Yahya

முஸ்லிம்களுக்கு துரோகம் புதிதல்ல....!

-எஸ். ஹமீத்
சாரையும் சாரையும் போல தசாப்தங்கள் பின்னிப் பிணைந்து கிடந்த மித்திரனுக்கு வேட்டு
வைத்த அந்தச் சத்துருவின் துரோகம் ஒன்றும் சாமான்யமானதல்ல.

பாராளுமன்றத்திலும் அமைச்சரவையிலும் சந்தித்துக் கொள்ளும் போதெல்லாம் தான் செய்யப் போகும் சதியை மறைத்துக் கொண்டே, போலியாகச் சிரித்து-போலியாகக் கதைத்து நாடகமாடிய அந்தப் பொல்லாத மனது ஒன்றும் இலேசுப்பட்டதல்ல.

மிக்க நம்பிக்கைக்குரியவராகத் தன்னைக் கருதிய ஒருவருக்கு, அவரது எதிரிகளோடு சேர்ந்தே அரசியற் குழியை ஆழமாகத் தோண்டிய அந்த நயவஞ்சகம் ஒன்றும் ஜீரணிக்க முடியுமானதல்ல...

அத்தனைக்கும் மேலாக அந்தக் கடைசி நாளில் வெள்ளை முகத்துடனும் கள்ள மனத்துடனும் போய் அப்பம் விருந்தை ஒரே மேசையில் உட்கார்ந்து உண்டுவிட்டு வந்த அந்தச் சதி வேஷம் ஒன்றும் சகித்துக் கொள்ளக் கூடியதல்ல.

இந்தத் துரோகத்தனம் தெரிந்தும் நாம் துரத்தித் துரத்தி அவரோடு இணைந்தோம்; கூட இருந்தே தன் நண்பருக்குக் குழி பறித்த கோடரிக் காம்பு என்று தெரிந்தும் நாம் அவரைத் தூக்கி வைத்துக் கொண்டாடினோம். ஏனெனில் நமக்கு அன்று அந்தத் தெளிவான மோசக்காரரைத் தவிர, அந்தப் பகல் வேஷக்காரரைத் தவிர வேறு தெரிவுகள் இருக்கவில்லை.

அதியுச்ச பதவியொன்றிற்காகத் தனது அருமை நண்பனுக்கே திட்டமிட்டுத் துரோகமிழைத்த ஒருவர் மொழி, மதம், கலாசாரம் என்ற எல்லாவற்றினாலும் வேறுபட்டிருக்கும் புதியவர்களான நமக்கு நல்லது செய்வார் என்று அன்று நாம் நம்பியது எத்தனை முட்டாள்தனமானது என்று இப்போது மெல்ல மெல்ல நமக்குப் புரிகிறது.

உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்த ஒருவரை நம்பி நமது வாக்குகளை வாரியிறைத்த மடமைத்தனத்திற்கான கூலியைத்தான் அண்மைக் காலங்களாக நாம் அனுபவித்து வருகிறோம்.

கோழிக்குஞ்சுகளான நாம் புறாவிடமிருந்து தப்புவதற்குக் கழுகிடம் அடைக்கலம் தேடியிருக்கிறோம்...

முயல்களான நாம் மானுக்குப் பயந்து புலியிடம் சரண் புகுந்திருக்கிறோம்...

பேயென நம்பிப் பயந்து பிசாசிடம் தஞ்சம் புகுந்திருக்கிறோம்....

சட்டிக்கு அஞ்சி நெருப்புக்குள் பாய்ந்திருக்கிறோம்...

ரணிலும் ராஜிதவும் சம்பிக்க கோஷ்டிகளும் உருவாக்கிப் போஷித்து வேண்டிய உதவிகளை வழங்கி வளர்த்த பொதுபல சேனா கடந்த அரசாங்கத்தைக் கனகச்சிதமாக வீழ்த்தி விட்டது. உள்நாட்டு இனக்கலவரம் ஒன்றை உருவாக்கி முன்னைய அரசாங்கத்தைக் கவிழ்க்க நினைத்த காரியம் கைகூடாவிட்டாலும், முஸ்லிம்களுக்கு வெறுப்பேற்படுத்தி மகிந்தவைத் தோற்கடிக்கும் சதிக்கூட்டத்தின் ஆணையை நிறைவேற்றிக் கொடுத்துவிட்டது அது.

பொதுபல சேனாவின் உண்மை முகம் இன்னதென்று அறிந்து கொள்வதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. எல்லாம் முடிந்த பின்னர்தான் மகிந்தவுக்கும் பிரதானிகளுக்கும் பொதுபல சேனா என்பது கூடத் தமக்கெதிரான சதிவலையின் ஒரு பாகம் எனத் தெரிய வந்தது

நம்மால்-நமது ஒற்றுமையால் பதவிக்கு வந்த காலம் தொடக்கம் நமக்கெதிரான சூழ்ச்சிகளைப் பின்னுவதிலேயே திருவாளர் M3 கவனம் செலுத்துகிறார். மாகாணசபைத் திருத்தச் சட்ட மூலம் கொண்டு வந்து நமது மாகாண பிரதிநிதித்துவங்களுக்கு வேட்டு வைக்கிறார்...

புதிய அரசியலமைச் சட்டத்தை ஏற்படுத்தி நமது பாராளுமன்றப் பிரதிநிதித்துவங்களைக் குறைக்கும் நடவடிக்கைகளை வெகு சூட்சுமமாக முன்னெடுக்கிறார்.

வில்பத்துக் காட்டை முஸ்லிம்கள் அழிப்பதாக இனவாதிகள் மேற்கொண்டுவரும் இனவெறிப் பிரசாரத்துக்கு மறைமுக ஆதரவு வழங்குகிறார்...பகிரங்கமாகவும் ஆணைக்கு குழு அமைத்து விசாரணை செய்கிறார்...இரவோடு இரவாக வில்பத்து விஸ்தரிப்புக்கான வர்த்தமானி அறிவித்தல் விடுத்து, அங்கு வாழும் வீடற்ற அகதிகளின் வாழ்க்கையில் மண்ணையள்ளிப் போடுகிறார்.

முஸ்லிம்களுக்குச் சொந்தமான மாயக்கள்ளி மலையில் புத்தர் சிலையைக் கொண்டு வந்து வைத்து விகாரை அமைக்கும் இனவாதிகளின் நடவடிக்கைகளைத்  தாராளமாக இரசித்துக் கொண்டிருக்கிறார்...

கிந்தோட்ட முஸ்லிம்களின் வீடுகளும் கடைகளும் தீக்கிரையானது பற்றி ஒப்புக்குக் கூட ஓர் அனுதாப அறிக்கையை வெளியிட மனமில்லாதிருக்கிறார்... கண்டிப்பதாக ஒரு சொல் சொல்வதற்குக் கூட அவரது கல்நெஞ்சம் இடம் தரவில்லை...

புத்த பிக்குகளைத் தரக்குறைவாக யாரும் பேசுவதை அனுமதிக்க மாட்டேன் என ஆவேசமாகக் கூறுகின்றவர், அதே புத்த பிக்குகள் முஸ்லிம்களைக் கருவறுக்கும் காரியங்களைக் கைகட்டி வேடிக்கை பார்க்கிறார்....

யாழ்ப்பாணத்தில் இன்னும் முஸ்லிம்கள் இருக்கிறார்களாவென ஏளனமாகக் கேட்கிறார்....

கரையிலில்லாவிட்டாலும் கரைக்கு அண்மையில் இடுப்பளவு  நீரிலாவது நம்மை இறக்கிவிடுவார் என்று நாம் நம்பிக்கையோடு ஏற , அவரோ நடுக்கடலில், தலையளவு தண்ணீருக்கு மேல் நம்மைத் தள்ளிவிட்டிருக்கிறார்...

நாம் என்ன செய்யப் போகிறோம்...? இனி யாரை நம்பப் போகிறோம்...?

அந்த அல்லாஹ்தான் நமக்கொரு வழி காட்ட வேண்டும்!
முஸ்லிம்களுக்கு துரோகம் புதிதல்ல....!  முஸ்லிம்களுக்கு துரோகம் புதிதல்ல....! Reviewed by Madawala News on 12/30/2017 07:32:00 PM Rating: 5