Yahya

மூன்று வாரங்களில் ரூ.121மில்லியன் ஆசிரியர் சம்பள நிலுவைகளை வழங்கி கல்முனை வலய கணக்காளர் றிஸ்வி சாதனை.


( ஏ.ஆர்.அபி அஹமட் )

கடந்த மாதம் 23ந் திகதியிலிருந்து தொடர்ந்து வந்த 03 வார காலங்களுக்குள் கல்முனைக் கல்வி வலயத்திலுள்ள ஆசிரியர்களின் சம்பள நிலுவையாக ரூ.121 மில்லியனை வழங்கியதன் மூலம் கல்முனைக் கல்வி வலயக் கணக்காளர் கே.றிஸ்வி யஹ்சர் சாதனை படைத்திருப்பதாக ஆசிரியர்களும், ஆசிரிய தொழிற் சங்கங்களும் பாராட்டுத் தெரிவித்துள்ளன.

சுமார் 05 வருடங்களுக்கு மேலாக இழுபறி நிலையில் காணப்பட்ட மேற்படி சம்பள நிலுவைகளை குறிப்பிட்ட கணக்காளர் கே.றிஸ்வி யஹ்சர் எடுத்துக் கொண்ட துரித நடவடிக்கையின் பொருட்டு ரூபாய் 121 மில்லியன் பணத்தினைப் பெற்று, அதனை 1651 ஆசிரியர்களின் சம்பள நிலுவையினை வழங்கியிருப்பது பெரும் சாதனையாகவே கருத வேண்டியுள்ளது.

கணக்காளர் கே.றிஸ்வி யஹ்சர் அவர்கள் அக்கரைப்பற்று வலயக் கல்விக் காரியாலயத்தில் கணக்காளராக இருந்த போதும் அதிபர், ஆசிரியர், ஏனைய உத்தியோகத்தர்களுடன் அன்பாகப் பழகி, சிரித்த முகத்துடன் அவர்களது தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றிக் கொடுத்து, அப்பிரதேச ஆசிரியர்களினதும், ஏனைய உத்தியோகத்தர்களினதும் நன்மதிப்பையும், பாராட்டுதல்களையும் பெற்றுக் கொண்ட ஒரு சிறந்த பண்பாளர் என்று ஜனநாயக ஆசிரியர் சங்கத் தலைவர் எம்.கமால்டீன் தெரிவித்தார்.

மேற்படி ஆசிரியர் நலன்பேணல் விடயத்தில் கல்முனை வலயக் கல்வி அலுவலக கணக்காளர் கே.றிஸ்வி யஹ்சர் அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சியினை கிழக்கிலங்கை சுதந்திர ஆசிரியர் சங்கம், தென் கிழக்கு ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம், ஜனநாயக ஆசிரியர் சங்கம் போன்றவை பாராட்டுத் தெரிவித்துள்ளன.

இதேவேளை ஒரு சில ஓய்வுபெற்ற ஆசிரியர்களும், பெண் ஆசிரியைகளும் தாம் தமது சம்பள நிலுவைகளைப் பெற வந்த போது பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டதாக, சில உவமானங்கள் மூலம் எமது இணையத்திற்கு விளக்கினர்.

ஒரு ஓய்வுபெற்ற அதிபர்:-'கல்முனை வலயத்தில் ஆசிரியர் சம்பள நிலுவை வழங்கப்படுகிறது. றேசன் கடையில் கியூவில் நின்று பொருட்கள் பெற முண்டியடிப்பது போன்று- ஆசிரியர்களுக்கு ஒரு மரியாதை இல்லாமல் இருக்கிறது. இதனைப் படம் பிடித்து தொலைக் காட்சியில் காட்ட வேண்டும்' என எமது இணையத்திடம் தொலை பேசியில் நொந்து கொண்டார்.

இன்னுமொரு பட்டதாரி ஆசிரியர் எமது விசேட நிருபரிடம் நேரடியாக ' நோன்பு காலத்தில் பெரிய பணக்காரன் வீட்டில் 'பித்தறா' பெறுவதற்கு ஏழைகள் கியூவில் நிற்பது போல் கணக்காளர் காரியாலயத்திற்கு முன்னால் காட்சியளிக்கிறது' என பகடியாகச் சிரித்துக் கொண்டு சொன்னார்.

இது தொடர்பாக நாம் கல்முனை வலயக் கல்வி அலுவலக கணக்காளர் கே.றிஸ்வி யஹ்சர் அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டோம். கணக்காளர் எந்தவித வஞ்சகமுமின்றி சிரித்துக் கொண்டு 'பல வருடங்களாக இழுபறி நிலையிலுள்ள ஆசிரியர்களின் இப்பிரச்சினையை எவ்வளவு விரைவாக முடித்து விட முடியுமோ அவ்வளவு விரைவாக முடிக்க வேண்டுமென்று நானும், எனது அலுவலக உத்தியோகத்தர்களும் 03 குழுக்களாகப் பிரிந்து, திட்டமிட்டபடி ஓய்வில்லாமல், பெரும் சிரத்தையோடு செயற்பட்டதனாலேயே ரூ.121 மில்லியன் பணத்தையும், 03 வாரங்களுக்குள் 1651 ஆசிரியர்களுக்கும் கொடுத்து முடிக்க முடிந்தது. உங்களிடத்தில் தெரிவிக்கப்பட்ட பிரச்சினை என்னவென்றால் நாங்கள் எந்தவொரு பாடசாலைக்கும் பாகுபாடு காட்டக் கூடாது என்பதற்காக ஒரே நாளில் பல பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கு வௌ;வேறு நேரங்களில் அழைப்பு விடுத்திருந்தோம். ஆனால், அதிகமான ஆசிரியர்கள் அவர்களுக்கு அழைக்கப்பட்ட நேரத்தில் வராமல், அவர்களது தேவைகளை முடித்துக் கொண்டு- இறுதியில் எல்லோரும் ஒரே நேரத்தில் வந்து குவிந்ததனால் தான் மேற்படி பிரச்சினை ஏற்பட்டது. இதனால் ஆசிரியர்கள் மட்டுமல்லாது எமது காரியாலயப் பணியாளர்களும் சிரமங்களை எதிர்கொள்ளத்தான் செய்தனர். எல்லாமே ஆசிரியர் நலனைக் கருத்தில் கொண்டே செய்தோம். அவர்கள் குறித்த நேரத்தில் வராமையே சிரமங்களுக்குக் காரணமாக அமைந்தது. இருந்தாலும் இறைவன் உதவியால் எல்லாவற்றையும் சிறப்பாக முடித்து விட்டோம். அல்லாஹ் போதுமானவன்' என்று மிகவும் உற்சாகத்துடனும், தெளிந்த மனதுடன், மிகத் தைரியமாகவும் சிரித்துக் கொண்டே தெரிவித்தார்.

எது எவ்வாறு இருப்பினும் கல்முனைக் கல்வி வலய வரலாற்றில் இந்த ஆசிரிய சம்பள நிலுவை விடயமானது ஒரு முன்மாதிரியான செயற்பாடாகவும், பெரும் சாதனையாகவுமே பார்க்கப்படுகிறது. இவ்வாறான ஒரு சிறப்பான ஆசிரியர்களின் மனங்களில் பால் வார்ப்பது போன்ற நிகழ்வு இது வரை காலத்திலும் நடந்ததில்லை. ஆனால் மாற்றமாக ஆசிரியர்களின் மனங்களில் தீ மூட்டிய சம்பவங்களே அதிகம் நடந்திருப்பதாகத் தெரிவிக்கும் ஆசிரியர்கள், கணக்காளர் கே.றிஸ்வி யஹ்சர் போன்ற தைரியமும், சுறுசுறுப்புமுள்ள சேவை மனங்கொண்ட உத்தியோகத்தர்களால் கல்முனைக் கல்வி வலயம் அலங்கரிக்கப்பட வேண்டுமென்று எமது இணையத்திற்குத் தெரிவிக்கின்றனர்.

மூன்று வாரங்களில் ரூ.121மில்லியன் ஆசிரியர் சம்பள நிலுவைகளை வழங்கி கல்முனை வலய கணக்காளர் றிஸ்வி சாதனை. மூன்று வாரங்களில் ரூ.121மில்லியன்  ஆசிரியர் சம்பள நிலுவைகளை வழங்கி கல்முனை வலய கணக்காளர் றிஸ்வி சாதனை. Reviewed by Madawala News on 12/27/2017 12:27:00 PM Rating: 5