Yahya

பாடசாலை செல்ல அடம்பிடித்த சிறுவனை விசாரித்ததில் எனக்கு கிடைத்த கவலையான அனுபவம்.


விடுமுறையில் நாட்டுக்கு சென்றிருந்தேன், பாடசாலைகள் திறக்கப்பட்டதும் இரண்டாம் தரத்தில் கல்வி பயிலும் எனது மகளை பாடசாலையில் விடுவதற்காக நானும் ஒவ்வொரு நாள் காலையிலும் பாடசாலைக்கு செல்வது வழமையாக இருந்தது.


ஒரு நாள் ஒரு தாய் ஒரு சிறுவனை கையில் பிடித்து இழுத்தவாறு பாடசாலைக்குள் சென்று கொண்டிருந்தார் அந்த சிறுவன் பாடசாலைக்கு செல்ல முரண்டு பிடித்து அழுது கொண்டிருந்தான்,


வழமையாக எல்லா சிறுவர்களும் பாடசாலைக்கு செல்ல மறுத்து இப்படி செய்வது தானே என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டு கடந்து சென்று விட்டேன், மீண்டும் அடுத்த நாள் அதே சிறுவன் அதே தாய் அதே அழுகை அதே இழுவை, மூன்றாவது நாளும் அதே சிறுவன் அதே நிலைமையில் வந்து கொண்டிருப்பதை பார்த்து ஆர்வத்தை அடக்க முடியாமல் அந்த தாயிடம் கேட்டேன்


பாடசாலைக்கு வருவதற்கு அவனுக்கு ஏலாதாம் என்று அடம்பிடிக்கிறான் இந்த வயதில் படிக்காமல் இருந்தால் நாளைக்கு அவன் மாடுதான் மேய்க்க போகணும் என்று ஆற்றாமையில் பேசினார் அந்த தாய், எதற்காக அடம்பிடிக்கிறான் பையன் என்று கேட்டேன்,

இந்த கொப்பியும், தோள் பேக்கும் வேணாமாம் வேற புதுசு வாங்கி தரட்டாம் என்கிறான் கொப்பி தோள் பேக் வாங்க ரெண்டாயிரத்துக்கு நான் எங்க போற என்று கேட்டார் அந்த தாய்.


நான்காம் தரத்தில் கல்வி பயிலும் அந்த சிறுவன் அப்போதுதான் அந்த கொப்பியையும் புத்தக பையையும் என்னிடம் காட்டினான் அதில் ஒரு அமைப்பின் பெயரும் விளம்பரமும் பொறிக்கப்பட்டிருந்தது,

இதை என்னால் வகுப்புக்கு எடுத்து செல்ல முடியாது மற்ற பிள்ளைகள் என்னை கேலி செய்கிறார்கள் இலவசமாக கிடைத்தது என்று எனக்கு வெட்கமாக இருக்கின்றது என்றான்,


அவனின் நிலைமையை புரிந்துகொண்டேன் அந்த இடத்தில் நான் இருந்தாலும் எனக்கும் வெட்கமாகத்தான் இருக்கும்,

 அவனிடம் சொன்னேன் நீ இன்றைக்கு மட்டும் இதை எடுத்து போ நாளை உனக்கு வேறு ஒன்று தருகிறேன் என்று சமாதானப்படுத்தி அவனை அனுப்பி வைத்துவிட்டு எனது நண்பர் ஒருவருக்கு அழைப்பெடுத்து அவரின் அமைப்பு மூலமாக பகிர்ந்துவிட்டு மீதமாக பாடசாலை பைகள், கொப்பிகள் இருக்கின்றதா என்று கேட்டேன் உடனே ஆம் என்றார்.

 எனக்கு அவசரமாக தேவையாக இருக்கின்றது என்றேன் அன்று மாலையே அந்த சிறுவனின் வீட்டுக்கு சென்று அதை கொடுத்துவிட்டு வந்தேன் சந்தோஷமாக பெற்றுக்கொண்டான்.

இதை ஏன் இங்கு சொல்கிறேன் எனில்..,

சில அமைப்புகள், இயக்கங்கள், தனியார் நிறுவனங்கள், இலவச பாடசாலை உபகரணங்கள் வழங்குகின்றோம் என்கின்ற பெயரில் தமது முழு விளம்பரத்தையும் அவற்றில் அச்சடித்து சின்னஞ் சிறிய மாணவர்களின் கைகளில் ஒப்படைத்து விடுகிறார்கள் அத்துடன் அவர்களின் கடமை முடிந்தது, அது இலவசமாக வழங்கப்பட்டது என்று மிக அழகாகவே அவர்கள் அந்த பொருட்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள் இவ்வாறான இலவசங்களை சுமந்து செல்ல பெரும்பாலான மாணவர்கள் வெட்கப்படுகிறார்கள் என்பது எம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ?


முக்கியமாக இலவச பாடசாலை உபகரணங்களை கொடுப்பதாக இருந்தால் எந்த இயக்கங்களினதும், எந்த அமைப்புகளினதும், எந்த நிறுவனங்களினதும் பெயர்களை பொறிக்காமல் கொடுங்கள் அது யார் கொடுத்தார்கள் எங்கிருந்து கிடைத்தது என்கின்ற விபரம் கொடுத்தவருக்கும் பெற்றவருக்கும் மட்டும் தெரிந்திருக்கட்டும்.


இப்படி இலவசங்களில் பெயர் பொறித்து கொடுக்கும் போது அதை பாடசாலைக்கு கொண்டு செல்லும் மாணவ மாணவிகள் ஏனைய வசதி நிறைந்த மாணவர்களால் ஒரு ஏளனப்பார்வைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் இந்த செயற்பாடு அந்த மாணவர்களை ஒரு உளவியல் பாதிப்புக்குற்படுத்தி அவர்களை கூனிக்குறுகச்செய்து விடுகிறது இவ்வாறான நேரடி அனுபவங்களை நான் மாணவர்களிடமிருந்து பார்த்திருக்கிறேன் அவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன், அதில் ஒரு அனுபவம்தான் நான் மேலே சொல்லியிருப்பது.


கொடுப்பவர்கள் கொடுத்து விட்டு போய் விடுவார்கள் அதை பாடசாலைக்கு எடுத்துச்செல்பவன் எதிர்கொள்ளும் மன உளைச்சல்களை அவர்கள் அறிவதில்லை,

எந்தவொரு மாணவனும் மாணவியும் தான் ஒரு வசதியற்ற பரம ஏழை என்று மற்ற மாணவர்கள் முன் அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புவதில்லை .

அதற்கு காரணம் அவர்களுக்குள் இருக்கும் செல்ப் ரெஸ்பெக்ட்தான், தாம் ஒரு பரம ஏழை என்றால் மற்ற மாணவர்கள் இகழ்வாக பார்ப்பார்கள் இகழ்வாக நம்மை நடத்துவார்கள் சகஜமாக பழகமாட்டார்கள் என்கின்ற எண்ணமே அதற்கு காரணம்.


இந்த இலவச பாடசாலை உபகரணங்கள் என்பது ஏனைய இலவசங்களை போன்றது அல்ல.


கொடுங்கள் வேண்டாமென்று சொல்லவில்லை ஆனால் ஊர் பெயர், அமைப்பு பெயர், விலாசம், போன் நம்பர், இவைகளை போட்டு இது இலவசமாக வழங்கப்பட்டது என்று அதில் தெளிவாக குறிப்பிட்டு கொடுக்க வேண்டாம்.
பெரியவர்களை விட அதிகமாக செல்ப் ரெஸ்பெக்ட் பார்ப்பவர்கள் சிறுவர்கள்.
இது அனைவருக்கும் பொதுவான பதிவு யாரும் தொப்பியை போட்டுக்கொள்ள வேண்டாம்.

நன்றி - Razana Manaf
பாடசாலை செல்ல அடம்பிடித்த சிறுவனை விசாரித்ததில் எனக்கு கிடைத்த கவலையான அனுபவம். பாடசாலை செல்ல அடம்பிடித்த சிறுவனை விசாரித்ததில்  எனக்கு கிடைத்த கவலையான அனுபவம். Reviewed by Madawala News on 12/20/2017 11:05:00 AM Rating: 5