Yahya

என்னை ஏமாற்ற திட்டமிட்டதை அறிந்தே சுயேட்சை குழுவில் களமிறங்கினேன்..இப்திகார் ஜெமீல் என்னைப் பற்றி ஊடகங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகளை பதிவிட்டுள்ளார்.
அது தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்துவது எனது கடமையாகும். அவரது குறித்த அறிக்கையில் நான் ஊழல் செய்த ஒருவராக குறிப்பிட்டுள்ளார். நான் எங்கு ஊழல் செய்தேன் என்பதை அவர் ஆதாரத்துடன் வெளிப்படுத்த வேண்டும். நான் ஊழல் செய்த ஒருவராக இருப்பின் நான் கேட்கும் அனைத்தையும் தந்து, என்னை ஏன் தேர்தலில் போட்டியிடச் செய்ய வேண்டும். இதுவே அவரது அறிக்கை தொடர்பிலும் அவர் தொடர்பிலும் மக்கள் தெளிவை உணர்ந்துகொள்ள போதுமான சான்றாகும்.

இப்திகார் ஜெமீல் குழுவினர் என்னை ஏமாற்ற திட்டமிட்டிருந்தார்கள். நான் இவர்களின் ஏமாற்று வேலைகளை நன்கு அறிவேன். எனக்கு இப்திகார் ஜெமீல் மீது சிறிதேனும் நம்பிக்கையில்லை. அவர்களின் ஏமாற்று சிந்தனையை அறிந்த நான், எழுத்து மூலம் அனைத்தையும் தருமாறு கோரினேன். அதனை வைத்து எதனையும் செய்ய முடியாது. இவர்கள் என்னை ஏமாற்றும் போது அதனை எனது மக்களிடம் காட்டி இவர்களது முகத்தை தோலுரிக்க  முடியும். எனக்கு நம்பிக்கையளிக்கும் வண்ணம் எதனையும் அவர்கள் செய்து தரவில்லை. என்னை ஏமாற்ற போகிறார்கள் என்பதை உறுதி செய்து கொண்டேன். சுயேட்சை குழுவை எனது அடுத்த தெரிவாக்கினேன். இதனை சற்றும் எதிர்பாராத இப்திகார் ஜெமீல் கிலி கொண்டு, என்னை வீழ்த்த உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இவரின் இந்த கிலியே எனது வெற்றியை உறுதி செய்கிறது.

நான் ஐக்கிய தேசிய கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டதில் முதன்மையானவர் என்பதை யாரும் மறுக்க முடியாது. இதற்காக எனது தனிப்பட்ட பல கோடிப் பெறுமதியான சொத்துக்களை (ஆயிரம் இலட்சம்) இழந்துள்ளேன். இப்படியான எனது நகர பிதாவை கோருவதற்கான பூரண தகுதி உள்ளது. இவ்வாறான என்னை புறந்தள்ளும் போது அதனை பார்த்துக்கொண்டு, கை கட்டி நிற்க முடியாது. அதற்கு பாடம் புகட்டவே சுயேட்சை குழு எனும் ஆயுதத்தை கையில் ஏந்தினேன். எனக்கு இப்திகார் ஜெமீல் மீது கோபமே தவிர ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் மீதோ கட்சியின் மீது சிறிதளவேனும் கோபமில்லை. இப்திகார் ஜெமீல் சொல்வது போன்று நான் கேட்ட அனைத்தையும் எனக்கு தந்திருந்தால் இக் கட்சியை விட்டு செல்ல வேண்டிய எந்த அவசியமும் எனக்கில்லை.

நான் பெசில் ராஜபக்ஸவுடன் பேரம் பேசியே இப்படி செய்ததாக இப்திகார் ஜெமீல் கூறியுள்ளார். நான் எச் சந்தர்ப்பத்திலும் பெசில் ராஜபக்ஸவுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளவில்லை. எனக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில்  பல உயர் பதவிகளை தருவதாக கூறினார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா என்னிடம் பேசியுள்ளார். இருந்த போதிலும் நான் பதவிக்காக சோரம் போகவில்லை. இத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு குறுகிய காலத்துக்கு முன்பு கூட இப்திகார் ஜெமீலுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தேன். இறுதியாக ஈடன் கொட்டலில் எங்களது பேச்சு வார்த்தை நடந்திருந்தது. நான் ஏற்கனவே பெசில் ராஜபக்ஸவுடன் தொடர்பில் இருந்திருந்தால் ஏன் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட இத்தனை பிரயத்தனம் எடுத்திருக்க வேண்டும்?

இப்திகார் ஜெமீலை ஐக்கிய தேசிய கட்சியில் உள் வாங்க, நான் இம்தியாஸ் பாக்கிர் மாக்காரிடம் பரிந்துரை செய்திருந்தேன். சேவை செய்யக் கூடியவர் என நினைத்து ஐக்கிய தேசிய கட்சியில் நான் பிடித்து வைத்திருந்த இடத்தையும் மகிழ்வோடு வழங்கினேன். கட்சிக்குள் நுழைந்த இவர், அவர் கட்சியினுள் உள் வாங்கப்பட பிரதான காரணமாக இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் உட்பட பல மூத்த உறுப்பினர்களுக்கு  துரோகமிழைத்தார். எஞ்சியுள்ள மூத்த உறுப்பினர்  நான் மட்டுமே. இப்போது எனது மடியிலும் கையை வைத்துள்ளார். இதனை தோற்கடிக்கவே சுயேட்சையில் களமிறங்கியுள்ளேன். இதனை பார்த்துக்கொண்டிருந்தால் பேருவளையில் ஐக்கிய தேசிய கட்சியை குடும்ப கட்சியாக மாற்றி விடுவார்.மக்களும் என்னோடு கை கோர்த்துள்ளனர். 

நான் ஹம்சா ஹாஜியார், முஸ்பி ஆகியோரையும் இணைத்துக்கொண்டு செயற்படவே விரும்பியிருந்தேன். நான் எனது நண்பர்களை ஆறு பேரை களமிறக்க இருந்ததாக கூறியுள்ளார். அவர்கள் எனது நண்பர்கள் அல்ல. அவர்கள் கட்சிக்காக பாடுபட்ட கடந்த காலங்களில் தேர்தல்களில் களமிறங்கிய முக்கிய நபர்கள். அனைத்தையும் இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறார். உண்மையின் பக்கம் வெற்றி கிட்டும்.
என்னை ஏமாற்ற திட்டமிட்டதை அறிந்தே சுயேட்சை குழுவில் களமிறங்கினேன்..  என்னை ஏமாற்ற திட்டமிட்டதை அறிந்தே சுயேட்சை குழுவில் களமிறங்கினேன்.. Reviewed by Madawala News on 12/19/2017 10:14:00 PM Rating: 5