Kidny

Kidny

இறைச்சிக்காக மாடறுப்பு தடை என்ற சட்டம் ரத்து செய்யப்பட்டது ! பயந்துவிட்டதா மோடியின் பாஜக?


மாடுகளின் காவலர்களாக தங்களைக் காட்டிக்கொண்டும் மனிதர்களை அடித்துக் கொல்வதை வேடிக்கை பார்த்தது மோடி தலைமையிலான மத்திய அரசு. ஆனால், இப்போது மாடுகள் என்ன ஆனாலும் பரவாயில்லை என்று முடிவெடுத்து விட்டது.

காளை மாடுகள், பசுக்கள், எருமைகள், கன்றுகள், ஒட்டகங்களை இறைச்சிக்காக விற்க தடைவிதித்து மோடி அரசு திடீரென்று ஒரு உத்தரவை பிறப்பித்தது. இதையடுத்து, மாட்டிறைச்சி உண்போர், மாட்டிறைச்சிக் கூடங்களை நடத்துகிறவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மாடுகளை கொல்லக்கூடாது என்றும், இறைச்சிக்காக விற்கக்கூடாது என்றும், மாடு வைத்திருப்பவர்கள் அந்த மாடுகளை இறுதிவரை தங்கள் பொறுப்பிலேயே வைத்திருக்க வேண்டும் என்றும் இந்த ஆணையின் மூலம் மத்திய அரசு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது.

மக்களுடைய உணவு உரிமையில்கூட பாஜக தலையிடுகிறது என்று தமிழகம், கேரளா, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கடும் கொந்தளிப்பு உருவானது.

இந்தச் சட்டம் பிறப்பிக்கப்படும் முன்னரே ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள், பசு பாதுகாப்பு குழு என்ற பெயரில் தாழ்த்தப்பட்ட மற்றும் இஸ்லாமியக் குடும்பங்களை அடித்துக் கொல்லும் நிலை இருந்தது.

இந்தச் சட்டம் பிறப்பிக்கப்பட்டவுடன் மாடு விற்பனைச் சந்தைகளில் வர்த்தகம் குறைந்தது. மோடி அரசு பிறப்பித்த சட்டத்தின்படி, மாடு விற்பவர் தனது அடையாள அட்டையையும், நிலம் வைத்திருப்பதற்கான சான்றிதழையும் மாட்டுச் சந்தை கமிட்டியிடம் காட்ட வேண்டும். மாடு வாங்குகிறவர், மாட்டை விவசாயத் தேவைக்காக வாங்குவதாக வருவாய் அதிகாரி, கால்நடை மரு்ததுவர், சந்தை கமிட்டி ஆகியவர்களிடம் உறுதிமொழி கொடுத்து கையெழுத்து பெற வேண்டும். அந்தச் சான்றிதழை மாடு விற்பவரும், மாடு வாங்குகிறவரும் வைத்திருக்க வேண்டும் என்று அந்தச் சட்டம் வலியுறுத்தியது.

இந்த விதிகள் மாடு வளர்ப்பவர்களையும், விற்பவர்களையும், வாங்குகிறவர்களையும் பெரிய அளவில் பாதித்தது. இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று கேரளா அரசு உடனடியாக அறிவித்தது. தமிழ்நாட்டில் மாட்டிறைச்சிக்கு ஆதரவாக போராட்டம் தீவிரமாகியது.

சைவ உணவு சாப்பிடும் ஒருவரை அசைவ உணவு சாப்பிடும்படி சொல்வது எப்படி வன்முறையோ, அசைவ உணவு சாப்பிடுகிறவர்களை சைவம் சாப்பிடும்படி கூறுவதும் வன்முறைதான் என்று சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

மதுரையில் சிவராஜ் பாட்டீல் அறக்கட்டளை நடத்தும் செல்வகோமதி, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளையில் மாட்டிறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு மத்திய அரசு விதித்த தடையை எதிர்த்து மனுத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவை அவசர வழக்காக விசாரித்த உயர்நீதிமன்றக் கிளை, மத்திய அரசின் அறிவிக்கைக்கு  இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

அந்த இடைக்கால தடையால் நாடுமுழுவதும் உருவான பதற்றம் தணிந்துள்ளது. உத்தரவு வந்தவுடனேயே அதிகாரிகள் மாடு வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தொடங்கியிருந்தனர்.
அவர்களுடைய நடவடிக்கைகளுக்கு நீதிமன்ற உத்தரவு முற்றுப்புள்ளி வைத்தது. அரசியல் சட்டத்துக்கு புறம்பாக அறிவித்த விதிகளை மத்திய அரசு திரும்பப்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், உயர்நீதிமன்றத் தடையை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. அங்கும், உயர்நீதிமன்றக் கிளையின் உத்தரவு உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து தேவையான விதிகளை திருத்துவதாக மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில் தடை பிறப்பிக்கப்பட்ட 5 மாதங்களில் பல்வேறு மாநிலங்களில் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ள சரிவு மத்திய அரசை கலக்கமடையச் செய்தது. குஜராத்தில் மாடுகளைப் பாதுகாப்பதாக கூறி, தலித் மக்களுக்கு எதிராக காவிகள் நடத்திய கொடுமைகள் இப்போது, பாஜகவை வாட்டி வதைக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது.

அடுத்தடுத்து பல மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளதால் தலித்துகள் மற்றும் சிறுபான்மை மக்களை திருப்திப்படுத்தவே இந்த மோடி அரசு இந்த தடையை ரத்து செய்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

- ஆதனூர் சோழன்-
இறைச்சிக்காக மாடறுப்பு தடை என்ற சட்டம் ரத்து செய்யப்பட்டது ! பயந்துவிட்டதா மோடியின் பாஜக? இறைச்சிக்காக  மாடறுப்பு தடை என்ற  சட்டம்  ரத்து செய்யப்பட்டது ! பயந்துவிட்டதா  மோடியின்  பாஜக? Reviewed by Madawala News on 12/02/2017 11:18:00 PM Rating: 5