Kidny

Kidny

மர்ஹும் அஸ்ரப் அவர்களின் மரணத்தில் லாபம் அடைந்தவர்கள் யார் ?


ஸ்ரீ..மு.காங்கிரஸ் கட்சியை உருவாக்கி அதன் மூலம் முகவரி இல்லாதவர்களுக்கெல்லாம்
முகவரி தேடிக்கொடுத்த மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களின் அகால மரணத்தின் மர்மத்தை வெளிக்கொண்டுவருவதற்கு, இந்த கட்சியின் மூத்தபோராளிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள்கூட இந்த விடயத்தில்  ஆர்வம் காட்டுவதை காணமுடியவில்லை. அது ஏன் என்றுதான் புரியாத புதிராகவும் இருக்கின்றது.

2000.09.16ம் திகதி தேர்தல் பிரச்சாரங்களில் கலந்துகொள்வதற்காக, அப்போதைய புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சராக இருந்தவரும், முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான எம்.எச்.எம் அஸ்ரப் அவர்கள் கெலிக்கெப்டரில் கொழும்பிலிருந்து கல்முனையை நோக்கி பிரயாணம் செய்தபோது மாவனல்லை அரநாயக்க ஊரகந்த என்னுமிடத்தில் வைத்து கெலிகெப்டர் விபத்துக்குள்ளாகியதில் அவரும் அவரோடு பயணித்த 12பேரும் அகால மரணமடைந்திருந்தனர்.

இந்த மரணம் ஒரு தற்கொலையாளி ஒருவரினால்தான் நிகழ்ந்ததாக அன்று சந்தேகம் தெறிவிக்கப்பட்டிருந்ததுஇதனை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அன்றய ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரினால் ஒரு ஆணைக்குழுவொன்றும் போடப்பட்டிருந்தது. அந்த விசாரணைகளை தொடர்ந்து நடத்துவோம் என்று அந்த தேர்தலில் வெற்றியடைந்து பிரதமராக பதவியேற்ற ரணில் அவர்களும் வாக்கும் கொடுத்திருந்தார் அது இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என்பதை நாம் அறிவோம்.

இந்த மரணத்தில் பல மர்மங்கள் இருப்பதாக  அன்றய பத்திரிகைகளில் கூறப்பட்டிருந்தது. அன்றய விபத்தில் அஸ்ரப் அவர்களுடன்  திகாமடுல்ல மாவட்டத்தின் பொ.. முன்னனியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் ஒருவரான கதிர்காமத்தம்பி என்பவரும், துறைமுக அதிகாரசபையில் பணிபுரியும் பெரியதம்பி என்பவருடன் இன்னுமொரு தமிழரும் பிரயாணம் செய்தனர். அதோடு தங்காலையைச் சேர்ந்த மௌலானா, மருதமுனையைச் சேர்ந்த ரஹ்மத்துல்லா மற்றும் சாய்ந்தமருதைச் சேர்ந்த அஸீஸ் என்பவரும்மெய்ப்பாதுகாவலர்கள், விமான ஓட்டிகள் என மொத்தமாக அதில் பிரயாணம் செய்த (12)பேருமே கொல்லப்பட்டிருந்தனர்.

திரு.கதிர்காமத்தம்பி அவர்களுடன் பயணஞ்செய்த பெயர் அறியப்படாத அந்த நபரே தற்கொலைதாரி என அன்று தகவல் வெளியாகின. இவர் இரு தினங்களாக அஸ்ரப் அவர்களின் வீட்டில் கதிர்காமத்தம்பி அவர்களுடன் தங்கியிருந்திருக்கின்றார் அவரின் மேலும் சந்தேகம் தெறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சந்தேகங்களை ஊர்ஜீதப்படுத்துவதற்கான மேலதிக சான்றுகளாக அன்றய தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொ..முன்னனியின் சார்பாக போட்டியிட்ட திரு. செழியன் பேரின்பநாயகம் 10.09.2000ம் ஆண்டும், மனோகரன் பிள்ளை என்பவர் 12.09.2000ம் அன்றும் புலிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தபோதும்திரு.கதிர்காமத்தம்பி அவர்களுக்கும் புலிகளுக்குமிடையிலான உறவு வழமைபோன்றே நிலவி வந்திருந்தது.

அதற்கு காரணம் திரு. கதிர்காமத்தம்பி அவர்களின் உறவினை தக்கவைத்துக் கொள்வதன் மூலமே தங்களது இலக்கினை சாதிக்கமுடியுமென புலிகள் கருதியதியமையால்தான் அவருடைய உறவை பேணிவந்துள்ளனர் என்றும் கூறப்பட்டது. அதற்கு ஆதாரமாக கதிர்காமத்தம்பி அவர்களின் படுகொலையைத் தொடர்ந்து அவரின் புதல்வர்கள் இருவருக்கும் ஒரு வருடகால இடைவெளியிலேயே புலிகளின் அனுசரணையோடு தொழில்வாய்ப்புக்கள்  வழங்கப்பட்டிருந்ததுஅதில் ஒருவருக்கு புலிகளின் காரைதீவு அலுவலகத்தில் முக்கிய பொறுப்பொன்றும் வழங்கப்பட்டிருந்ததுமற்றொருவருக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட அரசின் மூலம் வீடமைப்பு அதிகார சபையில் தொழிலும் வழங்கப்பட்டிருந்தது. இது ஏன் என்ற விடயம்  இன்றுவரை மர்மமாகவே இருந்து வருகின்றது.
(நன்றி: குமாரதுரையின் "இலங்கை அரசியல் வரலாறு").

இந்த நிலையில் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களின் மரணம் சம்பந்தமான விசாரணைகளுக்கு அன்றய ரணில் அரசாங்கம்  முக்கியத்துவம் கொடுப்பதை நிறுத்திவிட்டு, அவசர அவசரமாக தலைவரின் குடும்பத்துக்கு அமைச்சரவை யின் அங்கீகாரத்தோடு பல லட்சங்களை நஸ்டஈடாக வழங்க முற்பட்டது.

பேரியல் அஸ்ரப் அவர்களுக்கு (20) லட்சம் ரூபாவும்.
அமான் அஸ்ரப் அவர்களுக்கு (50) லட்சம் ரூபாவும்.
அஸ்ரப் அவர்களின் தாய்க்கு (10) லட்சம் ரூபாவும். வழங்க அன்றய அமைச்சரவைக்கு சிபாரிசு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அஸ்ரப் அவர்களின் தாய் மரணமடைந்திருந்த காரணத்தினால் அத் தொகை அவருக்கு வழங்கப்பட தேவையில்லையென அமைச்சரவை முடிவெடுத்திருந்தது.
இந்த நேரத்தில் ஆச்சரியமான விடயம் யாதெனில் அன்று அமைச்சரவையில் அங்கம்வகித்த முஸ்லிம் காங்கிரஸ் அமைச்சர்கள் யாரும் அஸ்ரப்பின் மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும் என்று அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்பதாகும்.

இந்த நிலையில்தான் இப்போது  முன்னால் மு.காங்கிரஸ் தவிசாளராக இருந்த வசீர் சேகுதாவுத் அவர்கள் முன்னால் தலைவர் அஸ்ரப் அவர்களின் அகால மரணம் சம்பந்தமான அறிக்கைக்கு ஆர்வம் காட்டுகின்றார். அது ஏன் என்ற கேள்விகளுக்கு அப்பால், அவரது கேள்விகளில் உள்ள உண்மைத்தண்மையை அறிவதில் நாம் எல்லோரும் ஆர்வமாகத்தான் உள்ளளோம்.
ஆனால் கட்சியில் முக்கிய நபராக இருக்கும் போது கேட்காத கேள்வியை, கட்சியை விட்டு வெளியேறியதன் பின் கேட்கின்றார் என்றால் அதில் ஏதோ மர்மம் ஒன்றுள்ளது என்பதில் மாற்றுக்கருத்தும் இருக்கமுடியாது.

எது எப்படியிருந்தாலும், தகவல் அறியும் சட்டத்தின் மூலம் அஸ்ரப் அவர்களின் விசாரணை அறிக்கையைப்  பெற முனைந்தபோது அதில் பல பக்கங்களை காணவில்லை என்ற அதிர்ச்சி தரும் விடயமும்  வெளியாகியுள்ளதுஇதற்கு பின்னால் புலிகள் மட்டுமல்ல நமக்குள் உள்ள எலிகளும் சம்பந்தப்பட்டுள்ளார்களா? என்ற சந்தேகமும் வழுக்கின்றது

ஆகவே இந்த விசாரணை அறிக்கையில் என்ன உள்ளது என்பதை பல வருடங்கள் கடந்தாலும் இதன் உண்மைத்தண்மையை அறியவேண்டும். அதற்கு அஸ்ரப்பை எங்களின் மானசீக தலைவன் என்று கூறுபவர்களும், அவரது மனைவியான பேரியல் அஸ்ரப் அவர்களும், அவரது மகனான அமான் அஸ்ரப் அவர்களும் முழு மூச்சாக ஈடுபட வேண்டும் என்பதோடுஇதற்கான காரணம் என்னவென்பதையும் வெளிச்சத்துக்கு கொண்டுவரவேண்டிய பொறுப்பும் அவர்களுக்கு உண்டு என்பதையும் அவர்கள் புரியவேண்டும்.

அப்படி இல்லாதுவிட்டால் குருடன் யானையையப் பார்த்த கதையாக இந்த கொலைசம்பந்தமாக பல தப்பான என்னங்களும் மக்கள் மத்தியிலே விதைக்கப்படும். அது யாருக்கும் ஆரோக்கியமானது அல்ல என்பதனால், இதனை எல்லோருமாக சேர்ந்து வெளிக்கொண்டுவர பாடுபடவேண்டும் என்பதே எங்கள் கருத்தாகும்.

எம்.எச்.எம்.இப்றாஹிம்.
கல்முனை.
மர்ஹும் அஸ்ரப் அவர்களின் மரணத்தில் லாபம் அடைந்தவர்கள் யார் ?  மர்ஹும் அஸ்ரப் அவர்களின் மரணத்தில் லாபம் அடைந்தவர்கள் யார் ? Reviewed by Madawala News on 12/02/2017 12:22:00 AM Rating: 5