Yahya

ஆறு மாதங்கள் கேட்டதற்கு ஆறு நிமிடங்களும் தரமாட்டேன் என்று கூறிய சாணக்கிய தலைவர்..!



கல்முனை மாநகர மேயராக இருந்த சிராஸ் மீராசாய்வு அவர்களின் பதவியை இரண்டரை வருடங்கள் முடிந்தவுடன், ஒப்பந்தப்படி இறுதி இரண்டரை வருடங்களுக்கும் நிசாம் காரியப்பருக்கு வழங்கவேண்டும் என்ற நிலையேற்பட்டபோது, சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகம் கௌரவ முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஹுப் ஹக்கீம் அவர்களை கொழும்புக்குச் சென்று  சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதும், சாய்ந்தமருது பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையிடம் மிகவும் கண்டிப்புடன் நடந்துகொண்டதும் மல்லாமல்,
சிறாஜ் மேயர் பதவியை நிசாம் காரியப்பருக்கு கொடுத்தேயாக வேண்டும் என்று விடாப்பிடியாகவும் இருந்தீர்கள்.( அப்படி ஏன் நடந்து கொண்டீர்கள் என்பதை வேறொரு சந்தர்ப்பத்தில் விரிவாக எழுதுகின்றேன்)

அந்த நேரம் சாய்ந்தமருது பள்ளிவாசல் சம்மேளனம் இறுதியான ஒரு கோரிக்கையாக தலைவரிடம் வைத்தார்கள் அது என்ன கோரிக்கையென்றால்,
தற்போது கடமையிலிருக்கும் சிறாஜ்  மேயர் அவர்களுக்கு,  அவர் செய்து கொண்டிருக்கும் வேலைகளை முடிப்பதற்கு ஆறுமாதங்களாவது தவணை வழங்குங்கள் என்ற கோரிக்கையாகும். அந்தக் கோரிக்கையைக்கூட அன்று சாணக்கிய தலைவர் அவர்கள் இறுமாப்போடு மறுத்ததுமல்லாமல்,  ஆறு மாதங்கள் என்ன ஆறு நிமிடங்கள் கூட தவணை வழங்கமாட்டேன் என்று கூறியதுதான்.

ஒரு ஊர்சார்பான பள்ளிவாசல் நிர்வாகம் தன் காலடிக்கு வந்து கேட்கும் விடயத்தினை மிக அலட்சியமாக மறுத்த விடயமானது அந்த ஊர்மக்களை அவமதித்ததற்கு சமமாகும். இவ் விடயத்தின் பாரதூரத்தை  அறிந்துகொள்ளாமல் இப்படியெல்லாம் நடந்து கொண்ட தலைவனின் சாணக்கியம் இன்று சாய்ந்தமருது விடத்தில் சறுக்கி கிடக்கிறது என்பதே உண்மையாகும்.

அன்று சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகம் இந்த விடயத்தில்  இயன்றளவு சமாதானமாகத்தான் நடந்து கொண்டது.

இன்று அதே பள்ளிவாசல் நிர்வாகம்தான் சாய்ந்தமருது மக்கள் யார்? என்பதை தலைவனுக்கு காட்ட துணிந்து நிற்கின்றார்கள். அன்று ஆறு நிமிடங்களும் தவணை தரமாட்டேன் என்று வீராப்பு பேசிய தலைவருக்கு, இன்று இப்படி நடக்கும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார். 

எல்லாரையும் எல்லா நாளும் ஏமாற்ற முடியாது என்பதை சாணக்கியத் தலைவர்  அவர்கள் கணிக்கத் தவறிவிட்டார் என்பதே கவலைக்குறிய விடயமாகும். இப்படியான சாணக்கியமற்ற நடவடிக்கைகள் காரணமாகவே சாய்ந்தமருது மக்கள் இன்று எங்களுக்கு தனியான பிரதேசசபை தாறுங்கள் என்று கேட்டு போராடுமளவுக்கு நிலமை சென்றுள்ளது எனலாம்.

சாணக்கிய தலைவரே...! 

நீங்கள் இப்படியெல்லாம் நடந்து கொண்டதற்கு காரணம் என்ன? இரு ஊர்களையும் தூண்டிவிட்டு அதிலே குளிர்காயலாம் என்று நினைத்துத்தான் காரணமாகும். 
மேயர் பதவியை பறித்து நிசாமுக்கு கொடுத்தீர்கள் அந்த பதவியினை கல்முனை மக்கள் ஒருகாலும்  சிறாஜியிடமிருந்து  பறித்து எங்கள் ஊரைச்சேர்ந்த நிசாமுக்கு தாருங்கள் என்று கேட்கவில்லை. ஆனால் நீங்களோ சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தது போன்று அன்று நடந்து கொண்டீர்கள்.  அதன் பலனைத்தான் இன்று அறுவடை செய்து கொண்டும் இருக்கின்றீர்கள். அதனால் பாதிக்கப்பட்டது இரு ஊர் மக்களும்தான்.

ஒவ்வொரு ஊர்களுக்கும் ஒவ்வொரு வாக்குகளை கொடுப்பதும் பிறகு அதனை  மீறுவதும்  என்பது உங்களுக்கு கைவந்த கலை, ஆனால் உங்களால் ஏமாற்றப்பட்ட  மக்கள்  உங்களுக்கு ஆப்பு வைக்கத் தொடங்கினால் நீங்கள் தாங்கமாட்டீர்கள். அதன் ஆரம்ப கட்டம்தான் இன்று சாய்ந்தமருது மக்களால் வைக்கப்படும் ஆப்பு என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

என்ன நடக்கப் போகின்றது என்பதை பொருத்திருந்து பார்ப்போம்...!

எம்.எச்.எம்.இப்றாஹிம்.
கல்முனை.
ஆறு மாதங்கள் கேட்டதற்கு ஆறு நிமிடங்களும் தரமாட்டேன் என்று கூறிய சாணக்கிய தலைவர்..!  ஆறு மாதங்கள் கேட்டதற்கு ஆறு நிமிடங்களும் தரமாட்டேன் என்று கூறிய சாணக்கிய தலைவர்..! Reviewed by Madawala News on 12/19/2017 04:17:00 PM Rating: 5