Yahya

ஊடகங்களில் வெளிவராத அந்தக் கடிதம். ( அன்புள்ள விளாதிமிர் புடினுக்கு....)


ரஷ்யா என்ற அகண்ட தேசத்தின் ஜனாதிபதியான நீங்கள் எமது தேயிலைக்கு இப்படி ஒரு ஆப்பு சொருகிவீர்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை..இறைவன் நல்லவர்களுக்கு அவர்கள் நினைக்காத இடங்களில் இருந்து உதவி செய்வான் ..ஆனால் எனக்கு மட்டும் நான் எதிர்பார்க்காத இடங்களில் இருந்தெல்லாம் சோதனை வந்துவிடுகிறது..


எனக்கு ஒரே படபடப்பாய் இருக்கிறது..இயற்கைச் சீற்றங்களால் தேங்காய் ஒன்று நூறு ரூபாயிற்கு மேல் விற்பனை செய்யப்படும் தென்னாசிய நாட்டின் ஒரே ஜனாதிபதியாக நான் இதை எழுதத் தொடங்கி இருக்கிறேன்..நான் பதவிக்கு வந்த காலத்தில் இருந்து எமது கண்டி விகாரையின் பெரஹர வருவது போல சரியாய் ஒவ்வொரு வருடத்திலும் மே மாதங்களில் பெரு வெள்ளம் வந்துவிடுகிறது..


ஆயிரக்கணக்கானோர் இடம் பெயர்கின்றனர்..கோடை விடுமுறை போல மே இல் மட்டும் வெள்ளம் வந்தாலும் பரவாயில்லை.. போனஸாய் ஏகப்பட்ட இயற்கை அனர்த்தங்கள் வரிசைகட்டி நிற்க அத்தியவசியப் பொருட்களின் விலைகள் தாறுமாறாய் எகிற வெறுத்துப் போய் இருக்கிறேன்.... ஊடகங்களில் பார்த்து இருப்பீர்கள்..அதிகமாய் வெள்ள நிவாரணக் கோஷ்டிகளை உற்பத்தி செய்த ஒரே நாடு நாம் தான்..உலகத்துக்கு அதிகமாய் அகதிகளை உற்பத்தி செய்ததுக்கு அடுத்ததாய் நாம் செய்த சாதனை இது ஒன்று தான்...


ஐயா..எமது நாட்டில் தேர்தல் வருகிறது..எனது கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த உங்களோடு நட்பாய் இருந்தவர்..இப்போது தனி வழியில் செல்கிறார்..என் கட்சி உடைந்து இருக்கிறது..இந்த நேரத்தில் நாங்கள் ஏற்றுமதி செய்யும் தேயிலையில் வண்டு இருப்பதாய் கூறி எமது அடிமடியில் கைவைத்து இருக்கிறீர்கள்..


பாணில் பல்லி இருப்பது , வட்டிலாப்பத்தில் ஸ்டெப்லர் பின் வருவது, பிரியாணியில் தலைமயிர் வருவது எல்லாம் தேசிய அடையாளங்களாய்ப் போன எமக்கு போயும் போயும் தம்மாத்துண்டு வண்டுக்காக வண்டு முருகன் கணக்காய் இத்தனை அக்கப் போரா என்று கவலையாய் இருக்கிறது...

நாம் உங்களுக்குத்தான் உற்பத்தி செய்யப்படும் தேயிலையில் 25 வீதத்தை ஏற்றுமதி செய்கிறோம்.. ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்..150 ஆண்டுகால பிஸ்னஸ் இது..

ஒரு நாளும் இல்லாத சீரழிவாய் எப்படி இப்படி வண்டு வந்தது என்று தெரியவில்லை.. மாதக்கணக்கில் மருத்துவக் கல்லூரிகளை மூடி வைத்தார்கள், தினம் தினம் புதிசு புதிசாய்க் கண்டு பிடித்து ஸ்ட்ரைக் செய்கிறார்கள்,சொல்லொணா துன்பங்களை எனக்குத் தந்து கொண்டு இருக்கிறார்கள். பொருளாதார வழிகளை முடக்கி மக்களை அசெளகரியத்துக்குட்படுத்த முனையும் இந்தக் கும்பல் தான் வண்டையும் உங்கள் தேசத்துக்குப் பொதி செய்து அனுப்பி இருக்க வேண்டும்....


ஐயா....நான் ஜனாதிபதி அபேட்சகராய் அந்நாளில் அளித்த வாக்குறுதிகள் எல்லாம் தேர்தல் மேடைகளிலேயே தற்கொலை செய்து கொண்டுவிட்டன.தொட்டதெல்லாம் தொல்லையில் வந்து முடிகிறது...

எனது கட்சி வேறு ரெண்டாய் உடைந்து இருப்பதால் பிரதமரின் கட்சி தேர்தலில் வெல்லும் என்று ரிப்போர்ட்கள் சொல்லுகின்றன..எனது கட்சி தப்பித் தவறி மூன்றாவது நிலைக்கு வந்தால் என்ன ஐயா ஆகும்...? இந்தத் தேயிலையை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய முன்னர் தடையை நீக்கி என் துயர் துடையுங்கள்..

நான் அமெரிக்காவுடன் அதிகம் சினேகபூர்வமாய் நடந்து
கொண்டுவிட்டேன்..தவறு தான்..மன்னியுங்கள்...கடந்த வருடம் உற்சாகமான ஒரு காலைப் பொழுதில் பேசும் போது உங்கள் நாட்டில் இருந்து இங்கே இறக்குமதியாகும் அஸ்பஸ்டோஸ் கூரைத்தகடுகளை 2020 இற்குள் ஒட்டுமொத்தமாய்த் தடை செய்வேன் என்று முழங்கினேன்..’

வண்டு எல்லாம் ஒரு மேட்டரும் இல்லை..அஸ்பஸ்டோஸ் விவகாரத்துக்குத்தான் நீங்கள் இப்படி பதிலடி தருவதாய் எமது வேலை வெட்டி இல்லாத இணையத்தளங்கள் எழுதத் தொடங்கி இருக்கின்றன.’


.ஐயா..அஸ்பஸ்டோஸ் கூரைத் தகடுகளால் புற்று நோய் வரும் என்று அமெரிக்காக்காரன் தான் சொன்னான்..இப்போது எங்களுக்கு செம தோஸ்த் அவன் தானே..திரும்பவும் அஸ்பஸ்டோஸை அனுமதிப்பேன் என்று அதிரடி காட்ட முடியாது..என்னை வைத்து காமெடி பண்ணிக் கொண்டாடித் தீர்த்துவிடுவார்கள்..என்ன பண்ணுவது ? பேசாமல் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை எடுத்துக் கொள்வீர்களா? உங்களின் தேசிய விமான சேவையுடன் சேர்த்துக் கொள்ளுங்கள்..


ஸ்ரீலங்கனுக்கு மூன்று வருசமாய் நாங்கள் மாப்பிள்ளை தேடுகிறோம்..ஒன்றுமே சரியாய் அமையாமல் கிழவியாகிக் கொண்டு இருக்கிறது... யோசனை செய்து பாருங்கள்... சரி.... எனது அமைச்சர்களான .ரிஷாட் பதியுதீன் என்பவரும் நவீன் திஸாநாயக்க என்பவரும் உங்கள் பிரதிநிதிகளுடன் பேசுவார்கள்.அவர்களின் கோரிக்கைகளைச் செவிமடுத்து எமது தேயிலை மீதான தடையைத் தளர்த்துங்கள்.. எமது அமைச்சரால் தான் தேயிலை ஏற்றுமதி மீண்டும் சாத்தியமானது என்று அந்த அமைச்சர்களின் அடிப்பொடிகள் எல்லாம் சந்தோஷப்படுவார்கள்..

நானும் மகிழ்ச்சியடைவேன்..கவலை இல்லாத வாழ்க்கை தானே நமக்கு வேண்டும் மிஸ்டர் புடின் ?

இப்படிக்கு
அதிமேதகு
..........

கற்பனை By : ஸபர் அஹ்மத்  
ஊடகங்களில் வெளிவராத அந்தக் கடிதம். ( அன்புள்ள விளாதிமிர் புடினுக்கு....) ஊடகங்களில் வெளிவராத அந்தக் கடிதம். ( அன்புள்ள விளாதிமிர் புடினுக்கு....) Reviewed by Madawala News on 12/18/2017 08:43:00 PM Rating: 5