Kidny

Kidny

பாடசாலை விழுமிய வீழ்ச்சி குறித்து ஓரிரு எண்ணங்கள்.

·
விளைபொருள்களது தரம் பற்றி சிறிதேனும் கவனம் கொள்ளாது, உபபொருள்களை மாத்திரமே
உற்பத்தி செய்து சமூகத்துக்கு வெளிவிடும் பயனுறுதியற்ற தொழிற்சாலைகளாக இன்றைய பாடசாலைகள் மாறிவருகிறது என்பதையே சமீபகால நிகழ்வுகளினூடாக நாம் காண்கிறோம்.

‘பண்புத்தரக் கல்வியினூடாக சிறந்த பிரஜையை உருவாக்குதல்’ என்கிற தூரநோக்கை நுழைவாயிலில் நட்டிருக்கும் பலகையில் வெறுமனே காட்சிப்படுத்துவதோடு நின்று விடுகிறார்கள். பண்பும், தரமும் அற்றுப்போய்விட்ட ஒரு நிறுவனத்தில் விளைபொருளில் மாத்திரம் பண்புத்தரம் எங்கிருந்து வரும்?

ஒரு பாடசாலையின் வளர்ச்சிக்கு இன்றியமையாத காரணிகளான  பாடசாலைக்கான தனித்துவ கலாச்சாரம், பாடசாலை குறித்த பெருமிதம் என்பனவற்றைக் கட்டியெழுப்பாது, வெறுமனே கான்க்ரீட் கட்டடங்களிலும், ஆளுயர மதில் சுவர்களையும் மாத்திரம் அபிவிருத்திக்கான அளவீடாகக் கொள்ளும் சடவாத சக்திகள் சமூகத்தின் சாபக்கேடு. இதனாலேயே ஒழுக்க விழுமியங்கள் இல்லாத ஒரு இளைய சமுதாயம் உருவாகிக் கொண்டிருக்கிறது.

தமது வாண்மைத்துவ வகிபாகத்தை சரிவர நிறைவேற்றாது, பல்வேறு அஜெண்டாக்களுடன் பாடசாலை விவகாரங்களில் மூக்கை நுழைக்கும் தனியாட்கள், நிறுவனங்கள் மற்றும் அரசியல் அல்லக்கைகள் தூக்கிப்போடுகிற எலும்புத்துண்டுகளுக்காக அலையும் வெட்கங்கெட்ட வீணர்களால்தான் சமூகத்தில் பாடசாலை, அதிபர்கள், ஆசிரியர்கள் குறித்து எதிர்மறை விம்பங்கள் கட்டுருவாக்கப்பட்டுள்ளன.

பொறுப்பு வாய்ந்த பதவிகளுக்கு தகுதியற்றவர்கள் நியமிக்கப்படும் போது, திரிசங்கு நிலையில் இருக்கும் தமது பதவிகளைத் தக்கவைத்துக்கொள்ள எந்தவிதமான வாண்மைத்துவ அறமும் இன்றி, எடுப்பார் கைப்பிள்ளையாக எவர்கூட வேண்டுமானாலும் சமரசம் செய்துகொண்டு நெகிழ்ந்து செல்லும் அவல நிலை தொடரவே செய்யும்.

வெறுமனே பக்கசார்பான நிலைப்பாடுகளுடன் இப் பிரச்சினையை அணுகி வழமையான வழவழா சப்பைக்கட்டுகளுடன் கடந்து செல்லாது,  இது குறித்த ஒரு அறிவார்ந்த உரையாடலை நிகழ்த்துவது காலத்தின் தேவை  ஆகும்.

- ரிம்சான் அமானுல்லாஹ் -
பாடசாலை விழுமிய வீழ்ச்சி குறித்து ஓரிரு எண்ணங்கள். பாடசாலை விழுமிய வீழ்ச்சி குறித்து ஓரிரு எண்ணங்கள். Reviewed by Madawala News on 12/07/2017 11:47:00 PM Rating: 5