Yahya

டெங்கை ஒழிப்பதில் பொதுமக்களின் பங்கு .


-ஏ.பீ.எம்.அஸீம்.-

மனிதர்கள் தங்கள் நோக்கங்களை அடைந்துகொள்வதில் சுயநலமாக செயற்படுவது இயல்பு.அதை யாரும் தவறென்று கூறமாட்டார்கள்.

சமூகமென்று வரும்போது அதனுள் பலவிடயங்கள் தொடர்புபட்டுள்ளது.அவற்றை கூட்டாகச் சேர்ந்து நிறைவேற்றும்போதே அதற்குரிய பயனை முழுமையாக அடைந்து கொள்ளமுடியும். ஒருவர் அப்பொறுப்பிலிருந்து விலகினால்கூட பாதிப்பு முழு சமூகத்தையும் சேரும்.

இன்று,  அதிகமாகப் பேசப்படும் விடயம் "டெங்கு" பற்றியதாகவே உள்ளது. முழு இலங்கையிலும் வேகமாகப் பரவிவரும் டெங்குக்கு பல உயிர்கள் பலியாகிவருகின்றன.அதிலும் குறிப்பாக குழந்தைகள், சிறுவர்கள் உயிரிழப்பது மனவேதனையளிக்கிறது.அதேபோல் ஆயிரக்கணக்கானவர்கள் வருடாந்தம் பாதிக்கப்படுகிறார்கள்.

"டெங்குக்காய்ச்சல்" தேசியநோயாக உருவெடுத்துள்ளதால் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் அரச ,அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகிறது. அதற்காக "டெங்கு ஒழிப்புவாரம்" போன்ற நிகழ்ச்சித் திட்டத்தை தேசியளவிலும்,பிரதேச அளவிலும் நடைமுறைப்படுத்திவருவது நாம் அறிந்ததாகும்.

அந்தவகையில் அரசாங்கம் மேற்கொள்கின்ற செயற்றிட்டங்களுக்கு   பொதுமக்களாகிய நாமும் பூரண ஒத்துழைப்பு வழங்குவது அவசியம்.

பொதுமக்களில் அதிகமானோர் டெங்கு தொடர்பான விழிப்புணர்வை பெற்றுக்கொண்டாலும், செயற்படுத்துவதில் பராமுகமாக இருக்கின்றனர்.தங்கள் வீடுகளையும் அதனோடினைந்த சுற்றாடலையும் மட்டும் சுத்தமாக வைத்திருத்தல் போதுமானது என்ற தவறான எண்ணமே இதற்கு காரணம்.

இந்நிலை டெங்குநோய் பரவுவதை ஒருபோதும் தடுத்துவிடாது .தம்முடைய வீடு ,வாசல் போன்றவை தவிர சுற்றுப்புறச்சூழலாக இருக்கக்கூடிய பொது இடங்கள் அனைத்தையும் சுத்தமாக வைத்திருப்பது அவசியமாகும்.

 பல இடங்களில் போக்குவரத்துக்கு பயன்படுத்தக்கூடிய வீதிகள்,தெருக்கள் மற்றும் நீர் வடிகான்கள் போன்றவை குப்பைகள், இதர திண்மக்கழிவுகளை வீசிச் செல்லும் கூடங்களாக காட்சியளிப்பதை காணக்கூடியதாகவுள்ளது.

அறிவுறுத்தல் பலகைகள் தொங்கவிடப்பட்டும் அதனையும் மீறி இவ்வாறு பொதுமக்களில் சிலர் நடந்துகொள்வது அறியாமையின் வெளிப்பாடாகும்.இவ்வாறனவர்கள் டெங்கு நுளம்பு பெருக்கத்துக்கு துனைபோவதோடு ,மக்களிடம் குற்றவாளியாக நோக்கப்படக்கூடியவர்கள்.

டெங்குநோயை முற்றாக தடுக்கவேண்டுமெனில்,நாம் வாழும் வீட்டுச்சூழல் மட்டுமல்லாது பொது இடங்களையும் தூய்மையாக வைத்திருப்பது அவசியம். இல்லையாயின், "டெங்கினால் ஏற்பட்ட மரணம்" என்று கேள்விப்பட்ட வார்த்தை நாளை எம் வீடுகளைக்கூட வந்தடையலாம் .
டெங்கை ஒழிப்பதில் பொதுமக்களின் பங்கு . டெங்கை ஒழிப்பதில் பொதுமக்களின் பங்கு . Reviewed by Madawala News on 12/31/2017 11:17:00 AM Rating: 5