Yahya

பெண் வேட்பாளர் மீதான தாக்குதல்... இரு வேறுபட்ட கருத்துக்கள்.


கொட்டகலை, கொமர்ஷல் பகுதியில் இரண்டு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கிடையில் நேற்று மாலை மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொட்டகலை பிரதேச சபைக்கு போட்டியிடும் மலையக மக்கள் முன்னணியின் பெண் வேட்பாளர் ஒருவரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் போட்டியிடும் ஆண் வேட்பாளர் ஒருவருக்குமிடையில் குறித்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் வேட்பாளரின் வீட்டுக்கு அருகில் இ.தொ.காவின் ஆதரவாளர்கள் வாக்குகள் கேட்டுச்சென்றபோது தனது வீட்டை கல்லால் தாக்கியுள்ளனர் என அப்பெண் வேட்பாளர் திம்புள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இ.தொ.காவின் ஆதரவாளர்கள் அவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெறவில்லை என மறுத்துள்ளனர்.

இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த பெண் வேட்பாளர் கருத்துத் தெரிவிக்கையில்,

நேற்று மாலை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் சிலர் இப்பகுதிக்கு வாக்குகள் கேட்டு வந்தனர்.

அச்சமயம், நான் தனிமையில் வீட்டில் இருந்தேன், எனது வீட்டிற்கு அருகில் வந்த இ.தொ.கா ஆதரவாளர்கள் என்னை தகாத வார்த்தைகளால் திட்டி எனது வீட்டின் கதவை உடைத்தது மட்டுமின்றி வீட்டின் ஜன்னல்களையும் உடைத்து உள்ளே வர முயற்சித்தனர் என குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் இ.தொ.காவின் வேட்பாளர் கருத்து வெளியிடுகையில்,

நான் பிரச்சார நடவடிக்கைக்காக நேற்று மாலை எங்கும் செல்லவில்லை, இவ்வாறான சம்பவம் ஒன்று நடந்ததாகவும் எனக்குத் தெரியாது.

மக்களின் ஆதரவினை தன்வசம் வைத்துக்கொள்ள இந்த பெண் வேட்பாளர் தனது வீட்டிற்கு தானே கல்லை அடித்துக்கொண்டு, தவறாக என்மீது பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

மேலும், இவ்வாறான ஒரு பிரச்சினையை உருவாக்கி அனுதாப வாக்குகளை பெற்றுக்கொள்வது இவரின் இலக்காக அமைந்துள்ளதாக நான் சந்தேகப்படுகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

எனினும், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை திம்புள்ள பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பெண் வேட்பாளர் மீதான தாக்குதல்... இரு வேறுபட்ட கருத்துக்கள். பெண் வேட்பாளர் மீதான தாக்குதல்... இரு வேறுபட்ட கருத்துக்கள். Reviewed by Madawala News on 1/09/2018 02:23:00 PM Rating: 5