Yahya

அமெரிக்காவை "சொர்க்கலோகம்" என்று நினைத்துக் கொண்டிருக்கும் அறிவிலிகள் அவசியம் பார்க்க வேண்டிய படம்,


அமெரிக்காவை "சொர்க்கலோகம்" என்று நினைத்துக் கொண்டிருக்கும் அறிவிலிகள் அவசியம் பார்க்க
வேண்டிய படம், மைக்கல் மூரின் "Where to Invade Next". இந்த ஆவணப் படத்தில் மைக்கல் மூர் பல ஐரோப்பிய நாடுகளை, அமெரிக்காவுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார். தனி மனித உரிமைகளை மதிப்பதில், குடி மக்களுக்கு அவசியமான வாழ்க்கை வசதிகளை செய்து கொடுப்பதில், ஐரோப்பிய நாடுகள் பல மடங்கு உயர்ந்து நிற்கின்றன

மைக்கல் மூர் முதலாவதாக செல்லும் நாடு இத்தாலி. அங்கு ஒரு தொழிலதிபரை பேட்டி காண்கிறார். தனது ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை கொடுப்பதால், தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் வேலை செய்கிறார்கள். இதனால், உற்பத்தி அதிகரிக்கிறது என்று கூறுகின்றார். தொழிலாளர்களும் விடுமுறை தமது உரிமை என்கிறார்கள். அமெரிக்காவில் விடுமுறை என்ற பேச்சே கிடையாது. நல்ல சம்பளத்திற்கு உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு மட்டும் இரண்டு வார விடுமுறை கிடைக்கிறது. அங்கு குறைந்தளவு அடிப்படை சம்பளம் என்ற பேச்சே இல்லை

இரண்டாவதாக மைக்கல் மூர் "படையெடுத்த" நாடு பிரான்ஸ். அங்கு பள்ளிச் சிறுவர்களுக்கு சத்துணவு வழங்கப் படுவதை காண்கிறார். பிள்ளைகள் கொக்கோ கோலா குடிக்க பழக்கவில்லை. அவர்களாகவே கோலாவை தவிர்க்கிறார்கள். இதற்கு மாறாக, அமெரிக்க பள்ளிப் பிள்ளைகள் எந்தச் சத்தும் இல்லாத குப்பை உணவு உண்பதை எடுத்துக் காட்டுகின்றார்

பின்லாந்து உலகிற் சிறந்த கல்வி முறையை கொண்டுள்ளது. அங்கு பள்ளிக்கூட மாணவர்களுக்கு வீட்டு வேலை கொடுக்கப் படுவதில்லை. அத்துடன், விளையாட்டுக்கு அதிக நேரம் ஒதுக்குகிறார்கள். பாடசாலையில் குறைந்தளவு பாடநேரம் கொண்டிருந்தாலும், பின்னிஷ் மாணவர்கள் கெட்டிக்காரர்களாக தான் இருக்கிறார்கள். ஆசிரியர்கள் மாணவர்களின் படைப்புத் திறணை ஊக்குவிக்கிறார்கள். யாரையும் டாக்டர், எஞ்சினியர் ஆக வேண்டும் என்று இம்சைப் படுத்தாமல், அவர்களது விருப்பத்திற்கு உகந்த கல்வி வசதி செய்து கொடுக்கிறார்கள்

அடுத்து ஜெர்மனிக்கு "படையெடுக்கிறார்". அங்குள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்யும்  தொழிலாளர்களை பேட்டி காண்கிறார். அங்கு யாரும் அமெரிக்கா மாதிரி, எட்டு மணிநேரத்திற்கு மேலே வேலை செய்வதில்லை. இரண்டு வேலை பார்ப்பதில்லை. அந்தளவுக்கு வாழ்க்கையை கொண்டு நடத்த போதுமான சம்பளம் கிடைக்கிறது. அது மட்டுமல்ல, பெரிய நிறுவனங்களில் கூட நிர்வாகத்தில் தொழிலாளர்கள் அமர்ந்திருக்கிறார்கள்! ஆமாம், அன்றாடம் வேலை செய்யும் அதே தொழிலாளர்கள், நிர்வாகிகளுடன் சேர்ந்து முடிவுகளை எடுக்கிறார்கள். இதை அமெரிக்காவில் நினைத்துக் கூட பார்க்க முடியாது

சுலோவேனியாவில் பல்கலைக்கழகம் வரையில் இலவசக் கல்வி கொடுப்பதால், அங்கு படிக்க வந்த அமெரிக்க மாணவி ஒருவரை பேட்டி காண்கிறார். இதே நேரம், சுலோவேனிய அரசு பல்கலைக்கழக படிப்புக்கு கட்டணம் செலுத்தும் சட்டம் கொண்டு வருகிறது. மாணவர்கள் அதை எதிர்த்து இலவசக் கல்வி உரிமைக்காக வீதியில் இறங்கிப்  போராடுகிறார்கள். அமெரிக்காவில் நிலைமை மிக மோசமாக உள்ளது. ஒருவர் சிறு வயதில் கல்வி கற்கும் போதே தலைக்கு மேலே கடன்களை சேர்க்கத் தொடங்குகிறார். ஆயுட்காலம் முழுவதும் கடன் சுமையுடன் வாழ்கிறார்

ஐஸ்லாந்து நாட்டில், நிதி நெருக்கடிக்கு காரணமான ஊழல் பேர்வழிகளான வங்கியாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. அமெரிக்காவிலோ அரசு குற்றவாளிகளுக்கு  சன்மானம் கொடுத்து கௌரவிக்கிறது. ஐஸ்லாந்து பெண் பிரதமரை தேர்ந்தெடுத்துள்ளது. பெண்கள் சமூகத்தை பொதுநலன் சார்ந்து நிர்வகிக்கிறார்கள்

இப்படிப் பல வியப்பான தகவல்கள் அந்தப் படத்தில் உள்ளன. ஐஸ்லாந்து, சுலோவேனியா, நோர்வே, என்று பல நாடுகளுக்கும் நேரில் சென்று, சம்பந்தப் பட்டவர்களை பேட்டி கண்டு அவற்றை நிரூபிக்கிறார். சில விடயங்கள் மிகைப் படுத்தப் பட்டுள்ளன. ஆனால், அமெரிக்காவுடன் ஒப்பிடும் பொழுது, எதுவும் அந்தளவு மோசமில்லை எனலாம்.

அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்.
அமெரிக்காவை "சொர்க்கலோகம்" என்று நினைத்துக் கொண்டிருக்கும் அறிவிலிகள் அவசியம் பார்க்க வேண்டிய படம்,  அமெரிக்காவை "சொர்க்கலோகம்" என்று நினைத்துக் கொண்டிருக்கும் அறிவிலிகள் அவசியம் பார்க்க வேண்டிய படம், Reviewed by Madawala News on 12/30/2017 09:09:00 PM Rating: 5