Yahya

முதல் ஒருநாள் போட்டி. இந்திய அணி 112 ஓட்டங்களுக்கு ஆல் அவுட். இலங்கை ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி.


இந்தியாவின் தரம்சாலாவில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 112  ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டாகி உள்ளது இந்திய ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இலங்கை ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

இந்தியா - இலங்கைக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் முடிந்துள்ள நிலையில், இன்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கியது.

இமாச்சல பிரதேசத்தில் உள்ள தரம்சாலா மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் போட்டியில் இலங்கை அணி நாணயசுழற்சியில் வென்று களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இந்தியா சார்பில் தவான், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு அதிக அளவில் ஒத்துழைத்ததால், இலங்கையின் பந்து வீச்சில் அனல் பறந்தது. முதல் ஓவரில் இந்தியா ஓட்டம் எதுவும் எடுக்கவில்லை.

2-வது ஓவரின் கடைசி பந்தில் தவான் எல்.பி.டபிள்யூ மூலம் ஆட்டமிழந்தார். அப்போதும் இந்தியா ஓட்டங்கள் எதுவும் எடுக்கவில்லை.

அடுத்து ஷ்ரேயாஸ் அய்யர் களம் இறங்கினார். 3-வது ஓவரில் இந்திய அணி ஒருவாறு ஒன்றை ஓட்டத்தை எடுத்தது.

பின்னர் 4-வது ஓவரில் ஓட்டம் எதுவும் பெறாத இந்திய அணி, 5வது ஓவரின் முதல் பந்திலேயே அணித் தலைவர் ரோகித் சர்மாவின் விக்கெட்டையும் பறிகொடுத்தது.

3-வது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் அய்யர் உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். இந்தியா முதல் ஐந்து ஓவர்களில் 5 ஓட்டங்களையே எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து 9-வது ஓவரின் 5-வது பந்தில் தினேஷ் கார்த்திக் எல்.பி.டபிள்யூ ஆனார். அப்போது இந்தியா 8 ஓட்டங்களை மட்டுமே பெற்றிருந்தது.

4-வது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் அய்யர் உடன் மணீஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். இந்தியா முதல் 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 11 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

அத்துடன், 13-வது ஓவரின் 5-வது பந்தில் மணீஷ் பாண்டே ஆட்டம் இழந்தார். அப்போது இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 16 ஓட்டங்களை எடுத்திருந்தது.

5-வது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் அய்யருடன் தோனி ஜோடி சேர்ந்தார். 14-வது ஓவரின் 2-வது பந்தில் ஷ்ரேயாஸ் அய்யர் ஸ்டம்பை பறிகொடுத்தார். இதனால் இந்தியா 16 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து திணறியது.

6-வது விக்கெட்டுக்கு தோனியுடன் இணைந்தார் ஹர்திக் பாண்டியா.

இந்த ஜோடி சற்று நிதானமாக ஆடியது இந்திய இரசிகர்களை ஆறுதல்படுத்தியது.

எனினும் அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை, 16-வது ஓவரின் 2-வது பந்தில் ஹர்திக் பாண்டியா வௌியேற்றப்பட்டார்.

அப்போது இந்தியா 28 ஓட்டங்களையே பெற்றிருந்தது.

7-வது விக்கெட்டுக்கு டோனியுடன் ஜோடி சேர்ந்த, புவனேஸ்வர் குமார் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 29 ஓட்டங்களையே பெற்றிருந்தது.

மகேந்திர சிங் தோணி பின்னால் இணைந்து கொண்ட வீரர்களுடன் இணைந்து தனது தனித்துவமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.

இந்நிலையில்  8 ஆவது விக்கட் 70 ஆவது ஓட்டத்திலும், 9 ஆவது விக்கட் 87  ஓட்டத்திலும் இழக்கப்ட்ட நிலையில் இந்திய அணி 112 ஓட்டங்களுக்கு  ஆல் அவுட் ஆனது.

மகேந்திர சிங் தோணி 65  ஓட்டங்கள் பெற்றார்.

இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 113   ஓட்டங்கள் நிர்ணயிக்கப்ட்டுள்ளது.
முதல் ஒருநாள் போட்டி. இந்திய அணி 112 ஓட்டங்களுக்கு ஆல் அவுட். இலங்கை ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி. முதல் ஒருநாள் போட்டி. இந்திய அணி 112 ஓட்டங்களுக்கு ஆல் அவுட். இலங்கை ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி. Reviewed by Madawala News on 12/10/2017 02:46:00 PM Rating: 5