Yahya

மூன்று தொகுதிகளை கோரும் கண்டி முஸ்லிம்கள்..

முன்பிருந்த சட்டம் மாற்றப்பட்டு ஒரு கலப்பு முறையான தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மாகாண சபைகளுக்கு ஒவ்வொரு மாவட்டத்திற்குமான உறுப்பினர் தொகை தீர்மானிக்கப்பட்டு அத்தொகையில் 50% தொகுதி அல்லது வட்டார அமைப்பிலும் மிகுதி 50% மாவட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குகளின் விகிதாசார அடிப்படையிலும் தெரிவு செய்யப்படுவதே புதிய முறையாகும்.

இதற்கென மாவட்டத்தை தொகுதிகளாக அல்லது வட்டாரங்களாக பிரிக்கப்படும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் எல்லை நிர்ணய ஆணைக்குழு இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதலில் மக்களது கருத்துக்களை எழுத்து மூலம் இந்த ஆணைக்குழு கோரியது. மக்களும் இந்த தொகுதிகள் அல்லது வட்டாரங்கள் எவ்வாறு பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தன. இதன்பின் இந்த ஆணைக்குழு மாவட்டம் தோறும் விஜயம் செய்து அமர்வுகளை நடத்தி மக்கள் கருத்துக்களை நேரடியாகப் பெற்றுள்ளது.

தலைப்புக்குரிய விடயத்துக்கு வர முன் புதிய தேர்தல் முறை பற்றி சற்று விளக்க வேண்டும். மாகாண சபையின் மாவட்டத்திற்கான உறுப்பினர் தொகை முதலில் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. அதில் அரைவாசிப்பேர் தொகுதி அல்லது வட்டார அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர். இதற்கேற்ப வட்டாரங்கள் பிரிக்கப்படும். உதாரணமாக கண்டி மாவட்டத்தை எடுத்தால் மொத்த உறுப்பினர்கள் 29 பேர். எனவே இதன் அரைவாசி 15 பேர் தொகுதி அல்லது வட்டாரத்தில் தெரிவு செய்யப்படுவர். இதற்காக கண்டி மாவட்டம் 15 தொகுதிகளாக அல்லது வட்டாரங்களாக பிரிக்கப்படும். அந்தந்த வட்டார மக்கள் அந்த வட்டாரத்திற்கு போட்டியிடும் கட்சி சின்னத்தில் அல்லது சுயேட்சை குழுவின் சின்னத்திற்கு வாக்களிப்பர். கூடுதல் வாக்கைப் பெறும் கட்சியின் அல்லது சுயேட்சை குழுவின் அந்த வட்டார வேட்பாளர் தெரிவாவர்

இங்கு மக்கள் அபேட்சகர்களுக்கு வாக்களிக்கும் முறையோ விருப்பு வாக்கு வழங்கும் முறையோ இல்லாமல் ஏற்கனவே வேட்பு மனுவில் பெயர் குறிப்பிட்டவாரே தெரிவாவார்கள். இந்த வாக்குச் சீட்டுகளில் கட்சிகளதும் சுயேட்சை குழுவினதும் சின்னம் மாத்திரம் இருக்குமே ஒழிய பெயர்கள் இருக்காது.

இந்த நாட்டின் சிறுபான்மை, குறிப்பாக தென்னிலங்கையில் பரவலாக எனினும் பரந்துபட்டு வாழ்வதால் முஸ்லிம்களையோ தமிழர்களையோ பெரும்பான்மையாகக் கொண்ட தொகுதிகளை அல்லது வட்டாரங்களை அமைப்பது கடினம்

கண்டி மாவட்ட சனத்தொகையை 15ஆல் பிரித்தால் ஏறத்தாள 90 ஆயிரத்தில் குறைந்தது 70% ஆவது முஸ்லிம்கள் இருந்தாலே தனி தொகுதியை கோரலாம். அவ்வாறான தொகுதிகள் தென்னிலங்கையில் மிகக் குறைவாகும். கண்டியை பொறுத்தவரை அக்குரணை பிரதேச செயலகப் பிரிவு மாத்திரமே உண்டு. ஆனால் மத்திய மாகாண சபையில் கண்டி மாவட்டத்தில் மாத்திரம் இப்போது 5 முஸ்லிம் உறுப்பினர்கள் உள்ளனர்.

புதிய மாகாண சபைத் தேர்தல் சட்டத்திலே பல அங்கத்தவர் தொகுதியை அமைக்கும் அதிகாரம் எல்லை நிர்ணய ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது. முன்னொரு காலத்தில் இந்த நாட்டிலே பாராளுமன்றத் தேர்தலில் இரட்டை அங்கத்தவர் தொகுதி, மூன்று அங்கத்தவர் தொகுதி என சில தொகுதிகள் இருந்தன.

ஆனால் மாகாணசபைத் தேர்தலுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல அங்கத்தவர் தொகுதி தேர்தல் முறை, இன்றைய முறையை விட வேறுபட்டது. முன்பு இரட்டை அங்கத்தவர் தொகுதிக்கு இரண்டு வாக்குகளும் மூன்று அங்கத்தவர் தொகுதிகளுக்கு மூன்று வாக்குகளும் பாவிக்கும் உரிமை மக்களுக்கு இருந்தது. அதேபோன்று போட்டியிடுவோர் வெவ்வேறு சின்னத்தில் போட்டியிடுவர். மக்கள் தமது வாக்குகளை ஒருவருக்கு பிரித்தே வழங்குவர். அதிகூடுதல் வாக்குகளை அடுத்த அதிகூடிய வாக்குகளையும் பெற்றே தெரிவாவர். முன் அக்குரணை எனும் பெயரில் இருக்கின்ற தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதியில் அங்கு ஒருவர் யானைச் சின்னத்திலும், அமைச்சர் .சி.எஸ்.ஹமீத் ஏணிச் சின்னத்திலும் போட்டியிட்டு வெற்றிபெற்றனர்.

புதிய முறை அவ்வாறல்ல. மக்களுக்கு ஒரு வாக்குதான். அதிகூடிய வாக்குகளை பெறும் கட்சியின் அல்லது சுயேட்சை குழுவின் வேட்பாளர்கள் இருவரோ அல்லது மூவரோ தெரிவாவர். மக்கள் கட்சியின் சின்னத்திற்கு அல்லது சுயேட்சை குழுவின் சின்னத்திற்கு மாத்திரம் வாக்களிப்பர் கட்சி அல்லது சுயேட்சை குழு இரட்டை அங்கத்தவர் தொகுதியாயின் இருவரையும் மூன்று அங்கத்தவர் தொகுதியாயின் மூவரையும் ஏற்கனவே வேறாக உள்ள வேட்பு மனு பத்திரத்தில் பெயர் குறித்திருக்கும். எனவே தொகுதியில் அல்லது வட்டாரத்தில் அதிகூடிய வாக்கு பெறும் கட்சி அல்லது சுயேட்சை குழு ஏற்கனவே சமர்ப்பித்த வேட்பு மனு பத்திரத்தில் உள்ள இரட்டை அங்கத்தவர் தொகுதியில் அவ்வாறு பெயர் குறித்த இருவரும் மூன்று அங்கத்தவர் தொகுதியாயின் ஒரே கட்சியில் மூவரும் தெரிவாவர்.

இங்கும் ஒரு சிக்கல் உள்ளது. இந்த பல அங்கத்தவர் தொகுதிக்கு பிரதேச சிறுபான்மை ஒருவரையும், வேட்பாளராக நியமிக்க வேண்டும். என்ற கட்டுப்பாடோ நியதியோ இல்லை. இது கட்சியினதும் சுயேட்சை குழுவினதும் விருப்பப்படி செய்யலாம். அதேபோன்று பல் அங்கத்தவர் தொகுதியாக பிரிக்கலாம் என்று சட்டத்தில் இருந்த போதும் அங்குள்ள சிறுபான்மையினர் தெரிவாகும் விதத்தில் பிரிக்க வேண்டும் என்று சட்டத்தில் தெளிவாக இல்லை.

பொதுவாக தொகுதி பிரிக்கும்போது மக்கள் தொகை, புவியியல் அமைப்பு, பொருளாதார அமைப்பு, இன ஜாதி போன்றவைகளை கருத்தில் கொள்ளும்படி கூறியுள்ளதேயொழிய கட்டாயப்படுத்தப்படவுமில்லை

உறுதிப்படுத்தப்படவுமில்லை. அதுமட்டுமல்ல இது தனி உறுப்பினர் தொகுதிக்கும் பல் அங்கத்தவர் தொகுதிக்கும் உள்ள பொதுவான விதியேயொழிய பல் அங்கத்தவர் தொகுதிக்கான தனியான விதி அல்ல. உண்மையிலேயே இந்த விதிகளை பல் அங்கத்தவர் தொகுதிக்கே விதித்திருக்க வேண்டும்.

இவற்றை நோக்கினால் இந்த பல் அங்கத்தவர் தொகுதி முறையானது சிறுபான்மையினர் மீது இரக்கம் கொண்டு வந்த முறையல்ல. வெல்லும் கட்சிகளில் பெரும்பான்மையை அதிகரிக்காது செய்யும் முறையாகும். ஏனெனில் பல் அங்கத்தவர் தொகுதி பிரிக்கும் போது சிறுபான்மை கட்சி உறுதிப்படுத்தப்படவில்லை. மற்றையது பல் அங்கத்தவர் தொகுதி வேட்பாளர் மனுவில் 7 அபேட்சகராக சிறுபான்மை அபேட்சகரை நியமிக்க சட்டம் கட்டுப்படுத்தவில்லை.

மிகுதி 50 விகிதாசார அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படும். இதற்காக 2ஆவது பட்டியலை கட்சிகளும் சுயேட்சைக் குழுவும் சமர்ப்பிக்கும். அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் மொத்த அங்கத்தவரால் பிரிக்கப்பட்டு சராசரி கணிக்கப்பட்டு அதன்பின் கட்சிகளும் குழுக்களும் பெற்றுள்ள வாக்குகள் அடிப்படையில் முன்கூறிய சராசரி அடிப்படையில் எத்தனை உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்று பார்த்து அந்த கட்சியே தொகுதியில் வெற்றிபெற்ற எண்ணிக்கைக்கு மேலதிகமாக பெற வேண்டிய ஆளைத் தீர்மானிக்கப்பட்டு பிரித்தளிக்கப்படும்.

இந்தப் பட்டியல் மாவட்டப் பட்டியல். இந்தப்பட்டியலில் இருந்தும் தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர்களில் இருந்தும் பெயர் குறிக்க கட்சி செயலாளருக்கு அல்லது சுயேட்சைக் குழுத் தலைவருக்கு அதிகாரமுண்டு. அத்தோடு பட்டியலின் வரிசைக் கிரமும் அவசியமில்லை. எனவே கட்சிகள் தனது பட்டியலில் உள்ள முஸ்லிம்களை தெரிவு செய்யுமா என்பது பிரச்சினை.

கட்சிகள் பெருபான்மையாக வாழும் தொகுதிகளுக்கு முஸ்லிம் அபேட்சகர்களை நியமிக்கும் என்பது சந்தேகமே. அநேகமாக நடக்காது. அதேபோன்று தேர்தல் முடிந்த பின் பட்டியலில் உள்ள முஸ்லிம்களுக்கு இடம் வழங்கும் என்பது நிச்சயமற்றது.

இவற்றை ஆராய்ந்து கண்டி மாவட்ட மக்கள், தொகுதி வாரியாக தமது பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த முனைந்தமை 5 முஸ்லிம் மாகாணசபை அங்கத்தவர்கள் இருந்த கண்டிமாவட்டத்திற்கு முஸ்லிம்களில் தெரிவாகும் மூன்று அங்கத்தவர்களில் யாராவது உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைத்தனர். மொத்த விகிதாசார அடிப்படையில் முஸ்லிம்களுக்கு கண்டி மாவட்டத்தில் மாகாண சபைக்கு 2 உறுப்பினர்களே கிடைக்க வேண்டும்

எதிர்பாராது சமூகத்தை பற்றி, கண்டி மாவட்டத்தைப் பற்றி சிந்திக்காது விலகிச்சென்ற அஸாத்சாலியுடன் கண்டி மாவட்டத்தின் 5 பிரதிநிதிகள் ஆகும்.

விளக்கமறியலில் இருந்ததை மூலதனமாக்கி, மக்கள் மனதை வென்று விசேடமாக பெண்களின் கண்ணீரை வரவழைத்து ஆதரவு வென்று கண்டியிலே பிறந்து வளர்ந்து வாழும் வேட்பாளர்களை பின் தள்ளி பெரும்பான்மையுடன் வென்று கண்டி மக்களை கைவிட்டு சென்றது பற்றி வேறாக ஆராய வேண்டும். இவரது ராஜினாமாவால் ஓர் உறுப்பினர் இல்லாது போனது மட்டுமல்ல இனவாத உணர்வு கொண்ட ஒருவர் உறுப்பினரானார். இவரது ராஜினாமாவால் வருடாந்தம் 50 லட்சம் ரூபா முஸ்லிம்களுக்கு நஷ்டமானது. நிதி ஒதுக்கீடுகள் முஸ்லிம்களுக்கு கிடைக்கவில்லை மற்றது இவர் போட்டி இடாது இருந்திருந்தால் இன்னுமொரு முஸ்லிம் உறுப்பினரும் தெரிவாகி இருப்பார். இவருக்கு அள்ளிக்கொட்டிய வாக்குகளை மக்கள் ஏனைய முஸ்லிம் வேட்பாளர்களுக்கு பிரித்தளித்திருப்பர்.

எனவேதான் கண்டி மக்கள் மூன்று தொகுதிகளுக்காக போராடுகின்றனர். எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் முன் தோன்றி கோரிக்கைகளை முன் வைத்து இருந்தால் அநேகமான கண்டி அமைப்புகளும் அரசியல்வாதிகளும் புத்திஜீவிகளும் இந்த விடயத்தில் ஒன்றுபட்டு நின்றனர்.

தனித்தியங்கவே தொகுதி என்ற அடிப்படையில் அக்குரணையை தனி அங்கத்துவ தொகுதியாக்குவதில் எவ்வித பிரச்சினையுமில்லை. சனத்தொகையும் போதுமானது. இதில் மிகப்பெரும்பான்மை முஸ்லிம்கள் எனவே அக்குரணையை தனித் தொகுதியாக்குவதில் அநேகருக்கு மாறுபட்ட கருத்து இல்லை.

ஒரு தொகுதிக்கு 70-90 ஆயிரம் வரை மக்கள் இருக்க வேண்டும். அடுத்தபடியாக இரட்டை அங்கத்தவர் தொகுதி பற்றி ஆராயப்பட்டது. இரட்டை அங்கத்துவ தொகுதி அதில் இரண்டு பங்காக இருக்க வேண்டும். அது மட்டுமல்ல முஸ்லிம்கள் 25-30 வீதமாக இருக்க வேண்டும். இத்தோடு கண்டியில் வேறு தனித்துவம் வாய்ந்த தொகுதியை அமைக்கப்படும் வரைக்கும் 70 ஆயிரம் மக்களில் 50வீதத்துக்கு முஸ்லிம் தொகுதிகளை தனியாக உருவாக்க முடியாது.

இந்த நிலையில் அடுத்த படிக்கு வந்த குழுவினர் ஆராய்ந்து அக்குரணைக்கு அடுத்து உடுநுவர பிரதேசத்தில் முஸ்லிம் பிரதேசமாக காணப்பட்டதாகும். எனினும் இங்கு முஸ்லிம் விகிதாசார 30 வீதமாக இல்லை. எனவே அடுத்துள்ள பிரதேசங்களை இணைத்து ஒரு பல் அங்கத்துவ தொகுதியை கோரிநின்றனர்

இதன்படி உடுதுவர, உடபலாத்த ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள முஸ்லிம் கிராம அதிகாரி பிரிவுகளை இணைத்து பல் அங்கத்துவ தொகுதியை அனேகமான அமைப்புக்கள் கோரிநின்றன. இது சாத்தியமாகும் நிலையும் உள்ளது. சில அமைப்புக்கள் உடுதும்புர தனித் தொகுதி கோரினாலும் மக்கள் தொகையையும் முஸ்லிம் தொகையையும் பார்த்தால் போதாதுள்ளது.

மூன்று தொகுதியை கோர வேண்டும் என்பதில் தனியாக நின்ற அமைப்புகளும் பிரமுகர்களும் இவற்றுக்கு அடுத்ததாக கூடிய முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களை இணைக்க முயன்றன. பிரிந்து தூரத்தில் வாழும் முஸ்லிம் இணைப்பது கடினமாக இருந்தது. எவ்வாறு எனினும் இன்னுமொரு இரட்டை அங்குத்துவ தொகுதியாக பாத்தும்பரை, குண்டசாலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கோரியது. பாத்ததும்பரையுடன் குண்டசாலை பிரதேச செயலப்பிரிவின் முஸ்லிம் பிரதேசங்களை இணைத்து, அவ்வாறு நிலத் தொடர்புபடுத்தும் போது இதில் வரும் கிராம அதிகாரி பிரிவுகளையும் சேர்த்து 30 ஆயிரத்துக்கும் மேல் முஸ்லிம்கள் வாழும் ஓர் இரட்டை அங்கத்துவ தொகுதியையும் கோரியுள்ளது.

எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் கண்டி மாவட்ட அமர்வில் அமைச்சர் ஹலீம் மாகாண சபை உறுப்பினர்களான லாபிர் ஹாஜியார், ஹிதாயத் சத்தார், முத்தலிப் ஹாஜியார், நகர சபை உறுப்பினர் இலாஹி ஆப்தீன், பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நவ்பல், தெல்தோட்டை ஆவாளர் நஜீப், சட்டத்தணி வைஸ் ஆகியோர் உட்பட முஸ்லிம் அமைப்புக்களும் சாட்சியமளித்தனர்

-சட்டத்தரணி .எம். வைஸ்-

மூன்று தொகுதிகளை கோரும் கண்டி முஸ்லிம்கள்..  மூன்று தொகுதிகளை கோரும் கண்டி முஸ்லிம்கள்.. Reviewed by Madawala News on 12/20/2017 05:59:00 PM Rating: 5