Kidny

Kidny

பிணைமுறியும், நல்லாட்சிக் கொள்ளையர்களும் (பாகம் 01)


பணம் என்னவெல்லாம் செய்யும் என்பதை நிரூபிக்க எத்தனையோ விடயங்கள் உள்ளன.
அரசன் ஆண்டியான கதையும் ஆண்டி அரசனான கதையும் வரலாற்றில் தடம்பதித்ததுண்டு. ஏன் நமது வாழ்க்கையிலும் கூட அதிஷ்டவசமாகவோ எந்தப் பிரச்சினையும் இல்லாமலோ நம்மைத்தேடி பணம் வருமானால் அதனை தட்டிக்கழிக்க மாட்டோம். இதுவே மனித குணம். 

''இவனெல்லாம் பெரியாளா வருவானு யாரு கண்டா'' என்பதற்கு பின்னணியில் திறமையும் உண்டு தந்திரமும் உண்டு. நாம் இங்கு பூதம் யாரென்பதற்கு பதில் தேடாது அந்தப் புதையலை காக்கும் வழிவகைகளை பார்க்க வேண்டும். நிச்சயம் அந்தப் புதையல் மத்திய வங்கிதான்.

நல்லாட்சி அரசு 2015 ஜனவரி 8 ஆம் திகதி ஆட்சிக்கு வந்த பிறகு எத்தனையோ மாற்றங்களை மக்கள் எதிர்பார்த்தனர். கிடைத்த பலன் என்ன என்பதற்கு இந்த மூன்று வருடகாலத்தில் நமது சலிப்புத்தன்மையான பேச்சுக்கள் பதில் கூறும். இந்த வேதாந்தங்களை எல்லாம் விட்டுவிட்டுஇ கதைக்கு வருவோம். அது என்னப்பா பணத்த வச்சி கத எழுதுறீங்களா என வாசிக்கத்தொடங்கும் வாசகர்களுக்கு கூற விரும்புவது நான் கூற விரும்பும் கதை பணம் பற்றியதுதான். சாதாரண குடிமகனும் தெரிந்துகொள்ள வேண்டிய பணக்கதை இது. அப்படி என்னதான் மத்திய வங்கியில் நடந்தது? யார் தான் கொள்ளை அடிச்சாங்க என்ன விசாரணை நடக்குது? இதெல்லாம் சும்மாப்பா அட இந்த அமைச்சரும் இப்படி செஞ்சாரா?  தண்டனை கொடுப்பாங்களா என நினைக்கும் நம்மவர்க்காக உண்மையில் நடந்ததை கூறவிரும்பும் கதை இது.

ஆம்! மத்திய வங்கியையும் மோசடியையும் பற்றி கதைக்காதவர்கள் இல்லை. என்ன நடந்தது என்பதை யூகமாக கணித்துக்கொண்டு பிணைமுறி ஏலம் நிதிச்சபை நிதிக்கூற்று ஊழியர் சேமலாபநிதி என எத்தைனையோ புதிர்போன்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாமல் சாதாரணமாக விளங்கிக்கொண்ட சம்பவத்தை அனைவருக்கும் தெளிவுபடுத்த வைக்கும் நோக்கில் எழுதப்படும் கட்டுரை.

அன்று 2015ஆம் ஆண்டு பெப்ரவரி 27 ஆம் திகதி மாதாந்த ஏலம் மத்திய வங்கியில் ஆரம்பமானது.  ஏலம் நடக்கும் போது இடைநடுவில் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் வந்தார். ஏலம் நடப்பதற்கு முதல்நாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கஇ மலிக் சமரவிக்கிரம உள்ளிட்டோர் விசேட கலந்துரையாடல் நடத்தினர். ஒரு பில்லியன் என அறிவிக்கப்பட்ட ஏலத்தை 10 பில்லியனுக்கு அங்கீகரித்தனர். வீதி அபிவிருத்தி செய்ய நிதிப்பற்றாக்குறை உள்ளதென கூறி மத்திய வங்கியில் கடன் பெற்றனர் போன்ற பல காரணங்கள் இந்த எலத்திற்கு பின்னணியில் காணப்படுகின்றன. நாம் கூறிய விடயங்கள் என்ன தொடர்பை கொண்டுள்ளது என்பதையும் இனிவரும் நாட்களில் பார்க்கலாம்.

இவற்றை விட இந்தக் கதையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் எப்படி உள்நுழைந்தனர்? இவற்றுக்கும் மேலாக நல்லாட்சி அரசு என மார்தட்டிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மத்திய வங்கி நிதிமோசடித் தொடர்பில் ஆணைக்குழு அமைத்து விசாரிக்க தீர்மானித்தது ஏன்? என்பதையும் நிச்சயம் தொடர்புபடுத்தி பார்க்க வேண்டும்.

'நான் சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறொன்றுமில்லை' என விசாரணை ஆணைக்குழுவில் அனைவரும் சத்தியம் செய்தனர். சாட்சி சொல்ல வந்தவர்கள் சொன்ன கதைகள் சொல்ல மறந்த கதைகள் புனைகதைகள் என்று அவர்களை குறைகூறாமல் இது இப்படி உள்ளது. ஆனால் இவர்கள் இப்படி சொன்னார்கள் என்ற நியாயத்தை மட்டுமே நாம் கூறவுள்ளோம்.

இந்தக் கதையில் என்னதான் அப்படி சுவாரஸ்யம். மக்கள் பணம் சூறையாடப்பட்டதா? என தவிக்கும் நம்மில் ஒவ்வொருவரும் இந்தக் கதையை தெரிந்துகொள்ள ஈர்ப்புடையவர்களே. மக்கள் பணத்தின் காவலனாக விளங்கும் மத்திய வங்கியில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நமது பணம் சூறையாடப்பட்டுவிடக்கூடாது என்ற எண்ணம்  நம்மில் அனைவருக்கும் உண்டு. அதே நோக்கத்தில்தான் உண்மையை கண்டறியும் நோக்குடன் விசாரணை ஆணைக்குழு ஆரம்பிக்கப்பட்டது.

விசாரணைகள் ஆரம்பித்தது முதலே சர்ச்சைகளுக்கும் குறைவில்லை. விசாரணையை பார்க்க எனக்கும் அனுமதி வேண்டும் என முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் கேட்டமையும்இ ஊழியர் சேமலாப நிதியத்தில் பணிபுரியும் சுமார் 40இற்கும் மேற்பட்டவர்களை விசாரணைக்கு உட்படுத்தியமையும் அர்ஜுன மகேந்திரனின் மருமகன் அர்ஜூன் அலோசியஸ் மத்தியவங்கி நிதி செயற்பாடுகளில் தலையிட்டிருந்தமையும் அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. அன்று சூடுபிடித்த கதை இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சாட்சியத்தோடு அரசை மட்டுமல்லாது முழு நாட்டு மக்களையும் ஆட்டம்காண வைத்துள்ளது.

எந்தவொரு அரசும் தனது அரச செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வருமானம் குறைவாக உள்ளது என கருதும் போது கடனை பெற்றுக்கொள்ளும். இதனை குறுகிய காலத்திலோ அல்லது மத்திய காலத்திலோ அல்லது நீண்ட காலத்திலோ திருப்பிக் கொடுத்துவிடும். அரசு என்றபடியால் மத்திய வங்கியை மட்டுமே பொருத்தமான கடன்பெறும் பாதுகாப்பான இடமாக கருதுகின்றது.

மத்திய வங்கி நிதி மோசடியை பிணைமுறி மோசடி என்றுதான் கூறுகின்றனர். பிணைமுறி என்பது அரசு பெற்ற கடனை திருப்பிக்கொடுக்க மத்திய வங்கியுடன் இட்டுக்கொள்ளும் ஒப்பந்தமாகும். மத்திய வங்கி பிணைமுறியை வெளியிடும் முறைமைகள் பல காணப்படுகின்றன. அதில் பிரசித்தமான முறைமைதான் ஏலத்தினூடாக கடனைப்பெற்றுக்கொள்ளல்.

மத்திய வங்கியில் முதலிடும் நேரடி முதலீட்டாளர்கள் 16 நிறுவனங்கள் உள்ளன. உதாரணமாக இலங்கை வங்கி மக்கள் வங்கி கொமர்சியல் வங்கி செலான் வங்கி சம்பத் வங்கிஇ என்.டி.பி வங்கிஇ எச்.எஸ்.பி.சி ஹட்டன் நெசனல் வங்கிஇ என்.எஸ். பி வங்கி போன்றன முக்கியமானவைகளாகும்.

இந்த 16 நிறுவனங்களும் இணைந்துதான் மத்திய வங்கியில் பிணைமுறி ஏலத்தினூடாக அரசுக்கு கடன் வழங்கும். இந்த கடன் ஒரு ஆண்டிலோ அல்லது பத்து ஆண்டிலோ அல்லது 30 ஆண்டிலோ திருப்பித் தருமாறு மத்திய வங்கி கோரிக்கை விடுக்கும். இந்த தெரிவு அரசின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பொறுத்தது. இதே போன்றதொரு ஏலத்தில் நடந்த மோசடி தொடர்பில்தான் நாம் தற்போது கதைத்துக்கொண்டிருக்கின்றோம்.

அரசுக்கு கடன் வழங்க மத்திய வங்கியில் 16 நேரடி முதலீட்டு நிறுவனங்கள் உள்ளன என்பதை பார்த்தோம். அந்த 16 நிறுவனங்கள் தவிர்ந்தஇ ஏனையோர் அரசுக்கு கடன் வாங்க விரும்பினால் 16 நிறுவனங்களின் நேரடி முதலீட்டாளர்களுடன் ஒருவரை தேர்ந்தெடுத்து அதனூடாக கடன் கொடுக்கலாம். 

அதன்படி பிணைமுறி ஏலம் யாதெனில் அரசுக்கு கடன் தேவையாக இருக்கின்றபோது கடன் தர விரும்பும் நிறுவனங்களிடம் அந்தக் கடனுக்கான வட்டி வீதம் எவ்வளவு என கேட்பதுவும் அவர்களிடமிருந்து குறைந்த வட்டியை தர விரும்பும் நிறுவனத்திடமிருந்து கடன் பெறுவதுமாகும்.

இந்த செயன்முறையை இலகுவாக விளங்கிக்கொள்ள வேண்டுமாயின் நமக்கு கடன் தேவைப்படுமிடத்து வட்டி குறைவாக அறவிடும் ஒரு நிறுவனத்திடம்தான் கடன்பெறுவோம். 

அந்தக் கடனை எவ்வளவு காலத்தில் நம்மால் திருப்பிக்கொடுக்க முடியும் என யாரும் கேட்பதில்லை. ஆனால் இந்த சலுகையை அரசு கடன் பெறும் போது மத்திய வங்கி வழங்கும்.

சாதாரணமாக அரசின் கடன்தேவையில் 10 அல்லது 20 வீதம் பிணைமுறி ஏலத்தினூடாக பெற்றுக்கொள்ளப்படும். மிகுதித் தொகை ஏலத்தின்போது தீர்மானிக்கப்பட்ட வட்டிவீதத்துக்கு அமைவாக நேரடி முதலீட்டாளர்கள்இ ஊழியர் சேமலாப நிதியம்இ காப்புறுதி நிறுவனங்கள் ஆகியவற்றின் நேரடியான வணிக செயற்பாடுகளுடாக பெற்றுக்கொள்ளப்படும். 

இந்த முறைமையானது மத்தியவங்கி பல வருடங்களாக பின்பற்றிவரும் முறைமையாகும். இதற்குக் காரணம் மத்தியவங்கி அரசின் முழுமையான நிதித்தேவையை ஒரே தடவையில் கொடுக்குமாயின் அந்த தொகை பாரியதாக காணப்படுவதோடு வட்டிவீதமும் அதிகரித்துச்செல்லும் என்பதனாலாகும். அதனாலேயே மத்திய வங்கி முழுக் கடன்தொகையையும் குறைந்த வட்டியில் பெற்றுக்கொள்ள முனைகின்றது.

2015 ஆம் ஆண்டு அரசுக்கு ஒரு பில்லியன் நிதி பற்றாக்குறை இருந்தமையினாலேயே மத்திய வங்கியிடம் கடன் கேட்டது. இதனாலேயே மத்திய வங்கி 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி சர்ச்சைக்குரிய பிணைமுறி ஏலத்தை நடத்த தயாரானது. இந்நிலையில் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அரசுக்கு தேவையான மொத்தக் கடன் தொகை 260 பில்லியன் ரூபா என மத்திய வங்கி அறிவித்திருந்தது. இந்தப் பணத்தை குறுகிய கால திறைசேரி காப்பீட்டுப் பத்திரங்கள் மற்றும் நீண்டகால பிணைமுறி விநியோகங்களூடாகவே பெற்றுக்கொள்ள வேண்டிய தேவையும் ஏற்பட்டிருந்தது.

மத்திய வங்கியின் நேரடி முதலீட்டாளர்கள் 16 பேருக்கும் 2015ஆம் ஆண்டு பெப்ரவரி 26 ஆம் திகதியன்று ஏலம் நடக்கவிருப்பதாக அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பில் 30 வருடங்களில் கடனை செலுத்துவதற்கு 1 பில்லியன் ரூபா பிணைமுறி விநியோகிப்பதற்கான ஏலம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது. மேற்படி பிணைமுறி ஏலம் 27 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகி 11 மணிக்கு முடிந்திருக்க வேண்டும். அன்றைய தினத்தில் வழமைபோல அந்த 16 நேரடி முதலீட்டாளர்களும் ஏல விற்பனையில் கலந்துகொண்டிருந்தனர்.

2015 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் காணப்பட்ட பொருளாதார நிலைமையை பார்க்கின்ற போது கடனுக்கான வட்டிவீதம் குறைவாக காணப்பட்டமையினால் அங்கு வந்திருந்த நேரடி முதலீட்டாளர்கள் 9.5 மற்றும் 10.5 என்ற வட்டி வீதத்திலான தொகையிலேயே தமது விலை மனுவை  முன்வைத்தனர். 

ஒரு பில்லியன் ரூபாய் ஏலம் என்ற காரணத்தினால் இந்நிறுவனங்கள் அனைத்தும் 100 மில்லியன் மற்றும் 500 மில்லியன் என்ற அடிப்படையில் தமது விலைமனுக்கோரல்களை முன்வைத்தன. இதில் ஒரு நிறுவனம் மாத்திரம் 15 பில்லியன்கள் பெறுமதியான விலைமனுவை முன்வைத்திருந்தது.  அது 12.5 என்ற உயர் வட்டி வீதத்திற்கு கடனை செலுத்தும் வகையில் விலைமனுக்கோரலை முன்வைத்திருந்தது.

இதில் உள்ள பிரதான குழப்பம் என்னவென்றால் மத்திய வங்கியினால் ஏலத்தில் 1 பில்லியன் ரூபா மட்டுமே அரசுக்கு வழங்கமுடியும் என அறிவித்திருந்தும் ஒரு தனிப்பட்ட நிறுவனம் 15 பில்லியன் முறிகளை முன்வைத்தது வேடிக்கையான ஒரு செயற்பாடாகவே கருதப்பட்டது. இவ்வாறு முறையற்ற நெருப்பு வட்டி வீதத்தில் விலைமனுவை முன்வைத்த   சர்ச்சைக்குரிய நிறுவனத்தின் பெயர்தான் பெபர்ச்சுவல் ட்ரசரீஸ் ஆகும். 

அந்த நிறுவனத்தின் தலைவர் இளம் தொழிலதிபர்களுள் ஒருவரான அர்ஜுன் அலோசியஸ் என்பவர். அவர் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் மருமகன் ஆவார்.  அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அவரின் தந்தை ஜெப்ரி அலோசியஸ் என்போர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நெருங்கிய நண்பர்கள் ஆவர்.

அலோசியஸின் தாத்தாவான கட்டார் அலோசியஸ் என்பவரும் கூட அப்போதைய ஜனாதிபதி பிரமேதாச அரசுடன் நெருக்கமான உறவுகளை பேணிவந்த ஒருவராவார். பிரமேதாசவின் ஆட்சிக்காலத்தில் அலோசியஸினுடைய தாத்தா இலங்கை வங்கிக்கு  500 மில்லியன் நஷ்டத்தை ஏற்படுத்தியிருந்தவர் என்றும் கூறப்படுகின்றது.  

அதன் பின்புலத்திலிருந்து வந்த காரணத்தினாலேயே அர்ஜுன மகேந்திரன் மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்ட போது அவருக்கு கடும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டன.  இந்நிலையில் சகல எதிர்ப்புகளுக்கும் மத்தியில் அர்ஜுன மகேந்திரனை பிரதமர் ரணில் விக்கிரம சிங்க மத்திய வங்கியின் ஆளுநராகவும் நியமித்திருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்திலும் பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜூன் அலோசியஸ் பல்வேறு தலையீடுகளை மேற்கொண்டுள்ளார். பிணைமுறி விவகாரத்தில் எல்லாம் முடிந்துவிட்டது என நினைத்துக்கொண்டிருக்கும் அரச தலைமைகளும் பெரிய ஆப்பு வெகுவிரைவில் காத்திருக்கின்றது. 

டிசம்பர் மாதம் 8 ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும் இறுதி அறிக்கை எவ்வாறான தாக்கத்தை செலுத்தும் என்பதற்கு முன்பு நாம் இந்த கொள்ளையின் முழுவடிவத்தையும் தெரிந்துக்கொள்வோம்.
தொடரும் -

பா.ருத்ரகுமார் - சுடர் ஒளி ..
பிணைமுறியும், நல்லாட்சிக் கொள்ளையர்களும் (பாகம் 01)  பிணைமுறியும், நல்லாட்சிக் கொள்ளையர்களும் (பாகம் 01) Reviewed by Madawala News on 12/03/2017 11:19:00 PM Rating: 5