Yahya

மேட்டுக்குடி அரசியலில் ஹக்கீம் திளைத்துப் போயுள்ளார்; கோட் சூட் போட்டவர்களைத்தான் அவருக்கு பிடிக்கும்: சட்டத்தரணி அன்சில் குற்றச்சாட்டு
– றிசாத் ஏ காதர் –
முஸ்லிம் அரசியலுக்குள் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் துடைத்தெறிந்த மேட்டுக்குடி அரசியலில், மு.கா. தலைவர் ரஊ ஹக்கீம் திழைத்துப் போயுள்ளார் என்று, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும்,  அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் போட்டியிடும் தலைமை வேட்பாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் தெரிவித்தார்.

கட்சிக்காக உழைத்தவர்களுக்கு, அதன் விளைச்சல்களை கொடுக்காமல், கட்சியிலுள்ள மேட்டுக்குடியினருக்கே ஹக்கீம் கொடுத்து வந்ததாகவும் அன்சில் கூறினார்.

பாலமுனையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரங் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இவற்றினைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அன்சில் மேலும் கூறுகையில்;

“அரசியலில் புரையோடிப்போயிருந்த மேட்டுக்குடி சிந்தனையினை மு.காங்கிரஸ் எனும் பேரியக்கத்தினூடாக மறைந்த தலைவர் இல்லாமல் செய்தார். ஆனால் அந்த தலைவரின் மறைவின் பின்னர் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட அமைச்சர் ஹக்கீம்;  மேட்டுக்குடி சிந்தனையை இந்தப் பேரியக்கத்துக்குள் கொண்டுவந்திருப்பது ஆபத்தான விடயமாகும்.

சாபக்கேடு

மேட்டுக்குடி சிந்தனையில் தளைத்தோங்கியுள்ள ஸ்ரீ.ல.மு.காங்கிரஸின் தற்போதைய தலைவர், கட்சிக்குள் பதவி நிலைகளுக்கு நபர்களை நியமிக்கும் போது, மேட்டுக்குடி சிந்தனையினை உரசிப்பார்ப்பது வழங்கமாகும். இந்த நிலை முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்பட்டுள்ள சாபக்கேடாகும். மு.காங்கிரசின் அரசியல் பயணத்திலிருந்து, நான் விலகுவதுக்கு இதுவும் ஒரு காரணமாகும்.

மு.காங்கிரஸ் எனும் பேரியக்கத்தை இந்தப் பிராந்திய மக்கள் மனங்களில் நிலைபெறச் செய்வதுக்கு ஏதுவான நடவடிக்கைகளை மேற்கொள்வதில், எனது பங்களிப்பும் மிகப் பிரதானமானதாக அமைந்திருந்தது.

ஆனால், அந்த பேரியக்கம் மக்கள் நலன்களை புறந்தள்ளுகின்றது. பிரமுகர் அரசியல் செய்வதுக்கு தொடங்கியுள்ளது.  அதனை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய மிகப் பிரதான பொறுப்பு – மு.காங்கிரசின் உயர்பீட உறுப்பினராகவும், அம்பாறை மாவட்டத்துக்கான செயலாளராகவும் இருந்தவன்  என்கிற அடிப்படையில் எனக்கு உள்ளது. அதனை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

தலைவர்கள் தனி மனிதர்களில்லை

தனிமனிதர்களின் குறைகளை  கூறுகின்ற கூட்டங்களாக இதனை நோக்கக்கூடாது. தலைவர்கள் தனிமனிதர்களில்லை. பொதுவாழ்க்கைக்குள் சங்கமித்தவர்கள். தூய்மை அவசியமாகும்,  முஸ்லிம் காங்கிரஸ் சமூக இயக்கம். அதன் போக்கு பற்றிய ஞானம் நம் எல்லோருக்கும் தெளிவாக இருத்தல் வேண்டும். அந்த அரசியல் ஞானத்தையே பெருந்தலைவர் மர்ஹும் அஷ்ரப் விதைத்துவிட்டுச் சென்றார். அதற்காகவே சில விடயங்களை தெளிவாக சொல்லத் துணிந்திருக்கின்றேன்.

மேட்டுக்குடி சிந்தனையில் தழைத்தோங்கிய மு.கா தலைவரால், எனக்கு ஏற்பட்ட மன நெருடல்களை கட்சியின் ஆதரவாளர்கள் புரிந்துகொள்ளுதல் வேண்டும். அந்தச் சிந்தனை என்பது குர்ஆன், ஹதீஸை யாப்பாக கொண்ட கட்சிக்கு பொருத்தமானதா? என்பதனை வாக்காளர்களாகிய நீங்கள் அத்தனைபேரும் மனச்சாட்சியை தொட்டுக் கேட்க வேண்டும்.

முபீன் பாட்டுப்பாடித் திரிபவர்

ஒருமுறை மட்டக்களப்பு மாவட்டத்துக்கான தேசியப்பட்டியல் நாடாளுமன்ற பதவி மு.காங்கிரசின் தற்போதுள்ள தேசிய கொள்கைபரப்புச் செயலாளர் முபீனுக்கு வழங்கும் நிலை வந்ததது. உயர்பீடத்திலுள்ள அத்தனைபேருக்கும் அதுவே விருப்பமாகவும் இருந்தது. ஆனால் அமைச்சர் ஹக்கீம் என்னிடம் கூறினார்; ‘முபீன் பாட்டுப் பாடித் திரிபவர். அவருடைய குடும்பமும் அதனையே செய்கிறது ஆகவே அந்தப்பதவி அவருக்கு பொருத்தமில்லை’ என்றார்.

சம்சுதீனின் மகன்

இன்னொரு சமயம், 2015ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்காக அம்பாறை மாவட்ட வேட்பாளர் தெரிவு நடைபெற்றது. அதன்போது ஹரீஸ், பைசால் காசீம் மற்றும் மன்சூர் ஆகியோரே தெரிவு செய்யப்பட்டிருந்தனர். மு.கா. தலைவர் ஹக்கீமுக்கு இந்த தெரிவு மனத்திருப்தியை ஏற்படுத்தவில்லை. என்னை அவருடைய வீட்டுக்கு நோன்பு துறப்பதற்காக அழைத்தார் . அவருடன் வாகனத்தில் செல்லும்போது; ‘ஏன் சேர் இந்தத் தெரிவில் உங்களுக்கு மனத்திருப்தியில்லை’ என கேட்டேன். ‘இளைஞர்களை களமிறக்குவதுதான் சிறந்தது’ என்றார். அந்தக் கருத்து எனக்கு நன்றாகத்தான் தென்பட்டது. உடனே “யாரை சேர் நியமிக்கலாம்; என வினவினேன். அதற்கு மு.கா. தலைவர் சொன்ன பதில் ‘ஆரிப்பை போட விரும்பினேன்’ என்றார். ‘ஏன்’ என கேட்டேன். ‘அவர்  சம்சுதீனுடைய மகன்தானே’ என்றார்.

ஆரிப் சம்சுதீன் கட்சிக்குள் வந்து மிகக் குறுகிய காலம்தான் ஆகியிருந்தது. அதற்கு முன்னர் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலிலேதான் கட்சிக்குள் வந்திருந்தமையும் நினைவுகொள்ளத்தக்கது. ஆனால், ஆரிப் மேட்டுக்குடியைச் சேர்ந்தவர் என்பதால், அவரை ஹக்கீம் விரும்பினார். ஆக, இந்தக்கட்சிக்குள் தலைவர் அஷ்ரப் தகர்த்தெறிந்த மேட்டுக்குடி சிந்தனையினை, மீளவும் இக்கட்சிக்குள் கட்டியெழுப்பும் பணியை ஹக்கீம் மிக கச்சிதமாக அரேங்கேற்றுவதனை கண்டுகொள்ள முடிகின்றது.

மட்டமாக பார்க்கப்பட்ட அர்சாத்

மூன்றாவதாகவும் ஒரு சம்பவம் நடந்தது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பொதுத் தேர்தலில் மு.கா. போட்டியிட்ட போதும், கொழும்பு மாவட்ட வேட்பாளர் பட்டியலில் எந்தவொரு நபரையும் மு.கா. நியமிக்கவில்லை. சபீக் ரஜாப்தீன் ஏலவே மு.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். அவருக்கு வெற்றி வாய்ப்புகள் நிறையவே இருந்தது. எனவே, ‘ஏன் அவரை நியமிக்காமல் விட்டுக்கொடுத்தீர்கள்’ என்று கேட்டேன். ‘அவர் மாநகர சபைத்தேர்தலில் வெற்றிபெற முடியாதவர். இந்த தேர்தலில் எவ்வாறு வெற்றி பெறுவார்’ எனக் கேட்டார். அது சற்று நியாயமாக தென்பட்டது. அதற்கு பதிலீடாக கொழும்பிலுள்ள மு.காங்கிரசின் மாகாண சபை உறுப்பினர் உள்ளார். மிகத் துடிப்புள்ள ஒருவர். கொழும்பிலே முஸ்லிம் காங்கிரஸ் வாழ்கிறது என்றால் அதற்கு அர்சாத் நிஜாமுதீனும் மிக முக்கிய காரணம். அவ்வாறான ‘அர்சாத் நிஜாமுதீனை போடமுடியும் தானே’ என்று கேட்டபோது, அறியாமையின் உச்சத்தில், மேட்டுக்குடி சிந்தனையில் தழைத்திருந்த மு.கா. தலைவர்;   ‘ He is not a parliament figure (அவர் நாடாளுமன்றத்துக்குரிய நபர் இல்லை’ என்று கூறினார்.

இன்னொரு சமயம், அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் தொடர்பான விடயம் பேசப்பட்டது. அவ்வாறு அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்கப்பட்டால் அக்கரைப்பற்றுக்கு மாகாண சுகாதார அமைச்சை வழங்குமாறும், மாகாண சபை உறுப்பினர் பதவியை இறக்காமம் கிராமத்துக்கு வழங்கமுடியும் என்றும் கூறினோம். அதற்கு மு.கா தலைவர் கூறிய விடயம் என்னை தூக்கிவாரிப்போட்டது.

பத்ர் நகர் தவம்

அக்கரைப்பற்றுக்கு மாகாண சுகாதார அமைச்சு வழங்கப்படுமானால் தவத்துக்கே வழங்க வேண்டும். அதனை குறிப்பிட்டு மு.கா. தலைவர் கூறினார்; ‘தவம் பத்ர் நகரைச் சேர்ந்தவர். அக்கரைப்பற்று 06ஆம் பிரிவு மக்கள் அவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’ என்றார். ஹக்கீமுடைய இந்த பார்வையினால், அட்டாளைச்சேனையிலும் அக்கரைப்பற்று மற்றும் இறக்காமத்திலும் மு.காங்கிரசின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியது.

தனக்கு ஏற்றால் போல் ஆங்கிலம் பேசுகின்றவர்களும், கோர்ட் – சூட் அணிந்தவராக இருப்போர்களுமே ஹக்கீமுக்கு தேவையாகவும் – அவரின் தெரிவாகவும் உள்ளனர்.  மக்கள் சேவகர்களாக, மக்களோடு மக்களாக இருப்பவர்களை ஹக்கீம் கணக்கில் எடுப்பதில்லை.மேற்சொன்ன சம்பவங்கள் மூலம் அதனை அறிந்துகொள்ள முடிகின்றது.

இந்த மேட்டுக்குடி சிந்தனை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்தே ஹக்கீமுக்கு தொற்றியது. அதனை நிரூபிக்க  பல உதாரணங்கள் இருக்கின்றன.

இதுதான் நாம் உதிரம்விட்டு வளர்த்த பேரியக்கத்தின் நிலையாகும். இவ்வாறான  மேட்டுக்குடி அரசியல் சிந்தனையில் உள்ளவர்களிடம் இருந்து கட்சியை மீட்கும் போராட்மே இதுவாகும். அதற்காக மக்களாகிய நீங்கள் இந்தத் தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும்” என்றார்.
மேட்டுக்குடி அரசியலில் ஹக்கீம் திளைத்துப் போயுள்ளார்; கோட் சூட் போட்டவர்களைத்தான் அவருக்கு பிடிக்கும்: சட்டத்தரணி அன்சில் குற்றச்சாட்டு  மேட்டுக்குடி அரசியலில் ஹக்கீம் திளைத்துப் போயுள்ளார்; கோட் சூட் போட்டவர்களைத்தான் அவருக்கு பிடிக்கும்: சட்டத்தரணி அன்சில் குற்றச்சாட்டு Reviewed by Madawala News on 1/08/2018 03:47:00 PM Rating: 5