Yahya

பணமும், பாடல்வரிகளும் எமது வாக்கைத் தீர்மானிக்கக்கூடாது.


-ஏ.பீ.எம்.அஸீம்-

பொதுவாக அரசியல் கட்சிகளுக்கும்,அரசியல்வாதிகளுக்கும் பின்னால் இருக்கும் ஆதரவாளர்கள் தங்கள் பிரதிநிதிகளை வெற்றிபெறச் செய்வதற்காக கடுமையான பிரயத்தனம் எடுக்கின்றனர்.

தமது பிரச்சினைகளைத் தீர்த்து அரசியல் உரிமைகளைப் பெற்றுத்தரவேண்டும் என்பதே அவர்கள் எதிர்பார்ப்பு.அதற்காக தேர்தல்காலம் அடிதடி ,குத்துவெட்டு, எதிரணி நபர்களைத்தூற்றுதல், வசைபாடுதல்,போன்ற அத்தனையையும் சந்தித்தே வெற்றிபெற ச் செய்கின்றனர்.

இவை அனைத்தையும் எதிர்கொள்வது  குறித்த வேட்பாளரல்ல.அவருடைய ஆதரவாளர்களே. ஆனால் தேர்தலில் வெற்றிபெற்றபின் நடக்கும் சம்பவங்கள் ஆதரவாளர்களையே ஆட்டங்காணச் செய்கின்றன.

வென்றபின்   கட்சிப்பாய்ச்சலூடாக தன்னை நம்பி வாக்களித்த மக்களையும், ஊரையும் ஏமாற்றி கொள்கைகளையும் குழிதோண்டிப் புதைத்துவிட்டு ,பதவிக்காக இன்னொரு கட்சியிடம் சென்று ஒட்டிக்கொள்வது அரசியல்வாதிகளின் பழக்கவழக்கமாக மாறியுள்ளது.

இதைப் பார்க்கும்போது இப்படிப்பட்ட அரசியல்வாதிகளுக்காகத்தான் நாம் அடிவாங்குவதும்,உதைபடுவதும், ஏன் உயிரைக்கூட விடுவதும் என்று வெட்கப்படவேண்டியுள்ளது.

மக்களாகிய நாம் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்வுசெய்வதில் மிகக் கவனமாக இருத்தல் அவசியம்.எனது அப்பா ,தாத்தா பரம்பரையாக வாக்களித்த கட்சி என்பதற்காக நாமும் வாக்களித்தல் கூடாது.

 எம்மில் அதிகமானோர் விடும் தவறுகள் இதுவே.குறித்த கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பில் ஆய்வுசெய்யாமல் கட்சிக்காகவும்,உணர்ச்சிவசப்பட்ட பேச்சுக்காகவும் அடிமைப்பட்டு வாக்களித்தலாகும்.

மக்களின் இவ்வாறான மயக்கநிலையை அரசியல்வாதிகள் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தி வெற்றிபெறுவது இன்னொருவகையில் மக்களினுடைய தோல்வியாகும்.

பணத்துக்காகவும்,பாடல்வரிகளுக்காகவும் வாக்காளர்கள் தங்களது கோரிக்கைகளை  மறந்து   வாக்களிக்குமிடத்து இன்னும் 4,5 வருடங்களுக்கு அரசியல் அனாதைகளாக்கப்படக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படுவதை மறுக்கமுடியாது.

"யார் வந்தாலும்  நமக்கொன்றும் ஆகப்போவதில்லை",தேர்தல் நடக்கும்வரை நல்லவராக இருந்துவிட்டு  ,வென்றுவிட்டால் பொய்யர்களாக மாறிவிடுவார்கள்" போன்ற சலிப்பான வார்த்தைகளை அரசியல்வாதிகள் தொடர்பில்  பலர் கூறுவதை காதுகளால் கேட்டிருப்போம்.

இவ்வாறான பேச்சுக்கள் எழுவதன் முக்கியகாரணம் தேர்தலின்போது சரியான வேட்பாளர்களை இனங்கண்டு தெரிவுசெய்வதில் வாக்காளர்கள் விடும் தவறுகளாகும்.

அரசியல் ஒரு சாக்கடை என்றுகூறிவிட்டு அதனை சுத்தம்செய்யாமல் விட்டுவிடுவோமானால் அதன் பாதிப்பு அரசியல்வாதிகளுக்கல்ல.எமக்குத்தான்  என்பதை மக்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து, பூக்கடையாக மாற்றுவதற்கு முன்வரவேண்டும்.

அதற்கான சிறந்த ஆயுதமே மக்களின்  வாக்குப்பலம்.நாம் அளிக்கப்போகும் ஒவ்வொரு  வாக்கும் அரசியல்வாதிகளின் தலைவிதியை மாற்றியமைத்து எமக்கான புதுவழியைத் திறக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
பணமும், பாடல்வரிகளும் எமது வாக்கைத் தீர்மானிக்கக்கூடாது. பணமும், பாடல்வரிகளும்  எமது வாக்கைத் தீர்மானிக்கக்கூடாது. Reviewed by Madawala News on 12/27/2017 11:32:00 AM Rating: 5