Yahya

NFGG யின் உடன்படிக்கைகள் வெளிப்படையானவை! மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு தேடுபவை!


NFGG யை (நல்லாட்சிக்கான தேசிய முன்னணி) நோக்கி, அடிக்கடி முன்வைக்கப்படும் ஒரு கேள்விதான்
, 'நீங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் உடன்படிக்கை செய்தவர்கள்தானே!?' என்பது. இப்படி மொட்டையாகக் கேட்பதால், இந்த உடன்படிக்கை 'ஏதோ ஒரு கொந்தராத்து டீல்'என்று மக்கள் புரிந்துகொள்ளலாம் என்ற அச்சம் நிலவுகின்றது.


எனவே, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும், NFGG க்கும் இடையில், 2013.09.09 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை குறித்து, தெளிவாகவும், சுருக்கமாகவும் விளக்குவதே இப்பதிவின் நோக்கம். (உடன்படிக்கையும் படமாக இணைக்கப்பட்டுள்ளது.)


பல்வேறு தரப்புக்கள் மத்தியில் உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்படுவது, வரலாறு நெடுகிலும் நடைபெற்று வருகின்ற ஒரு செயற்பாடாகும். பொதுவாக உலக வரலாற்றில் இதனை அவதானிக்கலாம். இஸ்லாமிய வரலாற்றிலும்கூட, குறிப்பாக நபிகளார் முஹம்மத் (ஸல்) அவர்களின் காலத்தில், முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் அல்லாதோருக்கும் இடையில் பல்வேறு உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஹுதைபியா உடன்படிக்கை மிகவும் பிரபலமான ஒரு உடன்படிக்கையாகும். எனவே, பெரும் பாவமான காரியத்தை செய்தது போல், 'நீங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் உடன்படிக்கை செய்தவர்கள்தானே!?' என்று மொட்டையாகக் கேட்பது உசிதமல்ல.


NFGG எந்தவொரு அரசியல் தரப்புடன் உடன்படிக்கை செய்யும்போதும், கட்சியின் விழுமியங்களையும், கொள்கைகளையும் விட்டுக் கொடுத்து உடன்படிக்கை செய்துகொள்ளும் வழிமுறையைப் பின்பற்றுவதில்லை. எனவேதான்,நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இது வரையிலும் மேற்கொண்ட உடன்படிக்கைகள் அனைத்தையும் ஊடகங்களில் வெளிப்படுத்தியுள்ளது. NFGG ஆனது தமிழ் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி என்று மூன்று அரசியல் கட்சிகளுடன் உடன்படிக்கைகள் மேற்கொண்டு, செயற்பட்டிருக்கின்றது. அத்தோடு, இந்த அனைத்து உடன்படிக்கைகளையும் ஊடகங்களில் பகிரங்கப்படுத்தியுமுள்ளது.


அடுத்து, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் செய்துகொண்ட உடன்படிக்கையின் சரத்துக்கள் என்னவென்று பார்க்க வேண்டும். இந்த உடன்படிக்கையின் ஒவ்வொரு சரத்தும் இந்த நாட்டில் தமிழ் - முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான நல்லுறவை ஏற்படுத்த வேண்டும் என்ற அவாவினதும், வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் சமூகத்தினதும், அவர்களது சந்ததியினதும் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துவதற்கு தமிழ் அரசியல் தரப்பைத் தூண்ட வேண்டும் என்ற கட்டாயத் தேவையினதும் வெளிப்பாடாகவே உள்ளன.


இந்த உடன்படிக்கையில், வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பிலான முக்கியமான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. NFGG ஆனது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தையும் தாண்டி, வடக்கு முஸ்லிம்கள் தொடர்பிலான விடயங்களை உடன்படிக்கையில் சேர்த்தது. அவற்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஏற்றுக்கொண்டது. அவ்வாறு சேர்க்கப்பட்ட விடயங்களை, உடன்படிக்கையிலிருந்து எடுத்தாண்டு கீழே தருகின்றேன்.


//1990 ஆம் ஆண்டிற்கு முன்னர், வட மாகாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் தாம் வாழ்ந்த பகுதிகளில் பாரம்பரியக் குடிகளாக வாழ்ந்துள்ளனர். அந்த வகையில் வட மாகாணம் என்பது முஸ்லிம் மக்களினதும் வரலாற்று ரீதியான வாழ்விடமாகும். அவர்கள் தமது சொத்துக்களையும், வாழ்வாதாரங்களையும், தமது பூர்வீகக் குடியிருப்புக்களையும் கைவிட்டு, நாட்டின் ஏனைய பகுதிகளுக்குச் சென்று சொல்லொணாத் துன்பங்களை அனுபவிக்க நிர்ப்பந்திக்கப்பட்டமை வருந்தத்தக்கதாகும்.//


//வட மாகாணத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட அனைத்து முஸ்லிம்களும், அவர்களின் சந்ததிகளும் இயன்றவரை விரைவாக தத்தமது பாரம்பரியக் குடியிருப்புப் பகுதிகளில் மீளக்குடியேறி தமது வாழ்வாதாரத் தொழில்களை மீண்டும் தொடங்குவதை உறுதிப்படுத்துவதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பற்றுறுதி கொண்டுள்ளது. அவர்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி வருவதற்கு ஊக்குவிக்கப்படுவதோடும், குடியிருப்புக்களை மீளமைத்து தமக்குரிய கௌரவத்துடனும்,

பாதுகாப்புடனும் வாழ்க்கையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான அனைத்து உதவிகளையும் வட மாகாண சபை அவர்களுக்கு வழங்கும்.//
//வட மாகாண முஸ்லிம்களின் நலன்கள் தொடர்பான எந்தப் பிரச்சினைக்கும் வட மாகாணத்தில் வாழுகின்ற ஏனைய சமூகங்களின் பிரச்சினைகளுக்கு வழங்கப்படும் அதேயளவு கவனிப்பும், முக்கியத்துவமும் வழங்கப்படும். இம்மாகாணத்தில் வாழும் முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தவருக்கும் நீதியானதும், சமத்துவமானதுமான கவனிப்பு எவ்விதமான பாரபட்சங்களுமின்றி கிடைக்கப் பெறுவதை இம்மாகாண சபை உறுதி செய்யும்.//


NFGG மாகாண சபைகளிலோ, பாராளுமன்றத்திலோ எந்தவொரு உறுப்பினரையும் கொண்டிராத நிலையில், காத்தான்குடி நகர சபையில் மாத்திரம் இரு பிரதிநிதிகளை வைத்துக்கொண்டு, இந்த நாட்டின் பலம்வாய்ந்த ஒரு கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் உடன்படிக்கை செய்து, வடக்கு முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்தது. ஒரு சிறு கட்சியாக இருந்துகொண்டு NFGG இவ்வளவு பிரயத்தனம் எடுத்திருக்கிறதென்றால்,அமைச்சுப் பதவிகளையும், பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளையும், மாகாண சபை ஆட்சியையும் கொண்டிருக்கின்ற முஸ்லிம் கட்சிகள் எவ்வளவு செய்ய முடியும்! ஆனால், அப்படிச் செய்வதாக இல்லை.


ஒவ்வொரு தேர்தல் முடிவடைந்ததன் பின்னரும், ஒரு முஸ்லிம் கட்சியின் தலைவர் தம்மிடமுள்ள எம்.பிக்களின் எண்ணிக்கையை எடுத்துக்கொண்டு, 'சொபிங்' போவது போல், பதவிகள் கேட்டு வருவதாக தோழர் அநுர குமார திசாநாயக்க ஒரு தடவை சொல்லியிருந்தது நினைவுக்கு வருகின்றது.


நான் மேலதிகமாக இங்கு எந்த விளக்கத்தையும் வழங்கத் தேவையில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும்,நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கும் இடையிலான உடன்படிக்கையின் ஃபோட்டோக்களை இணைத்துள்ளேன். நண்பர்கள் பார்க்கலாம்.

-அஷ்கர் தஸ்லீம்-
NFGG யின் உடன்படிக்கைகள் வெளிப்படையானவை! மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு தேடுபவை! NFGG யின் உடன்படிக்கைகள் வெளிப்படையானவை! மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு தேடுபவை! Reviewed by Madawala News on 12/08/2017 02:20:00 PM Rating: 5