Yahya

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும்
ஹாபிஸின் குருஷேத்திர போரும்


-.எச்.சித்தீக் காரியப்பர்-
உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன்னராக அட்டாளைசேனைக்கு
  தேசியப் பட்டியல் எம்.பி வழங்கப்படும் என்ற தனது நம்பிக்கையை கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர்  நஸீர் மீண்டும் வெளியிட்டுள்ளார். அவர் போன்றே  இதே நம்பிக்கையில்தான்  அந்தப் பிரதேச மக்களும் உள்ளனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களும் இது தொடர்பில் வாக்குறுதியை வழங்கி, அந்த மக்களின் அபிலாஷையை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை பொதுவில் காணப்படுகிறது. அவ்வாறே அது விரைவாக நடைபெறவும் வேண்டும்

ஆனால், இந்த விடயத்தில் ஒரு சிக்கல் நிலைமை தற்போது எழுந்துள்ளது. கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்கள், தனக்கே தேசியப்பட்டியல் எம்.பி வழங்கப்பட வேண்டுமென்ற ஒரு கோரிக்கையை கட்சித் தலைமையிடம் நேரடியாக முன்வைக்காவிட்டாலும் அவர் அந்தப் பதவி தனக்கே கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளமை தெட்டத் தெளிவாகிறது.

ஹாபிஸ் நஸீர் அஹமதை தேசியப்பட்டியல் எம்பியாக நியமிக்கும் விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் எதிர்ப்புகள் கிளம்பினாலும் மத்திய அரசாங்கத்தின் ஆட்சி அதிகாரத்திலுள்ள முக்கியஸ்தர்கள் அவருக்கே தேசியப் பட்டியலில் இடம் வழங்கி அவரை எம்பியாக்க வேண்டுமென்ற விடயத்தில் தீவிர முனைப்புக்காட்டி வருகின்றனர் என்ற உண்மையையும் இங்கு கூறத்தான் வேண்டும். இந்த அழுத்தமானது சிலவேளைகளில் கட்சியின் தலைவரான கௌரவ ரவூப் ஹக்கீம் மீதும் திணிக்கப்பட்டிருக்கலாம்

இதேவேளை, “நீங்கள் உங்கள் கட்சி சார்பில் தேசியப் பட்டியல் எம்.பியாக வாருங்கள். நாங்கள் உங்களுக்கு பிரதியமைச்சர் பதவி ஒன்றைத் தருவோம்என்பது ஹாபிஸ் நஸீர் அஹமதுக்கு மத்திய அரசின் ஆளும் தரப்பில் வழங்கப்பட்ட வாக்குறுதி.

கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்ட பின்னர், மட்டு. மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலனாவுடன் இடம்பெற்ற மோதலுடன் ஹாபிஸ் நஸீர் அஹமட் தனது கட்சிக்கான தேர்தல் பணிகள், அரசியல் செயற்பாடுகள் அனைத்தையும் கைவிட்டவராக அல்லது இடைநிறுத்தியவராகக் காணப்படுகிறார். தற்போது அவர் மக்கா சென்றுள்ளார். 29 ஆம் திகதிக்குப் பின்னரே நாடு திரும்புகிறார். அதன் பின்னர் அவர்  தான் சார்ந்த    கட்சியின்  அரசியல் செயற்பாடுகளில் இணைவாரோ  தெரியாது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் விருப்பத்தைக் கொண்டிருக்காத ஹாபிஸ் நஸீர் அஹமட்எதிர்காலத்தில் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும் மீண்டும் அவர் முதலமைச்சராக வர முடியாது என்பது நிர்ணயம் செய்யப்பட்ட உண்மை. அதேவேளை, நாடாளுமன்ற தேர்தல் என்பது   கண்ணுக்கு எட்டாத தொலை தூரத்தில் உள்ளது. இவ்வாறானதொரு நிலையில்தான் அவர் தற்போது தேசியப் பட்டியல் ஊடாக மத்திய அரசில் இணைந்து  கொள்ளும் விருப்பத்தைக் கொண்டிருக்கிறார் என்பது வெளிப்படையான உண்மை. அதன் பின்னர்  வரக் கூடிய பொதுத் தேர்தல் ஒன்றில் அவரை தேசியப்பட்டியல் ஊடாக நியமிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தயாராகவுள்ளனர். அதுவரையில்  ஓர் இடையீட்டு நடவடிக்கையாக அவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் ஊடாக எம்.பியாக நியமித்து அவருக்கு ஒரு பிரதியமைச்சர் பதவி வழங்க அரசு தயாராகவுள்ளது.

இந்த தகவல்கள் எனக்கு கிடைத்தவுடன் நேற்று முன்தினமிரவு அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விடயங்களைக் கூறி, இதன் உண்மைத்தன்மையை தெளிவுபடுத்துமாறு நான் கேட்டுக் கொண்டேன். இதற்கான பதிலை வழங்குவதற்கு அவர் தயக்கமடைந்த நிலையில், தான் நாடு திரும்பியவுடன் இந்த விவகாரம் தொடர்பில்  பேசுவதாகத் தெரிவித்தார். இருப்பினும் நான் கூறிய விடயங்களை அவர் மறுக்கவில்லை.  

இவ்வாறானதொரு இக்கட்டான நிலைமை உண்மையில் எழுந்தால் அமைச்சர் ஹக்கீம் அவர்கள் இருதலைக்கொள்ளி எறும்பான நிலைக்கு தள்ளப்படுவார். இந்த விடயத்தை அவர் மிக நிதானமாகத் தீர்த்து வைக்க வேண்டும். ஒரு புறம் நாகம்மறுபுறம் வேடன் என்ற நிலையில் தீர்க்கமான முடிவை அவர் எடுக்க வேண்டியவாராகவுள்ளார்.

ஹாபிஸ் நஸீர் அஹமதுக்கு தேசியப்பட்டியல் எம்.பி வழங்காவிட்டாலும் பிரச்சினை, வழங்கினாலும் பிரச்சினை என்ற நிலைமை தோன்றும் போது ஏதோ ஒரு தீர்மானத்துக்கு வந்தாலும் ஒரு தரப்பலிருந்து அவர் அதிருப்தியை எதிர்கொள்ள நேரிடும்.

இதேவேளை, ஹாபிஸ் நஸீருக்கு தேசியப்பட்டியல் எம்.பி பதவி வழங்காது அட்டாளைச்சேனைக்கு அதனை வழங்கும் பட்சத்தில் அதனை ஹாபிஸ் நஸீர் அஹமட் ஏற்றுக் கொண்டாலும் மனதளவில் அவர் அதனை வரவேற்பார் என்று கூற முடியாது. இதற்கான அவரது அதிருப்தியின் பிரதிபலிப்புகள் தாமதமாக வெளியானாலும் அதன் விளைவுகள் விபரீதமாகவும் அமையலாம். இந்த நிலையில் மத்திய அரசாங்கத்தின் செல்லப் பிள்ளையான ஹாபிஸ் நஸீரின் செயற்பாடுகள் ஒரு தரப்பால் பாலூட்டி வளர்க்கப்படுவதுடன் அவருக்கு உற்சாகத்தை வழங்குமென்றும் நம்பலாம்.

இவ்வாறானதொரு நிலைமை தோன்றும் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் இன்னொரு பஷீர் அல்லது மற்றொரு ஹஸன் அலி உருவாதனை தடுக்க முடியாது போகலாம். இவர்கள் இருவரையும் விட  மிகுந்த தலையிடி கொண்ட ஒருவராக ஹாபிஸ் நஸீர் அஹமட் மாறும் சாத்தியங்கள் நூறு சதவீதம் காணப்படுகின்றன என்பது மட்டும் உண்மை.

அதேவேளை, இதுவரை காலமும் தங்களுக்கு தேசியப்பட்டியல் எம்.பி கிடைக்கும் என எதிர்பாரத்துக் கொண்டிருக்கும் அட்டாளைச்சேனை மக்களையும் அமைச்சர் ஹக்கீம் அவர்கள் கைவிட முடியாது.

இந்த நிலையில், திருமலை மாவட்ட தேசியப் பட்டியல் எம்பியான தௌபீக்கினால் மட்டுமே கட்சியை பாதுகாக்க நிலைமையும் தோன்றலாம். -.எச்.சித்தீக் காரியப்பர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும்
ஹாபிஸின் குருஷேத்திர போரும்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும்
ஹாபிஸின் குருஷேத்திர போரும் Reviewed by Madawala News on 12/24/2017 10:49:00 PM Rating: 5