Yahya

போதை மாத்திரை விடயத்தில் உரியவர்களுக்கே தண்டனை... சாப்ரீன் மௌலவியை விடுவிக்க நடவடிக்கை.



(ஆதில் அலி சப்ரி)
ஹஜ், உம்றா முகவர் நிலையமொன்றின் மூலம் யாத்திரிகர்களை அழைத்துச் சென்ற வழிகாட்டி ஒருவரிடமிருந்து ஒரு தொகை மருந்து வில்லைகள் அடங்கிய பொதியொன்று கடந்த 2016ஆம் ஆண்டு இறுதியில் சவூதி அரேபிய சுங்க பிரிவினரால் ஜித்தா விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டது.

 மருந்து வில்லைகள் கொண்ட பொதியை வைத்திருந்த ஹஜ், உம்றா வழிகாட்டியும், பொதியை மதீனா நகரில் பெற்றுக்கொள்ள இருந்த இன்னோர் நபரையும் சவூதி அரேபிய புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்து தடுப்புக் காவலில் வைத்ததும் கடந்த வருடத்தில் ஊடகங்களில் பேசப்பட்ட விடயம்.


ஹஜ், உம்றா வழிகாட்டியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொதியில் இருந்த மருந்து வில்லைகள் சவூதி அரேபியாவில் தடைசெய்யப்பட்ட வகையைச் சார்ந்த மருந்து வகையாகும். குறித்த மருந்துகளை போதைப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றமையே அங்கு தடை செய்யப்படுவதற்குக் காரணம்.
சம்பவத்துடன் தொடர்புடைய ஹஜ், உம்றா வழிகாட்டி மற்றும் பொதியை மதீனாவில் பெற்றுக்கொள்ள இருந்தவருக்கான வழக்கு தீர்ப்புகள் கடந்த மாதம், கடந்த புதன் என இரு கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. தீர்ப்புகள் குறித்த உத்தியோகபூர் அறிக்கை இலங்கை வெளிவிவகார அமைச்சையோ, முஸ்லிம் சமய விவகார அமைச்சையோ வந்தடையாததால் தண்டனைகள் விடயத்தில் மாற்றுக் கருத்துகள் நிலவுகின்றன.


மருந்துப் பொதியை மதீனா நகரில் பெற்றுக்கொள்ள இருந்தவருக்கு மரண தண்டனையும், பொதியை இலங்கையில் இருந்து எடுத்துச் சென்றவருக்கு 12 வருட சிறை, இரு இலட்சம் றியால்கள் தண்டம், 100 அல்லது 1300 கசையடிகள் என்ற தகவலும் இருவருக்குமே 12 வருட சிறை, இரு இலட்சம் றியால்கள் தண்டம், 100 அல்லது 1300 கசையடிகள் என்ற தகவலும் கிடைக்கப் பெறுகின்றன. உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகாததால் தண்டனைகள் விடயத்தை உறுதியாக குறிப்பிட முடியாதுள்ளது. எனினும், மருந்து வில்லைகளை வைத்திருந்த வழிகாட்டிக்கு வழக்கை மேன்முறையீடு செய்ய ஒருமாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


இலங்கையில் இருந்து மருந்துப் பொதியை எடுத்துச் சென்ற ஹஜ், உம்றா வழிகாட்டி சாப்ரீன் மௌலவி கடந்த 8 வருடங்களாக முகவர் நிலையமொன்றில் பணியாற்றி வந்தவர். மதீனாவில் சந்திக்க வரும் நபரிடம் மருந்துப் பொதியொன்றை ஒப்படைக்கக் கோரி இவரிடம் பொதி வழங்கப்பட்டுள்ளது. ஜித்தா விமான நிலையத்தின் சுங்கத்தினர் பரிசோதனைகளில் இவரை கைதுசெய்துள்ளனர். சாப்ரீன் மௌலவி ்ங்கத்தினருக்கு விடயங்களை தெளிவுபடுத்தியபோது, பொதியை மதீனாவில் பெற இருந்த ஹுஸைன் ஸஹாதத்தும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


மௌலவி சாப்ரீன் மற்றும் ஹுஸைன் ஸஹாதத் ஆகியோர் முன் அறிமுகமற்றவர்கள் என்பதை சவூதி அரேபிய புலனாய்வுப் பிரிவினர் அறிந்துகொண்டுள்ளனர். பொதியை அனுப்பியவர்கள் மௌலவி சாப்ரீனை பயன்படுத்தியுள்ளார்கள் என்ற விடயமும் தெளிவு. அதனடிப்படையிலேயே மௌலவி சாப்ரீனுக்கு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.


ஆரம்பத்தில் மருத்துவ தேவைகளுக்காகவே இலங்கையிலிருந்து இப்பொதி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும், 1500க்கு மேற்பட்ட மருந்து வில்லைகள் மருத்துவ தேவைகளுக்கு அனுப்பப்பட அவசியமில்லை. இலங்கை மருத்துவ சபை தடைசெய்யாவிட்டாலும் சவூதி அரேபியா தடை செய்திருப்பது போதைத் தன்மை காரணமாகவே. இவ்விடயத்தில் மௌலவி சாப்ரீன் பயன்படுத்தப்பட்டுள்ளார் என்பது தெளிவு.

எனினும் இலங்கையில் இருந்து இப்பொதியை அனுப்பியவர்கள் இதனை வியாபார நோக்கத்தில் அனுப்பியுள்ளார்கள் என்பதில் சந்தேகமில்லை. இப்போதியை மௌலவி சாப்ரீனிடம் வழங்கியவர்கள், ஒருவர் ஒருவர் மீது விரல் நீட்டிக்கொண்டே செல்வதை கீழ்வரும் தொலைபேசி உரையாடல்கள் மூலம் காணலாம்.


பொதி வழங்கப்பட்டது தொடர்பில் மௌலவி சாப்ரீன் பணியாற்றிய ஹஜ் உம்றா முகவர் நிலைய பொறுப்பாளரை தொடர்புகொண்டு கேட்டபோது,
நான் இதனை வழங்கவில்லை. எமது முகவர் நிலையத்திற்கு அருகில் உள்ள அலுவலகத்தில் பணியாற்றும் ரஸ்மி என்பவரே இப்பொதியை சாப்ரீன் மௌலவியிடம் கொண்டுவந்து கொடுத்துள்ளார்.


சாப்ரீன் மௌலவி எமது முகவர் நிலையத்தில் 8 வருடங்களாக பணியாற்றி வந்தார். அவர் எனது சகோதரப்஖ை போன்றவர். அவரை பிரச்சினையில் மாட்டிவிட நான் தயாராக இல்லை. மௌலவியின் உறவினர்கள் முஸ்லிம் கலாசார அமைச்சில் முறையிட்டுள்ளனர்.


இது பெரிய பிரச்சினையொன்றல்ல. தம்பி பாவிப்பதாக கூறியே மருந்து அனுப்பப்பட்டுள்ளது. எனினும் அது பொய்யென தெரியவந்துள்ளது. நான் சாப்ரீன் மௌலவியை இவ்விடயத்தில் இருந்து காப்பாற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். நிதி உதவிகளையும் வழங்கவுள்ளோம். எம்மால் இயன்ற உதவிகளை செய்ய தயாராக உள்ளேன்- என்றார்.

இலங்கையில் மருந்துப் பொதியை ஹஜ் உம்றா வழிகாட்டி சாப்ரீன் மௌலவியிடம் வழங்கியதாக கூறும் முஹம்மத் ரஸ்மியைத் தொடர்புகொண்டு கேட்டபோது,


மதீனாவில் மருந்து பொதியை கையேற்க இருந்தவர் எனது உடன்பிறந்த சகோதரன் ஹுஸைன் ஸஹாதத். எனது மதினி தான் இப்பொதியை தம்பியிடம் அனுப்பக் கோரி என்னிடம் தந்தார்.

சவூதியில் பொதி பிடிபடும் வரை சகோதரன் இவ்வாறான மருந்து பாவிக்கிறார் என்ற விடயத்தை நான் அறிந்திருக்கவில்லை. மதினியிடமும் சகோதரனின் நண்பனொருவனே இப்பொதியை வழங்கியுள்ளார். நான் சகோதரன்  என்ற நம்பிக்கையிலேயே இப்பொதியை சாப்ரீன் மௌலவியிடம் தம்பிக்கு அனுப்பினேன். இலங்கை மருத்தவ சபையில் சான்றிதழ் பெற்று சவூதி அனுப்பியுள்ளோம். இலங்கையில் அந்த மருந்து வகை சட்ட விரோதமானவையல்ல- என்றார்.


ஹஜ் உம்றா முகவர் நிலையம் தொடர்புபட்டுள்ளதா? விடயம் தொடர்பாக மேலதிக விடயங்களை தபால் சேவைகள் முஸ்லிம் சமய கலாசார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமின் அந்தரங்க செயலாளர் பாஹிம் ஹஸீமிடம் வினவியபோது,


அது தொடர்பாக உத்தியோகபூர்வ தகவலோ, முடிவோ எமக்கு இதுவரையில் கிடைக்கவில்லை. சவூதியில் இதுகுறித்த தீர்ப்பு புதனன்று அறிவிக்கப்பட்டுள்ளது. எமக்கு சவூதியின் உத்தியோகபூர்வ தீர்ப்பு கிடைத்த பின்னர் குறித்த முகவர் நிலையம் தொடர்புபட்டுள்ளதா? என்பதை ஆராய்ந்து உரிய சட்ட நடவடிக்கையெடுப்போம்- என்றார்.


சாப்ரீன் மௌலவியை அடிக்கடி தொடர்புகொண்டு விடயங்களை பகிர்ந்துகொண்ட அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரதி செயலாளர் அஷ் ஷெய்க் எம்.எஸ்.எம் தாஸிம் கருத்து தெரிவிக்கும்போது,
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும் விடயங்களை தெளிவுபடுத்தி கடிதமொன்றை அனுப்பிவைக்க ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. ஜித்தா தூதுவராலயத்தை தொடர்புகொள்ளவும் முயற்சிக்கின்றோம். ஜனாதிபதி பிரதமருக்கு விடயத்தை கொண்டுசென்று, சவூதி அரேபிய தூதுவராலயத்தை தெளிவுபடுத்தவும் முயற்சிக்கின்றோம்.  மௌலவி சாப்ரீன் சவூதி அரேபிய நீதிமன்றில் அரபியில் வாதாடியுள்ளார். தன் விடயங்களையும் நியாயங்களையும் விளக்கியுள்ளார்.


எது எவ்வாறு இருப்பினும் இங்கு ஓர் குற்றமற்றவருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது. மௌலவி சாப்ரீன் நீதிமன்ற தீர்ப்பை மேன்முறையீடு செய்வதாயின் 6 இலட்சம் ரூபாய்கள் அளவில் செலுத்தவேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளார். குடும்பத்தினர் போதிய நிதித் தொகையை சேகரித்து மேன்முறையீடு செய்ய முயற்சித்து வருகின்றனர். அவர்களுக்கான உதவிகளை மேற்கொள்ள பொறுப்புவாய்ந்தவர்கள் முன்வரவேண்டும். விடயத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்.

-- 
Aadhil Ali Sabry
JOURNALIST
போதை மாத்திரை விடயத்தில் உரியவர்களுக்கே தண்டனை... சாப்ரீன் மௌலவியை விடுவிக்க நடவடிக்கை. போதை மாத்திரை விடயத்தில்  உரியவர்களுக்கே தண்டனை... சாப்ரீன் மௌலவியை விடுவிக்க நடவடிக்கை. Reviewed by Madawala News on 12/31/2017 01:06:00 PM Rating: 5