Yahya

ஜெரூஸலத்தை இஸ்ரேலுக்கு தாரை வார்க்க முயற்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முஸ்லிம்களை புறக்கணித்து ஜெரூஸலத்தை இஸ்ரேலுக்கு தாரை வார்க்க
முயற்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என  ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற முஸ்லிம்களுடனான சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் குறிப்பிடுகையில் ..

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜெரூசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்துள்ள விடயம் உலக அரங்கில் பலத்த பேசுபொருளாக மாறியுள்ளது. இது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய செயற்பாடல்ல. இலங்கை அரசு பலஸ்தீன் தொடர்பான அனைத்து விடயங்களிலும் மௌனத்தையே கடைப்பிடித்திருந்தது.இவ் விடயத்தில் சற்று மௌனத்தை கலைத்துள்ளதையிட்டு பலஸ்தீன பற்றாளர்களில் ஒருவன் என்ற வகையில் நன்றி கூறிக்கொள்கிறேன்.

இந் நேரத்தில் எனது தந்தை ஆட்சியில் இருந்திருந்தால் அவரது எதிர்ப்பின் வகையே வேறு மாதிரி அமைந்திருக்கும். இவ்வரசு எதிர்ப்பதாக காட்டுவது எதிர்வரும் தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளை பெறுவதற்கேயாகும்.உண்மையாக எதிர்ப்பதற்கும் வாக்குகளுக்காக எதிர்ப்பதற்கும் நிறையவே வேறுபாடு உள்ளது.

இன்று பலஸ்தீனத்துக்கு இத்தகைய மாபெரும் துரோகமிழைத்தவர்கள் தான் இலங்கையிலும் ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்திருந்தார்கள். அவர்கள் இலங்கையில் பாரிய சதித் திட்டங்களை தீட்டி வருகின்றனர். அவர்களுக்கு முஸ்லிம்கள் ஒரு பொருட்டே அல்ல. இன்னும் சொல்லப் போனால் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டம் தீட்டி செயற்படுவதே அவர்களது இலக்கு.

இன்று அரசியலமைப்பு என்ற பெயரிலும் சட்ட மாற்றங்கள் என்ற பெயரிலும் நாளுக்கு நாள் கொஞ்சம் கொஞ்சமாக முஸ்லிம்களுக்கு எதிரான சதிகள் அரங்கேறி வருகிறது. இதனை முஸ்லிம்கள் நன்கு உணர்ந்துகொள்ள வேண்டும். இன்னும் இலங்கை முஸ்லிம்கள் இலங்கையில் தங்களுக்கு எதிராக நடைபெற்ற விடயங்களுக்கு, உண்மையை உணராது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை குற்றம் சுமத்திக்கொண்டிருந்தால், அது இவ்வாறானவர்களின் சதித்திட்டங்களுக்கு சாதகமாக அமைந்துவிடும் என அவர் குறிப்பிட்டார்.
ஜெரூஸலத்தை இஸ்ரேலுக்கு தாரை வார்க்க முயற்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது  ஜெரூஸலத்தை இஸ்ரேலுக்கு தாரை வார்க்க முயற்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது Reviewed by Madawala News on 12/16/2017 12:16:00 AM Rating: 5