Yahya

பலப் பரீட்சைக்குள் கோட்டை!



எம்.எம்.ஏ.ஸமட்
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களுக்கான திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு
முதன்முறையாக கலப்புத்தேர்தல் ஒன்றை இலங்கை வாக்காளர்கள் சந்திக்கவுள்ளனர்.புதிய முறைமையின் கீழ் 25 மாவட்டங்களிலுமுள்ள உள்ளுராட்சி சபைகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்கமைய கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுத்தாக்கல் அறிவிக்கப்பட்டு அதற்கான வேட்புமனுத்தாக்கல் செய்யும் காலம் கடந்த 14ஆம் திகதி நிறைவடைந்திருக்கிறது. அத்தோடு, எஞ்சிய 248 உள்ளுராட்சி மன்றங்களுக்கு வேட்டுமனுதாக்கல் செய்யும் நடவடிக்கை கடந்த 18ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 21ஆம் திகதி நன்பகளுடன் நிறைவடையவுள்ள நிலையில், நாளடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள 341 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் எதிர்வரும் 2018 வெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெறுமென சுயாதீன தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் கோரப்பட்ட தினத்திலிருந்தே இலங்கையின் அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. கட்சித் தலைமைகள் ஆள் பிடிக்கும் போராட்டத்தில்  கட்சித் தொண்டர்களைக் களமிறக்கி அப்பணியினை கட்சிதமாக செய்து வருகின்றனர். இதனால், பலதரப்பட்ட பேரம்பேசல்களுக்கு மத்தியில் கட்சித் தாவல்கள் பரவலாக இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகிறது.

தெற்கில் மாத்திரமின்றி வடக்கு மற்றும் கிழக்கிலும் கட்சித் தாவல் இடம்பெற்று வருவதையும் கட்சி தாவுகின்றவர்கள் கட்சித்தாவல்களுக்கான கதைகளை வடிவமைத்து ஊடகங்களில் பதிவேற்றி வருவதையும் காணலாம். 

இலங்கை அரசியலில் தேர்தல் கால கூட்டமைப்புக்களும் கட்சித்தாவல்களும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தவை என்பது எழுதப்படாத நியதியாகிவிட்ட நிலையில், முஸ்லிம் அரசியல் களத்தில்மக்கள் நல செயற்பாடுகள் தொடர்பான நடவடிக்கைகள் முன்னுரிமைப்படுத்தப்படாது, மக்களுக்கான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆரோக்கியமான திட்டங்களை முன்வைக்காது கட்சிகளைப் பலப்படுத்தும் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கி தேர்தல் பலப்பரீட்சைக்காக் கட்சிகளின் பக்கம் ஆட்களை இழுத்தெடுக்கும் கைங்கரியங்கள் மிக வேகமாக செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

இத்தேர்தலானது கீரைக் கடைக்கும் எதிர்கடை என்ற நிலையை முஸ்லிம் அரசியல் தளத்தில் உருவாக்கியிருக்கிறது. ஒவ்வொரு கட்சியும் எங்கெல்லாம் கட்சியைப் பிரபல்ய்ப்படுத்தி வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியுமோ அங்கெல்லாம் தனித்தும், கூட்டமைப்புக்களை ஏற்படுத்தியும் தேர்தல் களத்தில் இறங்குவதற்கான நடவடிக்கைளை மிக மும்முரமாக மேற்கொண்டு வருகின்றன.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலும் முஸ்லிம் அரசியலும்
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முஸ்லிம் அரசியலைப் பொறுத்த வரையில் மரணப் போராட்டமாக மாறியிரப்பதை அவதானிக்க முடிகிறது. போட்பாளர்களை களமிறக்குவதில் பல பிரசித்தங்களை கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இதனடிப்படையில், புதிதாக அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணி நாடு முழுவதிலுமுள்ள 22 உள்ளுராட்சி சபைகளுக்கும் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்தும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டிணைந்தும் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல மாவட்டங்களிலும்  உள்ளுராட்சி மன்றங்களுக்கு போட்டியிடவுள்ள நிலையில் தேசிய காங்கிரஸ் அம்பாறையில் தனித்து போட்டியிடவுள்ளது. 

இந்நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் சகல சபைகளுக்கும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்தே போட்டியிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஒரிரு சபைகளுக்கு தனித்துப் போட்டியிடும் எனவும் நம்பப்படுகிறது. இவ்வாறு  முஸலிம் அரசியலில் பல கட்சிகள் கூறுகளாக பிரிந்தும் கூட்டமைத்தும் எதிர்வரும் தேர்தல் களத்தில் முஸ்லிம் வாக்குகளைப் பெறவுள்ளன.

ஒன்றுபட்ட வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் வாக்குப்பலத்தினால் முழு இலங்கை முஸ்லிம்களின் அரசியல் அடையாளமாக மர்ஹும் அஷ்ரபினால் வளர்த்தெடுக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் எனும் ஆல மரம் அவரின் அகால மரணத்தோடு பல கட்சிகளாக உடைந்து  கடந்த 2001 பொதுத் தேர்தல் முதல் தேர்தல் களத்தில் ஏட்டிக்குப் போட்டியாக செயற்பட்டுவருவதன்  விளைவு  முஸ்லிம் அரசியல் தனித்துவம் மீண்டும் இந்நாட்டின் பிரதான கட்சிகளிடம் அடகு வைக்கப்பட்டுவிட்டது என்று கூறப்படுவதையும் மறுத்துரைக்க முடியாது.

ஏனெனில், மர்ஹும் அஷ்ரபின் ஏறக்குறைய 10 வருட அரசியல் அதிகாரமிக்க காலத்தில்  ஒரு தனிப்பெரும் பலமான கட்சியாக விளங்கிய முஸ்லிம் காங்கிரஸ் கடந்த 17 வருட காலத்திற்குள் பல்வேறு கூறுகளாக உடைந்து சிதைந்திருப்பதனால் அரசியல் வாதிகள் இலாபடைந்திருந்தாலும் முஸ்லிம்களின் ஒன்றுபட்ட வாக்குப்பலம் பலமிழந்திருப்பதுடன் முஸ்லிம்களின் உரிமை விடயத்தில் தனித்துவத்துடன் குரல் எழுப்ப முடியாத நிலையையும் தேசிய அரசியலில் உருவாக்கியிருக்கிறது.

கடந்த 17 வருட காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் மீது ஏற்பட்ட அதிருப்தி பல கட்சிகளை பிரசவிக்கச் செய்துள்ளது. அக்கட்சிகளின் பிரசவமானது கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையாகக் கருதப்படும் அம்பாறை மாவட்டத்தையும் அசைக்கத் தொடங்கியிருக்கிறது. முஸ்லிம் காங்கிரஸுக்கு இம்முறை தேர்தல்  அம்பாறை மாவட்டத்தில் பெரும் பலப் பரீட்சையாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையாக அம்பாறை மாவட்டம் தொடர்ந்து நிலைக்குமா?  அல்லது கைநலுவுமாக என்ற கேள்விகள் தற்போது மக்கள் மத்தியில் எழுப்பப்படுகிறது.
இருப்பினும், எதிர்வரும் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறையில் அனைத்து சபைகளையும் கைப்பற்றும் என முஸ்லிம் காங்கிரஸ் கூறி வருகின்றபோதிலும் ஐக்கிய தேசியக் கட்சியிடம் முஸ்லிம்களின் வாக்குக்கள் தாரைவார்த்துக் கொடுக்கப்படப்போகிறது என்றும் அப்பாறையில் இக்கட்சி தனித்து களமிறங்க வேண்டும் என்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்தவர்களாகவுமுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையாக தொடர்ந்தும் இருக்குமாக, இக்கட்சியின் வாங்கு வங்கி காப்பாற்றப்படுமா என்பதைத் தீர்மானிக்கும் ஒரு நாள்தான் எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் திகதியாகும். முஸ்லிம் காங்கிரஸின் முதுகெலும்பாகவுள்ள இம்மாவட்ட மக்களுக்கு கடந்த காலங்களில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளும், அவை நிறைவேற்றப்படாது காலம் கடத்தப்பட்டமையும், அவற்றோடு முஸ்லிம் காங்கிரஸின்  மூத்த உறுப்பினர்கள் புறக்கணிக்கப்பட்டமையுமென பல்வேறு காரணங்களினால் ஏற்பட்ட மனத்தாக்கங்களும் அவை தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களும் எதிர்வரும் தேர்தலினூடாக வெளிப்படுத்தப்படும் என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது.

இத்தேர்தல் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸுக்கு உச்ச கட்ட சவாலாக அமையவுள்ளதோடு குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையாகக் கருதப்படுகின்ற அம்பாறை மாவட்டத்தில்;  பெரும் பலப்பரீட்சைக்கு இக்கட்சி முகம்கொடுக்க நேரிடும் என்பதிலும் ஐயமில்லை.

திகாமடுல்ல தேர்தல் மாவட்டமும் முஸ்லிம் காங்கிரஸும்
4415 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக்கொண்ட இம்மாவட்டம்  4 தேர்தல் தொகுதியையும் 20 உள்ளுராட்சி மன்றங்களையும், 20 பிரதேச செயலகங்களையும் 503 கிராம சேவகர் பிரிவுகளையும் 648,057 சனத்தொகையையும் கொண்ட ஒரு மாவட்டமாகவுள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் செறிவாகவும் அதிக எண்ணிக்கையிலும் வாழும் மாவட்டமாக அம்பாறை எனும் நிர்வாக மாவட்டம் விளங்குகின்றது.

2011ஆம் ஆண்டின் சனத்தொகை புள்ளிவிபரங்களின் பிரகாரம் அம்பாறை மாவட்டத்தில் மொத்தமாக 282,484 முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் அம்பாறைத் தொகுதி தவிர்ந்த ஏனைய தொகுதிகளில் அதிகளவில் முஸ்லிம்கள் செறிந்து வாழ்வதானது முஸ்லிம்களின் அரசியல் பலத்திற்கு பக்கபலமாகவுள்ளது. 

இப்பக்கபலத்தைப் பயன்படுத்தித் தான் முஸ்லிம் காங்கிரஸை மர்ஹும் அஷ்ரப் வளர்த்தெடுத்தார். அவர் இம்மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸை ஆழமாக விதைத்து விட்டுச் சென்றதனாலேயே இம்மாவட்டத்தில் இக்கட்சி நிலைத்து நிற்கின்றது. இருப்பினும், முஸ்லிம் காங்கிரஸின் இம்மாவட்ட இருப்பை தீர்மானிக்கும் தேர்தலாக எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் அமையும்  என்பதில் சந்தேகமில்லை.

கடந்த காலங்களில் இக்கட்சி இழைத்த தவறுகளின் பெறுபேற்றை அறுவடை செய்யும் ஒரு தேர்தலாகவும் இத்தேர்தல் அமையவுள்ள நிலையில், கடந்த காலத் தேர்தல் பெறுபேறுகளை அவதானிக்கையில் இக்கட்சி திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் இதுவரை பலத்துடன் காணப்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

முஸ்லிம் காங்கிரஸ் 1986ஆம் ஆண்டு  அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்ட பின்னர் 1988ஆம் ஆண்டு நடைபெற்ற வட கிழக்கு மாகாண சபைத்தேர்தலின்போது அம்பாறை மாவட்டத்தில் 90,436 வாக்குகளைப் பெற்று 9  ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது. 1989ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது 61,325 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தைப் பெற்றுக் கொண்டதுடன், 1994ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் 75,092 வாக்குகள் முஸ்லிம் காங்கிரஸுக்குத் கிடைத்ததுடன் 2 ஆசனங்களும் கிடைக்கப் பெற்றன.

அவ்வாறு 2000ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பொது ஜன முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டு  கூட்டமைப்பு பெற்றுக்; கொண்ட  136,423 மொத்த வாக்குகளினால் பெறப்பட்ட 4 ஆசனங்களல்  3 ஆசனங்கள் முஸ்லிம் காங்கிரஸுக்குரியதாகும். 2001ஆம் ஆண்டின் பாராளுமன்றத் தேர்தலில் 75,257 வாக்குகளையும் 3 ஆசனங்களையும் பெற்றதோடு 2004ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் 76,563 வாக்குகளையும் 2 ஆசனங்களையும் முஸ்லிம் காங்கிரஸ் தனதாக்கிக்; கொண்டது. 

இவ்வாறு 2008ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இம்மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டு 121,272 வாக்குகளைப் பெற்றதுடன் இக்கூட்டணி பெற்ற ஆசனங்களில் முஸ்லிம் காங்கிரஸுக்கு 6 ஆசனங்கள் கிழக்கு மாகாண சபையில் கிடைக்கப் பெற்றன. 2010ல் இதே கூட்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 90,757 வாக்குகளைப் பெற்றதுடன் 2 ஆசனங்கள் முஸ்லிம் காங்கிரஸுக்கு கிடைத்தன. 2012ல் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அம்பாறையில் தனித்துப் போட்டியிட்ட இக்கட்சி 90,757 வாக்குகளைப் பெற்றதுடன் 4 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது. இறுதியாக 2015ல் நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டு 3 ஆசனங்களை முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக் கொண்டது.

இவ்வாறு இக்கட்சி பெற்ற வாக்குப் பெறுபேறுகளின் அடிப்படையில் நோக்குகையில் இலங்கைளின் எந்த மாவட்டத்திலும் இல்லாத வாக்குப் பலம் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸுக்குள்ளது என்பது புலப்படுகின்றபோதிலும் இவ்வாக்கு வங்கியை தக்கவைத்துக்கொள்வதற்கு தற்போதைய முஸ்லிம் காங்கிரஸ் தலைமை தவறிழைத்திருக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கள் கடந்த இரு வருடங்களாக பரவலாக முன்வைக்கப்பட்டு வருவதையும் மறைக்க முடியாது.

இக்கட்சி உருவாக்கத்தின் நோக்கம் திசைமாற்றப்பட்டிருக்கிறது. இக்கட்சி இயக்கமாக உருவாக்கப்பட்ட காலத்தில் கொண்டிருந்த பல இலக்குகள் தற்போதைய தலைமையினால் அடையப்படவில்லை. அல்குர்ஆனின் போதனைகளையும் நபி (ஸல்) அவர்களின் தலைமைத்துவத்தின் வழிகாட்டல்களையும் மையமாக வைத்து முஸ்லிம் சிறுபான்;மை சமூகத்தின் அரசியல், கல்வி, பொருளாதார, கலாசார , சமயப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் காண்பதற்காக இலங்கை நாட்டில் ஒரு தேசிய அரசியல் இயக்கமாக உழைத்தல் உட்பட முஸ்லிம் காங்கிரஸின் அடிப்படைக் கொள்கைகளும் இலக்குகளும் கட்நத 17 வருடகாலமாக தவறவிடப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டப்படுகிறது.

முஸ்லிம் காங்கிரஸின் அடிப்படைக் கொள்கைகளையும் இலக்குகளையும் அடைந்துகொள்ளும் பொருட்டு அனைவரையும் ஒற்றுமைப்படுத்தி இக்கட்சியை கட்டியெழுப்பி ஏறக்குறைய 3 இலட்சம் மக்கள் சக்தியை இக்கட்சியில் இணைத்துவிட்ட நிலையில்தான் இக்கட்சியின் ஸ்தபாகத் தலைவர் இவ்;வுலகை விட்டு மறைந்தார். இருப்பினும,; இக்கட்சியின் முகவரி தெரியாத பலர் இக்கட்சிக்குள் உள்வாங்கப்பட்டு அதன் மூலம் இக்கட்சியின் மூத்த போராளிகள் ஓரங்கட்டப்பட்டன் விளைவு இக்கட்சிக்கு எதிராக பல கட்சிகளை உருவாக்கி ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு என்ற புதிய முன்னணியியையும் தோற்றுவித்திருக்கிறது. 

இம்முன்னணி எதிர்வரும் தேர்தல் களத்தில் பலமுடன் களமிறங்கவுள்ளதானது அம்பாறையில் பலப்பரீட்சைக்கு முஸ்லிம் காங்கிஸை நேரிடச் செய்திருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

பலப்பரீட்சையும் மக்கள் தீர்ப்பும்

முஸ்லிம் அரசியல் களத்தில் கிழக்கு மாகாணம் முக்கிய பங்கு வகிப்பது வழமை. ஏனெனில; கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் முஸ்லிம்களின் அதிகம் என்ற காரணத்தினால் முஸ்லிம் அரசியலுக்கு கிழக்கு மாகாணம் பெரும் செல்வாக்குக் செலுத்துகிறது. 

கடந்த பொதுத்தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் வாக்களிப்பதற்கு 1,087,776 வாக்காளர்கள் தகுதி பெற்றிருந்தனர். இதில் 365,167 வாக்களர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலும், 256,852 வாக்காளர்கள் திருகோணமலை மாவட்டத்திலும் 465,757 வாக்காளர்கள் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்திலும் வாக்களிக்கத் தகைமை பெற்றிருந்தனர். இவ்வாக்காளர் எண்ணிக்கையில் பாரியளவில் மாற்றம் இல்லாதபோதிலும் ஓரளவு எண்ணிக்கை அதிகரிப்பு ஏற்பட்டிருக்கிறது.

கடந்த 2015 பொதுத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தின் அம்பாறை தேர்தல் தொகுதியில் 161,999 வாக்காளர்களும், பொத்துவில் தொகுதியில் 152,147 வாக்காளர்களும், சம்மாந்துறைத் தொகுதியில் 80,357 வாக்காளர்களும், கல்முனைத் தொகுதியில் 71,254 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். 

இருப்பினும; திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கையுடன் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக 27,985 பேர் புதிதாக வாக்களர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டிருக்கிறார். இதன் அடிப்படையில் இம்முறை நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மொத்தமாக 493,742 வாக்காளர்கள் இம்மாவட்டத்தில் வாக்களிக்கவுள்ளனர்.

திகாமடுல்ல மாவட்டத்தின் அம்பாறைத் தொகுதி தவிர்ந்த ஏனைய பொத்துவில், சம்மாந்துறை மற்றும் கல்முனைத் தொகுதிகளிலுள்ள வட்டாரங்களில் பெரும் பலப் பரீட்சைக்கு முஸ்லிம் காங்கிரஸ் முகம் கொடுக்கவுள்ளது. இம்மாவட்டத்தின் தமிழ் முஸ்லிம மக்கள் வாழும் வட்டாரங்களின் எண்ணிக்கைகளின் அடிப்படையில் நோக்குகின்றபோது கல்முனை மாநகர சபைக்கு 22 வட்டாரங்களும், அக்கரைப்பற்று மாநகர சபைக்கு  12 வட்டாரங்களும், நாவின்வெளி பிரதேச சபைக்கு 07 வட்டாரங்களும், சம்மாந்துறை பிரதேச சபைக்கு 10 வட்டாரங்களும,; இறக்காமம் பிரதேச சபைக்கு 07 வட்டாரங்களும், அக்கரைப்பற்று பிரதேச சபைக்கு 05 வட்டாரங்களும், பொத்துவில் பிரதேச சபைக்கு 12 வட்டாரங்களும், அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு 11 வட்டாரங்களும், காரைதீவு பிரதேச சபைக்கு 07 வட்டாரங்களும், நிந்தவூர் பிரதேச சபைக்கு 08 வட்டாரங்களும், திருக்கோவில் பிரதேச சபைக்கு 10 வட்டாரங்களும,; ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கு 10 வட்டாரங்களும் என வகுக்கப்பட்டுள்ள நிலையில் முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள வட்டாரங்களுக்கான போட்டி மிகப் பலமாக அமையப்போகிறது.

தேசிய காங்கிரஸ் அக்கறைப்பற்று மாநகர சபையையும் அக்கறைப்பற்று பிரதேச சபையையும் கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில், கல்முனை மாநகர சபையை எந்தக் கட்சி அல்லது எக்கூட்டமைப்பு ஆளும் என  உறுதிப்படக் கூற முடியாதுள்ளது. இத்தனை காலமும் முஸ்லிம் காங்கிரஸினால் ஆளப்பட்டு வந்த கல்முனை மா நகரம் இத்தேர்லில்  முஸ்லிம் காங்கிரஸ் கல்முனை மா நகரை இழக்குமாக என்ற சந்தேகம் நிலவுகிறது. கல்முனை மா நகரத்தின் 22 வட்டாரங்களில் சாந்தமருதூரிலுள்ள 6 வட்டாரங்களுக்கும் தனிப் பிரதேச சபைக்கான  கோஷங்களை முன்வைத்து அதற்கான போராட்டங்களை மேற்கொண்டுள்ள நிலையில் வேட்பாளர்கள் சுயட்சையாகக் களமிறங்கவுள்ளனர்.

கல்முனை மாநகரின் ஏனைய வட்டாரங்களில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு,  முஸ்லிம் காங்கிரஸ் - ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணி, நல்லாட்சிக்கான தேசிய ஐக்கிய முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சுதந்தழரக் கூட்டமைப்பு உட்பட சுயேட்சைக் குழுக்கள் என பல்முனைப் போட்டி நிலவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இவ்வெதிர்பார்ப்புக்கு மத்தியில் ஏனைய சம்மாந்துறை, இறக்காமமம், அட்டாளைச்சேனை, நிந்தவூர் பொத்துவில்  ஆகிய முஸ்லிம்களை அதிகம் கொண்ட உள்ளுராட்சி மன்றங்களுக்கான வட்டாரங்களிலும் முஸ்லிம் காங்கிரஸ் பெரும் போட்டிச் சவால்களை எதிர் நோக்கும் என்பதில் சந்தேகமில்லை.இதனால் ஒட்டுமொத்தமாக முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையான அம்பாறை மாவட்டம் இக்கட்சிக்குப் பெரும் பலப்பரீட்சையாக அமையயும் இப்பலப்பரீட்சையின் தீர்ப்பு மக்கள் பக்கமே உள்ளது

விடிவெள்ளி – 2017.12.21

பலப் பரீட்சைக்குள் கோட்டை!  பலப் பரீட்சைக்குள் கோட்டை! Reviewed by Madawala News on 12/22/2017 12:12:00 AM Rating: 5