான காரணங்கள்
- WWC அண்மையில் இல்லாமல் இருத்தல்.

கே: இந்த HPV Virus மிக ஆபத்தான வைரஸ் ஒன்றா? இதில் வகைகள் உண்டா? இது காணப்படும் எல்லோருக்கும் புற்று நோய் ஏற்படுமா?
ப : அவ்வாறு இல்லை. இது மிகச்சாதாரணமாக மனிதத்தோலில், சீதமென்சவ்வுகளில் காணப்படும் எந்தவித அறிகுறிகளையும் ஏற்படுத்தாத வைரஸ் ஆகும். இதில் சில வகை குறிப்பாக HPV type 16, type 18 என்பன இனப்பெருக்க உறுப்புகளில் 10-15 வருடங்களுக்கு மேலாக காணப்படும்போது காலப்போக்கில் புற்றுநோயின் ஆரம்ப நிலைகளை தோற்றுவிக்கும். 100க்கு மேற்பட்ட HPV வகைகள் உள்ளன.  இதில் 40 வகை இனப்பெருக்க அங்கங்களில் காணப்படும். இதில் 10-15 ஆனவை புற்று நோயை ஏற்படுத்த வல்லவை. இதில் Type 16, 18 ஆகிய இரண்டும் 70% புற்றுநோய்க்கு காரணமானவை.


எல்லா HPV தொற்றும் நோயை கட்டாயமாக ஏற்படுத்தியே தீரும் என்றில்லை. சிலவகை ஆரம்பத்தில் தொற்றாக இருந்து எந்தவித விளைவையும் ஏற்படுத்தாமல் காலப்போக்கில் இல்லாமலேயே ஆகிவிடும்.

கே: இந்த HPV Vaccine மலட்டுத் தன்மையினை ஏற்படுத்தும், மிக ஆபத்தான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்ற குற்றச்சாட்டுகள் உண்மையா?
ப: இதில் சற்றும் உண்மையில்லை. HPV Vaccine ஏனைய எல்லா Vaccine களையும் போலவே ஒவ்வாமை, மயக்கம் போன்ற சிறு விளைவுகளை மாத்திரமே சிலவேளைகளில் ஏற்படுத்தலாம். இதில் மலட்டுத்தன்மையோ,ஏனைய பெரிய விளைவுகளோ ஏற்படின் இலங்கை அரசாங்கமே இதை தடை செய்திருக்கும்.

கே: HPV வைரஸ்தான் HIV Virus என்றும் அதுதான் HPV Vaccine ஆக செலுத்தப்படுகிறது எனும் குற்றச்சாட்டினையும் கேள்விப்படக்கூடியதாய் இருக்கிறதே?

ப: இது ஒரு அடிப்படையே அற்ற முட்டாள்தனமான ஒரு கருத்து. இலங்கை அரசாங்கம் HIV - AIDS இனை இல்லாதொழிக்க எத்தனையோ கோடிக்கணக்கில் செலவழிக்கிறது. இந்த நிலையில் நோயாளிகளுக்கு வேண்டுமென்றே AIDS இனை உருவாக்கும் செயற்பாடு இந்த Vaccine என்பது ஒரு அறிவேயற்ற ஒரு குற்றச்சாட்டு.



கே: முறைகேடான பாலியல் தொடர்பே Cervical Cancer இற்கும் HPV Vaccine இற்கும் மிகப்பொதுவான காரணம் எனில், சில கலாசார அமைப்புகளில் இந்த தொடர்புகள் அறவே சாத்தியமில்லாத நிலையில் இந்த HPV Vaccine அவர்களுக்கு அவசியமா?
ப: இது மோட்டர் சைக்கிள் சாரதிகள் ஹெல்மெட் அணிவது போன்றது. ஹெல்மெட் அணிவது என்பது வேகமாகச் செல்லும்போது விபத்து ஏற்பட்டால் தலையைப் பாதுகாக்கும் கவசமாக தொழிற்படும். ஆனால் மெதுவாகச் செல்லும் சாரதிகளும் இதை அணியவேண்டும். ஹெல்மெட் அணியாது செல்பவர்கள் கட்டாயம் விபத்துக்கு உள்ளாகுவார்கள் என்றில்லை. மெதுவாகச் செல்பவர்கள் விபத்துக்கு உள்ளாகமாட்டார்கள் என்றும் இல்லை. எவ்வாறாயினும் ஹெல்மெட் அணிவது என்பது அனைவருக்கும் நல்லது.


HPV vaccine இனால் எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால் இந்த vaccine மூலம் HPV தொற்றும் அதன்மூலமாக ஏற்படும் Cervical Cancer உம் தடுக்கப்படும் எனும் நிலையில் இது எவ்வளவு பயனுள்ளது என்பதை நாம் உணரவேண்டும்.

இறுதியாக எந்தவொரு மருத்துவரீதியான சந்தேகம் இருந்தாலும் அருகிலுள்ள வைத்தியரை நாடுங்கள். உங்கள் சந்தேகங்களை கேட்டுத்தெளிவு பெறுங்கள். தெளிவுபடுத்துவது எங்கள் கடமை. வதந்திகளை தயவு செய்து நம்பாதீர்கள். பகிராதீர்கள்.

Resources
1) SLMA News, September 2017,Volume 10, Issue 9
2) SLMA Guidelines and Information on Vaccines
3) SLBC Programme 'ஆரோக்கிய சந்திப்பு - ' with Dr. Rishard (Consultant VOG) 05/12/2017
கருப்பைவாய்க் கழுத்துப் புற்றுநோய் (Cervical Cancer) - ஒரு விழிப்புணர்வு. கருப்பைவாய்க் கழுத்துப் புற்றுநோய் (Cervical Cancer) - ஒரு விழிப்புணர்வு. Reviewed by Madawala News on 12/06/2017 09:39:00 AM Rating: 5